இன்று மாற்றப்பட்டிருக்கும் பலகை - |
கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் விமல் வீரவன்சவால் மன்னார் செல்வாரியில் பனை அபிவிருத்திச் சபையின் ‘ பனந்தும்பு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டது பெயர்ப்பலகையைத் தான்.
அதன் பெயர்ப்பலகை தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் இடப்பட்டிருந்தது.
அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையைக் கண்டு கடுப்பேறிய விமல் வீரவன்ச கடும் ஆவேசத்துடன் அதனை திறக்கப்பட்ட அந்த பலகையை கழற்றி எறிந்து விட்டு உடனேயே சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுததாகவும் வரும் வகையில் மாற்றும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டு அதை மாற்றியே விட்டார்.
அவ்வாறு மாற்றப்பட்டதை வெற்றிப் பெருமிதத்துடன் தான் அதை மாற்றிவிட்டதாக சிங்களவர்களுக்கு இன்று அவரின் முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார். இதை வரவேற்று சிங்களவர்கள் பலர் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடக்கப்பட்ட போது அங்கே பெயர்ப்பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமயாக விமர்சித்து கூட்டங்களில் பேசியதுடன், பத்திரிகை மாநாடு நடத்தி கண்டித்ததும் நினைவிருக்கலாம்.
சிறுபான்மையினருக்கு எதிராக ஏதாவது அரச மட்டத்தில் ஏதாவது ஒரு அதிர்ச்சியை நாளாந்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.
அரசியலமைப்பில்
அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.
1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.
அதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.
''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்"
என அரசியலமைப்பு கூறுகிறது.
தென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...