இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் கோலோச்சினாலும் அரசியலில் அவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே சரியான சந்தர்ப்பங்கள் வரும் வரை காத்திருந்து பெண்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும் ஒரே அமைப்பாக மலையகத்தில் விளங்குகிறது.
இதன் மூலம் அரசியலிலும் அவர்களின் பங்களிப்பை வெற்றிகரமாக தொடர்வதற்கு வழியேற்பட்டுள்ளது என மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி செண்பகவள்ளி தெரிவிக்கிறார். கொழும்பு மாநகரசபைக்கு அடுத்ததாக உள்ளூராட்சி சபை ஒன்றின் தலைமைத்துவத்துக்கு பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மஸ்கெலியா பிரதேச சபைக்கு என்பது முக்கிய விடயம். இது தொடர்பில் திருமதி செண்பகவள்ளி கேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல்.
கேள்வி: பிரதேச சபை ஒன்றின் தலைவராக தெரிவு செய்யப்படுவோம் என எதிர்பார்த்தீர்களா?
பதில்: நிச்சயமாக இல்லை ஏனென்றால் தேர்தலுக்கான பெயர்கள் தெரிவு செய்யப்படும் போதே எமது தலைவர் ஆறுமுகனிடம் எனக்கு போட்டியிட ஆர்வம் இல்லை என்றேன் ஆனாலும் கட்சியில் தொடர்ச்சியாக நான் வகித்த பொறுப்புகள், ஆற்றிய சேவைகளின் அடிப்படையில் என்னை மஸ்கெலியா மவுசாகலை வட்டாரத்தில் போட்டியிட வைத்தார். இறுதியில் வெற்றி பெற்று தற்போது என்னை சபையின் தலைவராக்கியிருக்கிறார்.
என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்போது என் முன் நிற்கும் சவால். அதை தலைவரின் வழிகாட்டலில் வெற்றிகரமாக செய்வேன் என்பது எனது நம்பிக்கையாகும்.
கேள்வி: இ.தொ.காவில் உங்களது கடந்த கால பங்களிப்பு எப்படியானது?
பதில்: நான் தொடர்ச்சியாக 33 வருடங்கள் இ.தொ.காவின் மகளிர் அணியை பிரதிநிதித்துவம் செய்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். மகளிர் பிரிவின் சிரேஷ்ட இணைப்பதிகாரியாக இருந்து வந்த எனக்கு தலைவர் ஆறுமுகன் கடந்த வருடம் கட்சியின் உபதலைவர் பதவியையும் வழங்கினார். தொழிற்சங்க அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக கடந்த காலங்களில் ஜப்பான்,பாங்கொக், சீனா, சிங்கப்பூர், இந்தியா ,மலேசியா ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கு கட்சியால் எனக்கு சந்தர்ப்பங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த அனுபவங்கள் எனது அரசியல் செயற்பாட்டுக்கு கைகொடுக்கும் என நினைக்கிறேன்.
கேள்வி: இம்முறை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை குறித்து?
பதில்: வரவேற்கத்தக்க விடயம். இம்முறை தேர்தலில் இ.தொ.கா சார்பில் போட்டியிட்டவர்களில் அனைத்து பிரதேசங்களிலும் 22 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 பேர் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கின்றனர். எல்லாத்துறைகளிலும் காலூன்றி விட்ட பெண்களால் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்ற சிந்தனை மாறியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை எமது கட்சி எமக்கு பெற்றுத்தந்திருக்கின்றது.மட்டுமன்றி சந்தர்ப்பத்தை வழங்கினால் பெண்களுக்கும் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் அவர்களுக்கு பிறக்கிறது.
கேள்வி: மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தெரிவன்று இடம்பெற்ற சம்பவம் பற்றி?
பதில்: அந்த சம்பவத்திற்கு எவ்வகையிலும் இ.தொ.கா பொறுப்பில்லை என்பது அனைவருக்கும் தெரியுமே அதிகாரம் எமது கைகளுக்கு வரப்போகின்றது என்பதை அறிந்து அதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிரணியினர் சபையை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சபையின் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தி விட்டனர். மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசவும் அதற்கு தீர்வு காணவுமே அவர்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். ஆனால் சபைகளில் சிலர் தமது பிரச்சினைகள் பற்றி பேசி குழப்பத்தை விளைவிக்கின்றனர். இதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கேள்வி: உங்கள் குடும்ப விபரம் பற்றி கூறுவீர்களா?
பதில்: எனது கணவர் நடராஜா வியாபாரம் செய்கிறார். மகன் ,மகள் என இரு பிள்ளைகள். மகள் பங்களாதேஷில் சூழலியல் விஞ்ஞானம் தொடர்பான கற்கை நெறி ஒன்றை தொடர்கிறார். மகன் உயர்தரம் முடித்து அடுத்த கட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்.
கேள்வி: மஸ்கெலியா பிரதேசத்தின் அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றீர்கள்?
பதில்: இது புதிதாக உருவாக்கப்பட்ட சபையாகும். இப்பிரதேசத்தின் சீட்டன் மவுசாகலை பிரிவில் பிறந்து வளர்ந்தவள் நான் ஆகவே உட்கட்டமைப்பு பிரச்சினைகளை அறிவேன்.
மட்டுமன்றி இது சிவனொளி பாதமலை அமைந்துள்ள புனித பிரதேசமாகவும் உள்ளது. எம்மை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும். எமது உறுப்பினர்களின் ஆதரவோடும் தலைவர் ஆறுமுகனின் வழிகாட்டலோடும் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
நேர்காணல் - சி.சிவகுமாரன்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...