Headlines News :
முகப்பு » , , , » "எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் " - நோர்வேயில் "தமிழர் மூவர்" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்

"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் " - நோர்வேயில் "தமிழர் மூவர்" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்


தமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதாலாவது நோர்வே மொழியலமைந்த  நாவலைப் படைத்த றீற்றா பரமலிங்கம், "எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள்தன் எமது கதைகளைக் கூறுவார்கள் என்றார். இவரின் நாவலாகிய "La meg bli med deg" -உன்னோடு வரவிடு, நோர்வேஜியப் பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களிற்கான பரிசுக்கும் இவர் பரிந்துரைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

வழமையிலும்விட இவ்வாண்டு மதிப்பளிப்பாளர்கள் கூடியிருந்த மக்களின் கவனத்தினையும் கரவொலியினையும் பெற்றனர். மாற்றுத் திறனாளியும் ஓவியருமாகிய திவ்யா கைலாசபிள்ளை தனக்கு ஊக்குவிப்புத் தருகின்ற பெற்றோரையும் நல்ல நண்பர்களையும் நன்றி கூர்ந்தார். திவ்யா கைலாசபிள்ளைக்கான மதிப்பளிப்பு வழங்கப் பட்டபோது மண்டபமே எழுந்துநின்று கரவொலி செய்தது. திவ்யா கைலாசபிள்ளையின் விடாமுயற்சியினை நடுவர்குழு முன்னிலைபடுத்தியிருந்தது.

பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள ஹம்சிக பிரேம்குமார், தமிழ் இளைஞர்கள் தமது பின்னணியினை அறியவேண்டும் என்று குறிப்பிட்டார். போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்றபோது, அவ்வாறான நிலைமகளில் வாழும் ஏனையு சமூகங்களிற்கும் உதவக் கூடியதான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்படவேண்டுமென்றார். தமிழ் இளையோர் அமைப்பில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹம்சிகா 2001ம் ஆண்டில் 8 வயதுச் சிறுமியாக நோர்வேக்கு தனது தாயாருடன் புலம்பெயர்ந்தவர். தனது தந்தையாரை போரில் இழந்த ஹம்சிகா மருத்துவத் துறையில் இரண்டாவது ஆண்டு மாணவியாக இருக்கின்றபோதும் அபிவிருத்தி சார்ந்த மேற்படிப்பையும் தொடர்கின்றார். தற்போது ஓஸ்லோ ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மாணவர் அமைப்புத் தலைவியாகவுள்ளார் ஹம்சிகா பிரேம்குமார்.

சட்டத்துறையில் தனது மேற்படிப்பைத் தொடரும் இளைய எழுத்தாளர் றீற்ரா, எழுதுவதே தனக்கு ஒரு ஆத்மதிருப்தியினைத் தருவதாகத் தெரிவித்தார். தனது பெற்றோருக்குத் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்ட போதிலும் தமிழ் இளையோர்கள் பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற மட்டும் தமது துறைகளைத் தெரியக் கூடாது என்றார். தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க உகந்த துறையினை அவர்களே திர்மானிக்கவல்லவர்களாக வளரவேண்டுமென்று பல இளையோர்யோர்களின் கைதட்டலுக்கு மத்தியில் கூறினார் அவர்.

தமிழ்3 இன் தமிழர் விருது நோர்வேயில் ஒரு அறியப்பட்ட விருது வழங்கும் வைபவமாக விளங்குகின்றது. ஒவ்வோராண்டும் நாடுமுழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது. இம்முறை ஊடகவியலாளர் சரவணன் நடராசா தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர் மூவரைத் தெரிவுசெய்துள்ளனர்.

சரிநிகர் பத்திரிகை மூலமும் பல்வேறு நூல்கள் மூலமும் அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் நூலாசிரியருமாகிய சரவணன் நடராசா மற்றும் 2017ம் ஆண்டிற்கான தமிழர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவரும் இசைவிற்பனருமாகிய மீரா திருச்செல்வம் ஆகியோர் இவ்வாண்டு விருது வழங்கும் வைபவத்தினைத் தலைமை தாங்கி நடாத்தியிருந்தனர்.

ரீற்றா பரமலிங்கத்திற்கான விருதினை சங்கமம் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பேராசிரியர் ந.சிறிஸ்கந்தராஜாவும், ஹம்சிகா பிரேம்குமாருக்கான விருதினை மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களும்இ திவ்யா கைலாசபிள்ளைக்கான விருதினை தொழிலதிபர் மகா சிற்றம்பலம் அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.

இவ் விருது வழங்கும் வைபவம் பற்றி தமிழ்3 வானொலி ஒரு செய்திக் குறிப்பினை வழங்கியுள்ளது. நோர்வேயில் புலம்பெயர்ந்துள்ள முதற்தலைமுறை தமது பல்வேறு வாழ்க்கை அனுபங்களிற்கூடாக இளைய தலைமுறைக்குரிய வழியினைச் சமைத்துள்ளனர். இருந்தபோதும் பலதரப்பட்ட தளங்களில் நோர்வேயில் வாழும் இளைய சமூகம் தேடல் மிகுந்ததாகவுள்ளது. இந்தவகையில் அவர்களின் அனுபவங்களை ஏனைய இளையோருக்கு அறியவைப்பதுவும், அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவைப்பதுவுமே தமிழ்3 வானொலியானது தமிழர் மூவர் விருதினை ஆண்டு தோறும் வழங்கி வருவதன் அடிப்படை நோக்கம் என அந்தச் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நோர்வே தமிழ் இளையோர்கள் மத்தியில், முன்மாதிரியாகவும் (Role Models) உந்துதலாகவும் கொள்ளக்கூடிய இளையோர்களை அடையாளம் கண்டு மதிப்பளிக்கும் செயற்பாட்டினை 2015ஆம் ஆண்டிலிருந்து நோர்வே தமிழ் 3 வானொலி முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர்களுக்கான மதிப்பளிப்பு கடந்த ஞாயிறு (22.04.18) இடம்பெற்ற தமிழ் 3 இன் சங்கமம் நிகழ்வில் இடம்பெற்றது

-ராஜன் செல்லையா
படங்கள்: ரமேஸ் சிவராஜா







Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates