மலையக மக்களின் தனித்துவ குரலாக விளங்கும் சூரியகாந்தி 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது....
ஊடகத்துறை என்பது ஒரு தொழில் (Profession) என்பதை தாண்டி ஏன் பேசப்படுகின்றதென்றால் அது மக்களின் குரலாக ஒலிக்கின்ற காரணத்தினாலாகும். இன்று உலகில் ஏராளமான தொழில்கள் பரவிக்கிடக்கின்றன. அத்துறைகளில் தேர்ச்சி பெற்றோர் தமது திறமைகளை வௌிப்படுத்தி சாதனையாளர்களாக திகழ்கின்றனர். இவ்வாறான தொழில்களில் சமூக உணர்வுடன் செய்யப்படுவன பல இருந்தாலும் பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் தேசத்தையே வழிநடத்தும் சேவை சார்ந்த தொழிலாக ஊடகவியல் விளங்குகிறது. நாட்டை மக்களை வழிநடத்தும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இருந்தாலும் அதை அவர்கள் சரி வர செய்கின்றார்களா என கேள்வி எழுப்பி அவர்களையும் வழிநடத்தும் சமூக பொறுப்பும் அதிகாரமும் ஊடகங்களுக்கு இருக்கின்ற காரணத்தினாலேயே ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அது வர்ணிக்கப்படுகிறது. இது வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத உயர் கௌரவமாகும்.
ஊடகத்துறை செயற்பாடுகள் அரசின் உயர்மட்டத்திலிருந்து சாதாரண குடிமகன் வரைக்கும் நியாயமானதாகவே இடம்பெறவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகும். அந்த வகையில் இன்று உலகெங்கும் ஊடக வலைப்பின்னலானது இலத்திரனியல் மற்றும் அச்சு என்ற இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் செயற்பட்டு வருகிறது. இதில் அச்சு ஊடகத்தோடு தொடர்புடைய செயற்பாடுகளை நாம் இதழியல் என்கிறோம். இதில் பத்திரிகைகள்,சஞ்சிகைகள், புத்தகங்கள்,புதினங்கள் என்ற பிரிவுகள் அடங்குகின்றன. மாறி வரும் உலக ஒழுங்கானது ஏனைய தொழிற்துறைகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தியதோ அதே போன்று இதழியலிலும் மாற்றத்தை உருவாக்கத்தலைப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய ரீதியான அரசியல் மற்றும் ஏனைய செய்திகளை தாங்கி வந்த தேசிய பத்திரிகைகள் , ஒரு நாட்டின் பல்லின மக்களின் தனித்துவத்தைப்பற்றி பேச வேண்டியும் அந்த சமூகங்களின் குரலாக விளங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் சிந்தனையாக எழுந்ததே சமூக பத்திரிகைகளாகும். இதன் விளைவாகவே இலங்கையின் தமிழ் இதழியல்துறையில் பெரும்பங்காற்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக விளங்கும் வீரகேசரி நிறுவனம் மலையக சமூகத்துக்காக சூரியகாந்தி என்ற பத்திரிகையை ஆரம்பித்தது. மலையகத்தின் தனித்துவக்குரலாக விளங்கி வரும் இப்பத்திரிகை 10 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
கடந்த பத்து வருடங்களாக மலையக சமூகத்தில் இப்பத்திரிகை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்ற கேள்விக்கு நேர்-,எதிர்மறை கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் ஆனால் குறித்த இச்சமூகத்திலிருந்து கணிசமானதொரு வாசகர் குழாமையும் சமூகம் பற்றிய எதிர்பார்ப்புக்களையும் இப்பத்திரிகை உருவாக்கியுள்ளது என்பது முக்கிய விடயம். மலையக சமூகத்தின் அவலங்கள் மட்டுமல்லாது அதற்கான மூலங்களை ஆராய்வதிலும் அதன் பின்னணியிலிருப்பவர்களை தோலுரித்து காட்டுவதற்கும் சூரியகாந்தி என்றும் பின்னின்றதில்லை. இதன் காரணமாகவே மலையக சமூகத்தின் தேசிய பத்திரிகையாக அது விளங்குகிறது. மட்டுமன்றி இதழியல் போக்கிற்கேற்ப ஊடக தொழில் என்ற அம்சத்திலிருந்து அதன் ஆசிரியபீட உறுப்பினர்கள் என்றும் விலகவில்லை. தற்போது ஊடகங்களின் போக்கு குறித்து சிலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பக்கச்சார்பு, நடுவுநிலைமை போன்ற பதங்கள் பாவிக்கப்படுகின்றன. எந்த ஊடகமும் இரண்டு விடயங்களை முன்னிறுத்தியே இயங்க முடியும்
1) உண்மை
2) திரிபு
இந்த இரண்டு விடயங்களில் நடுவுநிலைமை எப்படியானது என எவருக்கும் பதில் கூற முடியாது. அதாவது 50:50 உண்மையும் பொய்யும் கலந்து எழுத முடியாது. ஆகவே எந்த ஊடகங்களாலும் நடுவுநிலைமை பேண முடியாது என்பது இங்கு தௌிவாகிறது அடுத்ததாக பக்கச்சார்பு பற்றி பேசப்படுகிறது. எல்லா ஊடகங்களும் பக்கச்சார்பாகவே இயங்க வேண்டும் அதாவது உண்மையின் பக்கம் சார்ந்து என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். இனி ஊடகங்களின் நடுவுநிலைமை ,பக்கச்சார்ப்பு பற்றி வாசகர்களுக்கு குழப்பம் ஏற்பாடது என நம்புவோமாக.
அடுத்ததாக இதழியல் துறை என்பது ஒரு தொழிலாகும் . இதை பலரும் விளங்கிக்கொள்ளல் அவசியம். உதாரணமாக காவல்துறை சார்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கள்வனை பிடித்தால் அதற்கு கள்வன் அவர் மீது கோபித்துக்கொள்ள முடியாது அதே போன்று பொலிஸ் உத்தியோகத்தரும் தான் செய்த செயலை கொண்டாட முடியாது .அது அவரது கடமை. இந்த சம்பவத்தை செய்தியாக்குவது ஊடகங்களின் கடமை. இப்படியான சம்பவங்களோடு பின்னி பிணைந்திருப்பது தான் ஊடகங்கள். பத்திரிகையாளர்கள் அவர்களின் கடமையைத்தான் செய்கின்றார்கள் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ளல் அவசியம்.அதை பொறுப்போடு செய்ய வேண்டும் என்பது இத்துறையில் இணைந்து கொள்ளவிருக்கும் இளையோருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.கடந்த பத்துவருடங்களாக இப்பணியை சூரியகாந்தி செவ்வனே செய்து வந்துள்ளது என்பதை உறுதியாகக்கூறலாம். இனியும் அவ்வாறே அதன் பயணம் தொடரும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. மேலும் என் மீது நம்பிக்கை வைத்து இவ்வாறான ஒரு சமூக பத்திரிகையை ஆரம்பித்து மலையக வரலாற்றில் தடம் பதிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த எமது வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருவாளர் குமார் நடேசன் அவர்களுக்கும் ஆதரவு நல்கிய அனைத்துத்தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...