வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...
வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராக தெரிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வட கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டதை அறிவோம்.
இலங்கையில் முதற்தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவைகள் ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத் தான் இருப்பார். ஆனால் இங்கு அது முக்கியமான தகவலல்ல. இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில் “சாதி” சார்ந்த காரணி தொழிற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி மிக்கத் தகவல்.
ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர் தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியச் சேர்ந்தவர்.
ஏற்கெனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்ட போதும் மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பது தான். (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்கு தெரிவான சந்தர்ப்பம் அது தான்.) நிலூகா ஏக்கநாயக்க கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் சேர்ந்து கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி மகா சங்கத்தினரை சந்தித்த அமைச்சர்களான எஸ்.பீ.திசாநாயாக்க, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளை கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக தெரிவானவர் தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம் ஆனால் ஒரு அவர் பௌத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் மகாநாயக்கர்கள்.
தன்னை “மீண்டும் வடமாகாண முதல்வராக ஆக்கும்படி வடக்கிலுள்ள பல தமிழர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்காகவே தான் மீண்டும் நியமிக்கப்பட்டதாகவும் வேறு காரணங்கள் இல்லை” என்று ஊடகங்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது ஆளுநர் ரெஜினோல்ட் குரே பூசி மெழுகினாலும் (பார்க்க - “ரெச” என்கிற சிங்களப் பத்திரிகைக்கு 19.04.2018 அன்று வழங்கிய பேட்டி) நிகழ்ந்தது என்னவென்பது இப்போது நாடே அறியும். அது மட்டுமன்றி கடந்த ஏப்ரல் 14 அன்று ரட்ணஜீவன் ஹூல் சண்டே லீடர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் “அவர் ஒரு சிங்கள – கத்தோலிக்க - கொவிகம சாதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கூட எற்றுக்கொண்டிருப்போம். ஆனால் அவர் கத்தோலிக்க - கராவ சாதியைச் சேர்ந்தவர் (கரையார்)” மகாநாயக்க தேரர் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையின் சிங்கள அரசியல் செயன்முறைக்குள் சாதியம் எப்படியெல்லாம் இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகிறது என்பது பற்றி சிங்கள சாதியம் பற்றி ஆராய்ந்த முக்கிய நிபுணர்களாக கருதப்படும் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட, விக்டர் ஐவன், கலாநிதி காலிங்க டியூடர் டீ சில்வா போன்றவர்கள் தொடர்ந்தும் எழுதி வருகிறார்கள்.
சாதியத்தின் கோட்டை கண்டி?
மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராக கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள, பௌத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்கள சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குபிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசிய கொடி; கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி.
இலங்கையின் பாரம்பரிய மரபு எனும் போது அது சாதியத்தையும் உள்ளடக்கியது தான். சிங்கள சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அது தான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லை தற்காத்து வைத்து இருக்கும் தலதா மாளிகையும், பௌத்த மத மகாசங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டி தான். ஆக கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989 ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரிசில் நடந்த மாநாட்டில் கண்டியை புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.
இலங்கையின் மறைமுக சிங்கள பௌத்த ஆட்சியமைப்பு முறையை பேணிக்காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்து வருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கும் அங்கே செல்வதை மரபாக கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றி பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்புரையை செய்வதை சிங்கள பௌத்த பெருமிதமாகக் கொண்டுள்ளனர்.
பதவிகளையேற்கும் போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளில் போதும் கண்டியிலுள்ள பௌத்த மகா பீடத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளை பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின் போது ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் தமது தரப்பு அரசியல் விளக்கமைப்பதற்கும், ஆதரவு தேடுவதற்கும் அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய “திரைமறைவு அதிகாரிகளாக” கண்டி மகாசங்கத் தேரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதும், கட்டளையிடுவதும், எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.
1956 அரசியல் மாற்றமென்பது இலங்கையின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கையின் இனத்துவ அரசியலிலும் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய மாற்றம். சிங்கள அரச அமைப்புமுறையை “சிங்கள பௌத்த”த் தனத்துக்கு கட்டமைக்க சிங்கள பௌத்த அரசியல் சக்திகளும், சிவில் அமைப்புகளும் ஒரு சேர செயற்பட்டு வெற்றிபெற்ற காலகட்டம் அது. சிங்கள மகாசபையின் பண்டாரநாயக்கவை முன்னிறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கச் செய்ததே சிங்கள அதிகாரத்தை நிறுவுவதற்குத் தான். அந்த நிகழ்ச்சிநிரலில் சற்று சந்தேகம் வந்தாலும் பெரும் விலையைக் கொடுக்கக் கூட தயாராக இருந்தது அன்றைய சிங்கள பௌத்த சக்திகள். அதுபோலவே பண்டாரநாயக்கவின் உயிர் அதற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், அரசியல் தீர்வுக்கான சகல முயற்சிகளின் போதும் முட்டுக்கட்டைபோட்டு அதனை மறுத்தும், எதிர்த்தும், தடுத்தும் வந்ததும், தலைமைதாங்கியதும் கண்டி பௌத்தத் தலைமை தான்.
1957 ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட “கண்டி பாதயாத்திரை” வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரை தான். பொது பல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்கோ அல்லது கண்டியிலிருந்தோ தான் ஆரம்பித்ததை நாம் கண்டிருக்கிறோம். இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பௌத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித் தான் காரியம் சாதித்து வருவதை நாம் நேரடியாக கண்டு வருகிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசார் கூட அடிபணிந்து பின்வாங்குவதையும், கெஞ்சி சமரசம் பேசுவதையும் கூட நிதமும் கவனித்திருக்கிறோம்.
அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின் போது நோர்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டு பிரதிநிதிகளும் கூட பல தடவைகள் உத்தேச சமாதான யோசனைகளைக் காவிக்கொண்டு கண்டி மகாசங்கத்தினரை சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதாரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர். ஏறத்தாள இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகாசங்கத்தினர் இருந்து வருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும்.
அமைதியைப் போதித்த புத்தர் வழிவந்த பௌத்த பிக்குகள் யுத்த தளபதிகளுக்கு ஆசி வழங்கி போருக்கு அனுப்பி வைத்த காட்சிகளைக் கண்டிருக்கிறோம். அதுபோல யுத்தக் களத்துக்கே சென்று படையினருக்கு ஆசி வேண்டி மதச் சடங்குகளை சென்றதையும் பகிரங்கமாக ஊடகங்களில் கண்டிருக்கிறோம். சமாதான முயற்சிக்காக வந்த வெளிநாடுகளைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், அடிதடிகள் வரைக்கும் பௌத்த பிக்குமார் தலைமையில் நிகழ்ந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டு வர காரணமாக இருந்த அசோக சக்கரவர்த்தி கூட பேரழிவைத் தரும் யுத்தத்தை வெறுத்து பௌத்த வழிமுறையை ஏற்றுக்கொண்டவர். அந்த அமைதிவழி பௌத்த தத்துவத்தையே இலங்கைக்கும் இன்னும் பல தேசங்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். ஆனால் இலங்கையிலோ பௌத்தமதம் தவிர்ந்தவர்களின் மீது வெறுப்பையும் வன்முறையையும் பிரயோகிக்கும் மதமாக பௌத்தம் ஆக்கப்பட்டிருக்கிறது.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினரையும், மேலும் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு, ஊழல் போன்ற பல்வேறு குற்றங்களை இழைத்த படையினரையும் விடுவிக்கக் கோரும் முயற்சிகளுக்கு இன்று தலைமை கொடுப்பதும் இந்த மகாசங்கத்தினர் தான். அது போல விசாரணயின்றி நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்கிற அழுத்தத்துக்கு தலைமை தாங்குவதும் அதே மகா சங்கத்தினர் தான்.
இலங்கை பௌத்தர்களிடம் மட்டும்?
இலங்கை, மியான்மார், தாய்லாந்து ஆகிய தேரவாத பௌத்தத்தைக் கடைபிடிக்கும் நாடுகள் மாத்திரம் மோசமான அந்நிய வெறுப்புணர்ச்சியையும், தீவிர வன்முறையைக் கைகொள்வதன் பின்னணி என்ன என்கிற ஆய்வுகள் சமீப காலமாக கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது மேலதிக செய்தி. மென்போக்கும் கருணையும் நிறைந்த மஹாயான பௌத்தத்தை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகிறார்கள். இந்த மஹாயான நாடுகள் தான் செல்வந்த நாடுகளாகவும் உள்ளன. அதுபோல இலங்கைக்கும் நீண்டகாலமாக பொருளாதார ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவும் திகழ்கின்றன.
வெசாக் தினத்திற்காக உலகத் தொழிலாளர் தினத்தை தள்ளிப்போடும்படி அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்த அரச ஆணை |
இலங்கையின் சிங்கள பௌத்தத்தனத்தின் மூடத்தனமான போக்கின் சமகால இன்னொரு விவகாரம் வெசாக் தினத்துக்காக சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கும் அரச முடிவு. மகாசங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தை கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அனைத்துமே இம்முறை வெசாக் தினத்தை மே 29 தான் அனுஷ்டிகின்றன. ஏன் வெசாக் பண்டிகை பற்றிய ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு வெளியிட்டுள்ள பட்டியலிலும் கூட இவ்வருடம் மே. 29ஆம் திகதியைத் தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது.
பௌத்த சங்கங்களின் ஆசீர்வாதமும், அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் கூட அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பௌத்த பிக்குவாக மாறவிரும்புபவர்கள். அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பௌத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பௌத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதிலை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும், வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.
இன்னமும் இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளில் பௌத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் “இன்ன” விகாரைக்கு தேவை என்கிற நாளாந்த பத்திரிகை விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.
“பௌத்த சாசனத்தை” பாதுகாப்பது என்கிற பாரம்பரிய சுலோகம் எத்தனை போலியானது என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டலையே சாசனம் என்கிறோம். அப்படியென்றால் இந்த நிக்காயக்களை பாதுகாப்பது சாசனமா சாதியா என்கிற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
இலங்கையின் சாதியமைப்பை ஆராய்ந்த முக்கிய ஆய்வாளராக போற்றப்படும் பிரய்ஸ் ரயன் (Bryce F. Ryan) தனது “நவீன இலங்கையில் சாதியம்” (Caste in Modern Ceylon) என்கிற நூலில் உலகில் எந்தவொரு பௌத்த நாட்டிலும் கடைபிடிக்காத சாதி அமைப்புமுறை இலங்கை சிங்களவர்களிடம் மட்டும் தான் காணப்படுகிறது என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறார். அது மட்டுமன்றி அவர் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார்.
“ஒருபுறம் பௌத்த தத்துவத்தையும், அதன் அறநெறியையும் கொண்டாடிக்கொண்டு மறுபுறம் அதற்கு நேரெதிரான திட்டவட்டமான கட்டமைப்பையும் பேணிக்கொண்டு மேலும் 2500 ஆண்டுகள் பௌத்தம் எப்படி தளைத்திருக்கும்” என்கிற முக்கிய கேள்வியை எழுப்புகிறார்.
சாதியத்துக்கு எதிராக பௌத்தம்
சாதியத்துக்கு எதிராக புத்தரை முன்னிறுத்துவோர் ஒரு கதையை தொடர்ச்சியாக ஆதாரம் காட்டுவது வழக்கம்.
தலையில் முடி மரம் வளர்ந்திருந்த அரசரொருவர் அதனால் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தார். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் ஒன்றாக ஆகாரம் உண்டால் தான் இதிலிருந்து மீட்சி பெறலாம் என்கிற அறிவுரையை யாரோ கூறி விடுகிறார்கள். அரசரும் மாறுவேடமணிந்து ஒரு தாழ்த்தப்பட்ட சாதியொருவரைக் கண்டுபிடித்து அப்படியே ஒன்றாக உணவுண்ட போதும் எதுவும் மாறவில்லை. அரசர் மீண்டும் மாளிகைக்குத் திரும்பும் வழியில் தற்செயலாக ஒரு மோசமான நடத்தையைக்கொண்ட உயர்சாதிக் குடும்பமொன்றை கடக்க நேரிடுகிறது. அவர்களின் குரூர நடத்தையை மோசமாக கண்டித்து திட்டுகிறார் அரசர். மாறுவேடத்தில் இருப்பவர அரசர் தான் என்று அறியாத அவர்களில் ஒருவர் தனது உணவை அரசரின் முகத்தை நோக்கி எறிகிறார். அதிலிருந்த சோற்றுப்பருக்கை முகத்தில் பட்டதும் அரசரின் தலையிலிருந்த குடி மரம் மறைந்து விடுகிறது. “எந்தவொரு மனிதனும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவரோ, பிராமணரோ கிடையாது. ஒருவன் தனது நன்னடதையாலேயே உயர்ந்தவனாக போற்றப்படுகிறான்.” என்கிற புத்தரின் போதனை அப்போது தான் அரசன் நினைவுகொள்கிறான்.
“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பிரஹ்மனோ கம்மனா வசலோ கோதி – கம்மனா ஹோதி பிரஹ்மனோ...” (வசல சூத்திரம்)
இந்தக் கதை சிங்கள சமூகத்தில் மிகவும் பிரபலமான பௌத்த கதை.
இந்தியாவில் ஆதிக்க சாதியாக கொடுமை தாங்காது அண்ணல் அம்பேத்கர் ஐந்து லட்சம் தலித் மக்களுடன் சேர்ந்து பௌத்தத்துக்கு மாறினார். பௌத்தம் அந்தளவு சாதி மறுப்பு மார்க்கமாக கருதப்படுவதால் தான் அப்படி செய்ய அவர் முன்வந்தார். ஆனால் இலங்கையில் இந்துத்துவ சாதிக்கொள்கைகள் பௌத்த பண்பாட்டின் மீதும் தாக்கம் செலுத்தி சிங்கள பௌத்தத்துக்கென்று தனித்துவமான சாதியமைப்பை உருவாக்கிக்கொண்டது. சிங்களமும் பௌத்தமும் தான் மற்றவர்களுக்கு எதிராக ஒரு சித்தாந்த கட்டமைப்பைக் கொண்டு சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பார்த்தால் கூடவே சொந்த சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக சாதியமும் கூடவே சமாந்திரமாகத்தான் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்திய மற்றுமோர் சமகால சம்பவம் தான் ரெஜினோல்ட் குரே விவகாரம்.
அது சரி.... கண்டிக்கு ஒரு சிங்கள – பௌத்த – கொவிகம – ஆண்/பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத) பின்னணியைக் கொண்ட ஒருவர் தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரை தெரிவுசெய்ய முடியாது இருக்கிறது.
ரெஜினால்ட் குரே
12.11.1947இல் பிறந்த ரெஜினால்ட் குரே கத்தோலிக்க கராவ சாதி பின்னணியைக் கொண்டவர். இடதுசாரிப் பின்னணியுடைய அவர் ஆரம்பத்தில் ஜே.வி.பியில் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தவர். 1977 பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தொல்வியடைந்தார். பின்னர் விஜயகுமாரதுங்கவின் இலங்கை மக்கள் கட்சியில் இணைந்துகொண்டார். 1988இல் இடதுசாரிக்கட்சிகள் கூட்டாக அமைத்த ஐக்கிய சோஷலிச முன்னணியின் மூலம் களுத்துறை மாவட்டத்திலிருந்து மேல்மாகாணசபைக்கு தெரிவானார்.
ஐ.சோ.மு வும் சுதந்திரக் கட்சியும் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் மூலம் 1994 இல் களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார். மீண்டும் 2000 ஆம் ஆண்டும் தெரிவானார். சந்திரிகா அரசில் இன விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சில மாதங்களிலேயே அவர் மேல் மாகாண முதலமைச்சராக தெரிவானார்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி தகவல் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார். ஆனால் 2005 ஆம் ஆண்டு அவர் மீண்டும் முதலமைச்சராக தெரிவானார். 2009 இல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டே 2010 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நீதித்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் சிறு ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சராக நியமனமானார். 2015 ஆம் ஆண்டு புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்ததும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொருளாதார காரணிகளால் அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவரை தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டிருந்தது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி. ஆட்சியமைத்ததன் பின்னர் அவரை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்கவில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவரை வட மாகாணத்தின் ஆளுனராக நியமித்தது அரசாங்கம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...