Headlines News :
முகப்பு » , , » கலப்புத் தேர்தல்முறை : காலத்தின் தேவைப்பாடா? எம். திலகராஜ்

கலப்புத் தேர்தல்முறை : காலத்தின் தேவைப்பாடா? எம். திலகராஜ்


 ஜனநாயக ஆட்சி முறையின் மிக முக்கிய அம்சமான தேர்தல் முறை தற்காலத்தில் பிரதான பேசு பொருளாகி இருக்கிறது. மிக நீண்டகாலமாக தொகுதி முறை தேர்தல் (First Past the Post) நடைமுறையில் இருந்து  வந்த நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்  ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில்  விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் கூட அமெரிக்கா, இந்தியா. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தொகுதிவாரியான  தேர்தல் (First Past the Post) முறைமையே நடைமுறையில் இருந்து வருகின்ற நிலையில்   இலங்கையில் விகிகதாசார தேர்தல் முறை கடந்த பல ஆண்டு  காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொகுதிவாரி முறையும், விகிதாசார முறையும் இணைந்த கலப்பு முறை பரீட்சார்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல்கள் முடிவுற்றதன் பின்னர் இலங்கை அரசியல் சூழல் புதுவித அனுபவங்களைப் பெற்றுள்ள நிலையில் இந்த கலப்பு முறை குறித்த சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டிய காலகட்டமும் நெருங்கி வருகின்ற நிலையில்,  அந்த தேர்தல்களை எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பாக நாட்டில் இப்போது பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையிலேயே இந்தத் தேர்தல் முறைமைகளை வடிவமைக்கும் அக்கறையுள்ள தரப்பினரின் கலந்தாய்வு கூட்டம் ஒன்று கடந்த புதனன்று பத்தரமுல்லவில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில்  நடைபெற்றது. 

நீதியான தேர்தல் முறைமைகளை கண்காணிக்கும் அமைப்புகளான பெபரல், தேர்தல் வன்முறைகைளக் கண்காணிக்கும் நிலையம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தேர்தல்கள் திணைக்களம், எல்லை மீள்நிர்ணய குழுவினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர், தேர்தல் முறைமை வடிவமைப்பு நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தேர்தல் முறைமைகள் உருவாக்கச் செயற்பாடுகளில் கடந்த மூன்று வருடங்களாக பங்கேற்று வருபவன் என்றவகையிலும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகிறது. 

பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியா ராச்சியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்ப உரைகளை தேர்தல் முறைமைகளை வரையும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டுவரும் ஆய்வாளரான கலாநிதி சுஜாதா கமகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் சுதந்த லியனகே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை மீள்நிர்ணய குழுவின் தலைவர் கலாநிதி தவலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர். மேற்படி ஆளுமைகளான ஐவரும் பௌதீக விஞ்ஞான துறை பட்டதாரிகள் எனபதும் அமர்வின் சுவாரஸ்யமாக அமைந்ததோடு தேர்தல் முறைமைகள் என்பது விஞ்ஞான ரீதியானதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்தது. 

கலாநிதி சுஜாதா கமகே
கலாநிதி சுஜாதா கமகே தனதுரையில், வரலாற்று ரீதியான பார்வையோடு தற்கால தேர்தல் முறைமை தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.  தேர்தல் முறைமைகள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருவது வழக்கம். அந்த வகையில்,  இலங்கையில் கலப்பு முறை தேர்தல் முறைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டதனாலேயே அதனை நோக்கி நகர்ந்துள்ளது. 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுதிவாரி முறைமை, இருபதாம் நூற்றாண்டில் விகிதாசார முறைமை, இருபத்தோராம் நூற்றாண்டில் இவை இரண்டும் கலந்த கலப்பு முறை ஆகியனவே இப்போதைக்கு செல்நெறியாக உள்ளது. எனினும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் தொகுதி முறை தேர்தல் நடைமுறைகளே இருந்து வருகின்றன. 

எனினும் நேபாளம், ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சமாந்திர  கலப்பு முறையும் பொலிவியா, ஜேர்மன், நியூஸிலாந்து, ஸகொட்லாந்து ஆகிய நாடுகளில் விகிதாசார கலப்புமுறையும் நடைமுறையில் உள்ளன. அதேநேரம் விகிதாசார தேர்தல் முறைமையானது ஒரு மூடிய முறைமையாக ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆசியாவில் கம்போடியாவிலும் நடைமுறையில் உள்னன. இலங்கை, இந்தோனேசிய போன்ற நாடுகளில் திறந்த விகிதாசார முறை நடைமுறையில் உள்ளது.  

எனவே காலத்தின் தேவைக்கு ஏற்ப இலங்கை உலக  செல்நெறிக்கு ஏற்ப கலப்பு முறைக்குள் இப்போது காலடி எடுத்து வைத்துள்ளது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் , பூட்டான், பங்களாதேஷ் போன்ற  நாடுகளில் தொகுதிவாரி முறையே நடைமுறையில் உள்ளது. தாய்லாந்து, கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்வான், ஜப்பான், நோபாளம் போன்ற நாடுகளில் சமாந்திர கலப்புமுறையும் கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் விகிதாசார முறையும் நடைமுறையில் உள்ளது. இலங்கை 1978 ஆண்டு இந்த விகிதாசார முறைமைக்குள் கால்வைத்தது. 

இதற்கு முன்னதாக 1946 தொடக்கம் 1977 வரை தொகுதிவாரி தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. அதவாது இலங்கையை 160 தேர்தல் தொகுதிகளாகப் பிரித்து அந்த ஒவ்வொரு தொகுதிகளுக்கும் கட்சிகள் முன்னிறுத்தும் ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்கும் முறை. இந்த காலத்தில் மத்திய கொழும்பு, நுவரெலியா மஸ்கெலியா, பேருவளை, ஹரிஸ்பத்துவ போன்ற சில தொகுதிகள் சிறுபான்மைச் சமூகங்களை உள்வாங்கும் வகையில் பலஅங்கத்தவர் தொகுதியாகவும்  அடையாளப்படுத்தப்பட்டன.

1978 ஆம் ஆண்டு கட்சிகள் தீர்மானிக்கும் வேட்பாளர்களை முன்னிறுத்திய விகிதாசார தேர்தல் முறையினை ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகம் செய்தார். இதன்போது, ஒரு கட்சி பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச வாக்குகளாக 12.5%  என  ஒரு நிபந்தனை இருந்தது. இது சிறுகட்சிகள் தனது பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு தடையாக இருந்து வந்த நிலையில் இந்த வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாக குறைப்பதற்கு 1989 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. (இந்த திருத்தத்திற்கு முன்னின்று உழைத்தவர் என்றவர் என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் போற்றப்படுகின்றார்).

2003 ஆம்  ஆண்டு முதல் இலங்கையில் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு தேவை ஏற்றபட்டுள்ளதாக கருத்துக்கள் பரிமாற்றப்பட அதற்காக பாராளுமன்றில் ஓர் உப குழு அமைக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு அந்த குழு கையளித்த அடைக்கால அறிக்கையில் கலப்பு முறை தேர்தல் முறை தொடர்பிலான பரிந்துரைப்பு செய்யப்பட்டது. அதுவே 2012ஆம், 22ஆம்  இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின்படி 70:30 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் கலப்பு முறையாக அதாவது தொகுதி (வட்டார) ரீதியாக அது70 வீதமான உறுப்பினர்களையும் தெரிவின் அடிப்படையில் 30 சதவீதமான உறுப்பினர்களையும் தெரிவு செய்வது என்பதான சட்ட ஏற்பாடாகவும் மாறியது. எனினும் இந்த சட்டத்தின் அடிப்படையிலான எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கை 2015 ஆம் ஆண்டு வெளிவந்தபோது அதன் பிரகாரம் அது அந்த விகிதாசாரத்தில் அமையாது 78க்கு 22 என்பதாகவே அமைந்தது. 

இந்த நிலைமையானது அந்த எல்லை மீள் நிர்ணய அறிக்கையை திருத்தியமைக்கவும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தி அமைக்கவுமான தேவையை உருவாக்கியது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களில் 25சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் 2016ஆம் முதலாம் இலக்க சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே 70:30 என தீர்மானிக்கப்பட்ட கலப்பு விகிதாசாரம் அவ்வாறு அமையாத நிலையில் 2017ஆம் ஆண்டு 16ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டம் அதனை 60:40 என்ற கலப்பு விகிதாசாரமாக மாற்றியமைத்தது. (எனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்கள் என்பது திடீரென உருவான ஒரு சட்டத்தினால்  நடைபெற்ற ஒன்றல்ல. 2007ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையின் ஆரம்பத்தில் இருந்து பார்க்கின்றபோதும் கூட ஒரு 10 ஆண்டு கால செயற்பாடு இந்த கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கையில் செலவிடப்பட்டுள்ளது.)

எனவே , 60:40 என்ற கலப்பு முறை அடிப்படையிலான தேர்தல் முறையானது 25 வீதம் பெண்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்  அத்தகைய ஒரு தேர்தல நடைபெறுவதற்கு முன்பதாகவே மாகாண சபைத் தேர்தல்களையும் இந்த கலப்பு முறையில் நடாத்துவதற்கு பாராளுமன்றில் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபைகள் திருத்தச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. 

இந்தச் சட்டத்தின் பிரகாரம் தொகுதியினதும் தெரிவினதும் விகிதாசாரம் 50:50 என மாற்றியமைக்கப்பட்டமையானது இப்போது இன்னுமொரு எல்லை மீள்நிர்ணய குழுவினது தேவையை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயக் குழு தமது அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த இடைக்காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகளானது நாட்டில் தேர்தல் முறைமைகள் குறித்த சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு கதையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் அடிப்படையில் தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தும்போது பிரதிநிதித்துவம் (Representative), ஆளுகைத்தத்துவம் (Governability) ஆகியவற்றோடு காத்திரமான கட்சிக்கட்டமைப்பு (uealthy of the Party System) ஆகிய மூன்றையும் உறுதி செய்கின்ற அடிப்படையில் அது அமைவதோடு பிரதிநிதிகளின் பொறுப்புடமை, ஊழலைத் தவிர்த்தல் என்பனவும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் கலாநிதி சுஜாதா கமகே வலியுறுத் துகின்றார். அத்துடன் கலப்பு முறை தேர்தலை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நமது நாட்டு தேர்தல் முறைமைக்குள் மீண்டும் பின்னோக்கிச் செல்லாது கலப்பு முறையில் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை சரி செய்வதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களை கலப்பு முறையிலேயே நடாத்த முடியும் என்பது அவரது வாதமாக அமைந்தது. 

அந்த வகையில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதாகவும் அவர் கருத்துரைத்தார். 
சிறு கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் பெண்களினதும் பிரதிநித்துவத்தை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகள் என்ன? 
பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இன்னும் ஜனநாயகமான வழிமுறைகளை உறுதிப்படுத்தல் 
லஞ்சம் கொடுத்தல் அல்லது வாங்குதல் இன்றி சபைத் தலைவர் மற்றும் உபதலைவர்களை தெரிவு செய்வதற்கான முறையை கண்டடைதல்
கட்சிக்கட்மைப்பை உறுதி செய்யும் வகையிலும் சிறு கட்சிகளை பாதிக்கா வகையிலும் வெட்டுப்புள்ளி முறைமை ஒன்றை கொண்டுவருதல் சம்பந்தமாக சிந்தித்தல். (நடைபெற்று முடிந்த தேர்தலில் வெட்டுப்புள்ளி இல்லாமை காரணமாக மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு கூட ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதோடு அது தொங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கைகைய அதிகரிக்கச் செய்தது)
2018 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் அதன் நோக்கத்தில் இருந்து  சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எதிர்பார்த்தவாறு வட்டாரத்திற்கான பிரதிநிதி ஒருவரை உறுதி செய்ததா? (சில வட்டாரங்கள் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டு மேலதிக பிரதிநித்துவத்தை சில வட்டாரங்களுக்கு வழங்கியுள்ளது)
உட்கட்சி முரண்பாடுகளை புதிய தேர்தல் முறை வழிகோலியுள்ளதா?
தேர்தல்களுக்கான செலவினங்கள் உண்மையில் குறைக்கப்பட்டுள்ளனவா? அப்படியாயின் அது எவ்வாறு?
தேர்தல் வன்முறைகள் உண்மையில் குறைந்துள்ளனவா?
எனவே மேற்படி கேள்விகளுக்கு பதில் தேடியவாறே புதிய தேர்தல் முறைமைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. 
தேர்தல் முறைமைகளை உருவாக்குவதில் அக்கறை காட்டுபவரான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக விஞ்ஞான பீட பேராசிரியர் சுதந்த லியனகே பின்வருமாறு கருத்துரைத்தார். 

 பேராசிரியர் சுதந்த லியனகே 
1947 ஆம் ஆண்டில்இருந்து நடை முறையில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையானது 'வாக்காளருக்கு இலகுவான' (Voter Friendly) தொகுதிக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்து கொள்ளும் இலகுவான வழிமுறையாக அமைந்தது. எனினும் அதன் பிரதான குறைபாடாக அமைந்தது. செல்லுபடியான எல்லா வாக்குகளுக்குமான பிரதிநிதித்துவத்தை அது உறுதி செய்யவில்லை. தோல்வியடைந்த வாக்களார்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளுக்கு எந்தப்பெறுமதியும் இருக்கவில்லை. 

1978ஆம் ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையானது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை அறிமுகத்தோடு உருவானது.  எனவே விகிதாசார முறையின் பிரதான குறைபாடானது உறுதியற்ற அரசாங்கம் உருவாவதுடன் உறுப்பினர்களின் தெரிவு ஒரு பிரச்சினையானது. (இந்த கட்டத்தில் நிறைவேற்றதிகாரம் அதிக அதிகாரங்களைத் தன்னகத்தே எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. (தற்கால நிலைமையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்)

விகிதாசார முறைமை 'தலைவர்களுக்கு இலகுவான' (Leader Friendly) ஒரு முறைமையாகவே காணப்பட்டது.எனவே சிவில் சமூகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தின் ஊடாக  'விருப்பு' (மனாப்ப) வாக்குமுறை ( Leader Friendly) உருவானது. இந்த முறைமையானது உட்கட்சி முறுகல்களுக்கு வித்திட்டது. இந்த முறைமையானது இனக்குழுமம், மதக்குழும், சாதியம் சார் குழுக்கள் என குழுமனப்பான்மை கொண்ட கட்சிகள் உருவாகவும் அவ்வாறு வாக்குகளை சேகரிக்கவும் வழிவகுத்தது. 

வேட்பாளர்கள் அசாதாரணமாக தேர்தல் செலவுகளை மேற்கொள்ள இந்த முறை இடமளித்தது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே 2003 ஆம் ஆண்டு தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் 2007 ஆம் ஆண்டு குறித்த தெரிவுக்குழு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. இதனடிப்படையிலேயே 2012ஆம் ஆண்டு தொகுதி வாரியும் விகிதாசாரமும் இணைந்த கலப்பு முறை அறிமுகம் செய்யப்படடது. 

இது கலப்பு முறை பிரதிநிதித்துவம் Mixed Member Representation (MMR) என்றே அழைக்கப்பட்டது. எனினும் 2015 ல் உருவான இணக்கப்பாட்டு அரசாங்கம் MMR என்ற முறைமையை MMP Mixed Member Propatinate  என முற்று முழுதான விகிதாசார முறையாக மாற்றயிமைத்து. அதாவது உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டு விருப்பு வாக்குக்கு பதிலாக தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக தெரிவாக ஏனைய எண்ணிக்கையானோர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படுவதாக அமைந்தது. இது MMR முறைமையில் பிரேரிக்கப்பட்ட வெற்றியடைந் தவருக்கு அடுத்த அதிக வாக்குகளைப் பெற்றவரை  (Best Looser) பட்டியல் ஊடாக தெரிவு செய்யும் முறையை மாற்றயிமைத்தது. 

அத்துடன் வெட்டுப்புள்ளி முறையை மாற்றியமைத்ததன் காரணமாக தொங்கு உறுப்பினர்கள் உருவாகும் நிலைமையைத் தோற்றுவித்தது.  இது நிலையற்ற ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியிருப்பதுடன் 341 உள்ளூராட்சி சபைகளில் சுமார் 400 தொங்கு உறுப்பினர்களையும் தோற்றுவித்தது. எனவே 4631 என நிர்ணயிக்கப்பட்ட வட்டார உறுப்பினர்களின் எண்ணிக்கை 4500 யும் தாண்டியது. இது சிவில் சமூகத்தினர் மட்டத்தில் புதிய முறை தொடர்பான அதிருப்தியைத் தோற்றுவித்தது. 

அத்துடன் அரசியல் கட்சி மட்டத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டத்திலும் கூட முன்னை விகிதாசார விருப்பு வாக்கு முறை சிறந்தது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. உண்மையில் விகிதாசார விருப்பு வாக்குமுறையில் நிச்சயமான உறுப்பினர் எண்ணிக்கையும் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கட்சிக்கு இரண்டு மேலதிக ஆசனங்களும் வழங்கப்பட்டமையால் உறுதியான சபையை உருவாக்கவும் அது சாதகமாக அமைந்தது.

எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறைமையானது குறைந்தபட்சம் வட்டாரத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொ டுத்துள்ளது. அத்துடன் உட்கட்சி முரண்பாடுகளை குறைத்துள்ளது.இன, குழு, சாதி அடிப்படையிலான வாக்களிப்பு ஓரளவுக்கு குறைவடைந்துள்ளது. வாக்களிப்பு முறை இலகுவானதாக அமைந்துள்ளதுடன் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. எனவே இந்த முறைமையானது சிவில் சமூகத்தினர் மட்டத்தில் வரவேற்றைபப் பெற்றுள்ளது. எனவே மாகாணசபை பாராளுமன்றத்திற்கும் இந்த முறைமையை அறிமுகப்படுத்தலாம். இதற்கு முன்பதாக இந்த முறையின் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்திக்கப்படல் வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன் பேராசரியர் சுதந்த லியனகே பின்வரும் பிரேரணைகளையும் முன் வைக்கின்றார். 

வெட்டுப்புள்ளியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 2.5 வீதமும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு  5 வீதமும் பொதுத்தேர்தலுக்கு 10 வீதமும் அமைதல்  வேண்டும். அத்துடன் தொங்கு உறுப்பினர் முறை முற்றாக நிறுத்தப்படல் வேண்டும். முதல் சுற்றில் 40 வீத ஒதுக்கீடு செய்யப்படுவது போல இரண்டாவது வட்டமாக கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில 25 வீத பெண்களின் பங்கேற்பு என்பது கட்சிகளிடையே பகிரப்படல் வேண்டும். 

வெற்றிபெற்ற கட்சிகள் அதன் வாக்குகளின் வீதாசார அடிப்படையில் போனஸ் உறுப்பினர் வழங்கப்படல் வேண்டும் இது குழப்பமின்றி ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யும். மேற்படி மாற்றங்களை உறுதி செய்யும்போது அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு முறையானது இலங்கையில் நடைமுறைப்படுத்தக்கூடிய முறைமையொன்றாக அமையும். எது எவ்வாறாயினும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நடைமுறையி லிருக்கும் வரை விகிதாசார தேர்தல் முறையே இலங்கைக்கு உரிய முறையாகும். அந்த முறை மாற்றப்பட்டால் தொகுதி அல்லது MMR முறைமையே குறைந்த அளவிலான விகிதாசர முறையுடன் ஏற்புடையதாக அமையும்.

இலங்கைக்கு விருப்பு வாக்கு முறை சிறந்த ஒன்றாக தான் கருதுவதாகவும் 12.5 வெட்டுப்புள்ளி முறை நீக்கப்பட்டமை தற்போதைய அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்பதும் தனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்த பேராசரியர் சுதந்த லியனகே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேர்தல் நடைமுறைகள் உள்ளபோதும் அவற்றை அப்படியே இறக்குமதி செய்யாது இலங்கை அரசியல் கலாசார சூழலுக்கு ஏற்ற உள்நாட்டு முறைமை ஒன்றே நமக்கு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார். ..

(அடுத்த வாரமும் வரும்...)

நன்றி ஞாயிறு தினக்குரல் (29/04/2018)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates