Headlines News :
முகப்பு » , , , » இலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி? - என்.சரவணன்

இலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி? - என்.சரவணன்


1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பின் மூலம் நிறுவிய நாள் அது. அது எப்படி நிகழ்ந்தது என்பதை இந்தக் கட்டுரை விபரிக்கிறது.

1970 ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றது. அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னர்; வெற்றிபெற்ற அரசாங்க உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாக தலதா மாளிகைக்கு ஆசீர்வாதம் பெறப் புறப்பட்டனர். அங்கு தான் அவர்கள் சத்தியப்பிரமாணத்தையும் செய்துகொண்டார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன சேர்ந்து கூட்டாக ஆட்சியமைத்த ஐக்கிய முன்னணி ஆட்சி; தமது தேர்தல் வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக “அரசியல் நிர்ணய சபை” ஒன்றை உருவாக்கியது. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கென ஒரு அமைச்சையும் உருவாக்கி கொல்வின் ஆர்.டி சில்வாவை அதற்கான அமைச்சராக நியமித்தது.

பௌத்த சங்கத்தினருக்கு அடிபணிதல்
நீண்டகாலமாக கல்வி அமைச்சின் கீழ் இருந்து வந்த கலாசார திணைக்களமும் தனியான கலாசார அமைச்சாக முதற்தடவை உருவாக்கப்பட்டது. ஆனால் அது பௌத்த கலாசார அமைச்சாகவே இயங்கத் தொடங்கியது. முன்னால் நீதிபதி எஸ்.எஸ்.குலதிலக்கவுக்கு அந்த அமைச்சு வழங்கப்பட்டது. அந்த அமைச்சின் செயலாளராக நிஸ்ஸங்க விஜயரத்ன நியமிக்கப்பட்டார். (பார்க்க பெட்டிச் செய்தி)

அரசியலமைப்பை உருவாக்கும் போது அஸ்கிரி, மல்வத்து, அமரபுர, ராமக்ஞ ஆகிய நிக்காயக்களின் மகாசங்கத்தினர் தமது கருத்துக்களை கூறும் உரிமை உள்ளதென்றும் அவர்களின் கருத்தை அறியும் படியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர் அன்றைய அமைச்சர் கே.எம்.பி.ராஜரட்ன.

1970 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் யாப்பு சீர்திருத்தம் பற்றி மகாசங்கத்தினர் தினமின பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளை ஆதாரம் காட்டி அவற்றை அமைச்சரவையில் சமர்ப்பித்தார் அவர். ஒக்டோபர் மாதம் அமைச்சரவை கூட்டம் பற்றிய 30வது தொகுதி அறிக்கையில் அதனை இன்றும் காணலாம். அந்த யோசனைகள் 20.09.1970 தினமின பத்திரிகையில் வெளியானது. (அந்த நிக்காயாக்களின் பரிந்துரைகளை சுருக்கி இங்கே தொகுத்திருக்கிறேன். இதே ஒழுங்கில் அவை இருக்கவில்லை.)

அந்த முன்மொழிவுகளில்:
  1. பௌத்த மதத்துக்கு நிகராக வேற்று மதங்களுக்கு இடமளித்தல் கூடாது. பௌத்த ராஜ்ஜியமாக உருவாக்கப்படல் வேண்டும்.
  2. மகா சங்கத்தையும், சங்கத்தினரையும், பாதிக்கும் எந்தவித சட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது.
  3. இலங்கையின் ஒரேயொரு அரச மொழியாக சிங்களத்தை மட்டும் யாப்பு ரீதியாக பிரகடனப்படுத்த வேண்டும்.
  4. இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சிங்கள பௌத்தர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் ஒற்றையாட்சியை உறுதிபடுத்தவேண்டும்.
  5. 1815 கண்டி ஒப்பந்தத்தில் அமைந்தது போல பௌத்த சாசனத்தையும் பௌத்த கலாசாரத்தையும் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையாதல் வேண்டும் என்பதை யாப்பு கூற வேண்டும்.
  6. அரச இலையுடன் கூடிய புராதன சிங்கக் கொடி குடியரசின் கொடியாதல் வேண்டும்.
  7. ராஜ உபதேச சபையொன்று உருவாக்கப்பட்டு, குடியரசின் கீழ் மத நடவடிக்கைகளை கையாளும் ஒரு பதவியை உருவாக்க வேண்டும்.
“பௌத்த மத” கமிட்டி
இப்படியான சூழலின் மத்தியில் அரசியல் நிர்ணய சபையின் கீழ் ஒவ்வொரு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட குழுக்கள் பல உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு “மக்கள், அரசும் இறைமையும்”, “அரச மொழி”, “நீதிமன்ற மொழி”, “அரச கொள்கை” ஆகியனவற்றுடன் “பௌத்த மதம்” பற்றியும் குழுவும் உருவாக்கப்பட்டது.

“பௌத்த மதம்” பற்றிய குழுவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருக்கும் இடமிருக்கவில்லை. சிங்களத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து பௌத்த மதத்துக்கு சிறப்புரிமை கொடுக்கும் திட்டத்தை இப்படித்தான் நிறைவேற்றினார்கள்.

அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைகள் பற்றிய மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி அவை அந்தந்த குழுக்களுக்கு அனுப்பப்பட்டன.  பௌத்த மதத்துக்கு யாப்பு ரீதியாக சிறப்பிடத்தை வழங்குவதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட “பௌத்த மதம்” குழுவின் முதல் கூட்டம் 25.02.1972 இல் பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் கூடியது. அக்குழு 1972 மார்ச் மாதம் , 2, 9, 15 ஆகிய திகதிகளில் மீண்டும் பாராளுமன்றக் கட்டிடத்தில் கூடியது.

அரசியலமைப்பு உருவாக்க அமைச்சு “பௌத்த மதம்” பற்றி திரட்டிய கருத்துக்களை அதற்கான கமிட்டியிடம் ஒப்படைத்தது. அந்த குழு தமது பரிந்துரைகளை மேலும் உறுதிசெய்வதற்காக பௌத்த, சிங்கள அமைப்புகளை சந்திப்பதற்கு தீர்மானித்தது. (பார்க்க பேட்டி செய்தி)

மார்ச் 02, 09, 15 ஆகிய மூன்று நாட்கள் சாட்சியங்களைத் திரட்டியது. ஆனால் சிங்கள பௌத்த சக்திகளைத் தவிர வேறெவரிடமும் இருந்தும் கருத்தறியவில்லை. நான்காவது இறுதி நாள் அமர்வு 20.03.1972 – அலரி மாளிகையில் நிகழ்ந்தது. கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த இறுதிக் கூட்டத்தில் சாட்சியங்கள் அனைத்தையும் முன் வைத்து கலந்துரையாடினர்.

பௌத்த மதம் என்கிற பதத்தை இடலாமா அது மட்டும் போதுமானதா என்கிற வாதம் அங்கு எழுப்பப்பட்டது. பௌத்தம் என்பதற்குப் பதிலாக “பௌத்த சாசனம்” என்கிற பதம் இன்னும் விரிவான தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்று வரைவிலக்கணம் செய்யப்பட்டது. “உரிய இடம்” என்பதா “பிரதான இடம் / முக்கிய இடம்” என்பதா போன்ற விடயங்களும் விவாதிக்கப்பட்டன.

பௌத்த மகாசங்கத்தினருடனான சந்திப்பின் போது அவர்கள் “பௌத்த மதம்” பற்றிய ஏற்பாடு; கண்டிய ஒப்பந்தத்தின் 5 வது பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்கள். மேலும் அவர்கள் மத நிறுவனங்கள் தொடர்பில் அரசுக்கோ, அரச நிறுவனங்களுக்கோ எந்தவித தொடர்புகளும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் மத நிறுவனங்களுக்கு உரித்தான சொத்துக்கள், நிலங்கள் என்பவற்றை பாதுகாக்க அரச நிறுவனங்களின் நிர்வாகமின்றி மேற்கொள்ள முடியாது என்பது பற்றியும் அவர்களுக்கு சுட்டிக் காட்டப்பட்டது. எனவே பொதுச் சட்டத்தின் பிரகாரம் அவற்றைப் பேணலாம் என்று கமிட்டியினர் கருத்து வெளியிட்டார்கள்.

நீண்ட விவாதத்தின் பின்னர் “அரச மதம்” என்கிற ஒரு ஏற்பாட்டை யாப்பில் உள்ளிடுவதை தவிர்க்கும் யோசனைக்கு மல்வத்து – அஸ்கிரி தரப்பு மகாசங்கத்தினரும் ஒத்துக்கொண்டார்கள்.

மத ஸ்தளங்களின் சுயாதீனத்தை பாதுகாக்கும் ஏற்பாடு உரையாடப்பட்டபோது “கடமை ஆகும்” என்பதற்குப் பதிலாக “அரசின் பொறுப்பாகும்” அல்லது “அரசுக்குப் பொறுப்பாகும்” என்கிற சொற்களை இடுவது பற்றி உரையாடப்பட்டது. இறுதியில் அனைத்தையும் விவாதித்த பின்னர் கமிட்டி கீழ்வரும் வகையில் அதனை வரைவிலக்கணப்படுத்தியது.

“இலங்கை குடியரசு பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்குதல் வேண்டும் என்பதுடன் 18ஆம்  பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஈ) எனும் பந்தியினால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லாச் சமயங்களுக்கும் உறுதியளிக்கும் அதே நேரத்தில் பௌத்த மதத்தைப் பாதுகாத்தலும் பேணி வளத்தாலும் அரசின் கடமையாதலும் வேண்டும்”
இந்த யோசனையை கமிட்டி ஏகமானதாக முடிவு எடுத்து கமிட்டித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கையெழுத்துடன் கமிட்டியின் செயலாளர் நிஸ்ஸங்க விஜயரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை எடுத்துக் கொண்டு கூட்டத்தின் முன்னால் வந்து இரு கரம் குவித்து கும்பிட்டு “நம் இருவருக்கும் சொர்க்கம் கிடைக்க இது போதும்” என்று உணர்ச்சியுடன் பிரதமரைப் பார்த்து அங்கு கூறினார்.

சிங்களக் கட்சிகளின் கூட்டுச் சதி
அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று நன்றி பாராட்டி பிரதமர் சிறிமா ஆற்றிய உரையில் ஐ.தே.கவின் தலைவரும் முன்னால் பிரதமருமான டட்லி சேனநாயக்கவுக்கு தனது சிறப்பு நன்றியை தெரிவித்தார்.
“மதிப்புக்குரிய சேனநாயக்க அவர்களே இன்று நான் இந்தக் கதிரையில் இருக்கிறேன். நாளை நீங்கள் இந்தக் கதிரையில் அமரக்கூடும் நாம் இப்போது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியல் யாப்பைத் தயாரித்திருக்கிறோம். ஆகவே நாம் இந்தக் காரியத்தை அரசியல் பாரபட்சமின்றி நாட்டின் தேவை கருதி சிறப்பாக ஆக்கி முடிப்போம்.”
இந்த வேண்டுகோளை டட்லி சேனநாயக்க ஏற்றுக்கொண்டதுடன் யாப்பு குறித்த விவாதங்களில் ஈடுபாட்டுடன் கேள்விகளை கேட்டு, அபிப்பிராயங்களை முன்வைத்தார்.


“பௌத்தமதம் அரச மதமாக ஆக்கப்பட்டால் தலதா மாளிகை போன்ற புராதன ஸ்தலங்கள் அரசின் அதிகாரத்துக்குள் வரும் நிலையில் உங்களால் சங்கப் பிரகடம் செய்யும் நிலையும் வருமல்லவா?” என்று மகா சங்கத்தினரிடம் கேட்டார் டட்லி.

இப்படி ஜென்மப் பகைகொண்ட பிரதான கட்சிகள் அரசை யாப்பு ரீதியில் பௌத்தமயப்படுத்துவதற்காக ஒன்றிணைந்தார்கள்.

1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பானது பல்லின, பல்மத நாட்டில் தனியொரு மதத்தை அரச சலுகைக்குரிய மதமாக பிரகடனம் செய்தது மட்டுமன்றி ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளோடு மாத்திரம் மட்டுப்படுத்துகின்ற சதியை கச்சிதமாக முடித்தது.

1956 இல்
1951 இல் பண்டாரநாயக்க ஐ.தே.க வில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்தார். சிங்கள பௌத்த சக்திகள் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறினார் டீ.எஸ். சேனநாயக்க. 

சிங்கள மொழியை அரச மொழியாக ஆக்குவதற்கு எதிராக அவர் இப்படி ஒரு உதாரணத்தைக் கூறினார். “சிங்களத்தில் வைத்தியர்கள் மருந்து எழுதிக் கொடுக்கும் சிக்கலின் காரணமாக அப்பாவி நோயாளிகள் மரணமடைவார்கள்” என்றார். பௌத்தத்தை அரச மதமாக ஆக்கினால் மகாசங்கத்தினர் அரச ஊழியர்களாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்று எச்சரித்தார் டீ.எஸ்.சேனநாயக்க. (ஹரிஸ்சந்திர விஜேதுங்க – “புத்த ஜயந்தியில் சதியும் கொலையும்” நூலில்)

ஜே.ஆர்.
ஜே.ஆர்.1978இல் பதவியேற்று இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்த போதும் பௌத்தத்துக்கு யாப்பின் மூலம் கொடுக்கப்பட்ட அந்தஸ்தில் கைவைக்கத் துணியவில்லை. அப்படியே பேணுவது தான் தனது ஆட்சிக்கு பாதுகாப்பானது என்று நம்பினார். அதேவேளை பௌத்தத்தை இலங்கை அரசின் உத்தியோகபூர்வமான மதமாக ஆக்கும்படி நிர்ப்பந்தங்கள் எழுந்தன. அப்படி செய்தால் அரசு மேற்கொள்ளும் மதம் தொடர்பான நடவடிக்கைகளின் போது அனாவசிய தலையீட்டுக்கு வழி வகுத்துவிடும் என்று ஜே.ஆர்.நம்பினார்.

இலங்கை சிங்கள நிறுவனம் (ஸ்ரீ லங்கா சிங்கள சங்விதான). சிங்கள இளைஞர் முன்னணி (சிங்கள தருன பெரமுன) போன்ற அமைப்புகள் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி ஒரு சிங்கள பௌத்தராக இருப்பதை யாப்பின் மூலம் உறுதி செய்யும்படி போராடின. (அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான தெரிவுக் குழுவின் அறிக்கை 1978, பக்கம். 272). ஆனால் ஜே.ஆர். வேறு வழியில் “சிங்கள பௌத்த” சக்திகளுக்குத் தனது பௌத்தத் தனத்தை வெளிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதியின் கொடியாக “தர்மசக்கர”த்தை (அசோக சக்கரம்) பொறித்தார். தனது அரசாங்கமும் அசோகனின் “தர்மிஷ்ட” ஆட்சியைப் போன்றது என்று கூறி “தர்மிஷ்ட அரசாங்கம்” என்று பிரகடனம் செய்துகொண்டார்.

அன்று புகுத்திய பௌத்தத்தை இன்று  அவர்களே விரும்பினாலும் கூட நீக்க முடியாத அளவுக்கு அது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையை மதச் சார்பற்ற நாடாக ஆக்குங்கள் என்று கூற சிறுபான்மை இனத் தலைவர்களுக்கு மாத்திரமல்ல பெரும்பான்மை இன நடுநிலைத் தலைவர்களுக்கும் கூட துணிச்சல் கிடையாது.

நிஸ்ஸங்க விஜயரத்ன (1924-2007)
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக இருந்தவர். இலங்கை சிவில் சேவையில் பணியாற்றியவர். அனுராதபுரம் நகரப் பாதுகாப்பு சபையின் தலைவர், அதனை புனித பூமியாக ஆக்கும் பணியை முடித்தவர். அனுராதபுர அரசாங்க அதிபராகவும் இருந்தவர். 1977இல் ஜே.ஆர் அரசாங்கத்தில் உயர்கல்வி மற்றும் நீதிமன்ற அமைச்சரானார். இன்றுள்ள கொழும்பு உயர்நீதிமன்ற பெருங்கட்டடத்தை சீனாவின் உதவியுடன் செய்துமுடித்த பெருமை அவருக்கு உரியது. அரசியலில் ஓய்வு பெற்றதன் பின்னர் சோவியத் யூனியனுக்கு இலங்கைத் தூதுவராக இயங்கினார். இவரின் தந்தை எட்வின் விஜயரத்ன; அவர் டீ.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர்.

1972 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய இலட்சினையையும், தேசியக் கொடியையும் உருவாக்குவதற்கான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் நிஸ்ஸங்க. இலங்கையின் தேசியக் கொடியின் நான் மூலைகளிலும் அரச மர இலையைப் புகுத்தி தேசியக் கோடிக்கு பௌத்த முகத்தைக் கொடுத்தவரும் இவர் தான்.

இவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் ‘மாபலகம விபுலசார தேரர்’ அரச இலட்சினையை வடிவமைத்தார். அது ஒரு சிங்கள பௌத்த இலட்சினையாகவே அமைக்கப்பட்டது. தேசியக் கொடி சிங்கள பௌத்த கொடியென விமர்சிப்போர் பலரின் கண்களுக்கு படாத ஒன்று அந்த அரச இலட்சினை. இன்று வரை அது தான் அரச இலட்சினை. கலாசார அமைச்சின் செயலாளராகவும் அப்போது அவர் இருந்தார்.

அரச இலட்சினையில் உள்ளவற்றின் அர்த்தம்: சிங்கம் (தேசியக் குறியீடு), சிங்கத்தின் வாள் (தேசிய இறைமை), சிகப்பு பின்னணி (சிங்கள இனம்),  தாமரை மொட்டு (புனிதம்), பூச்சாடி (தன்னிறைவு),  நெல்மணி (செழிப்பு), தர்ம சக்கரம் (பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மம்), நடுவில் இருக்கும் பெரிய சக்கரம் (இலங்கை), சூரியன், சந்திரன் (இருப்பின் உறுதித்தன்மை), சந்திரனை இடது புறமாக வைத்திருத்தல் (மென்மை), இலட்சினையை சுற்றி இருக்கும் எல்லைக் கோடு (இவை அனைத்தும் ஒற்றையாட்சிக்குள் இருப்பதை உறுதி செய்வது).

1972: “பௌத்த மதம்” கமிட்டியில் இருந்த தனிச்சிங்கள உறுப்பினர்கள்.
1. பிரதமர் சிறிமாவொ பண்டாரநாயக்க (தலைவர்)
2. நிஸ்ஸங்க விஜயரத்ன
3. மைத்திரிபால சேனநாயக்க
4. டீ.பீ.இலங்கரத்ன
5. பீ.பீ.ஜீ.கலுகல்ல
6. எம்.பீ.த இசெட் சிறிவர்த்தன
7. ஹெக்டர் கொப்பேகடுவ
8. கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா
9. ஜோர்ஜ் ராஜபக்ஷ
10. எஸ்.எஸ்.குலதிலக்க
11. டட்லி சேனநாயக்க
12. என்.விமலசேன
13. சந்திர குணசேகர
14. மொண்டி கொபல்லாவ
15. நோயெல் தித்தவெல்ல
தனிச் சிங்கள சாட்சியம்
தனிச் சிங்கள அமைப்புகளிடம், பௌத்தத் தலைவர்களிடமும், நபர்களிடமும் மட்டுமே கருத்து திரட்டியது கமிட்டி.
முதலாவது அமர்வு 1972 மார்ச் 02 சாட்சியம்
அகில இலங்கை மூன்று நிக்காயக்களின் மகா சங்க சபையின் பிரதிநிதிகள்:
கோனபீனுவல புஞாசார ஹிமி, அக்குரட்டியே நந்தசார ஹிமி,பண்டித மாத்தளை சாசனதிலக்க ஹிமி, வெல்லேதொட்ட பஞ்ஞாதஸ்ஸி ஹிமி, படிகொட்டுவெவே சுமனசென ஹிமி 
அகில இலங்கை பௌத்த சம்மேளனம்:
கலாநிதி பீ.பீ.மலலசேகர, பீ.செனரத் குணவர்த்தன, டீ.எல்.எப்.பேதிரிஸ். தோமஸ் அமரசூரிய. லீலாலனந்த கல்தேறா, பீ.சீ.பெரேரா. பீ.டீ.எம்.டயஸ், பீ.டீ.எஸ்.பெர்னாண்டோ. 
கொழும்பு பௌத்த வாலிபர் சங்கம்:
ஈ.எஸ்.அமரசிங்க, என்.எஸ்.ஏ.குணதிலக்க, எஸ்.பஸ்நாயக்க, பீ.சீ.எப்.ஜயரத்ன 
இரண்டாவது அமர்வு 09.03.1972 இல் சாட்சியமளிப்பு
சியம் மஹாநிக்காயவின் மல்வத்து தரப்பு மகாநாயக்கர் அதிபூஜ்ய மடுகல்லே ஸ்ரீ சுமண சித்தார்த்த தம்மசித்தியாஹிதான ஹிமி, சியம் மஹாநிக்காயவின் அஸ்கிரி தரப்பு மஹாநாயக்கர் கொடமுன்னே ஸ்ரீ நாகசேன தாம்மானந்தஹிதான ஹிமி, சியம் மஹாநிக்காயவின் மல்வத்து தரப்பு அனுநாயக்க தேரர் சிரிமல்வத்தே ஆனந்தாஹிதான ஹிமி, சியம் மஹாநிக்காயவின் அஸ்கிரி தரப்பு அனுனாயக்கர் பலிபான சந்தானந்தாஹிதான ஹிமி.
கண்டிய விகாரை – தேவாலய பொறுப்பாளர் சங்கம்:
எச்.பீ.உடுராவன (தியவடன நிலமே), ஏ.ஜே.ரத்வத்த (பஸ்நாயக்க நிலமே), ஜே.என்.பரணகம (பஸ்நாயக்க நிலமே), எஸ்.பீ.தொலபிஹில்லே (பஸ்நாயக்க நிலமே), லக்ஷ்மன் போகவைத்த (பஸ்நாயக்க நிலமே), எச்.எம்.நவரத்ன (பஸ்நாயக்க நிலமே), எச்.எம்.கெ.நாரம்பனாவ (பஸ்நாயக்க நிலமே), எல்.பீ,கரலியத்த (பஸ்நாயக்க நிலமே), மகிந்த பீ.பீ.சேனநாயக்க (பஸ்நாயக்க நிலமே), டீ.பீ.வீரசேகர (பஸ்நாயக்க நிலமே), பீ.தொடன்வெல (பஸ்நாயக்க நிலமே).
சாசன ஊழியர் சங்கம்:
மடிகே பஞ்ஞாசீக மகாநாஹிமி, டீ.எல்.எப்.பேதிரிஸ், ஜே.எம்.கருணாரத்ன
லங்கா மகாபோதி சங்கம்:
ஹெடிகல்லே பஞ்ஞாதிஸ்ஸ நாஹிமி, எம்.எச்.பஸ்நாயக்க, டீ.டீ.எல்லேபொல, டீ.எல்.எப்.பேதிரிஸ், லலித் ஹெவாவிதாரன.
சிங்கள ஜனநாயக சங்கம்:
கலாநிதி தென்னகோன் விமலானந்த, ஸ்ரீ வல்கம்பாய, எல்லேபொல சோமரத்ன, டீ.பீ.நாரம்பனாவ, யூ.பீ.சமரகோன், ஜே.ஈ.செதராமன். 
மூன்றாவது அமர்வு 15.03.1972 சாட்சியமளிப்பு
மோராவத்தே ஸ்ரீ சொமரதன ஹிமி
அகில இலங்கை சங்கங்களின் கூட்டமைப்பு:
ஹேம பஸ்நாயக்க (அரச வழக்கறிஞர்), ஜீ.பீ.காரியவசம், ஞானசேகர சேனநாயக்க, பீ.ஆர்.விக்ரமசூரிய.
அசோக தர்மதூத சங்கம்:
அத்துடுவே ஞானோதய ஹிமி, பீ.எச்.த சொய்சா, ஆனந்த சேமகே, எச்.ஆர்.கோதாகொட
நன்றி - தினக்குரல் 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates