Headlines News :
முகப்பு » , , , , , » சரவணனின் இரு நூல்கள் கொழும்பில் அறிமுகம்

சரவணனின் இரு நூல்கள் கொழும்பில் அறிமுகம்


ஆய்வாளரும் ஊடகவியலாளருமான என்.சரவணன் எழுதிய "அறிந்தவர்களும் அறியாதவைகளும்" '1915: கண்டி கலவரம்" ஆகிய நூல்களின் விமர்சனக் கூட்டம் அண்மையில் வெள்ளவத்தை "பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.

வீரகேசரி "சங்கமம்" பகுதியில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்", தினக்குரலில் தொடர்ச்சியாக வெளிவந்த ஆய்வுத் தொடர் 'கண்டி கலவரம்" எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இந்த இரு நூல்களின் விமர்சனக் கூட்டமாக இடம்பெற்ற இந்நிகழ்வு பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமையுரையுடன் ஆரம்பமானது. அவரது தலைமையுரையில்...

இன்று இதழியல் தனித்து செய்தியுடன் தங்கியிருக்க முடியாத நிலையில் உள்ளது, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றதொரு சூழலில் பத்திரிகைகளில் தரமான கட்டுரைகள் அமைதும் அவசியமாகிறது. கட்டுரையிலே கனதியான இலக்கியத் தரத்தை ஏற்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர். இன்று பல்கலைக்கழகங்களிலே நிகழ்கின்ற ஆய்வுகள் எல்லாம் பட்டங்களுக்கான ஆய்வுகளாக மாறி வருகிறது. அந்த வகையில் சரவணன் எழுதிய இரண்டு நூல்களும் மிகமுக்கியமானதாக இருக்கின்றன.

பொதுவாக பல்கலைக்கழகங்களிலே சிறுகதைகள், நாவல்கள் பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால், கட்டுரை இலக்கியம் ஆராயப்படவில்லை என்பதாகவும் பேராசிரியர் சபா ஜெயராசா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: என். சரவணன் அவரது அனுபவத்தைக் கொண்டு இந்த இரு நூல்களையும் தந்துள்ளார். தர ஆழமுள்ள, தரக்சிறப்புள்ள நூல்களாக இவை அமைந்துள்ளன என்றார்.

இந்நிகழ்வில், திறனாய்வாளர் தெ. மதுசூதனன் '1015 கண்டிக் கலவரம்" நூல் பற்றிய நோக்குதலை முன்வைத்தார்.

தனக்கும் தனது நண்பர் சரவணனுக்கும் இடையில் உள்ள நட்பு தொடர்பான விடயங்களுடன் ஆரம்பித்த அவர் பின்னர் நூலுக்குள் பிரவேசித்தார். குறுகிய காலத்துக்குள்ளே பத்திரிகைத்துறையில் நுழைந்து பல விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அரசியலில் பெண்கள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இன்று பல்கலைக்கழக மரபுகளுக்கு அப்பால் அரசியல் வரலாறு பற்றி எழுதுகின்ற பாரம்பரியம் தமிழிலேயே ஆங்காங்கு முளைவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

இந்நூலில் 60 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழு தப்பட்டுள்ளன. இவை தினக்குரலில் தொடர்ச்சியாக எழுதப்பட்டவையாகும். 1915ஆம் ஆண்டில் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை புரிந்து கொள்வதற்கான வரலாற்றுக்கூடாக இதன் பின்புலத்தை காட்டியதாக அமைந்துள்ளது. கொட்டாஞ்சேனையில் நடைபெற்ற கவரத்தையும் இங்கு இணைப்பாகத் தரப்பட்டுள்ளது போன்ற பலதரப்பட்ட விடயங்களை இதன்போது குறிப்பிட்டார்.

'அறிந்தவர்களும் அறியாதவையும்" எனும் நூல் பற்றிய விமர்சனத்தை முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி. தேவராஜ் இங்கு குறிப்பிட்ட போது.

சரவணன் எழுதியுள்ள இரு நூல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. எழுதுகின்றபோது சொல்கின்ற பாங்கு முக்கியமானது. பத்திரிகைத் துறையாளர்கள் விடயங்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி அதை மக்களிடம் எவ்வாறுகொண்டு சொல்வது என்பதை அறியத் தருகிறார்கள்.

25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன என்று குறிப்பிட்ட அவர் அதிலிருந்து சில கட்டுரைகளை மாத்திரம் தெரிவு செய்து அது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

நூலாசிரியரின் பாடசாலை கால ஆசிரியர் ஜீ போல் அன்டனி கருத்துத் தெரிவிக்கையில்: 

குழப்படிமிக்க அந்தப் பாடசாலையில் அமைதியான மாணவனாக சரவணன் இருந்தார். அவர் பாடசாலையைவிட்டு விலகியபின் தொடர்பு கிடைக்கவில்லை. 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று நான் அவரை நேரில் காண்கிறேன். அதற்கு முன் எமது தொடர்புகள் முகநூல் வழியாகவே இருந்தது என்று கூறியதுடன் அவரது ஆளுமைபற்றியும் சுட்டிக்காட்டினார். தனது சிறந்த ஆளுமையை அவர் இரண்டு நூல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவரது எழுத்துக்கள் மேலும் வெளிவர வேண்டும் என்பதுடன் அவருக்கு ஆசியையும் வழங்குகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

தினக்குரல் வார வெளியீடு ஆசிரியர் பாரதி ராஜநாயகம் குறிப்பிடும்போது: - கண்டி மாநகரில் இடபெற்ற கலவரங்கள் தொடர்பான தகவல்கள் புகைப்படங்கள் சிங்கள இதழ்களில் வெளிவந்தபோதும் தமிழில் வெளிவரவில்லை. புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையிலும் தனது நேரத்தை இந்நூல்களுக்காக செலவிட்டுள்ளார் என் சரவணன் என்று குறிப்பிட்டார்.

செல்வி ஜீவா சதாசிவம் தனதுரையில்.

சரவணனை சில மாதங்களாகத்தான் எனக்குத் தெரியும். தினக்குரலில் அவரது கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவந்த வேளையில்தான் அவரைப்பற்றிய தொடர்பை பெற்றுக்கொண்டு சங்கமத்திற்கும் கட்டுரைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

அதற்கிணங்க 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்" எனும் தலைப்பில் 25 வாரங்கள் இந்தத் தொடரை எழுதினார். அவ்வாறு சங்கமம் பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக வருவது மகிழ்ச்சியாக இருக்கும் இத்தருணத்தில் நூலாசிரியர் ஊடகத்துறைக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன என்றும் இதன்போது தெரிவித்தார். நூலாசிரியர் சரவணன் தனது ஏற்புரையில்:

1915 கலவரத்துக்கான முழுக் காரணம் முஸ்லிம்களே என்கிற பரப்புரை பல்லாண்டு காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அந்த புனைவை உடைப்பது இந்த நூலின் முக்கிய இலக்கு. அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாதம் என்கிறோம் அதன் சித்தாந்த வலிமை பற்றி பேசியிருக்கிறோம், அது நிறுவனமயப்பட்டிருக்கிறது என்கிறோம், ஆனால், அதை சித்தாந்த ரீதியில் நிறுவும் பணி தமிழ் சூழலில் போதாமையுடன் தான் இருக்கிறது. அதை நிறுவுகின்ற பணியை கடந்த 25 வருடகாலமாக செய்து வருகிறேன். அதன் ஒரு முக்கிய அங்கம் தான் இந்த நூல்.

கண்டி கலவரம் பற்றிய நூலின் முதல் 18 அத்தியாயங்களில் சிங்கள பெளத்த பேரினவாதம் 18ஆம் நூற்றாண்டில் எப்படி தோன்றி, வளர்ந்து, வியாபித்து தன்னளவில் நிறுவனப்படுத்திக் கொண்டு ஏனைய சிங்கள பெளத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நிலை நிறுத்திக் கொண்டது என்பதை நிறுவியிருக்கிறேன் என்றார். கூடவே இந்த நூல் வெளிவருவதற்குப் பிரதான காரணி வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் என்பதை அங்கு குறிப்பிட்டார்.

கனதியான விடயங்களை உள்வாங்கக்கூடிய நிகழ்வாக மிக எளிமையாக அன்றைய தினம் நடைபெற்றது. இங்கு ஒரு சிலர் இந்நூல் தொடர்பான கருத் துக்களை முன்வைத்துப் பேசினர்.


நன்றி  தினக்குரல் - 18.02.2018
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates