ஊடகவியலாளரும் ஆய்வாளருமான என். சரவணன் எழுதிய 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்', '1915 கண்டி கலவரம்' ஆகிய நூல்களின் விமர்சனக் கூட்டம் கடந்த 31.01.18 அன்று வெள்ளவத்தை தர்ம ராம வீதியில் அமைந்துள்ள 'பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்'தில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.
'அறிந்தவர்களும் அறியாதவைகளும்' ஏற்கனவே வீரகேசரி சங்கமம் பகுதியில் தொடர்ச்சியாக வெளி வந்த கட்டுரைகளாகும். 'கண்டி கலவரம் 'தினக்குரலில் வெளிவந்த ஆய்வுத் தொடராகும். இவ்விரு தொடர் களும் வாசகர்களின் கவனத்தைப் பெற்றதாகும்.
நேற்றைய வரலாறை இன்றைய சமூகத்துக்காக என். சரவணன் தந்திருப்பது மிகப்பொருத்தமான தாகும். இந்நிகழ்வு முற்றிலும் விமர்சனப் போக்குடன் இடம்பெற்ற நிகழ்வாகவே அமைந்தது. ஏனைய இலக்கிய நிகழ்வுகளைப் போன்ற சடங்குகள் அற்ற கனதியான கலந்துரையாடல்கள் கொண்டதாகவே அமைந் ததை அவதானிக்க முடிந்தது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு பிற்பகல் 1.30 வரை தொடர்ந்தது.
இந்நிகழ்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் சபா ஜெயராசா பேசுகையில்;
"நூல்கள் தமிழிலே நாளாந்தம் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்நூல்களிலே தரத்தைப் பாது காப்பது மிகமுக்கியமானது. என். சரவணன் அவரது அனுபவத்தைக் கொண்டு இந்த இரு நூல்களையும் தந்துள்ளார். தர ஆழமுள்ள, தரச்சிறப்புள்ள நூல்களாக இவை அமைந்துள்ளன.
இன்று இதழியல் தனித்து செய்தியுடன் தங்கியிருக்க முடியாத நிலையில் உள்ளது. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றதொரு சூழலில் பத்திரிகைகளில் தரமான கட்டுரைகள் அமைவதும் அவசியமாகிறது. கட்டுரையிலே கனதியான இலக்கியத் தரத்தை ஏற்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர். இன்று பல்கலைக் கழகங்களிலே நிகழ்கின்ற ஆய்வுகள் எல்லாம் பட்டங்களுக்கான ஆய்வுகளாக மாறி வருகிறது. அந்த வகையில் சரவணன் எழுதிய இரண்டு நூல்களும் மிக முக்கியமானதாக இருக்கின்றன.
பொதுவாக பல்கலைக்கழகங்களிலே சிறுகதைகள், நாவல்கள் பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால், கட்டுரை இலக்கியம் ஆராயப்படவில்லை என்பதாகவும் பேராசிரியர் சபா ஜெயராசா கூறினார். மேலும் அவர் கூறியதாவது; இந்நூல் மூலமாக தமிழ் ஆய்வாளர் களுக்குத் தெரியாத பல விடயங்களை சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களமொழி அறிவும் சரவணனுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
திறனாய்வாளர் தெ. மதுசூதனன் '1915 கண்டிக் கலவரம்' நூல் பற்றிய நோக்குதலை முன்வைத்தார்.
"குறுகிய காலத்துக்குள்ளே பத்திரிகைத் துறையில் நுழைந்து பல விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் 'அரசியலில் பெண்கள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இன்று பல்கலைக்கழக மரபுகளுக்கு அப்பால் அரசியல் வரலாறு பற்றி எழுது கின்ற பாரம்பரியம் தமிழிலேயே ஆங்காங்கு முளைவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஓரளவு இந்த நூலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது பல்கலைக்கழக மரபுக்கு அப்பால் நின்று கா,சி.குலசிங்கம் எழுதிய நூல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. காசிகுலம் தோற்றிய மரபை இவரது கட்டுரைகளும் அடையாளம் காட்டுகி றது. '1915 கண்டிக் கலவரம்' ஒரு கனதியான நூலாக அமைந்திருக்கிறது. 1915 என்று தலைப்பிட்டிருந்தாலும்கூட அதன் முன், பின் இலங்கையில் நடைபெற்ற சூழலை பறைசாற்றுகிறது.
60 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட் டுள்ளன. இவை தினக்குரலில் தொடர்ச்சியாக எழு தப்பட்டவையாகும். 1915ஆம் ஆண்டில் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை புரிந்து கொள்வதற்கான வரலாற்றுக்கூடாக இதன் பின்புலத்தை காட்டுவ தாக அமைந்துள்ளது. கொட்டாஞ்சேனையில் நடை பெற்ற கலவரத்தையும் இங்கு இணைப்பாகத் தரப்பட் டுள்ளது.
இலங்கை வலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு எச்சரிக்கையாகக் கூட இந்நூல் எழுதப்பட் டுள்ளது. தொடர்ந்தும் இந்நூலின் குறைபாடாக பத்திரிகையில் கூறியதைக் கூறல் என்பன நூலாக்கப்படும் போது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் சில எழுத்துப்பிழைகள் நூலில் இருப்பதாகவும் மதுசூதனன் சுட்டிக்காட்டினார்.
'அறிந்தவர்களும் அறியாதவையும்' எனும் நூல் பற்றிய விமர்சனத்தை முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி. தேவராஜ் இங்கு குறிப்பிட்ட போது.
"சரவணன் எழுதியுள்ள இரு நூல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. அதிலும் 'அறிந்தவர்களும் அறியாத வைகளும்' என்ற தலைப்புக்கொண்ட நூலை மிகத்தா மதமாகவே வாசிக்கக்கிடைத்தது. எழுதுகின்றபோது சொல்கின்ற பாங்கு முக்கியமானது. பத்திரிகைத் துறையாளர்கள் விடயங்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி அதை மக்களிடம் எவ்வாறு சொல்வது என்பதை அறியத் தருகிறார்கள்.
25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன என்று குறிப்பிட்ட அவர் அதிலிருந்து சில கட்டுரைகளை மாத்திரம் தெரிவு செய்து அது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். இந்நூலில் உள்ள சில பிரபலங்கள் வாழ்ந்த அந்த சமகாலத்தில் வாழ்ந்தவர் என்ற வகையில் அனுபவ ரீதியிலான ஆளுமைமிக்க விடயங்களையும் இங்கு பகிர்ந்துக்கொண்டார். நூலாசிரியரின் ஆசிரியர் ஜீ போல் அன்டனி கருத்து தெரிவிக்கையில்;
1990ஆம் ஆண்டளவில் நான் அதிபராகப் பதவியேற்ற கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் மகா வித்தியாலயத்தில் என்.சரவணன் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். ஆனாலும் நான் அதிபராகப் பதவியேற்ற காலத்தில் ஒரு வருடத்திலே அவர் கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் படித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
துருதுருத்த மாணவனாக அன்று வகுப்பறையில் பார்த்தேன். குழப்படிமிக்க அந்தப் பாடசாலையில் அமைதியான மாணவனாக சரவணன் இருந்தார். அவர் பாடசாலையை விட்டு விலகியபின் தொடர்பு கிடைக்கவில்லை. 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று நான் அவரை நேரில் காண்கிறேன். அதற்கு முன் எமது தொடர்புகள் முகநூல் வழியாகவே இருந் தது என்று கூறியதுடன் அவரது ஆளுமைபற்றியும் சுட்டிக்காட்டினார்.
அவர் எழுதிய 'அறிந்தவர்களும் அறியாதவையும்' எனும் இந்நூலில் மவுண்ட் லவனியா ஹோட்டல், களுத்துறை- ரிச்மன்ட் கோட்டை பற்றிய காதல்கதைகள் பற்றி விழித்துக் கூறியதுடன், அதைத் திரைப் படமாக ஆக்குமளவுக்கு அதன் காதல் கருவைக் கண்டேன்!" ஐந்து பெண் ஆளுமைகளைப் பற்றி சர வணன் எழுதியுள்ள கட்டுரைகளைப் பற்றியும் இங்கு போல் அன்டனி தொட்டுக் காட்டினார்.
தினக்குரல் வார வெளியீடு ஆசிரியர் பாரதி ராஜநாயகம் குறிப்பிடும்போது;
"இலங்கையில் இனவாதம் நிறுவனமயமாக்கப் பட்டே வந்துள்ளது. இலங்கை பல மக்களின் நாடு என் பதை சிங்கள மக்கள் இன்னும் உணரவில்லை. ஐக்கிய நாடுகள் சபைகூட இலங்கை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் அதைக்கூட உணராத இன சக்திகளாக இங்கே சிங்கள மக்கள் உள்ளனர்.
கண்டி மாநகரில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பான தகவல்கள் புகைப்படங்கள் சிங்கள் இதழ்களில் வெளிவந்தபோதும் தமிழில் வெளிவரவில்லை. புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையிலும் தனது நேரத்தை இந்நூல்களுக்காக செலவிட்டுள்ளார் என் சரவணன்" என்று குறிப்பிட்டார்.
செல்வி ஜீவா சதாசிவம் தனதுரையில், சரவணனை சில மாதங்களாகத்தான் எனக்குத்தெரியும். தினக்குரலில் அவரது கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவந்த வேளையில்தான் அவரைப்பற்றிய தொடர்பை பெற்றுக்கொண்டு சங்கமத்திற்கும் கட்டு ரைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.
அதற்கிணங்க 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்' எனும் தலைப்பில் 25 வாரங்கள் இந்தத் தொடரை எழுதினார். அவ்வாறு சங்கமம் பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக வருவது மகிழ்ச்சியாக இருக்கும் இத்தருணத்தில் நூலாசிரியர் ஊடகத்துறைக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன என்றும் இதன்போது தெரிவித்தார்.
நூலாசிரியர் சரவணன் தனது ஏற்புரையில்;
1915 கலவரத்துக்கான முழுக் காரணம் முஸ்லி ம்களே என்கிற பரப்புரை பல்லாண்டு காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அந்த புனைவை உடைப்பது இந்த நூலின் முக்கிய இலக்கு. அதே வேளை சிங்கள பெளத்த பேரினவாதம் என்கிறோம் அதன் சித்தாந்த வலிமை பற்றி பேசியிருக்கிறோம். அது நிறுவனமயப்பட்டிருக்கிறது என்கிறோம். ஆனால், அதை சித்தாந்த ரீதியில் நிறுவும் பணி தமிழ் சூழலில் போதாமையுடன் தான் இருக்கிறது. அதை நிறுவுகின்ற பணியை கடந்த 25 வருடகாலமாக செய்து வருகிறேன். அதன் ஒரு முக்கிய அங்கம் தான் இந்த நூல்.
கண்டி கலவரம் பற்றிய நூலின் முதல் 18 அத்தியாயங்களில் சிங்கள பௌத்த பேரினவாதம் 19ஆம் நூற்றாண்டில் எப்படி தோன்றி, வளர்ந்து, வியாபித்து தன்னளவில் நிருவனப்படுத்திக் கொண்டு ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நிலை நிறுத்திக் கொண்டது என்பதை நிறுவியிருக்கிறேன் என்றார். கூடவே இந்த நூல் வெளிவருவதற்குக் பிரதான காரணி வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் என்பதை அங்கு குறிப்பிட்டார்.
கனதியான விடயங்களை உள்வாங்கக்கூடிய நிகழ் வாக மிக எளிமையாக அன்றைய தினம் நடை பெற்றது. இங்கு ஒரு சிலர் இந்நூல் தொடர்பான கருத் துக்களை முன்வைத்துப் பேசினர். தேசிய ரீதியாக அங் கீகரிக்கப்படும் ஒரு ஆவணமாக இந்நூல்கள் திகழும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நன்றி - வீரகேசரி 03-02-2018
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...