ஒரு சமூகத்தின் நிலைமாற்றத்தில் அல்லது மேல்நோக்கிய சமூக நகர்வில் கல்வி கற்றோர்களின் குறிப்பாக பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக முக்கியமாக கருதப்படுகின்றது. தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட மலையக சமூகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்தமை வியப்புக்குரிய வொன்றல்ல. எனினும் பட்டதாரிகளின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு இச் சமூகம் நிலைமாற்றம் பெறுவதை எடுத்துக்காட்டுகின்ற முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும். அந்தவகையில் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியானது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும்.
மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டில் மலையக பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி 500ஐ தாண்டியதாகவும் அது ஒரு சடுதியான வளர்ச்சியையும் சுட்டி காட்டுகின்றது. இது வரைக்குமான அனுமதியானது மொத்த அனுமதியில் 1சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததோடு 2017ஆம் ஆண்டில் இது 1.7வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் அரச பல்கலைக் கழக அனுமதியில் தொடர்ச்சியாக ஒரு வளர்ச்சி காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அது 29000மாக அதிகரித்துள்ளது. ஒரு சதவீதத்திற்கு குறைவு என்கின்ற போதும் மலையக மாணவர்களின் அனுமதி கடந்த காலங்களில் 100 –150 ஆகவே அமைந்திருந்தது. மொத்தம் 29000 என்ற நிலையில் 500 ஆனது 1.7வீதமாக அமைந்துள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் தன்மை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாற்று பின்னணி
ஒரு வரலாற்று நோக்கில், 1965ஆம் ஆண்டு மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை பொறுத்தவரை ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். இதற்கு முன்னைய ஆண்டுகளின் பல்கலைக்கழக அனுமதி விரல் விட்டு எண்ணக் கூடியதாகவும் மலையக மாவட்டங்களுக்கு அப்பால் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் இருந்தே அனு மதிகள் இடம்பெற்றன. அந்த வகையில் 1965இல் முதன்முறையாக மலையகத்திலிருந்து நேரடியாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவானோர் தொகை 8பேராக இருந்தமை, எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் முதன்முறையாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து மூவரும், மாத்தளை சென்.தோமஸ் கல்லூரி, கண்டி சென்.சில்வெஸ்டர், கம்பளை ஸாஹிரா கல்லூரி, கண்டி உயர் நிலை கல்லூரி, பதுளை சென். பீட்ஸ் ஆகிய கல்லூரிகளில் தலா ஒவ்வொருவரும் உள்ளடங்குவர். இத்தோடு கொழும்பு விவேகானந்தா கல்லூரியிலிருந்து இந்திய வம்சாவளியினர் இருவர் பல்கலைக் கழக அனுமதி பெற்றிருந்தனர். இதற்கு முன்னர் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி, கம்பளை ஸாஹிரா கல்லூரி, கண்டி சில்வெஸ்டர் கல்லூரிகளில் இருந்து ஓரிருவர் அனுமதி பெற்றிருந்தாலும் தொகை அடிப்படையில் கிட்டத்தட்ட 8பேர் இருந்தமையும் இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி முதன்முறையாக இடம்பெற்றமையும் திருப்புமுனையை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
1965ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மொத்த அனுமதியானது அதற்கு முன்னைய ஆண்டுகளை விட 1000– 1500 மட்டத்திலிருந்து 4000 அல்லது 5000க்கு உயர்ந்தது. இந்த ஆண்டில் மலையக பாடசாலைகளிலிருந்து அனுமதிக்கப்பட்ட அனைவரும் கலைத்துறைச் சார்ந்தவர்களாவர். இதைவிட வேறு சிலர் வடக்கிலிருந்து விவசாயம் மற்றும் மருத்துவம் போன்ற பீடங்களில் அனுமதி பெற்றிருந்தனர். 1965ஆம் ஆண்டில் இலங்கை பல்கலைக் கழகமும் வித்தியோதயா மற்றும் வித்தியாலங்கார போன்ற பிரிவெனாக்களும் பல்கலைக் கழக பட்டங்களை வழங்கி வந்தன. இலங்கை பல்கலைக் கழகமானது பேராதனை, கொழும்பு என இரண்டு வளாகங்களாக காணப்பட்டது. 1965இல் சுட்டிக்காட்டப்பட்ட அதிகளவான கலைப்பீட மாணவர்கள் கொழும்பு வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு அடுத்த ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டனர். 1965–2017ஆம் ஆண்டு வரையான சுமார் 52வருட காலப்பகுதிகளில் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததோடு மாணவர்களின் அனுமதியும் 5000 என்ற மட்டத்திலிருந்து 29000 வரை உயர்ந்துள்ளது. இந்த அனுமதியில் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவானது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தமையே அதிக அளவில் சுட்டிகாட்டப்பட்ட ஒன்றாகும். 1965ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக புதுமுக வகுப்புக்கள் பெரும்பாலும் மலையக பகுதிகளில் தோட்டப் புற நகரங்களில் அமைந்துள்ள மிஷனரி பாடசாலைகளிலேயே காணப்பட்டன.
1960களை தொடர்ந்து பெரும்பாலான பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டன. ஹட்டன் ஹைலன்ஸ் மற்றும் பொஸ்கோ கல்லூரிகள் மாத்தளை சென்தோமஸ் போன்ற பாடசாலைகள் இவற்றுள் உள்ளடங்கும். எனவே 1960களை தொடர்ந்து பல பாடசாலைகளில் க.பொ.த (உ/த) வகுப்புக்கள் ஆரம்பித்தமையை காணக்கூடியதாக உள்ளது. இதன் விளைவாக நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் இருந்து 1966இல் இரண்டு பேர் நேரடியாக முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டனர்.
1970ஐ தொடர்ந்த ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டன. பின்னர் 1990களில் பல பாடசாலைகள் ஜிடிஇஸட் சீடா போன்ற நிறுவனங்களினாலும் தரம் உயர்த்தப்பட்டு உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கையில் ஒரு கூரிய வளர்ச்சியினை காணமுடிகின்றது. இதே காலப்பகுதியில் சாதாரணத் தரத்திலிருந்து உயர்தரத்திற்கு சித்தி எய்தியவர்களின் எண்ணிக்கையும் உயரத்தொடங்கியது.
உயர்தர பாடசாலைகளினுடைய எண்ணிக்கை உயர்வடைந்த அதேவேளை உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களின் தொகையிலும் ஒரு பாரிய வளர்ச்சியை காணமுடிகிறது.
தற்போதைய நிலை
இத்தகைய பகைப்புலத்தில் 2017ஆம் ஆண்டில் கிடைத்த தகவலின் படி ஏறக்குறைய தோட்டப்புறங்களில் அமைந்துள்ள 144 பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்கள் (12ஆம் ஆண்டு 13ஆம் ஆண்டு) காணப்படுகின்றன இவை 23 1ஏபி பாடசாலைகளையும் 121 1சீ பாடசாலைகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்கின்றார்கள். இந்த 144 பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழக அனுமதி குறித்த விபரங்கள் கோரப்பட்டபோது 100 பாடசாலைகளிலிருந்து உயர்தரப் பரீட்சைக்கு தோன்றியவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதிப் பெற்றவர்கள். இறுதியாக பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் போன்ற விபரங்கள் பெறப்பட்டன. இதன்படி 3450 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 2473பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்று அவர்களுள் 506 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பாடசாலைகளின் விபரங்கள் அட்டவணை 1இல் மற்றும் 2இல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 1இல் காட்டப்பட்டுள்ளவாறு 10க்கு மேற்பட்ட மாணவர்கள் 13 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் 4 1சீ பாடசாலைகளும் ஏனையவை 1ஏபி பாடசாலைகளும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 500க்கு அதிகமாக அனுமதிப்பெற்றுள்ள மாணவர்களின் 216 மாணவர்கள் ஹட்டன் நகரிலும் அதற்கு அண்மித்த நகரிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 10க்கு மேற்பட்ட மாணவர்களை அனுப்புகின்ற பாடசாலைகள் நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. 73 பாடசாலைகளில் இருந்து 10க்கும் குறைவானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் எண்ணிக்கையானது 176 ஆக அமைந்துள்ளது. இதைவிட அட்டவணை 02இல் காட்டப்பட்டுள்ளவாறு ஏனைய பாடசாலைகள் 04ல் 52பேரும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே மொத்தமாக 268 பேர் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்தத்தில் 53வீதமாகும். ஏனைய பாடசாலைகள் கண்டி மாவட்டத்தில் ஒன்றும் மாத்தளை மாவட்டத்தில் ஒன்றும் பதுளை மாவட்டத்தில் இரண்டுமாக அமைந்துள்ளன. பாடங்களை பொறுத்தவரையில் 50க்கு மேற்பட்டவர்கள் கலைத்துறைக்கே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 13வீதமானவர்கள் முறையே வர்த்தகம் மற்றும் விஞ்ஞான துறையிலும் 10வீதமானவர் கணிதத் துறையிலும் 08வீதமானவர்கள் ஏனைய துறைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த அனுமதியில் ஏறக்குறைய 70வீதமானவர் பெண்களும் 30வீதமானவர்கள் ஆண்களுமாக காணப்படுகின்றமையும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். 14 பாடசாலைகளில் இருந்து ஒருவரேனும் தெரிவுசெய்யப்படாமையும் குறிப்பிடப்பட வேண்டியவொன்றாகும்.
முடிவுரை
இந்த எண்ணிக்கை வளர்ச்சியானது 1965இல் 8ஆக இருந்து 2015இல் 506ஆக வளர்ந்துள்ள நிலையில் கலைத்துறை பாடங்களின் அனுமதி 100வீதத்திலிருந்து 50வீதமாக குறைந்துள்ளது. ஹைலன்ஸ் கல்லூரி 03இல் இருந்து 76ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அத்தோடு இங்கு கலைத்துறையை விட ஏனைய துறைகளில் அனுமதி பெற்றுள்ளமை ஒரு வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. ஏனைய துறைகளில் அதிகரிப்பு காணப்பட வேண்டுமெனின் 1ஏபீ பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் இருந்ததை போலவே அனுமதியானது பல்வேறு மாவட்டங்களில் அமைந்திருந்தாலும் அதிகமான செறிவு நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பதற்கு இந்த தரவானது வலு சேர்க்கின்ற ஒன்றாக அமைகின்றது. ஏனைய மாவட்டங்களின் எண்ணிக்கை .குறிப்பாக இரத்தினபுரி கேகாலைஇ மாத்தறை மாவட்டங்களில் 10 வீதத்துக்குக் குறைவானவர்களே தெரிவு செய்யப்பட்ட நிலையில் அங்கு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியமை சுட்டிக்காட்டப்பட வேண்டியவொன்றாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...