உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலை சந்தித்த மலையகம் பாரிய மாற்றங்களுக்கு இம்முறை முகங்கொடுத்துள்ளது. புதிய முறையில் இடம்பெற்ற இத்தேர்தல் கட்சிகளின் பலப்பரீட்சையாக அமைந்தது. அந்த வகையில் கிராம அதிகாரி பிரிவுகள் வாயிலாக தமது பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்தது. எனவே மலையகப் பகுதிகளில் இம்முறை வாக்களிப்புக்கு மக்களின் பங்குபற்றல் கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.
இம்முறை வாக்களிப்பு நடைமுறை சரளமானதாகக் காணப்பட்டதன் காரணமாக மக்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடியதாக இருந்தது. விருப்பு வாக்கு முறைமை இன்மையால் மக்கள் இலகுவாக கட்சிகளுக்கு வாக்களித்து தமது உரிமையை நிறைவேற்றினார்கள். வேட்பாளர்களும் மக்களுக்கு பரீட்சயமான நபர்களாதலால் தேர்தல் களம் சுவாரஸ்யம் மிகுந்ததாகவும் இருந்தது.
மலையகத் தேர்தல் களம் வழமையைப்போல இம்முறையும் பல்வேறு விதமாக குளறுபடிகள் கொண்டதாகவும் ஜனநாயகப் பண்புகள் மீறப்பட்டதாகவும் அமைந்தது. என்னதான் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டங்கள் இயற்றினாலும் பாதுகாப்புப் பிரிவினர் கடமையைச் செய்தாலும் தோட்டங்களில் மதுபான விநியோகத்தை தடுத்து நிறுத்துவதில் தோல்வியே எஞ்சியது. அதுமட்டுமன்றி வேட்பாளர்களில் அநேகர் தேர்தல் இடம்பெறும் தினத்தன்றும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதனையும் கட்டுப்படுத்த முடியாத நடைமுறைச் சிக்கல் உணரப்பட்டது.
எவ்வாறாயினும் மக்களின் விருப்பு வெறுப்புக்களை கணிக்க முடியாத அளவிற்கு மாற்றங்களும் திருப்புமுனைகளும் இடம்பெற்றன. மேலும் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு ஆளுங்கட்சிகள் வெற்றி பெறாமை முக்கிய திருப்பு முனையாகும். தமிழர்களின் வாக்குகள் தமிழ் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பினும் கூட பெரும்பான்மை இனத்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிக்கே அதிக வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.
தேர்தல் கணிப்புக்களை மீறி பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை மஹிந்த அணி வென்றுள்ளமை நாம் அறிந்ததே. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மலையக மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சபைகளும் இதில் உள்ளடக்கம். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த பிரதேச சபையையும், தலவாக்கலை– லிந்துல நகர சபையையும் பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ள அதேவேளை பதுளை மாவட்டத்தில் சொரனாதோட்ட பிரதேச சபை, கந்தகெட்டிய பிரதேச சபை, ஊவா பரணகம பிரதேச சபை, பண்டாரவளை பிரதேச சபை, ஹல்து முல்லை பிரதேச சபை, ஹாலி– எல பிரதேச சபை மற்றும் வெலிமடை பிரதேச சபை ஆகியன மஹிந்த அணிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளன.
அதேபோல் இரத்தினபுரி, கண்டி, கேகாலை போன்ற தமிழர் கணிசமான அளவு குடியிருப்பைக் கொண்ட பகுதிகளிலும் பொதுஜன பெரமுன ஆதிக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிட்டுக் கூறக்கூடியது. எவ்வாறாயினும் மலையகம் தமிழர்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழலிது.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான சபைகளில் தமிழர்களின் ஆதிக்கம் காணப்படும். எனினும் பதுளை மாவட்டத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் தன்மை நிலவுகின்றது. தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரம் இன்மை மற்றும் சுயேச்சை குழுக்களின் வகிபாகம் என்பன இதில் தாக்கத்தைச் செலுத்தலாம். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிகளை நம்பி தேர்தலில் குதித்து வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் கட்சி தாவல்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்புண்டு . ஆட்சியமைக்கும் கட்சிக்கு அல்லது சுயேச்சை குழுவுக்கு அதிகமான ஆதரவை தேட முற்படலாம்
மறுபுறம் இம்முறை அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கணிசமான ஆசனங்களைப் பெற்றுள்ள காரணத்தினால் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் இவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பர் என்பதும் உண்மை.
எனினும் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசி வாங்கவும் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ளவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதுவும் சில சுயேச்சை வெற்றியாளர்கள் முன்னர் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகித்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் இம்முறை வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றாகும்.
அந்த வகையில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெறவில்லை.
அதேபோல் பொதுஜன பெரமுன கட்சியில் அனேகமானவர்கள் தமிழர்கள் அல்லாததும் மலையக மக்களுக்கு பாதகமான விடயமொன்றேயாகும்.இதேவேளை நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வெற்றி குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து ஆட்சியமைக்கும் முடிவுக்கு வந்துள்ளன.
ஏனைய பிரதேசங்களில் எவ்வாறான நிலைமை ஏற்படப் போகின்றது என்பது வெற்றியீட்டிய வேட்பாளர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை புரிவதற்கான முடிவை எடுப்பார்களா அல்லது சுய லாபத்துக்காக விலைபோவார்களா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளூராட்சி மன்றங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அரச இயந்திரத்தின் அத்திவாரங்கள். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, நலன்புரி, பொழுதுபோக்கு என்று அனைத்துவிதமான அடிப்படைத் தேவைகளையும் உள்ளூராட்சி சபைகள் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். ஒதுக்கப்படும் நிதியில் காத்திரமான, நிலையான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். மக்களின் முதல் தேவை எதுவோ அதனை இனங்கண்டு அதனை நிவர்த்திச் செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு இவைகள் தான்.
இவ்வளவு காலமும் பிரதேச சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கிராமபுறங்களை சென்றடைகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனி அதனை மாற்றியமைக்க முடியும். கிராமபுறங்களுக்கு நிகராக தோட்டப்புறங்களை அபிவிருத்திச் செய்ய முடியும். குறிப்பாக கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது கட்டாயம். அபிவிருத்திகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் பெறுமதியை அதிகரிக்க முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் தான் இவை. கிராமப்புற சிங்கள சமூகம் இலவசமாக பெற்றுக்கொள்ளும் அல்லது அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை மலையக சமூகம் பணம் செலுத்தி பெற்றுகொள்ளும் நிலைமை இன்றும் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன என்பதைக் கூட மலையக மக்கள் இதுவரையில் முழுமையாக அறிந்துக் கொள்ளவில்லை. அதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. இது அதற்கான சந்தர்ப்பம்.
இதுவரையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சுயலாப அரசியலுக்கும், விலைபோகும் அரசியலுக்கும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களில் பெருமளவானோர் இளைஞர்கள். எனவே இச்சமூகத்தின் அபிவிருத்தி மற்றும் சமூகப்பெறுமதி என்பவற்றை கையில் ஏந்தி நிற்பதன் உண்மையை பிரதிநிதிகள் உணர வேண்டும். சேர்ந்த இடம் எதுவாக இருப்பினும் செய்யும் கருமம் சமூகநோக்கு உடையதாய் அமையட்டும்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...