Headlines News :
முகப்பு » , , , » மட்டக்களப்பு டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா? - என்.சரவணன்

மட்டக்களப்பு டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா? - என்.சரவணன்


இன்றிலிருந்து கிழக்கில் வெளிவரத் தொடங்கியிருக்கும் "அரங்கம்" சஞ்சிகையில் வெளிவந்திருக்கிற கட்டுரை இது.  நன்றியுடன் மீள இங்கு பதிவிடுகிறோம்.
போர்த்துக்கேயர் இலங்கைத் தீவை நிரந்தரமாக தமது காலனித்துவத்துக்குள் கொண்டு வந்துவிட்டதென நம்பி நாட்டின் முக்கிய கரையோர கேந்திர இடங்களிலெல்லாம் தமது பலமான கோட்டைகளை நிறுவினார்கள். அந்த வரிசையில் மட்டக்களப்பு வடக்கு மன்முனை பிரதேச செயலாளர் பிரிவில் கடலை அண்மித்து புளியந்தீவில் வாவி சூழ்ந்த பகுதியில் அமைத்த கோட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மட்டக்களப்பின் காலனித்துவ அரசியல் வரலாற்றின் ஒரு வடிவமாக இந்தக் கோட்டை திகழ்கிறது.

1628இல் போர்த்துக்கேயரால் அமைத்து முடிக்கப்பட்ட இந்தக் கோட்டையில் போர்த்துக்கேயர் 10 ஆண்டுகள் கூட தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. போர்த்துக்கேயரை விரட்டியடிக்க கண்டி அரசன் ராஜசிங்கன் ஒல்லாந்தரை நாடினான். அதன் விளைவு 18.05.1638 இல் அக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றினர். ஒல்லாந்தர் அதனை அழித்து புதிய வடிவில் மீண்டும் கட்டி அங்கேயே தங்கினர் ஒல்லாந்தர். 1766இல் கண்டி அரசுக்கு விட்டுக்கொடுத்தனர். 1796 இல் இக்கோட்டை ஆங்கிலேயர்களால் எந்தவித எதிர்ப்புமின்றி கைப்பற்றப்பட்டது.

ஆகவே மூன்று காலனித்துவ நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கோட்டை என்கிற சிறப்பு இந்த கோட்டைக்கு உண்டு. தமது வர்த்தக மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அங்கிருந்துதான் மேற்கொண்டார்கள்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தக் கோட்டைக்குள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலவட்டக் கல்லும், ஆசனக் கல்லும் இருப்பதாகவும், ஆகவே இந்தக் கோட்டை அமைப்பதற்கு முன் இங்கு பௌத்த விகாரை இருந்ததற்கான தடயங்கள் உள்ளது என்று தொல்பொருள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இங்கு இருந்த பௌத்த விகாரையை அழித்துத் தான் அங்கு இந்த கோட்டை கட்டப்பட்டதாக சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் நூல்களிலும், கட்டுரைகளிலும் குறிப்பிடுகின்றனர். தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் இது பற்றிய ஸ்தூலமான வாதங்கள், அல்லது விபரங்கள் இல்லாமையினால் மேற்படி சிங்கள – பௌத்த தரப்பு வாதங்கள் பலமாக நிறுவப்பட்டு வந்திருக்கின்றது.

மட்டக்களப்பு என்கிற பெயர் கூட “பலகொட்டுவ” (මඩකලපුව බලකොටුව - கோட்டை) என்கிற சிங்களப் பெயரில் இருந்து தான் வந்தது என்று பல சிங்கள நூல்களில் காணக்கிடைக்கின்றது. அப்படி ஒரு புனைவை விக்கிபீடியா போன்ற இணைய கலைக்களஞ்சியங்களிலும் கூட (முடிந்தவர்கள் Batticaloa fort என்கிற தலைப்பிலுள்ள Wikipedia கட்டுரையையும் பார்க்க) பதிவு செய்திருக்கின்றனர்.

சமீபகாலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த தொல்பொருள் சான்றுகள் கிடைத்து வருகின்றன என்று கூறி தமிழ் - முஸ்லிம் சமூகங்களுடன் வம்பிழுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அறிவோம்.

பௌத்த சான்றுகள் கிடைப்பதை புனைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் பெரும்பாலான சான்றுகள் உண்மையானவையே. ஆனால் இதில் ஒரு அரசியல் சிக்கல் உண்டு. பௌத்தத்தை சிங்களத்துடன் கோர்த்து விடுவது தான் முதல் சிக்கல். அதன் மூலம் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழர்களின் தாயக பிரதேசமாக வடக்கு கிழக்கை கொள்ள முடியாது என்கிற வாதத்தை நிறுவதற்கும் தான் இத்தகைய புதைபொருள் சான்றுகள் சிங்கள பௌத்த தரப்புக்கு அவசியப்படுகின்றன.

மாறாக இலங்கையில் “தமிழ் பௌத்தம்” என்கிற ஒன்றும் இருந்தது என்பதும் சிங்கள மக்கள் பெருவாரியாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்கள பௌத்தம் போல தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்த பிரதேசங்களில் தமிழ் பௌத்தம் நிலவியது என்பதும் மறக்கடிகப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. தமிழர்களும் தமக்கும் பௌத்தத்துக்கு இருந்த உறவை பலமாக நிறுவாததும், அப்பேர்பட்ட பௌத்தத்தை கைவிட்டதும், இந்துத்துவத்தினதும், சைவத்தினதும் செல்வாக்கின் காரணமாக பௌத்தத்தை தள்ளி வைத்ததும் கூட இனப்பிரச்சினையின் இன்றைய வடிவத்துக்கு முக்கிய காரணம் தான்.

இலங்கையில் தமிழர்கள் பலர் சமணர்களாகவும், பௌத்தர்களாக இருந்ததையே ஆச்சரியமாகப் பார்க்கும் சந்ததி தோன்றி நூற்றாண்டுகளாக ஆகிவிட்டன. இன்று சிங்களவர்களின் மதமாக பௌத்தத்தை கருதுகிற போக்கு சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமல்ல தமிழர் – முஸ்லிம்கள் மத்தியிலும் கூட நம்புகின்ற போக்கு அரசியல் ஆபத்தைக் கொண்டது. இன்றைய இனச்சிக்கலில் இதன் வகிபாகத்தை மறுக்க முடியாது. தமிழில் அவசியமான, அவசரமான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயம் “இலங்கையில் தமிழ் பௌத்தம்” பற்றிய ஆய்வுகள். பல்கலைக்கழகங்களில் அரசியல், வரலாற்றுத் துறை, தொல்பொருள்துறை மாணவர்களுக்கு இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் படி வலியுறுத்த வேண்டியதன் தேவை அதிகமுள்ளது.




நன்றி - அரங்கம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates