புதிய தேர்தல் சட்டம் பெண்களுக்கு 25% வீத பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதில் தோல்வி கண்டிருகிறது. இதனை தேர்தல் ஆணையாளரின் அறிக்கையும், 25% பிரதிநிதித்துவத்திற்காக இதுவரை போராடி வந்தவரும், கொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் மேயராக தெரிவு செய்யப்பட்டிருப்பவருமான ரோசி சேனநாயக்கவின் அறிக்கையும் கூட உறுதி செய்திருக்கிறது.
நாட்டின் சனத்தொகையில் 52% சதவீதம் பெண்களாக இருந்தும் கூட தற்போதைய பாராளுமன்றத்தில் 5.8% வீதத்தினர் மட்டும் தான் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதாவது 94.2% ஆண்களிடம் கைகளிலேயே அரசியல் அதிகாரம் குவிந்திருக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக போராடி பெற்ற சட்டம் தான் 25% வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் புதிய தேர்தல் திருத்தச் சட்டம். சனத்தொகையில் அதிகமாக இருந்தும் குறைந்தபட்சம் சரிபாதி பிரதிநிதித்துவத்தைக் கூட பெண்கள் கோரவில்லை. பல சிவில் அமைப்புகள், பெண்கள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் இணைந்து மேற்கொண்ட நெடுங்கால போராட்டத்தின் விளைவாக பெற்ற 25% பிரதிநிதித்துவ ஏற்பாடு இப்போது காணலாக ஆகியிருக்கிறது.
சட்டத்தில் ஓட்டை
புதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.
அதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.
2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ள பெண் வேட்பாளர்களில் இருந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…
தற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
சவால்களுக்கு மத்தியில்
பல்வேறு சமூக கலாசார தடைகளையும் மீறி இம்முறை வரலாற்றில் முதற்தடவையாக அதிகபட்ச பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள்.
அவர்களை போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பல்வேறு சக்திகள் இயங்கின. குறிப்பாக மத நிறுவனங்கள் கூட கடுமையாக எதிர்த்தன. அவர்கள் அரசியலுக்கு பழக்கப்படவில்லை என்றார்கள். எங்கள் “பெண்களை அவர் பாட்டில் இருக்க விடுங்கள்”, “பொது மகளிர் ஆக்கிவிடாதீர்கள்...” என்று 90 வருடங்களுக்கு முன்னர் இதே கருத்துக்களை 1920களில் சர்வஜன வாக்குரிமைக்கான கோரிக்கைக்காகப் போராடியவேளை அன்றைய ஆணாதிக்கக் கும்பல் கூறியது. வாக்குரிமையைப் போராடி வெல்லவும் செய்தனர் நமது பெண்கள். ஆனால் இன்று; இலங்கையின் பெண்கள் இன்று மிகப் பெரும் ஆளுமை மிகுந்தவர்கள் என்பதை சகல துறைகளிலும் நிரூபித்து வந்திருக்கிறார்கள்.
பெண்கள் அரசியலில் ஈடுபட ஆண்களை விட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை தொடர்ச்சியாக நிலவுகிறது. இரட்டைச்சுமை பழு, அவமானங்கள் என்பவற்றைக் கடந்து துணிந்து களத்தில் இறங்கினால் ஆண்களைப் போல பணச் செல்வாக்கில்லை, சண்டியர்கள் இல்லை, பயணங்கள், பிரச்சாரங்கள் என்பவற்றை செய்வதில் ஆண்களுக்கு இல்லாத கஷ்டங்கள். பெண்கள் மத்தியில் கூட பெண் வேட்பாளரை ஆதரிக்க வேண்டியது ஏன் என்கிற புரிதலின்மையால் பெண்களின் ஆதரவும் நினைத்த அளவு கிடைப்பதில்லை. இத்தனை சவால்களையும் மீறி நம் நாட்டுப் பெண்கள் களத்தில் போராடியிருக்கிறார்கள்.
ஏன் எமக்குப்ப யமா?
வேட்பாளர் பட்டியலில் 25% வீத பெண்களை சேர்க்குமளவுக்கு தம்மிடம் சக்திமிக்க பெண்கள் இல்லை என்று பல அரசியல் கட்சிகள் வாதிட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு பதிலளிக்கும் போது “இனி எந்த ஒரு கட்சியும் தம்மிடம் அந்தளவு அரசியல் ரீதியில் வளர்ந்த பெண்கள் இல்லையென்று மறுத்துவிட முடியாது. இப்போது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி அவர்கள் குறைந்தபட்சம் 25%வீத பெண்களை இணைத்துத் தான் ஆகவேண்டும். கண்டுபிடியுங்கள்” என்று ஊடகங்களுக்குக் கூறினார்.
குறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத?” (ஏன் பயமா?) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.
“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா?” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.
சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
ஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர்.
அரசியல் ரீதியில் வளர்ச்சியுற்ற பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது என்று காரணம் கற்ப்பித்தார்கள். தேர்தல் காலத்தில் ஆண்களுக்கு நிகராக வன்முறைகளை சமாளிக்க மாட்டார்கள் என்றார்கள். ஆணாதிக்க சூழலை எதிர்கொண்டு தாக்குபிடித்து தலைமை தாங்க மாட்டார்கள் என்றார்கள். ஆண்களைப் போல பகலிலும், இரவிலுமாக பணிபுரியும் இயல்பு அவர்களுக்கு இல்லை என்று காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் உலகில் இந்த நிலைமைகளை எதிர்கொண்டு தான் பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தையும், தலைமையையும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து போனார்கள்.
இறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில் 6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே.
இறுதியாக இருந்த உள்ளூராட்சி மன்றங்களில் 1.9% பிரதிநிதித்துவமே காணப்பட்டது. அந்த நிலையை மாற்றும் முனைப்புடன் புதிய சட்டத்தையும், ஜனநாயக அமைப்பு முறையையும் நம்பி களத்தில் இறங்கிய அவர்களுக்கு இப்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது புதிய நிலைமை.
ஆணாதிக்க பாராளுமன்றத்தின் அசட்டை
கடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது;
“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.
இதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”
இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.
இனி அடுத்ததாத செப்டம்பரில் மாகாண சபைகள் தேர்தலுக்காக இந் நாடு காத்திருக்கிறது. அதற்கு முன்னராவது இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு பெண்களுக்கு நீதி கிடைக்குமா என்பது தான் இன்று எஞ்சியிருக்கும் கேள்வி.
நன்றி - தினகரன் 18.02.2018
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...