உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கமும் தான்.
ஏற்கெனவே உள்ளூராட்சி சபைகளில் இருந்த அங்கத்தவர் தொகையை புதிய சட்டத்தின் மூலம் 4,486 இலிருந்து 8,356 ஆக உயர்த்தப்பட்டதும் கூட பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் தான். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொத்தம் 19,500 பெண்கள் போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 32% வீதமாகும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 278 பிரதேச சபைகளுமாக மொத்தம் 341சபைகளிலும் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இம்முறை நிச்சயம் நியமிக்கப்படுவது உறுதி என்று நம்பியிருந்தார்கள். ஆனால் நடைமுறைச் சிக்கல் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இலங்கையின் சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதுமட்டுமன்றி இலங்கையின் வாக்காளர்களில் 56% வீதத்தினர் பெண்கள். பல்கலைக்கழக மாணவர்களில் 60% வீதமானோர் பெண்கள். ஏன் உள்ளூராட்சி சேவையில் உள்ள அரசாங்க ஊழியர்களில் 59.7% வீதத்தினர் பெண்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டும்.
அதே அளவு வீதாசார பிரதிநிதித்துவத்தை கோரி அவர்கள் போராடவில்லை. குறைந்தபட்சம் 25% வீத பிரதிநிதித்தவத்தை உறுதி செய்யும்படிதான் கேட்டார்கள். அதுவும் நீண்ட போராட்டத்தின் பின்னர் அதனை சட்டபூர்வமாக வென்றெடுத்தார்கள். 25% பிரதிநிதித்துவத்தால் மாத்திரம் நம் நாட்டுப் பெண்களின் பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இது ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
நாட்டுக்கு பிரதான பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் பெரும் தொழிற் படையாக பெண்கள் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு பணிப்பெண்களாகவும், தோட்டத்துறை பெண்களாகவும், சுதந்திர வர்த்தக வலய பெண்களாகவும் இன்னும் பற்பல துறைகளின் மூலம் தங்களை அதிகாரம் செலுத்தும் ஆண்களுக்காவும் சேர்த்து உழைத்துத் தருபவர்கள் நமது பெண்கள். அப்படி இருக்க அவர்களிடம் இருந்து “ஆளும் அதிகாரத்தை” மாத்திரம் பறித்தெடுத்து வைத்திருக்கும் அதிகார கட்டமைப்பு மாற்றப்பட வேண்டியதே.
சட்டம் நிறைவேற்றம்
குறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத?” (ஏன் பயமா?) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.
“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா?” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.
சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
சட்டத்தின் தோல்வி
புதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.
அதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.
2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளபெண் வேட்பாளர்களில் இருந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…
தற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
ஆண்களின் கூட்டுத் துரோகம்
இப்போது பல சபைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் 25% பெண்களின் பிரதிநித்தித்துவத்தை உறுதிசெய்யப்படாத சபைகளை நடத்துவது புதிய சட்டத்தின் படி முடியாத காரியமாகும். ஆனால் சபையை எப்பேர்பட்டும் நடத்துவதற்காக பிரதான கட்சிகள் தமக்குள் உடன்பாடு கண்டிருக்கின்றன. தேர்தலில் எதிரிகளாக இயங்கிய இக்கட்சிகள் அதிகாரத்தை அடைவதற்காக பெண்களின் பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தாமலேயே இயக்கும் உடன்பாட்டைக் கண்டிருக்கின்றனர். பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவை சேர்ந்து எடுத்தனர். தேர்தல் ஆணையகத்தின் தலைவர், உறுப்பினர்கள், உள்ளூராட்சித்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், நீதிபதி, சட்ட உருவாக்கக் குழுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியான முடிவை எடுத்ததை சபாநாயகரும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் உறுதிசெய்தார்.
தேர்தல் ஆணையாளரும் இந்த சட்ட சிக்கலை சரி செய்ய வழி இல்லாமல் அவரும் தர்மசங்கடத்துடன் உடன்பட்டு இருக்கிறார் என்று அறிய முடிகிறது. இதே தேர்தல் முறை இனி நீடிக்குமா என்பது சந்தேகிக்கப்படுகிறது. இந்த சட்டம் மீண்டும் திருத்தத்துக்கு உள்ளாக்கியே ஆக வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்த வண்ணமிருகின்றது. எந்த குழப்பமுமின்றி அப்போதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் உறுதி செய்யப்படவேண்டும்.
ஆணையாளரின் ஒப்புதல் வாக்குமூலம்
கடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது
“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.
இதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”
இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.
இந்தத் தடவை பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று அதிகமாக நம்பியிருந்த ரோசி சேனநாயக்க ஆணையாளருக்கு இறுக்கமான ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டியிருந்தது. அதன் படி எந்தவகையிலும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று அவர் வேண்டிக் கொண்டார்.
உள்ளூராட்சியில் பெண்கள்
இலங்கையின் வரலாற்றில் அனுலா, சுகலா, லீலாவதி, கல்யாணவதி, சீவலி போன்ற சிங்களப் பெண்கள் அரசிகளாக ஆண்டிருக்கிறார்கள். அது போல ஆடக சவுந்தரி, உலகநாச்சி போன்ற தமிழ் பெண்களும் அரசிகளாக இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.
இலங்கை உள்ளூராட்சி மன்ற முறைமைக்கு ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு வரலாறு உண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் 1865இல் முதலாவது மாநகரசபை உருவாக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளைப் பொறுத்தவரை மைய அரசியலில் பெண்களின் பங்குபற்றலை விடக் குறைவாகவே இருக்கிறது. 1865இல் கொழும்பு மாநகரசபை ஆரம்பிக்கப்பட்ட போதும் 1937 வரை அதில் பெண்களின் அங்கத்துவம் இருக்கவில்லை.
1937இல் டொக்டர் மேரி ரத்தினம் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண். ஆனால் அந்தத் தேர்தலில் எழுந்த சட்டப்பிரச்சினை காரணமாக அவர் ஒரு சில மாதங்களில் அங்கத்துவமிழந்தார். 1949இல் ஆயிஷா ரவுப் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தான் இலங்கையில் தேர்தல் அரசியலில் பிரவேசித்த முதல் முஸ்லிம் பெண்ணாகவும் திகழ்கிறார். 1954இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தொடர்ச்சியாக உள்ளுராட்சி அரசியலில் ஈடுபட்டார். ஒரு தடவை அவர் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
1979இல் திருமதி சந்திரா ரணராஜா கண்டி மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் அதன் பிரதி மேயராகவும் கடமையாற்றியிருந்தார். அவர் தான் ஆசிய நாடொன்றில் தெரிவான முதலாவது பெண் மேயருமாவார். திருமதி நளின் திலகா ஹேரத் நுவரெலியா நகர சபையின் தலைவராகக் கடமையாற்றியிருக்கிறார். திருமதி.ஈ.ஆர்.ஜயதிலக்க நாவலப்பிட்டிய நகரசபைத் தலைவராக இருந்திருக்கிறார்.
2002ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு பெண்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சுயாதீன குழுவை போட்டியிடச் செய்தார். பிரபல மனித உரிமை – பெண்ணுரிமையாளரான நிமல்கா பெர்னாண்டோ. எவரும் தெரிவாகாத போதும் பெண்களின் பிரதிநித்துவத்துக்கான ஒரு சிறந்த பிரச்சார மேடையாக வரலாற்றில் அமைந்தது.
ஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர். 1931இல் டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொண்ட போது பெண்களுக்கும் சேர்த்தே அது கிடைத்தது. ஆனால் அது பெரும் போராட்டத்தின் பின் தான் கிடைத்தது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் இந்த 87 வருடங்கள் காத்திருக்க நேரிட்டது குறைந்தது இந்த 25% வீதத்தை உறுதிபடுத்துவதற்காக.
பிரித்தானிய காலனிய நாடுகளிலேயே பெண்களுக்கும் சேர்த்து சர்வஜன வாக்குரிமை பெற்ற முதலாவது நாடு இலங்கை. உலகிலேயே பெண்ணை பிரதமராக ஆக்கி முன்னுதாரணத்தை தந்த நாடு இலங்கை. அது மட்டுமன்றி ஆசியாவிலேயே முதலாவது பெண் மேயரைத் தந்ததும் இலங்கை தான்.
இதுவரை வரலாற்றில் இரு பெண்கள் தான் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார்கள். இருவருமே தாயும் மகளும். அதுவும் இருவரின் தெரிவிலும் ஆண் உறவுமுறைச் செல்வாக்கு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.
ஏனைய அதிகார அங்கங்களைப் போலல்லாமல் இச்சபைகள் நேரடியாக மக்களோடு பணிபுரிவதற்கான களம். இதுவரை தகப்பன், கணவன், சகோதரன், போன்ற அரசியல் வாதிகளுக்கு ஊடாகவே மேல் மட்ட அரசியலுக்கு பெரும்பாலான பெண்கள் வந்து சேர்ந்தார்கள். ஜனாதிபதி முறை, பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை என அனைத்துக்குமான அரசியல் பாலபாடத்தையும், அரிச்சுவடியையும் கற்கும் களமாக உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றது.
கடந்த 2017 World Economic Forum என்கிற அமைப்பு வெளியிட்ட “Global Gender Gap Index 2017” என்கிற புள்ளிவிபரத்தின்படி ஆண்-பெண் சமத்துவ வரிசையில் இலங்கை 109 வது இடத்தில் இருக்கிறது. 2016இல் 100வது இடத்தில் இருந்தது. 2015 இல் 84வது இடத்தில் இருந்தது. அவ் அறிகையின்படி பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகள் கூட இலங்கைய விட முன்னிலையில் இருக்கின்றது. ஆக ஆண் பெண் சமத்துவம் மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கும் நாடாக உலக அரங்கில் கவனிப்புக்கு உள்ளாகி வருகிறது இலங்கை.
உலகுக்கே பெண் அரசியல் தலைமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை இன்று தென்னாசியாவில் கூட மோசமான பின்னடைவுக்கு உதாரணமாக ஆகியிருக்கிறது. (பார்க்க அட்டவணை)
Inter Parliamentary Union அமைப்பின் 01.12.2017 அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது http://archive.ipu.org/wmn-e/classif.htm |
இறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில் 6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே.
உள்ளூராட்சிச் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 1997இல் 1.9%வீதமாகவும், 2004இல் 1.8% வீதமாகவும், 2011இல் 1.9% வீதமாகவும் மட்டும் தான் இருந்தது. இந்த நிலையை சட்டம் தலையிட்டும் சரி செய்ய முடியவில்லை. இப்போது புதிய வழிகளைக் கோரியபடி அடுத்த கட்ட போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
ரோசி சேனநாயக்க
இலங்கையின் பிரதான மாநகர சபையின் புதலாவது பெண் மேயர். 05.01.1958 இல் பிறந்த ரோசி சேனநாயக்க தற்போது 60 வயதைக் கடந்தவர்.
1980 ஆம் ஆண்டு இலங்கையின் அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட ரோசி 1981இல் சர்வதேச ஆசிய பசுபிக் நாடுகளின் அலகு இராணியாக தெரிவானார். 1985 ஆம் ஆண்டு அவர் திருமணமான உலக அழகு ராணியாக தெரிவானார். அதன் பின்னர் அவர் பல போது நடவடிக்கைகளில் ஈடுபட்டு படிப்படியாக சமூக தலைமைப் பாத்திரத்துக்கு தன்னை ஈடுபடுத்தி அரசியல் பணிக்குள் நுழைந்தவர்.
கொழும்பு மாநகர சபை இதுவரை ஐ.தே.க.வின் கைகளை விட்டு நழுவியதில்லை. இந்தத் தேர்தலில் 131353 வாக்குகளைப் பெற்று ஐ.தே.க 60 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதன்படி புதிய சட்ட திருத்தத்தின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு 27 பெண்கள் தெரிவாகியாக வேண்டும்.
ரோசி சேனநாயக்க அரசியல் செயற்பாட்டாளராக மட்டுமன்றி, சிறுவர்கள் - பெண்ணிய – மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளராக மட்டுமன்றி இனவாதத்துக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் தன்னை நிறுவியவர். சில சிங்களத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
1987 இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். 2002இல் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியிருக்கிறார். அதன் பின்னர் ஐ.தே.க வின் கொழும்பு மேற்குத் தொகுதியின் அமைப்பாளராக இயங்கி வந்தார். 2009 ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு 80,884 அதிகப்படியான விருப்பு வாக்குகளின் மூலம் தெரிவானார். 2010 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் வரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவியாக இயங்கினார். 2010 பொதுத் தேர்தலில் 66,357 விருப்பு வாகுகளினால் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 2015 இல் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சராக 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை கடமையாற்றியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒருசில வாக்குகளின் வித்தியாசத்தில் அவரது பிரதிநிதித்துவம் இல்லாது போனது. அவர் 65320 வாக்குகள் பெற்றிருப்பதாக வெளிவந்த முடிவை எதிர்த்து அவர் வாக்குகளை மீள எண்ணும்படி மேன்முறையீடு செய்தார். ஐ.தே.க பட்டியலில் தெரிவானோரில் இறுதியாக மனோ கணேசன் இருந்தார். ரோசி தெரிவாகாதது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் ரோசி தனது முயற்சியை கைவிட்டார். ரோசியை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க ஏற்பாடாகி வந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்தார். தனது அரசியல் பயணத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயராக ஆவதற்கான வாய்ப்பு குறித்து அப்போது தான் உரையாடப்பட்டது. இந்த இடைக்காலத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அது தொடர்பில் உள்ளூரில் மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டினார்.
விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தவறு நிகழ்ந்திருப்பதையிட்டு அவர் முறைப்பாடு செய்ய முனைகையில் பிரதம மந்திரி காரியாலயத்தின் பிரதானியாக கடமையாற்றினார்.
இலங்கையின் பெரிய உள்ளூராட்சி சபை கொழும்பு மாநகர சபை. இலங்கையின் மையம். சகல அதிகார பீடத்தின் பிரதான காரியாலயங்கள், வர்த்தக மையங்கள், அதிக ஜனத்தொகை, அதிக சேவை, வள பரிமாற்றம் நிகழும் இடமாக திகழும் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகும் மேயர் பதவி சாதாரண ஒன்றல்ல. அப்பதவி ஒரு பெண்ணிடம் இம்முறை கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வு.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...