Headlines News :
முகப்பு » , » 'மலையக மக்களும் தேசிய இனம் என்று புதிய யாப்பு அங்கீகரிக்க வேண்டும்'

'மலையக மக்களும் தேசிய இனம் என்று புதிய யாப்பு அங்கீகரிக்க வேண்டும்'

இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களை கொண்டதான அதிகார அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் மலையக மக்களும் தனியான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தனித்துவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக அதிகார அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மலையகத்திலுள்ள சமூக அமைப்புகள் யோசனைகளை முன்வைத்துள்ளன.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் குழுவிடம் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் அமர்வு இரண்டு நாட்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தனி அதிகார அலகு, தனி அடையாளம், காணி உரிமை உட்பட மலையக மக்கள் சார்ந்த பல்வேறு யோசனைகள் இந்தக் குழுவிடம் பலரும் முன்வைத்துள்ளனர்.

மலையக ஆய்வகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில், இலங்கை ஒரு பல்லின- பல்கலாசார-மதச்சார்பற்ற நாடு என்று புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தேசிய இனங்களாக சிங்களவர், வடக்கு-கிழக்கு தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம் என அரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களை கொண்டதான அதிகார அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறே, மூன்று மாகாணங்களிலும் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கி நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியதாக நிலத் தொடர்பற்ற அதிகார பகிர்வு தேவை என்றும் கோரியுள்ளதாக மலையக ஆய்வகத்தின் பிரதான செயற்பாட்டாளரான ஏ. லோறன்ஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பிராந்திய ரீதியான அதிகார பகிர்வில் பொலிஸ் அதிகாரத்தை தாங்கள் வலியுறுத்தாவிட்டாலும் காணி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பபட வேண்டும் என்றும் துனை ஜனாதிபதிகளாக மலையகத் தமிழர் உட்பட மூன்று சிறுபான்மை இனங்கள் சார்பிலும் மூன்று பேர் தெரிவாகக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் லோறன்ஸ் கூறினார்.

நன்றி - BBC
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates