Headlines News :
முகப்பு » , , , , , » “பிரதான மூவினங்களும் மும்மதங்களின் ஆதிக்கத்தில்தான் இயங்குகின்றன” - ஆய்வாளர், ஊடகவியலாளர் என்.சரவணன்

“பிரதான மூவினங்களும் மும்மதங்களின் ஆதிக்கத்தில்தான் இயங்குகின்றன” - ஆய்வாளர், ஊடகவியலாளர் என்.சரவணன்


ஆய்வாளர் ஊடகவியலாளர் என்.சரவணன்
அரசியல், சமூகம், மதம், இனம், பெண்ணியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி ஆழ்ந்த சிந்தனையும் கூரிய பார்வையும் கொண்ட பேனாக்காரன் சரவணன்! இனம், மதம், மொழி என்கிற பேதங்களைக் கடந்த மனிதர். 1980–90 காலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த மாற்றுப் பத்திரிகையான சரிநிகர்-இல்சமூக அவலங்களையும் அதற்குக் காரணமான தரப்பினரையும் துணிச்சலுடன் பதிவுசெய்த பத்திரிகையாளன். தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றுடன் சிங்கள மொழியிலும் அதிக பரிச்சயம் கொண்டவர். இந்த மொழியறிவின் துணைகொண்டு, இலங்கையில் இதுவரை வெளிவந்துள்ள பெருமளவிலான தமிழ் சிங்கள வரலாற்று நூல்களை ஆய்வு செய்துள்ளார். அதன் அடுத்தபடியாக ஏராளமான வரலாற்று நூல்களின் மூலங்களை பகுப்பாய்வும் செய்துள்ளார், இந்த நுட்பமான திறமைகளின் பிரதிபலிப்பாய், கண்டிக் கலவரம், அறிந்தவர்களும் அறியாதவைகளும் என இரண்டு நூல்களை எழுதியுள்ளார். வரலாறுகளின் நிஜமான பக்கங்களை ஆதிக்க சக்திகளும் மதவாதிகளும் திட்டமிட்டு மறைத்தும் தொடர்ந்து மறுதலித்தும் வருகிறார்கள் என்பதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன இந்த நூல்கள், குருட்டுத்தனமான மதவாதமும் அத்துமீறலான அரசியல் அதிகாரமும் மக்களின் வாழ்வியலை – அவர்களின் ஒற்றுமையை உருக்குலைத்துவிட்ட உண்மையை "1915 : கண்டி கலவரம்" நூலின் பல பக்கங்களில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் என்.சரவணன். கட்டுமரத்திற்காக அவரைச் சந்தித்தேன்.
-லதா துரைராஜா

கட்டுமரன்: காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர், இலங்கையின் அரசியல் அதிகாரத்தில் மதம் எத்தகைய பங்கினை வகித்தது?
காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் இலங்கைக்குள் புகுந்தவேளை, இலங்கை என்பது ஒரு நாடக இருக்கவில்லை. 1815 இல் கண்டி ஒப்பந்தத்தின் மூலம், கண்டி ராஜதானி எழுதிக்கொடுக்கப்பட்டபோது இலங்கைத்; தீவு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் போனது. அந்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவினூடாக பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பதாக ஆங்கிலேயர்களிடம் கையெழுத்தில் உறுதி வாங்கிக்கொண்டனர் கண்டி பிரதானிகள். அன்று தொடக்கம் இதனை சிங்கள-பௌத்த நாடாகவும் பௌத்த மதத்தைப் பேணிக் காப்பது அரசின் கடமையென்றும் ஆக்கிக்கொண்டனர் சிங்கள ஆட்சியாளர்கள்.

ஆனால், சோல்பரி அரசிலமைப்பிலோ, பௌத்த மதத்தைப் பேணிக் காப்பது அரசின் கடமையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், ஆங்கிலேயர்களின் முன்னைய ஒப்புதல் காரணமாக அது பெரிதுபடுத்தப்படவில்லை. ஆனால் 1956 அரசியல் மாற்றமானது, பௌத்தத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்கிற கோசத்தை எழுப்பியது, பண்டாரநாயக்கா ஆட்சியின் அந்தக் கனவை, அவரது துணைவி சிறிமாவோ பண்டாரநாயக்க 1972 -இல் நனவாக்கினார். ஆப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த சிறிமாவோ, பௌத்த மதத்திற்கு முதல் முறையாக அரசியலமைப்பு அந்தஸ்தினை வழங்கினார். 1978-ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசிலமைப்பில் அந்த விதியை மாற்ற முடியவில்லை. ஏன், அதன்பின் வந்த எந்த ஆட்சியாலும் கூட அதனை மாற்றமுடியவில்லை.

மத சமத்துவம் மீறப்படும் வேளைகளில் சிறுபான்மை இனங்கள் அதற்கு எதிர்வினையாற்றும்போதெல்லாம் அரசியலமைப்பில் அன்று நுழைத்துக்கொண்ட “பௌத்த மத” பற்றிய சரத்தை வைத்துக் கொண்டு தான் அந்த அபிலாஷைகளை முறியடிக்கின்றன என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
கட்டுமரன்: மாற்ற முடியவில்லையா அல்லது எந்தவொரு ஆட்சியாளரும் இந்த மாற்றத்தை விரும்பவில்லையா?
இரண்டும் தான். மாற்ற முடியாத அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கியுள்ளார்கள் கடந்தகால ஆட்சியாளர்கள். இன்று அவர்களே விரும்பினாலும் கூட – அவர்களால் நிறுவப்பட்ட – நிறுவனமயப்பட்ட இந்த அமைப்பு முறை, அவர்களை மாற்ற விடப்போவதில்லை. ஏனென்றால் இன்று தனி நபர்கள் எவராலும் ஆட்சி அமைப்பு முறையை தீர்மானிக்க முடிவதில்லை. மாறாக இந்த தனி நபர்களின் கூட்டு முயற்சியால் கட்டமைக்கப்பட்டு நிறுவப்பட்ட சித்தாந்தமும், அதிகார அமைப்புமே தனி நபர்களின் அரசியல் திசைவழியை அல்லது அரசியல் பாதையைத் தீர்மானிக்கின்றன.

உதாரணத்திற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்து,அவரிடம் இந்தத் தீவின் ஒட்டுமொத்த அதிகாரமும் வழங்கப்பட்டால் கூட அவரால் அவர்சார்ந்த இன மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க முடியாது. மாறாக அவர் ஒரு சிங்கள –பௌத்த அதிகார கட்டமைப்பின் இயக்குனராக மட்டும் தான் இருந்திருக்க முடியும். நாட்டின் தலைவர்கள் வருவார்கள், போவார்கள், மாறுவார்கள்; ஆனால் அதிகாரத்துவ சித்தாந்தமும் அதைத் தாங்கிப் பிடித்து வழிநடத்தும் கட்டமைப்பும் ஸ்தூலமானதே!

என். சரவணன் எழுதிய கண்டிக்கலவரம்அறிந்தவர்களும் அறியாதவைகளும் நூல்கள்
கட்டுமரன்: தேசிய ஒருமைப்பாட்டில், மதத்தின் பங்கு எந்தளவில் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
அரசும் மதமும் ஒன்றிணையும்போது அது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான உதாரணங்களைக் கூறமுடியும். அதிலும் பல்லின, பன்மத சமூகங்கள் வாழும் தேசங்களில் இது குறித்து சொல்லத் தேவையில்லை. இலங்கையைப் பொறுத்தளவில், மேலதிகமாக இன, மத முரண்பாடுகளால் சுயசிதைவைச் சந்தித்து, ஒட்டுமொத்த உலகுக்குமே மோசமான முன்னுதாரணமாக விளங்கிய நாடு. ஆக, அரசானது தனது மக்களை சமத்துவமாக நடத்தும் கட்டமைப்பைக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், அது ஈடேறவில்லை. ஒன்றை புனிதப்படுத்தும்போது, மறைமுகமாக புனிதம் அல்லாதவையும் உண்டு என்று பிரகடனப்படுத்தப்பட்டு விடுகிறது. ஆக, எந்த மதமும் இன்னொன்றை மதமாக அங்கீகரித்தது கிடையாது. சமமாக மதித்ததும் கிடையாது. மதங்களுக்கான பொதுப் பண்பு அது!

இலங்கையில் மேலாதிக்கம் செலுத்திவரும் பௌத்தம் இத்தனைக்கும் ஒரு மதம் அல்ல. புத்தர் பௌத்தத்தை வாழ்க்கைக்கான மார்க்கமாகத்தான் போதித்திருக்கிறார். ஆனால் நடைமுறையில் இன்று பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீது வெறுப்புணர்ச்சியை வளர்த்தெடுத்து வன்முறை வடிவம் எடுக்குமளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டில் அல்லது மக்களை ஒற்றுமைப்படுத்துவதில் மதங்கள் தோல்வி கண்டுள்ளன. அதற்கு அரசு அனுசரணையாக இருந்துவருகிறது.
கட்டுமரன்: அப்படியென்றால், இலங்கையில் தலைவிரித்தாடும் மதசமத்துவமின்மை ஒழிந்துபோக வாய்ப்பே இல்லையா?
எதுவும் சாத்தியமற்றது என்றில்லை. சாத்தியமாவது எளிதான காரியமும் அல்ல. காலம், சக்தி, உழைப்பு, பொருள், அர்ப்பணிப்பு, என அனைத்தையுமு; பெரும் பிரக்ஞையுடன் விலை கொடுக்க தயாராக வேண்டும். முதலில் அந்தத் தயாரிப்புக்கு மக்களைத் தயார்படுத்துவதே மிகப் பெரும் சவாலான விடயம். அப்படியொரு மாற்றத்துக்கான தேவையை அடையாளம் கண்டே தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை சாத்தியப்படவில்லை. மத சமத்துவத்தின்மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொள்ள இன்று எதுவும் மிச்சமில்லையே!
கட்டுமரன்: இலங்கையின் சமூக மற்றும் கலாசார இயங்கியலில் மதத்தின் வகிபாகம் எத்தகையதாக உள்ளது?
இலங்கையில் வாழும் பிரதான மூவினங்களும் மும்மதங்களின் ஆதிக்கத்தில்தான் இயங்குகின்றன. நவீன உலகில் இனக் குழுமங்களின் அடையாள உருவாக்கம் என்பது ஆதிக்க குழுமத்தின் அதிகாரத்துவ அநீதியின் விளைவாக தம்மைத் தற்காத்துக்கொள்ள உருவாகும் இன்னொரு குழுமமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது அதுவரை பொது தேசியத்தின் அங்கமாகக் கருதிவந்த ஒரு சமூகம் தம் மீதான பாரபட்சத்தையும் அநீதியையும் உணருகிறபோதுதான், தமக்கான தனி அடையாளத்தை கோருகிறது. கலாசாரத்தைக் கட்டிக் காக்கவும் தலைப்படுகிறது. இலங்கையில் இனத் தேசியவாதம் மதத்தையும் இணைத்துக்கொண்டு சமாந்திரமாக வளர்ந்து ஏகபோக நிலையை எட்டிவிட்டிருக்கிறது. இன்று சிங்கள – பௌத்த தேசியவாதம், இனவாதமாகவும் பேரினவாதமாகவும் நீட்சியுற்று இறுதியில் பாசிச வடிவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது.
கட்டுமரன்: இதுபற்றி மேலும் விளக்குங்கள்?
சிங்கள பௌத்த பேரினவாதம் நிறுவனமயப்பட்டு வியாபித்து கோலோச்சி வருகிறது. அதற்கென்று இன்று ஓர் அரச வடிவம் இருக்கிறது. கல்விக் கட்டமைப்பு, சிவில் சமூகம், சிவில் அமைப்புகள், நீதிமன்றம், பாதுகாப்பு இயந்திரம் என எதையும் விட்டுவைக்கவில்லை. இவை அனைத்தினதும் அனுசரணையுடன் புடம்போட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் இருக்கிறது. நாளாந்தம் அதனைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. சிங்கள பௌத்தர்கள் அல்லாதோரின் பலத்தையும் கேள்வி கேட்கும் ஆற்றலையும் நசுக்கி அந்த இடத்தில் தனது இடத்தை பிரதியீடு செய்து வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் இருந்துதான் அதன் வகிபாகத்தையும் திசைவழியையும் கண்டுணரலாம். நலிவடையச் செய்யப்பட்டவர்களுக்கான தற்காப்பையும், விடுதலையையும் கண்டடைய இந்த புரிதல் அவசியம்.


கட்டுமரன்: அண்மையில் நீங்கள் எழுதி வெளியிட்ட ‘கண்டிக் கலவரம்’, ‘அறிந்தவர்களும் அறியாதவைகளும்’ ஆகிய நூல்களில்  ‘பௌத்த பேரினவாதம்’ என்ற சொல்லாடலைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள். இதுபற்றி சற்று விளக்க முடியுமா?
சிங்கள பௌத்த பேரினவாதம் என்கிறோம். அது நிறுவனமயப்பட்டிருக்கிறது என்கிறோம். ஆதற்கென்று ஒரு பலமான சித்தாந்தம் இருக்கிறது என்கிறோம்., ஆனால் இவற்றுக்கான தெளிவான விளக்கம் தமிழ் சூழலில் போதுமான அளவு நிறுவப்படவில்லை என்பதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துகொண்டேன். சிங்கள பௌத்தத்தை அதன் களத்தில் இருந்து அவதானித்து, அதன் மொழி பயன்பாட்டு சூழலை நுகர்ந்து, அதனை பின்தொடர்ந்து அவதானித்து வருவதை இன்றைய தமிழ் எழுத்தாளர்களோ ஆய்வாளர்களோ செய்வதில்லை. அது ஒரு பற்றாக்குறை மாத்திரமல்ல. அப்படிச் செய்யாவிட்டால் நாம் எப்படி ஒரு முடிவுக்கு வருவது? எப்படி ஒரு திறனாய்வைச் செய்வது? மதிப்பீடுகளை எவ்வாறு முன்வைப்பது? நமக்கான மூலோபாயம் – தந்திரோபாயங்களை எப்படி வகுப்பது?

இந்த பகுப்பாய்வுக்கான இடைவெளியை நிரப்பும் பணியைத்தான் நான் செய்துவருகிறேன். பெரியார் கூறுவார், “எனக்கு அந்தப் பணியைச் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அந்தப் பணியைச் செய்ய எவரும் முன்வராததால் நான் என் தலையில் அப்பணியை மேற்போட்டுக்கொண்டு செய்துவருகிறேன்” என்று.

எனது பணி அடுத்துவரும் ஆய்வாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அவசியமான தகவல், தரவுகள், கருத்துகளை முன்வைக்கிறது. தகவல்களும், தரவுகளும் திறனாய்வுக்கு அவசியம்.. கருத்துருவாக்கத்திற்கு மிகவும் அவசியம். இனத்துவ – மதத்துவ சிக்கல்களை ஆராய்வதற்கு தமிழில் இருந்து மாத்திரம் மூலங்களைப் பெற முடியாது. ஆங்கிலத்தில் இருந்து பெறுவதுகூட போதுமானதாக இருக்காது. அடிப்படை மூலங்களை சிங்கள மொழியில் இருந்து பெறுவது மிகவும் அவசியமானது.
கட்டுமரன்: உங்களுடைய இவ்விரு படைப்புகளும் பௌத்த-பேரினவாதம் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றா நம்புகிறீர்கள்?
அப்படி ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற சிறுபான்மை சமூகத்தினர் நிலைமையை தெளிவாக விளங்குவதற்கு பெரிதும் பயன்படும். அதற்கான விழிப்புணர்ச்சியைத் தரும். சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வரலாற்று மூலத்தை விளங்கப்படுத்தும், ஆதிக்க சக்தியினரின் சித்தாந்த திசைவழியை அறியச் செய்யும். அதன் நீட்சி, தொடர்ச்சி, வியாபகம், என்பவற்றை தரவுகளுடன் நிறுவும். இந்தப் பின்புல விபரங்கள், விளக்கங்கள் இன்றி சிறுபான்மை இனங்கள் தமது அரசியல் எதிர்காலத்தை வகுக்க முடியாது என்பதே எனது நம்பிக்கை.
கட்டுமரன்: நீங்கள் இவ்வளவு உண்மைகளை ஆணித்தரமாகப் பதிவுசெய்த பிறகும் எனக்கொரு அவா - இன்றைய இலங்கையில் மதங்களினூடாக இன இணக்கப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டா? இதற்கு என்ன செய்யவேண்டும்? எதைச் செய்யாமல் இருக்கவேண்டும்?
இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு மதங்கள் போதுமானவையல்ல. பகைமை உணர்வில் இருந்தும் வெறுப்புணர்ச்சியில் இருந்தும் அதிகார உணர்வில் இருந்தும் தள்ளியிருந்தாலே இணக்கப்பாடு ஏற்பட்டுவிடும். இனப் பெருமிதம் போலவே மதப் பெருமிதம், சாதியப் பெருமிதம், ஆணாதிக்கப் பெருமிதம், வர்க்கப் பெருமிதம் எல்லாம் அதனதன் வடிவத்தில் இன்னொன்றை கீழ் தள்ளித்தான் இயங்குகிறது. இதில் மதத்தின் வகிபாகம் கணிசமானது. கற்பனாபூர்வமான மதக் கருத்துக்கள் யதார்த்த நிலையை சவாலுக்கு இழுத்துக்கொண்டேயிருக்கின்றன. இது ஒரு வம்பு மிக்க செயல்தானே!

மேலும் கூறினால், இலங்கையில் இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் மதங்கள் படுதோல்வி கண்டிருக்கின்றன என்பது வரலாறு. அதுமட்டுமின்றி, மதங்களே இணக்கப்பாட்டுக்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தியிருப்பதும் வரலாறுதான். அப்படியிருக்கையில் இதனைச் சரிசெய்ய மதங்களால் எதுவும் செய்ய முடியாது. தள்ளி நின்றாலே போதுமானது!

நன்றி - கட்டுமரன்
Share this post :

+ comments + 2 comments

மிகவும் ஆக்க பூர்வமான கருத்து.சரவணனின் கருத்து நடைமுறை சாத்தியமாவதற்கு இது சிங்கள மொழி மூலமும் எழுதப்படல் அவசியம்.

மிகவும் ஆக்க பூர்வமான கருத்து.சரவணனின் கருத்து நடைமுறை சாத்தியமாவதற்கு இது சிங்கள மொழி மூலமும் எழுதப்படல் அவசியம்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates