இன்று முதலாவது சிங்கள திரைப்படமான "கடவுனு பொறந்துவ" வெளிவந்த பவளவிழா ஆண்டு (75 ஆண்டு நிறைவு) கடந்த 21 ஜனவரி 2022 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்பட்டது. அந்த நாள் சிங்கள ஊடகங்களில் எல்லாம் செய்திகளும், கட்டுரைகளும் வெளிவந்திருப்பதைக் கண்டேன். சிங்களத் திரைப்பத்தின் ஆரம்பத்துக்கு வழிகோலிய தமிழர்களையும், தமிழ்ச் சமூகத்தையும் மறந்து தான் அந்த நினைவுகள் மீட்கப்படுவதை காண முடிகிறது.
இலங்கையில் அசையும் படத்தைக் காண்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவர் அந்திரி (Adolphus William Andree). அவர் யாழ்ப்பாணத்தில் 1869இல் பிறந்தவர். தமிழ் – பறங்கி குடும்பப் பின்னணியைக் கொண்டவர். தாயார் யாழ்ப்பாணத்தையும், தந்தை ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். அந்திரி இலங்கையில் அப்போது கொழும்பு ஸ்லேவ் ஐலண்டில் (Slave Island) மிகப் பெரிய புகைப்பட ஸ்டூடியோவாக இருந்த ஹோப்டோன் ஸ்டூடியோ (Hopetoun Studio) வை சொந்தமாக நடத்தி வந்தவர். இலங்கையின் புகைப்படத்துறை வரலாற்றில் தவிர்க்கமுடியாத நபர் அவர். ஆனால் சிங்கள மொழியில் வெளிவந்த வரலாறுகளில் ஏனோ தவிர்க்கப்பட்டவர். இலங்கையர்கள் சினிமாவை பார்க்க வைத்த முன்னோடி அவர்.
Adolphus William Andree). அந்திரியின் “Hopetoun Studio” |
“கடவுனு பொறந்துவ” வின் மூலம் சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவரும் தமிழர் தான். அத்திரைப்படம் தொடங்கும் போது முதலில் எம்.எஸ்.நாயகம் தோன்றி உரையாடுவார். அதன் பின் தான் எழுத்தோட்டம் தொடரும். (பார்க்க )
பெயர் பட்டியல் காண்பிக்கப்பட்டவுடன் முதலில் பதட்டத்துடனும், கவலையுடனும் ஒரு பெண்ணின் முகம் குளோஸ் அப்பில் காட்டப்பட்டுத் தொடங்கும். (கீழே காணொளி இணைப்பில் பார்க்கலாம்) அப்பெண் தான் இலங்கை திரைப்படத்தின் முதலாவது நாயகி. ருக்மணி தேவி என்று அழைக்கப்பட்ட டேசி டேனியல். அவரும் தமிழர். தான் தோன்றிய படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடியவர். அவரோடு கதாநாயகனாக நடித்த எடி ஜயமான்னவும் ருக்மணிதேவியும் வாழ்கையிலும் இணையர்களாக ஆனார்கள்.
83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார்கள் இனவாதிகள். இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறையை (இலங்கைக்கே திரைப்படத்துறையை) உருவாக்கி அறிமுகப்படுத்தியது சிங்களவர்கள் அல்லர். தமிழர்களே. சிங்கள சினிமாத்துறையை ஆரம்பித்து வைத்தது மட்டுமன்றி அதனை ஆரம்பத்தில் வளர்ப்பதிலும் முக்கிய இடத்தை தமிழர்கள் வகித்தார்கள். இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமான “கடவுனு பொறந்துவ” (உடைந்த வாக்குறுதி) 1947 ஜனவரியில் வெளிவந்தது. அதில் நடிகர்கள் பலர் சிங்களவர்களாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தி, தமிழ் திரைப்படங்களே ஆக்கிரமித்திருந்தன.
“கடவுனு பொறந்துவ” திரைப்படத்தைத் தயாரித்த எஸ்.எம்.நாயகம் (சுந்தரம் மதுரநாயகம்) மதுரையில் சோப்பு கம்பனி வைத்திருந்த வர்த்தகர். அவருக்கு தனியான திரைப்பட ஸ்டூடியோவும் திருப்பரங்குன்றத்தில் இருந்தது. அதில் அவர் ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியிருந்தார். அவரின் தயாரிப்பில் 1946இல் உருவான “குமரகுரு” என்கிற திரைப்படத்தை இயக்கியவர் பெங்காலியரான ஜோதிஸ் சின்ஹா. அத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஓகஸ்ட் 15 அன்று வெளியானது.
வரலாற்றுப் பின்புலம்
உலகின் முதலாவது திரைப்படம் 1895 இல் திரையிடப்பட்டது. அது பேசாத் திரைப்படமாகத்தான் (Silent movie) வெளிவந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் பேசும் பேசும் படத்தை மக்கள் கண்ணுற்றார்கள்.
“கடவுனு பொறந்துவ”வை முதற் திரைப்படமாக அறியப்பட்டாலும் 1936 இல் “பலிகெனிம” (பழிவாங்குதல்) என்கிற ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது. அது 19. மே 1936 அன்று கொட்டாஞ்சேனை கெயிட்டி தியேட்டரில் முதலாவதாக திரையிடப்பட்டது. அதில் பிரதான கதாநாயக வேடத்தில் நடித்தவர் அன்றைய டவர் மண்டப நாடக நடிகரான என்.எம்.ஆர்.டயஸ். இதை இயக்கியவர் டவர் மண்டப இசையமைப்பாளராக இருந்த டபிள்யு,தொன் எட்வின். ஆனால் அது 30 நிமிடங்களை மட்டுமே கொண்ட ஒரு குறுந்திரைப்படமாக இருந்ததாலும் “ஊமைப் படமாக” அதாவது பின்னணிக் குரல்கள் அற்ற திரைப்படமாகவும் இருந்ததால் அதை ஒரு முழு நீள திரைப்படப் பட்டியலில் எவரும் சேர்ப்பதில்லை. ஆனால் அதையே முதலாவது திரைப்படமாக பதிவு செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமாகவும் “கடவுனு பொறந்துவ”வைத் தான் குறிப்பிட முடியும்.
இலங்கையின் பழைய சினிமா கொட்டகை |
1901இலேயே முதன்முதலாக இலங்கையில் திரைப்படம் தனிப்பட்ட ரீதியில் காண்பிக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் வெஸ்ட் ரிஜ்வே மற்றும் “இரண்டாவது போவர் யுத்த” கைதிகளுக்காகவும் காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் அது. அதன் பின்னர் குறும் ஆவணப்படங்களாக போவர் யுத்த வெற்றி பற்றியும் விக்டோரியா இராணியின் மரணச்சடங்கு என்பவை இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சினிமாக்கொட்டகை அமைத்து “பயஸ்கோப்” காட்டும் முறை அறிமுகமானது. 1903 இலேயே நிலையான தியட்டர் “மதன் தியட்டர்” பேரில் உருவாக்கப்பட்டு இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது.
கெப்பிட்டல் தியேட்டரின் உரிமையாளர் அன்றைய பிரபல முஸ்லிம் வர்த்தகரான எப்.டீ.பாரூக். சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் பாம்பே பைனியர் பில்ம்ஸ் கொம்பனி என்கிற ஒன்றை 1938இல் உருவாக்கி ஷாந்தா என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக சிங்கள மேடை நாடக நடிகர்களை பம்பாய்க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.
இதற்கிடையில் எஸ்.எம்.நாயகம், சாந்திகுமார் செனவிரத்ன ஆகியோர் இணைந்து சித்திரகலா மூவிடோன் (Chitrakala Movietone) என்கிற திரைப்பட கம்பனியொன்றை ஆரம்பித்தார்கள். அதன் மூலம் கண்டி மன்னன் “ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்” அரசனின் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அதற்கான உத்தேச செலவு அதிகமாக இருந்ததால் அதைக் கைவிட்டு “அசோகமாலா” என்கிற வரலாற்றுக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார். ஆனால் அதற்கான சரியான திரைக்கதையை உருவாக்குவதற்காக ஒரு போட்டியை அறிவித்தார். அதற்காக 500 ரூபா பரிசுத் தொகையும் அறிவித்தார்.
அந்த போட்டியில் இறுதியில் சாந்திகுமார் செனவிரத்ன எழுதிய திரைக்கதை தான் வென்றது. அவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துவிட்டு திரைக்கதையை பெறுவதற்கு எஸ்.எம்.நாயகம் முன்வந்தபோதும் சாந்திகுமார் இறுதியில் உடன்படவில்லை. அக்கதையை வைத்து திரைப்படத்தை தயாரிப்பதில் முரண்பட்ட சாந்திகுமார் ‘சித்திரகலா மூவிடோன்’ நிறுவனத்திலிருந்து விலகி சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சிற்றம்பலம் ஏ கார்டினரை சந்தித்து திரைப்படத்தை உருவாக்கும் விருப்பைத் தெரிவித்தார். அவரும் திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் உடன்பட்டார். சாந்திகுமாரே அத்திரைப்படத்தை இயக்குவதற்கும் உடன்பட்டார்.
கடவுனு பொறந்துவ - ருக்மணி தேவியும், ஜயமான்னவும் |
மதுரை ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கும் வேலைகள் ஆரம்பமாகின. நாடகக் கதையை திரைக்கதையாக ஆக்கினார் பீ.ஏ.டபிள்யு.ஜயமான்ன. திரைப்படத்தை ஜோதிஸ் சின்ஹாவைக் கொண்டு தான் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். ஒளிப்பதிவை கே. பிரபாகர் செய்தார்.
பேர்சி ஜயமான்ன என்கிற லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகையாளர் முதலாவது திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவர் சிங்களத் திரைப்படத்தின் முதலாவது கதாநாயகனான ஜயமான்னவிடம் கண்ட பேட்டியில் ஒரு பகுதியையும் அக்கட்டுரையில் பகிர்ந்திருந்தார்.
மிகவும் சத்தமாக சிரித்துக்கொண்டு அந்தக் கதையை இப்படிக் கூறியிருக்கிறார்.
"திரைப்படம் பற்றிய எந்த அறிவும் எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தந்ததுமிலை. எனவே மேடையின் பின்னணியில் தொங்கவிடும் திரைச்சீலைகளையும், அலங்காரப் பொருட்களையும் கூட இங்கிருந்து கொண்டு சென்றோம். ஒரு நாள் எங்களை அந்த நாடகத்தை செய்து காட்டும் படி கூறினார்கள். அந்த மேடையில் ஆங்காங்கே லைட்டுகள் காணப்பட்டதால் முதலில் நாங்கள் அங்கே ஒளிப்பதிவு நடந்துகொண்டிருந்தாக நினைத்துவிட்டோம். எனவே அதற்கடுத்த நாட்களில் திரைச்சீலைகளை எல்லாம் சுருட்டிக்கொண்டு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தோம்.”
“அதன் பின்னர் தான் அவர்கள் எங்களுக்கு; ‘இதை திரைக்கதையாக்கி காட்சிகளாக பிரித்து, பிரித்து பகுதி பகுதியாகத் தான் ஒளிப்பதிவு செய்யப்படும்’ என்று தெளிவுபடுத்தினார்கள்.”
என்று சிரிப்பொலியுடன் கூறியிருக்கிறார். இன்றும் ஜயமான்ன இலங்கை சினிமாவின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.
அசோகமாலாவுக்கு நேர்ந்த கதிஇதற்கிடையில் அசோகமாலா திரைப்படத்தை எடுப்பதற்காக சாந்திகுமார் செனவிரத்னவும் இந்தியாவை சென்றடைந்திருந்தார். 1946 நவம்பரில் அவர் மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரைப்படப் பணிகளை ஆரம்பித்தார். ஏற்கெனவே சாந்திகுமார் இந்தியாவில் நாட்டியக் கலையைப் பயின்றவர். அதுமட்டுமன்றி ஸ்டூடியோ வேலைகளையும் அறிந்திருந்தவர். அவர் தேசிய இசை, நாடக மரபை அறிந்திருந்தவர். அவர் அந்த ஸ்டூடியோவின் கலை இயக்குனராக இருந்த டீ.ஆர்.கோபுவுடன் இணைந்து அசோகமாலா திரைப்படத்தை இயக்கினார்.
ஆரம்பத்தில் “திவ்ய பிரேமய” திரைப்படத்தை உருவாக்குவதற்காக துரைசிங்கம் உள்ளிட்ட குழுவினரின் முயற்சி; அதன் பிரதான பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ஈ.சீ.பீ.விஜேசிங்க படத்தில் இருந்து நீங்கியதால் அப்பணிகள் இடைநின்று போனது. அதனால் அக்குழு அந்த இடைக்காலத்தில் இந்தியாவில் இருக்கும் காலத்திலேயே; அதில் நடிக்கவிருந்த குழுவினரைப் பயன்படுத்தி “கிரஹ பிரவேசம்” என்கிற தெலுங்கு திரைப்படத்தை “மன பிரயந்த” என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிடும் பணியில் வெற்றி பெற்றார்கள். அப்படி டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படம் 1947 மே மாதம் இலங்கையில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் துரைசிங்கம் புதிய நடிகர்களைக் கொண்டு மீண்டும் “திவ்ய பிரேமய” திரைப்படத்தை தயாரித்து முடித்தாலும் அது 1948 மே மாதம் தான் வெளிவந்தது.
“கடவுனு பொறந்துவ”வின் வெற்றி
“கடவுனு பொறந்துவ” முதலாவது திரைப்படமாக அறியப்பட்டதால் அத் திரைப்படத்தில் நடித்த பலர் முதலாவது என்கிற பெருமைக்கு உள்ளானார்கள். ருக்மணி தேவி இலங்கையின் முதலாவது திரைப்பட கதாநாயகி என்று அறியப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
திரைப்படத்திற்கு ஆர். நாரயண ஐயர் இசையமைத்திருந்தார். அவருக்கு உதவியாளராக ஆர்.முத்துசாமி பணியாற்றினார். (ஆர்.முத்துசாமி அப்சராஸ் இசைக்குழுவின் தலைவர் மோகன்ராஜின் தகப்பனாவார்.) ஆர்.முத்துசாமி பின்னர் இலங்கையில் வெளியான பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இந்தத் திரைப்படத்தின் முதலாவது காட்சி கொட்டாஞ்சேனை கிங்ஸ்லி தியட்டரில் காண்பிக்கப்பட்டபோது அன்றைய காணி அமைச்சராகவும் பிற்காலத்தில் இலங்கையின் முதலாவது பிரதமராகவும் ஆன டீ.எஸ்.சேனநாயக்கவின் தலைமையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
கிங்ஸ்லி தியேட்டரில் அப்போது 127 நாட்கள் ஓடியது. அதுபோல ஜிந்துப்பிட்டி டோக்கீஸ் (பிற்காலத்தில் முருகன் தியட்டர் என்று பெயர் மாற்றம் பெற்றது) தியட்டரில் 42 நாட்கள் ஓடியிருக்கிறது. மைலன் தியட்டரில் 28 நாளும், மருதானை நியூ ஒலிம்பியா மற்றும் நாடெங்கிலும் அப்போது இருந்த பல தியட்டர்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
கிங்க்ஸ்லி தியட்டரில் "கடவுனு பொரொந்துவ" முதற் காட்சிக்குப் பின் எஸ்.எம்.நாயகம் அவர்களுடன் கலைஞர்கள் - 21.01.1947 |
இனத்துவ பாகுபாட்டுக்குள்...
சிங்கள சினிமாத்துறை நெடுங்காலமாக இந்தியாவின் தயவிலேயே இருந்துவந்தது. தொழில்நுட்பத்துறை ஸ்டூடியோ பின்னணி, இசை என அனைத்துக்கும் இந்தியாவுக்கு சென்றுதான் படத்தை முடித்துக் கொண்டுவந்தார்கள். பின்னணி இசை, இசைக்கலவை, படத்தொகுப்பு கூட அங்கேயே மேற்கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த பாடகர்களையே சிங்களத்தில் பாட கற்பித்து பாடவைத்தார்கள்.
முதலாவது திரைப்படம் தோன்றி முதல் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்த சிங்கள சினிமாத்துறையின் போக்கை மாற்றினார் சமீபத்தில் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். 1956 இல் அவர் இயக்கிய “ரேகாவ” என்கிற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக இந்திய ஸ்டூடியோவை விட்டு விலகி இலங்கைக்கான சுதேசிய திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1956 என்பது “சுதேசியம்” என்கிற பேரில் நிகழ்ந்த இனத்துவ- மதத்துவஅரசியல் மாற்றங்களை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.ஏற்கெனவே இலங்கையின் திரையரங்குகளில் ஆக்கிரமித்திருந்த தமிழ், இந்தி திரைப்படங்களால் கவரப்பட்டிருந்த நிலையில் தென்னிந்தியாவில் தயாரான சிங்களத் திரைப்படங்கள் சிங்கள மக்களின் இரசனையிலிருந்து அந்நியமாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது சுயத்தை அங்கு காணவில்லை என்பதை உணரத் தொடங்கினார்கள். தமது பண்பாட்டிலிருந்து விலகியிருப்பதை கண்டுகொண்டார்கள். அப்போது அவர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தையும் அடைந்திருந்தார்கள். தமக்கான சிங்கள அரசை நிறுவிக்கொண்ட சிங்கள சமூகம் தமது கலை - பண்பாட்டு அம்சங்களை மீள்கண்டுபிடிப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் உள்ளாக்கினார்கள். சிங்கள சினிமாத்துறை நிமிர்வதற்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு அனுசரணையாக இருந்தது. அது உள் நாட்டில் தமிழ் திரைப்படத்துறையொன்றின் தேவையையும் கண்டுகொள்ளவில்லை. சுதேசிய சினிமாத்துறை என்பது சிங்கள சினிமாத்துறை தான் என்கிற மனநிலை சர்வ சாதாரணமாக குடியிருந்தது.
மறுபுறம் சிங்கள சினிமாவைப் போலவே தமிழ் சினிமாத்துறைக்கான முயற்சியும் இராட்சத இந்திய சினிமாத்துறையின் உற்பத்தியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு உற்பத்திச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது எளிமையாகவும், இலாபகரமாகவும் இருந்தது. 70களில் சிறிமா அரசாங்கத்தால் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் ஈழத்து தமிழ் சினிமா கூட சற்று தலைநிமிர வாய்ப்புகளைத் திறந்தன. சிங்களத் திரைப்படங்களுக்கும் தான்.
சுதந்திரத்துக்கு முன்னர் சிங்களத்திரைப்படத்துறை தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் தங்கியிருந்தது போல பிற்காலத்தில் சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழ் திரைப்பட உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் சிங்கள சினிமாத்துறையில் தங்கிருக்கும் நிலை ஏற்பட்டது. தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈழத்து சினிமாவில் பெரும்பங்கு வகித்த போதும் ஈழத்து திரைப்படங்கள் எதுவும் சிங்களத் திரைப்படத்துறையினரின் தயவின்றி வெளிவரவில்லையென்றே கூற முடியும்.
இனப்பிரச்சினை கூர்மைபெற்று தமிழர் கலைகள், பண்பாட்டு வெளிப்பாடுகள் நசுக்கப்பட்ட காணாமால் ஆக்கப்பட்டதன் வரிசையில் முக்கிய இடத்தை ஈழத்து சினிமா அடைந்தது. அதன் மீளுருவாக்கத்துக்கு எந்த நாதியும் இல்லாமல் போனபோது அதை ஒரு பொருட்டாக கருதுவதற்கு சிங்களத் திரைப்படத்துறையோ, அரசோ தயாராக இருக்கவில்லை. “இலங்கை சினிமா” என்பது இன்றும் “சிங்கள சினிமா” என்கிற கருதுகோள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த இடத்தில் சுதேசிய சினிமாவின் 75 வது ஆண்டை முன்னிட்டு பிரபல சினிமா கலைஞர் ஜாக்சன் அன்ரனி லேக்ஹவுஸ் பத்திரிகையான “சரசவிய” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறப்பட்ட விடயங்கள் கவனிக்கத்தக்கது.
“சிறிசேன விமலவீர ‘பொடிபுதா’ (சின்ன மகன்) என்கிற திரைப்படத்தை உருவாக்குவதற்காக புறக்கோட்டை அரசமரத்தடியில் ஒரு பெட்டிக்கடையொன்றைப் போல செய்து அதில் “சிங்கள நாட்டில் சிங்களவர்களால் உருவாக்கப்படும் முதலாவது திரைப்படத்துக்கு உதவி செய்யுங்கள்” என்று ஒரு பதாகையை தொங்க விட்டிருந்தார். தேவையான பணத்தை பத்து ரூபா பங்குகளையும் விற்பனையின் மூலமும் சேகரித்தார். பெருமளவானோரின் பங்களிப்புடன் தாராளமாக நிதி கிடைத்தது.இலங்கையில் அத்திரைப்படம் பெரும் புளொக் பஸ்டர் ஆனது. வர்த்தக ரீதியில் பெரும் இலாபத்தை ஈட்டித் தந்த படம் அது. அவர் பங்குதாரர்களுக்கு இலாபத்தை பிரித்துக் கொடுக்க முற்பட்டவேளை அவர்கள் அனைவரும் ஒரு திரையரங்கை அமைக்க அந்தப் பணத்தை பயன்படுத்தும்படி ஏகோமானதாக அறிவித்தார்கள். சிறிசேன கிரிபத்கொட நகரில் “நவஜீவன” என்கிற ஒரு திரையரங்கை அமைத்தார். இந்திய கம்பனிகளின் அதிகாரத்தில் தான் அப்போது சினிமாத்துறை இருந்தது. அந்தக் கம்பனிகள் இதனால் வெகுண்டெழுந்து தாக்கத் தொடங்கினார்கள். சிறிசேனவின் படைப்புகளை அவர்களின் திரையரங்குகளில் காண்பிக்க அனுமதிக்கவில்லை. அவர் தனிமைபடுத்தப்பட்டதில் தோற்றுப்போனார். அரச ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. அந்த இந்திய கம்பனிகளில் பங்குதாரர்களாக சேனநாயக்கமார்களும் இருந்தார்கள். அதனால் பெரும் பணக்கார செல்வந்தர்களின் ஆதரவு அந்த சினிமா கம்பனிகளுக்கு இருந்தது.
இந்த நேரத்தில் தான் இலங்கையில் சினிமா நடிகர் சங்கங்கள் எல்லாம் உருவானது. அவர்கள் இந்திய கம்பனிகளை எதிர்க்கத் தொடங்கினார்கள். காமினி பொன்சேகா போன்றோர் இந்த விடயத்தில் இனவாதமாக நடந்துகொள்ளாது புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றார்.
எனவே இதில் அரசியல் புதைந்திருந்தது. இது எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், எனது நினைவில் 60களில் ராகம நியுஜெம் திரையரங்கில் எம்.ஜீ.ஆரின் படத்தை திரையிட்ட வேளை சாணி எறிந்தார்கள். கட் அவுட்டுக்கு தார் பூசினார்கள். அப்போது இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களுடன் இலங்கை தமிழ் போராட்டங்ககளை ஊக்குவிக்கும் சினிமாக்கள் வெளியாகியது இதற்குக் காரணம்...”
83 இனப்படுகொலை ஏற்படுத்திய தாக்கம்
எந்த திரைப்பட உருவாக்கமும் பல இனத்தவர்களின் பங்களிப்போடு தான் வெளிவரமுடியும் என்கிற கருத்தை இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை. மையப்பிரச்சினையாக இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாட்டில் இனத்துவ காரணிகள் கலக்காத எதுவும் இல்லை என்பதால் இலங்கை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை இனத்துவ கண்ணாடிக்கூடாகக் காண்பதைத் தவிர்க்க முடியாது.
சிங்கள சினிமாத்துறைக்கு பலத்த அடி 83 கருப்பு ஜூலை சம்பவம் என்கிறார் எழுத்தாளர் நாரத நிஷ்ஷங்க. சிங்கள – தமிழ் திரைப்படங்களின் விநியோகஸ்தகராக அறியப்பட்ட காலோ பொன்னம்பலத்தின் பொரல்லை காரியாலயம் எரிக்கப்பட்டபோது நான் கையறு நிலையில் துரதிர்ஷ்டமானவனாக இருந்தேன். அந்த வீதியில் எறியப்பட்டிருந்த ஆரம்பகால அரிய சினிமா ரீல்களையும், போஸ்டர்களையும் என்னால் முடிந்த அளவு சேர்த்துக் கொடுத்தேன். சிங்கள திரைப்படத்துறையை ஆரம்பித்து, வளர்த்துவிட்டவர்கள் தமிழர்களே. ஆனால் நாடு பூராவும் உள்ள திரையரங்குகள் பல இனவாதத் தீயால் நாசமாக்கப்பட்டன. வெள்ளவத்தை சப்பாயர், தெஹிவள ட்ரியோ, நீர்கொழும்பு ராஜ், நாரஹென்பிட்டிய கல்பனா போன்ற திரையரங்குகளும் எரிக்கப்பட்டன” என்கிறார் அவர்.
மருதானை டார்லி வீதியில் இருந்த கே.குணரத்தினத்தின் “காமினி ஹோல்” சினிமா தியேட்டரும் 1983 இனக்கலவரத்தின் போது யூலை 24 ஆம் திகதி முழுமையாக தீயிட்டு அழிக்கப்பட்டது.
83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறையும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பல சிங்கள கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “சிரிபத்துல” என்றால் “புத்தரின் பாதச்சுவடு” பொருள். (சிவனொளிபாதமலைக்கு சென்று வணங்குவது புத்தரின் பாதச்சுவடு என்று நம்பப்படும் "சிரிபத்துல" வைத் தான்)
"சிரிபத்துல" என்கிற பெயரில் 1978இல் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியவர் கே.வெங்கட். 83 கலவரத்தில் உயிருடன் கொளுத்தி கொல்லப்பட்டார். நிஷ்ஷங்க திவயின பத்திரிகையில் (19.03.2013) எழுதிய கட்டுரையில் “சக சினிமாத்துறை நண்பரான பாலித்த யசபால கே.வெங்கட்டை பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்திருந்தார். ஆனால் யசபால இல்லாத சந்தர்ப்பமொன்றில் கே.வெங்கட் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே கொல்லப்பட்டார் என்கிறார் அவர்.
பிரபல சினிமாத்துறை அறிஞரான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “காந்தர்வ அபதான” என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.“1983 கலவரத்தில் ரொக்சாமி வசித்துவந்த ஹெந்தல வீட்டை சண்டியர்கள் தீயிட்டு அழித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ரொக்சாமி. சிரிபத்துல என்கிற பௌத்த திரைப்படம் உள்ளிட்ட மஹா ரே ஹமுவு ஸ்திரீய, நிலூகா, தமயந்தி, ஷீலா, கொப்பலு ஹன்ட போன்ற திரைப்பாங்களை இயக்கிய கே.வெங்கட் தெஹிவளயில் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரக்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய ரொக்சாமி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிக்கொண்டு அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தார். அவரின் துறையைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் அவரை மீட்டார்கள். சாமபலாகிப்போன அவரின் வீட்டை மீள கட்டி குடியேற்றினார்கள். ஆனால் அவர் இறக்கும்வரை அவரால் அந்த சம்பவத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை”
பேராசிரியர் சுனில் ஆரியரத்ன “ரொக்சாமி – முத்துசாமி” என்கிற தலைப்பில் சிங்கள நூலையும் வெளியிட்டவர்.
பல சக தமிழ் சினிமாக் கலைஞர்களை காமினி பொன்சேகா காப்பாற்றிருக்கிறார். நாடெங்கிலும் இனவாதிகளால் அழிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றை மீள மீட்கப்படவில்லை. சில திரைப்பட உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் சகலதையும் இழந்து வேதனையுடன் இறந்தே போனார்கள். சிலர் கையறு நிலையில் இந்தத் துறையில் இருந்து நீங்கினார்கள்.
83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறைக்கு ஏற்படுத்திய சேதமானது சினிமா என்கிற கலைக்கு ஊடாக இணைந்திருந்த மக்களையும் பிரித்து சின்னாபின்னமாக்கியது.
சிங்கள சினிமாவின் வளர்ச்சியில் பெரும்பாற்றிய பல தமிழர்களில் என் கவனத்துக்கு வரும் முக்கிய நால்வரைப் பற்றிய சிறிய குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.
போதிமர நிழலில் எரிக்கப்பட்ட கே.வெங்கட்
அன்றைய நாள் பெரும் சலசலப்புடன் தான் ஆரம்பமானது. அவனின் வீட்டின் எதிரில் உள்ள வீதியில் இருந்தே அந்த சத்தங்கள் ஒலித்தன. எழுந்ததுமே அவனின் தாயார் வெளியில் போகவேண்டாம் என்று எச்சரித்தாள். ஆனாலும் கிட்டத்தட்ட 15 வயதையுடைய சிறுவனாக தாயாரின் சொல்லைக்கேளாமல் வீதியை நோக்கிச் சென்றான் அவன். அந்த வீதியில் பொல்லுகளையும், போத்தில்களையும் ஏந்திய மனிதக் கூட்டத்தினரை அவன் கண்டான். களுபோவிலை பகுதியைச் சேர்ந்த சண்டியர்கள் பலர் பௌத்த விகாரைக்கருகில் இருந்த அரச மர நிழலில் கூடியிருந்தார்கள். அவனது வீட்டில் இருந்து அந்த அரசமரம் கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் தான் இருக்கும். அந்த சண்டியர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்ற அனைவரையும் பரிசோதித்தார்கள். வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்தார்கள். சிலரைத் தாக்கவும் செய்தார்கள். சிலரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத அளவுக்கு அங்கே சலசலப்பு மிக்க சத்தம் அந்த சூழலை நிறைத்திருந்தது.
அங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவன் அந்த அரசமரத்தினருகில் சென்றான். பலரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழராக இருந்தார் தாக்கினார்கள். வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். சிலர் அவர்களைக் கும்பிட்டுக். கெஞ்சினார்கள். தங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அப்படி வேண்டுபவர்களை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. சிறுவனான அவனுக்கு நடப்பது என்னவென்று புரிந்தது. ஆனால் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தான்.பின்னேரம் தெஹிவளை பக்கமிருந்து ஒரு வான் அங்கே வந்துகொண்டிருந்தது. அந்த வானில் ஒரு சாரதி மட்டுமே காணப்பட்டார். அந்த சாரதி குழப்பமடைந்திருந்தார். அந்த அரசமரத்திற்கு அருகிலுள்ள சிறு பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினார். அங்கேயும் சண்டியர்கள் குவிந்திருந்தனர். மீண்டும் அங்கிருந்து பிரதான பாதையை நோக்கி அவர் வாகனத்தைத் திருப்பினார். இத்தனையும் அந்த சிறுவனின் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த சாரதி ஒரு தமிழர். வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அணித்திருந்தார். நெற்றியில் திருநீறும் இருந்தது. சண்டியர்கள் இறங்கினார்கள். சாரதியை வண்டியில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அந்த சாரதி நடுத்தர வயதைத் தாண்டியவர். சண்டியர்களோ இளைஞர்கள். சாரதிக்கு இனி தப்பிக்க வழியில்லை. அவரைக் காப்பாற்றவும் அங்கு எவரும் வரப்போவதில்லை. அந்த சாரதி தன்னை விட பத்து இருபது வயது சிறியவர்களிடம் மன்றாடியதைக் அருகில் இருந்து கண்டான் அந்த சிறுவன்.
அந்த சாரதி நடுங்கியபடி தன்னை அறிமுகப்படுத்தினார். தான் தான் வெங்கட் என்றும் சினிமா இயக்குனர் என்றும் கூறினார். அந்த சண்டியர்கள் எதையும் காதில் உள்வாங்கவில்லை. வெங்கட் “சிரிபத்துல” திரைப்படத்தை இயக்கியது தான் தான் என்றும் கூறினார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கசட் கூட வாகனத்தில் இருக்கிறது என்றும் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவரால் அதற்கு மேல் பேச வாய்ப்பெதுவும் இருக்கவில்லை. பெரிய கல்லொன்று அவரின் தலையை வேகமாக வந்து தாக்கியது. அவர் இரத்தவெள்ளத்துடன் அந்த போதி மரநிழலில் சுருண்டு விழுந்தார். அவரின் வெள்ளை ஆடை இரத்தத்தால் துவைந்திருந்தது. அந்தக் கொலைகாரர்கள் அவரின் மீது எண்ணெயை ஊற்றினார்கள். அது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலாக இருக்கலாம். தடிகளையும், எரியக்கூடியவற்றையும் அவரின் மேலே போட்டு தீயிட்டார்கள்.
அந்த உடல் தீயில் வெந்து பொசுங்கிக்கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவரின் கைகள் வெந்த தடிகளைப் போல ஆகிக்கொண்டிருப்பதை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவானதும் அந்த பாதகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
தொடர்ந்தும் எரிந்துகொண்டிருந்த அந்த உடலின் அருகில் சென்ற அந்த சிறுவன் அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. தன் கண்முன்னே ஒரு உயிர் மன்றாடியதையும், துடிதுடிக்கச் சாகடிக்கப்பட்டதையும், உயிருடன் கருகி பொசுங்கியதையும் கண்டு பாதிக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த எவருக்கும் எந்தவித தீங்கும் இழைக்காத ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை அவனால் மறக்கவோ ஜீரணிக்க முடியவில்லை.
அடுத்த நாள் காலையில் அந்த போதி மர நிழலை நோக்கிச் சென்றான். அங்கே சாம்பலைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்த கொலைக்காக வருந்திய ஒரே ஒருவனாக அவன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தான்.
அப்படி கொல்லப்பட்ட வெங்கட் இயக்கிய ‘சிரிபத்துல’ திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடல் சிங்களவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அதைப் பாடியவர் மொகிதீன் பேக். அந்த பாடல் வரிகள் இப்படி தொடங்கும்...
“மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!”
(“மனிதனே உலகின் தெய்வமாகிறான் ... மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”)
அந்த சம்பவத்தின் நேரடி சாட்சி வேறு யாருமல்ல பிற்காலத்தில் சரிநிகர் பத்திரிகையின் கேலிச்சித்திரங்களை வரைந்தவரும், இன்று பிரபல மனித உரிமைகள் வழக்கறிஞரும், ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான டபிள்யு ஜனரஞ்சன. இந்தக் கதையை அவர் சொல்ல இன்னொரு எழுத்தாளர் எழுதி சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தது.
அவர் இயக்கிய இன்னொரு திரைப்படமான தமயந்தி திரைப்படத்திலும் மொஹிதீன் பேக் பாடும் அர்த்தம் நிறைந்த ஒரு பாடல் மிகப் பிரபலமான பாடல்.
"සිනහවෙන් හෝ කතාවෙන් බැහැ මනින්නට මිනිසා"
“சிரிப்பாலோ பேச்சாலோ மனிதனை அளவிட முடிவதில்லை”
கே. வெங்கட் இயக்கிய திரைப்படங்கள்.
எஸ்.எம்.நாயகம்
தமிழ்நாடு, மதுரையில் பிறந்தவர். சோப்பு, வாசனை திரவியங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை இந்தியாவிலும், இலங்கையிலும் நடத்திக் கொண்டிருந்தவர். 1940 களில் சினிமா தயாரிப்பின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது. ஸ்ரீ முருகன் நவகலா லிமிட்டட் என்கிற சினிமா கம்பனியை மதுரையில் முதலில் ஆரம்பித்து சித்திரகலா மூவிடோன் என்கிற ஒரு ஸ்டூடியோவையும் அங்கே சொந்தமாக வைத்திருந்தார்.
கே.குணரத்தினம்
கே.குணரத்தினம் இலங்கை சினிமாவின் பிரபலமான இயக்குனர். அதுபோல பிரபல சினிமா விநியோகஸ்தர். இலங்கையின் சினிமாவை கொண்டிழுத்துப் பாதுகாத்த முக்கிய நிறுவனமான “சினிமாஸ்” கம்பனியை 1949 இல் உருவாக்கியவர் குணரத்தினம். மருதானை காமினி திரையரங்கை முதன்மையாகக் கொண்டு முதற் தடவையாக சினிமா காட்சி சபையை கட்டியெழுப்பினார் குணரத்தினம். 1953 இல் வெளியான சுஜாதா திரைப்படம் இலங்கை சினிமாவை வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.
1970 களில் சுதேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவற்றை தேசியமயமாக்கிய சிறிமா அரசாங்கமும் டவர் மண்டபத்தை அரசுடமையாக்க முடியவில்லை. டவர் ஹோல் தியேட்டர் மார்ச் 16, 1973 இல் “பயாஸ்கோப்” சினிமாவாகவே மாறியது. 1977 இல் பிரேமதாச பிரதமராக பதவியேற்றதும் 1978 இல் டவர் மண்டப உரிமையாளர் கே.குணரத்தினம் டவர் மண்டபத்தை இலவசமாக அரசுக்கு அளித்தார். அரசு அதனை அரசுடைமையாக பொறுப்பேற்றுக்கொண்டது. இலங்கையின் சிங்கள சினிமாத் துறைக்கும், கலைத்துறைக்கும் பெரும் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் செய்த கே.குணரத்தினம் 27.08.1989 அன்று தனது 72 வயதில் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கே.குணரத்தினம் தனது காலத்தில் ஒரு தமிழ்த் திரைப்படங்களைக் கூட தயாரித்ததில்லை அவர் தயாரித்த 21 திரைப்படங்களும் சிங்களத் திரைப்படங்கள் தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
கே.குணரத்தினம் 1917 ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி யாழ்ப்பாணம் அத்திடியில் பிறந்தவர். அவரின் தந்தை மாணிக்கம் கனகசபை யாழ்ப்பாண வர்த்தகர். யாழ் மத்திய கல்லூரியில் கற்ற அவர் பின்னர் வியாபார ரீதியில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்தார். விளையாட்டில் ஈடுபாடிருந்த அவர் பல விளையாட்டுக் கழகங்களிலும் இயங்கினார். அவருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். கே.குணரத்தினத்தின் மறைவைத் தொடர்ந்து அவரின் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தியவர் அவரின் இளைய மகனான பத்மராஜா. நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகச் சமீபத்தில் வெளிவந்த “கோமாளி கிங்க்ஸ்” திரைப்படத்தை “சினிமாஸ்” கம்பனியின் பெயரில் பத்மராஜாவும் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றினார். அவரும் கடந்த 2021 மே மாதம் மறைந்தார்.
இந்தியாவில் எடுக்கப்பட்ட இறுதி இலங்கைத் திரைப்படம் “வீர விஜய”. அது 1960இல் வெளிவந்தது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அத்திரைப்படத்தை தயாரித்தவர் கே.குணரத்தினம்.
கே.குணரத்தினம் சிங்களத் தயாரித்த திரைப்படங்கள்
டீ சோமசேகரன்
1953 இல் தம்பையா சோமசேகரன் திரைக்கதை எழுதிய “சுஜாதா” திரைப்படம் இலங்கையில் சக்கைபோடு போட்டது. ஒரே திரைப்படத்தில் மிகப் பெரிய பெயரைப் பெற்றார் சோமசேகரன். அதுவரை இலங்கையின் திரைப்படங்களை இந்தியப் பின்னணி கொண்ட தமிழர்களே இயக்கி வந்தார்கள். சுஜாதா திரைப்படத்தின் மூலம் இலங்கைத் தமிழரான சோமசேகரன் களத்துக்கு வந்து சேர்ந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.குணரத்தினம். அதை இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம். இந்த மூன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட அத்திரைப்படம் சிங்களத் திரைப்படத்துறையின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1953 க்குப் பின்னர் சிங்களக் குக்கிராமங்கள் வரை சுஜாதா என்கிற பெயரை பெண் குழந்தைகளுக்கு சூட்டுமளவுக்கு அத்திரைப்படம் புகழடைந்திருந்தது. பிற்காலத்தில் மிகப் பிரபலமான ஜோ அபேவிக்கிரம சுஜாதா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
சோமசேகரன் ஒரு ஆசிரியர். தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளை சரளமாக அறிந்தவர். அவரின் சுஜாதா, செடசுலன் ஆகிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியர்; இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரகோன். செடசுலன் திரைப்படத்தில் ஆனந்த சமரகோன் இயற்றிய “ஸ்ரீ லங்கா... மா ப்ரியாதர ஜயபூமி” என்கிற பாடலைப் பாடியவர் சமீபத்தில் மறைந்த லதா மங்கேஷ்கார்.
சோமசேகரனின் நெருங்கிய நண்பனாக ஆனந்த சமரகோன் இருந்தார். ஆனந்த சமரகோன் தற்கொலை செய்து இறந்த வேளை பிணவறைக்கு விரைவாக சென்று சோமசேகரன் அவ்வுடலைக் கட்டிப்பிடித்து கதறிய காட்சி குறித்து பிற்காலத்தில் ஜோ அபேவிக்கிரம நினைவு கூரியிருக்கிறார்.
டீ.சோமசேகரன் இயக்கிய திரைப்படங்கள்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...