Headlines News :
முகப்பு » , , , , , » கொச்சிக்கடை சிவன் கோவில் உருவான கதை - (கொழும்பின் கதை - 18) - என்.சரவணன்

கொச்சிக்கடை சிவன் கோவில் உருவான கதை - (கொழும்பின் கதை - 18) - என்.சரவணன்

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் கொழும்பின் அடையாளங்களில் ஒன்று. கொச்சிக்கடை சிவன் கோவில் என்றும் பலரால் அறியப்படுகிற இக்கோவில் வரலாற்று சிறப்பையும், கட்டிடக் கலைச் சிறப்புகளையும் கொண்ட பெரிய கோவில்.

கொழும்புக்கு வரும் இந்து சமயத்தினர் நிச்சயம் ஒரு முறையாவது இக்கோவிலுக்கு செல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகவும் முக்கிய ஈழத்து சிவாலயங்களில் ஒன்றாகவும் இருப்பதுடன் இக்கோவிலில் திராவிடச் சிற்பக் கலை இன்றும் வியப்பாக பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவிலுள்ள பிரமாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும், நாயக்க, பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பட்டது. அதே மாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களிற் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக் கோவிலைத் தம் சொந்தப் பணத்தில் கட்டினார் பொன்னம்பல முதலியார்.


இக் கட்டிடம், விஜயநகர கட்டிடக் கலையைத் தழுவிக் கட்டப்பட்டிருக்கின்றது. இவ் ஆலயத்தின் தூண்கள், சிற்பங்கள் கூரையும் கூட , கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. இக் கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சிலவற்றை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

இக்கோயிலைக் கட்டியவர் அருணாச்சலம் பொன்னம்பல முதலியார் (1814 -1887).

பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783இல் பிறந்தவர். சகோதரனின் அழைப்பின் பேரில் கொழும்பில் குடியேறி இங்கேயே கற்று பின்னர் ஆங்கிலய ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக ஆனார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் சிறைபிடிக்கப்பட்ட போது குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியிருந்தார். பின்னர் 1833 இல் சட்ட நிரூபன சபைக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு முத்துக்குமாரசுவாமி, செல்லாச்சி ஆகிய இரு பிள்ளைகள். செல்லாச்சிக்கும் பொன்னம்பலம் முதலியாருக்கும் பிறந்தவர்கள் தான் இராமநாதன் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட, குமாரசுவாமி, இராமநாதன், அருணாச்சலம்.

08.09.1854இல் செல்லாச்சி இறந்துபோனதும் பொன்னம்பலம் முதலியார் தனது பணியில் இருந்து இராஜினாமா செய்தார். அதன் பின்னர் கருங்கல்லாலான கோவிலைக் கட்டிமுடிப்பதே அவரின் எண்ணமாக இருந்தது. ஏற்கெனவே அவர் தென்னிந்திய திருத்தலங்களுக்கு அடிக்கடி யாத்திரை செய்து கோவில்களின் அமைப்புகளால் வசீகரிக்கப்பட்டவர். சோழ, பாண்டிய கோவில்களின் அமைப்பில் அவர் அதனைக் கட்ட விரும்பினார்.


அவரின் சொந்த வீட்டில் பால யந்திர பூஜை நடத்தி வந்தவர் அவர். இப்போதும் அவர் வீட்டில் வைத்திருந்த சிவகாமி அம்மன் சிலையை சிவன் கோவிலில் காணலாம்.

பொன்னம்பலம் முதலியாருக்கு கொழும்பிலும், மலையகத் தோட்டப் பகுதிகளிலும் சொத்துக்கள் இருந்தன. அது மட்டுமன்றி செட்டியார் தெருவில் வசித்து வந்த அவர் செட்டியார் தெருவில் முத்து விநாயகர் ஆலயத்தையும், ஜிந்துப்பிட்டி கதிரேசன் கோவிலும் கூட அவரால் கட்டப்பட்டது தான்.

கொழும்புக் கொச்சிக்கடைப் பகுதியில் ஐந்து ஏக்கர் காணியை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தைக் கட்டுவதற்காக 05.07.1856 இல் ஆங்கிலேய கப்டன் ஜோன் போல்ஸ்டனிடம் (Captain John Foulstone - Ceylon Rifle Regiment) இருந்து  வாங்கினார். இந்தக் காணியில் ஏற்கெனவே மிகப் பழமையான காளிகோவில் ஒன்று இருந்தது.

தென் இந்தியாவிலிருந்து கோயிற் கட்டடக் கலைஞர்களை வரவழைத்து இரண்டு வருடங்கள் இரவு பகலாக உழைத்துத் திருப்பணி வேலைகளை நிறைவு செய்து 1857ம் ஆண்டு மார்கழி மாதம் 12 ஆம் திகதிமகாகும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தினார். மூல மூர்த்தியாக 22அங்குல உயரங் கொண்ட சிவலிங்கத்தையும், போகசக்தியையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வித்தார். தன் வீட்டில் வைத்துப் பூசித்து வந்த பாலயந்திரத்தை 32 அங்குல உயரங் கொண்ட சிவகாமி அம்பாளின் பீடத்திற்கு அடியில் வைத்தும் ஸ்ரீசக்கரத்தை அதன் அருகில் வைத்தும் பிரதிஷ்டை செய்வித்து பொது மக்கள் வழிபடுவதற்கு ஒழுங்கு செய்தார்.

இக்கோவிலை தொடர்ந்து பராமரித்து  பூசைகளையும் விழாக்களையும் எதுவித தடங்கலுமின்றி தன் சந்ததியினர் செய்வதற்கான நிதி வருமான ஏற்பாட்டுக்காக நாத்தாண்டியாவில் ஒரு ஆயிரம் ஏக்கர் தென்னந் தோட்டத்தையும் கொழும்பு மாநகரில் தொடர் கடைகளையும் கட்டி ஆலயப்பராமரிப்புக்கு அவற்றிலிருந்து பணத்தைப் பெற வழிவகுத்தார். இந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்களும், ரிஷிகளும் உணவுண்டு தங்குவதற்கேற்ற முறையில் அன்னதான மடத்தையும் கட்டினார். தினமும் அங்கு வரும் ஏழைகளுக்கும் யாத்திரிகர்களுக்கும் உணவும், உடையும் அளித்தார். இக்கோவிலை தொடர்ந்து நடாத்துவதற்கு தன் சந்ததியில் வரும் மூத்த ஆண் வம்சத்திற்கு அதிகாரத்தைச் சாசன மூலம் வழங்கினார். 


1887 ஆம் ஆண்டு பொன்னம்பலம் முதலியாரின் மறைவின் பின்னர் மூத்த மகன் பொன். குமாரசுவாமி பொறுப்பேற்று 1905ம் ஆண்டு அவர் மறையும் வரை ஆலயத்தை நிர்வகித்து வந்தார். இலங்கை சைவ பரிபாலன சபையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் குமாரசுவாமியின் மகன். அச்சபையும் இங்கே தான் ஆரம்பத்தில் தலைமையகமாக இயங்கியது. குமாரசுவாமி 1889இல் அதன் தலைவராகவும் இருந்தார்.

குமாரசுவாமி காலமானதும் பொன்னம்பலம் முதலியாரின் இரண்டாம் மகனான சேர். பொன், இராமநாதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தந்தையாரால் கல்லாலும், செங்கட்டியாலும் சுண்ணாம்புச் சாந்தாலும் கட்டிய கோவிலுக்குப் பதிலாக தற்போது உள்ள நிலையிலிருக்கும் கருங்கற் கோவிலை புதிதாகக்கட்ட 1907ஆம் ஆண்டு ஆரம்பித்தார். தென் இந்தியாவிலிருந்து சிறந்த கோயிற் கட்டட ஸ்தபதியையும், சிற்பிகளையும் வரவழைத்தார். வேயங்கொடையிலிருந்து கருங்கற்களை வருவித்தார். நூறு வருடங்களுக்கு முன்னரே இராமநாதனுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவழிந்தது.

1907 இல் ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. 21.11.1912ம் ஆண்டு முதற் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.


இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. கிழக்கு வாசலில் 65 அடி உயரங்கொண்ட ஐந்து நிலைக் கோபுரத்தைக் கொண்ட இராசகோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையைச் சொல்லுகின்றது. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது. தெற்கு வாசலில் 35 அடி உயரங்கொண்ட மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் உள்ளது.

இந்த ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டாது, அதை, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் அப்படியே இன்றும் பேணப்பட்டு வருவதும் ஒரு சிறப்பு. உள்ளிட்ட கட்டிடத்தின் உள் வேலைகள் எல்லாம் கருங்கற்களால் அமைந்திருப்பதனால் ராஜகோபுரமும் கருங்கற்களால் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது அப்போது முடியாத செயலாக இருந்ததினால், கல்லைப் போல் தோற்றம் அளிக்கும் வகையில் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. வர்ணம் தீட்டினால் அது மங்கி அவலட்சனமாகி விடும் என்றும், அதன் இயல்பை பேணினால் போதுமானது என்று அன்றைய நிர்வாகம் கருதியது.

இந்தப் பொன்னம்பலவானேஸ்வார் ஆலயத்தின் ராஜ கோபுரத்தை இன்னும் உயரமாகக் கட்டி எழுப்பி இருக்கலாமே என்கிற விமர்சனங்களும் உண்டு. கோபுரத்தின் உயர அகலம், கோயிலின் கர்ப்பக்கிரகம், சபாமண்டபம் ஆகியவற்றின் நீள அகலத்தில் இருந்தே கணிக்கப்பட வேண் டும் என்பதே ஆலய சாஸ்திர விதி. ஆகவே, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் எழுப்புவது ஆலய சாஸ்திர விதியை மீறும் என்கிற ஐதீகம் உண்டு.

கோபுர உச்சியிலும், கண்களுக்கே தெரியாத இடங்களிலும் சிற்பங்கள் அமைக்கப்படமைக்கு அன்றே விளக்கம் அளிக்கப்பட்டன. அதனை வடித்த சிற்பிகள்; தங்கள் கலைத்திறன் கடவுளுக்கே சொந்தம் கடவுள் காணாத இடமே கிடையாது ஆகையால் சிற்பங்களை மனிதன் காணமுடியாத இடங்களிலும் செதுக்கினார்கள்' என்று பிரபல அறிஞர் கலாயோகி ஆனந்த குமாரசாமி விளக்கியிருக்கிறார்.

ஆலயத்தின் அமைப்பு, காலத்திற்குக் காலம் வேறுபட்டு வளர்ந்திருக்கிறது. மேற்கு நுழைவாயில் அருகில் பசுமடம் உள்ளது. கோவில் காணிக்குள் நுழையும் இரு பிரதான வாயில்களில் ஒன்று கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கிற கடற்கரை பக்கமாக இருக்கின்ற “இராமநாதன் வீதி”யில் மேற்கு நுழைவாயில் உள்ளது. கிழக்கு வாயிலருகில் உயரமான தேர் மண்டபம் உள்ளது. அந்த வாயில் ஜெம்பட்டா ஒழுங்கையின் பக்கமாக அமைந்திருக்கிறது.


சேர் பொன் இராமநாதன் இலங்கையின் பிரம்மஞான சங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கை முழுவதும் சுதேசிய பாடசாலைகளை நிறுவ இராமநாதன் பெருமளவு நிதிகளையும் அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார். ஆனால் அப்பணம் சிங்கள பௌத்தப் பாடசாலைகளை மட்டும் நிறுவ பயன்படுவதைக் கண்ட அவர் ஒழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்தார். 1909ஆம் ஆண்டு அவர் பொன்னம்பலவானேஸ்வரர் தமிழ் பாடசாலை என்கிற ஒன்றையும் கோவிலோடு சேர்த்து ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அது ஒரு சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிட்டது.

27.11.1957 ஆம் ஆண்டு பொன்னம்பலம் முதலியாரின் பேரன் அருணாச்சலம் மகாதேவாவும் அவரின் மகன் சோமசுந்தரம் மகாதேவாவும் அறங்காவலர் சபையில் இருந்தபடி கோவிலின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் சிவராத்திரியன்று கூடும் மக்கள் கூட்டம் இங்கு அதிக சன நெரிசல் மிக்க ஒன்றாக இருக்கும். இரவிரவாக நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக ஏராளமானோர் கூடுவார்கள்.

ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான கால வரலாற்றைக் கொண்ட இந்த சிவன் கோவில் இலங்கையின் அடையாளங்களில் ஒன்றெனக் கூற முடியும்.

உசாத்துணை

  • V.Muttucumaraswamy, Founders of Modern Ceylon (Sri lanka) eminent Tamils, Vol I, Parts I & II, The Pioneers, The Founders. Uma siva Pathippakam, Ceylon, 1973.
  • M.K.Ealaventhan, Sir Ponnambalam Ramanthan, The Forgotten aspects of his life’s work, Colombo, 2002
  • Chelvatamby Maniccavasagar, Let your soul guide you!, Sunday Observer, 05.04.2009.
  • M.Vythilingam, “Ponnambalavaneshwarar Temple”, The Life Of Sir Ponnambalam Ramanathan. (Chapter xxxvi) Vol 1, Ramanathan Commemoration society, Colombo, 1971.
  • துரைராசா, தம்பு , ஈழத்துச் சிவாலயங்கள். தொண்டர் சபை வெளியீடு, 2009
  • பொன்னம்பலவாணேஸ்வரர் வி எஸ். துரைராஜா, மல்லிகை ஆகஸ்ட் 1971 , (இதழ் 39)


நன்றி - தினகரன் 13.03.2022


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates