Headlines News :
முகப்பு » , , , , , » கோட்டை டச்சு ஆஸ்பத்திரி (கொழும்பின் கதை - 19) - என்.சரவணன்

கோட்டை டச்சு ஆஸ்பத்திரி (கொழும்பின் கதை - 19) - என்.சரவணன்

கொழும்பில் எஞ்சியிருக்கும் பழமையான கட்டிடங்களில் “பழைய டச்சு ஹோஸ்பிடல்” (“Old Dutch Hospital”) குறிப்பிடத்தக்க ஒன்று. கொழும்பு கோட்டையின் மையப்பகுதியில் Port Hospital Laneஇல் இருக்கிறது என்றால் சிலவேளை நீங்கள் குழப்பமடையலாம். ஆனால் கோட்டை இரட்டைக் கோபுரக் கட்டிடத்துக்கு எதிரில் என்று கூறினால், அல்லது செலிங்கோ கட்டிடத்துக்கு பின்னால் என்றோ கூறினால் பிடித்துவிடுவீர்கள். கொழும்பில் இறுதியாக எஞ்சியுள்ள பழைய டச்சு கட்டிடம் இது தான். பெரிய, அகலமான சுவர்களையும், பெரிய ஜன்னல்களையும், விரிந்த வராந்தாக்களையும் கொண்ட டச்சு கட்டடக் கலையுடன் கூடிய அமைப்பு. 

1656 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடன் சண்டையிட்டு கொழும்பைக் கைப்பற்றினார்கள் ஒல்லாந்தர்கள். ஏழு மாதங்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சால் கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் சிதைந்தன. ஒல்லாந்தர்கள் கொழும்பைக் கைப்பற்றிய பின்னர் அவற்றை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை அமைத்தார்கள். போர்த்துக்கேயரின் ஒரு ஆஸ்பத்திரியும் இங்கே இருந்தது. ஆனால் டச்சு ஆஸ்பத்திரி அமைந்திருக்கும் இதே இடத்தில் அது இருந்திருக்கவில்லை. ஒல்லாந்தர்கள் கைப்பற்றியதும் இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது கட்டப்பட்ட ஆண்டை உறுதியாகக் கூற முடியாது போனாலும் நிச்சயமாக அது 1677 ஐ விடப் பழமையானது என்பதை மட்டும் சொல்லாம். ஏனெனில் 1676 – 1682 காலப்பகுதியில் இராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக பணியாற்றிய கிறிஸ்டோபர் ஸ்வீட்சர் (Christopher Schweitzer), கிறிஸ்டோபர் பிரிக் (Christopher Fryke) ஆகியோர் 1700 இல் வெளியிட்ட “கிழக்கிந்தியப் பயணம்” (Voyages to the East Indies) என்கிற நூலில் மருத்துவமனையைப் பற்றிய பல குறிப்புகளை எழுதியுள்ளனர். அங்கே பல அடிமைகளும் பணிபுரிந்தையும் பதிவு செய்துள்ளனர். 

அவரின் அப்பதிவுகளைப் பற்றி 1803 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “An account ofthe island of Ceylon” என்கிற நூலில் விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த நூலை எழுதியவர் 1796 இல் டச்சு வசம் இருந்து ஆங்கிலேயர்கள்  கொழும்பைக் கைப்பற்றிய போது அதன் சாட்சியமாக இருந்தவரான கெப்டன் ரொபர்ட் பேர்சிவல். கடும் காயங்களுக்கு உள்ளான பல வீரர்கள் சிகிச்சைக்கு இங்கு அனுப்பப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய கொழும்பு கோட்டை சுவருக்குள் இருந்த கட்டிடங்களில் மிகப் பெரிய விஸ்தீரணத்தில் இருந்தது இந்த டச்சு ஆஸ்பத்திரி தான். அரை ஹெக்டயார் பரப்பில் அது இருந்தது. 

1732 ஆம் ஆண்டு போர்த்துகேயர் கால வரைபடம். இதில் E அடையாளம் ஆஸ்பத்திரியைக் குறிக்கிறது.

1732 இல் புரோஹியர் உருவாக்கிய வரைபடத்தில் மருத்துவமனை தெளிவாகக் குறிக்கப்பட்டது. இதைவிட முக்கியமாக அன்று டச்சு அரசாங்கத்தில் பணியாற்றிய டென்மார்க்கைச் சேர்ந்த யோஹன்னஸ் ரேச் (Johannes Rach) என்கிற ஓவியர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் 1771இல் வரைந்த டச்சு ஆஸ்பத்திரியின் ஓவியம் அதன் அமைப்பை அழகாக விளக்கியிருக்கிறது.

அன்று கோட்டைக்குள் வாழ்ந்து வந்த ஒல்லாந்தர்களுக்காகவும், டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் (VOC) அதிகாரிகளுக்காகவும், ஊழியர்களுக்ககவும் கட்டப்பட்டது இந்த ஆஸ்பத்திரி. கொழும்பு துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய காலமும் கூட. துறைமுகத்துக்கு அண்மையில் கட்டப்பட்டதன் நோக்கம்; அப்போது கொழும்புக்கு வந்து போகும் கப்பல்களில் நோய்வாய் பட்டிருந்தவர்களுக்கும் இங்கு வைத்து உயர்தர சிகிச்சையளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ரொபர்ட் நொக்ஸ் இருபது ஆண்டுகளாக கண்டியில் சிறைபட்டுக் கிடந்தபோது 1679இல் அங்கிருந்து தப்பிவந்து டச்சுக் காரர்களிடம் வந்து சேர்ந்தார். அவரோடு சேர்ந்து தப்பி வந்த சிலர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  கண்டியை ஆண்ட மன்னன் வீர நரேந்திரசிங்கனுக்கு  (இலங்கையின் இறுதி சிங்கள அரசன்) காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை செய்வதற்காக 1739இல் டொக்டர் டேனியல்ஸ் (Dr. Danielsz) கண்டிக்கு இந்த ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார் என்பதை அவரது பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

இன்று சுற்றுலா பயணிகள் விருந்துண்டு மகிழும் இடமாக

சுமார் 300 நோயாளர்களை வைத்து பராமரிக்கக் கூடிய அளவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்கியிருக்கிறது. டச்சு மருத்துவமனையினை முதலில் நேரில் கண்ட சாட்சி விபரமாக டச்சு அரசாங்கத்தில் 1734-1737 காலப்பகுதியில் பணியாற்றிய ஜெர்மனைச் சேர்ந்த ஹெய்ட் (Johan Wolfgang Heydt) என்பவரால் போற்றிப் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளைக் கூற முடியும்.  இலங்கையில் மட்டுமல்ல, ஒல்லாந்தர்களின் காலனி நாடுகளிலேயே நவீன வசதிகளைக் கொண்டிருந்த சிறந்த ஆஸ்பத்திரியாக அன்று இந்த ஆஸ்பத்திரி இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். மேலும் சிறந்த பரிசோதனைக் கூடமும், அதிலேயே உயர் ரக மருந்துகளை உருவாக்கக் கூடிய வசதிகளையும் கொண்டிருந்தததாகவும் அவரின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நோயாளிக்கு இரு தலையணைகளையும், இரு நேர உணவும் வழங்கப்பபட்டதாகவும், இளம் ஆண் பணியாளரால் நான்கு/ஐந்தடி நீளமுள்ள பாத்திரத்தில் அந்தந்த நோயாளியின் தேவைக்கிணங்க சிறு சிறு பாத்திரங்களில் சோறு, கறிகள் மிளகாய், உப்பு, வினாகிரி என்பன வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒல்லாந்திலிருந்து பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கே பணியாற்ற வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதுபோல அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிபுணத்துவம் இல்லாத; மருத்துவம் மட்டுமே தெரிந்தவர்களும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ரைமர் (C.F. Reimer). அவர் ஒரு இராணுவ வீரர். அவரிடம் இருந்த மருத்துவ அறிவின் காரணமாக மூன்றாம் நிலை அறுவை சிகிச்சை வைத்தியராக  அனுப்பப்பட்டார். அவர் ஒரு ஓவியரும் கூட. கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனுக்கும் டச்சு ஆளுநர் பிளாக்குக்கும் (Iman Willem Falck) இடையில் 1766 இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த நிகழ்வை பிரசித்தி பெற்ற ஓவியமாக வரைந்தவர் பிளாக்.

இந்த ஆஸ்பத்திரியைப் பற்றிய பல குறிப்புகளை எழுதியவர்களில் இன்னொரு முக்கியமானவர்; இலங்கை தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படும் போல் ஹேர்மன் (Paul Hermann).  அவர் இந்த ஆஸ்பத்திரியில் 1672 – 1679 காலப்பகுதியில் பணியாற்றியவர். முன்னாள் தொல்லியல் திணைக்கள ஆணையாளராக இருந்த  கே.டி.பரணவிதானவும் ஒரு இந்த ஆஸ்பத்திரியைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.  ஆஸ்பத்திரிக்கு தேவையான முக்கிய மருந்துகள் ஒல்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து வருவிக்கப்பட்டதாகவும், உள்ளூர் ஆயுர்வேத நாட்டு மருந்துகளும் அங்கே பயன்படுத்தப்பட்டன என்று அக்கட்டுரையில் விளக்குகிறார்.

A - தலைமை மருத்துவரின் வதிவிடம், B - மருந்தகம், C - மருந்து தயாரிப்பாளரின் வதிவிடம், D - ஆஸ்பத்திரி. E - சமையலறை, F - கால்நடைத் தொழுவம், G - சுற்றுச் சுவர்

1771 இல் வரையப்பட்ட இரண்டு நீர்-வர்ண ஓவியங்களின்படி, மருத்துவமனை கட்டிடம் மூன்று தனித்துவமான பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது முகப்பு கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாக அன்றே அமைக்கப்பட்டிருந்ததும் சிறப்பான அம்சம். இதன் முக்கியப் பகுதியான மையப் பகுதி, மருத்துவமனை வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொன்று மருத்துவமனை, ஆய்வுகூடம், அறுவை சிகிச்சை கூடம் ஆஸ்பத்திரி நிர்வாகியின் இருப்பிடம் என்பவற்றுக்காகவும், மூன்றாவது பகுதி சமையலறைக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அமைப்பைக் காண முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1796 இல் பெர்சிவல் எழுதிய குறிப்புகளின் படி, இந்த மருத்துவமனையின் அறைகள் விசாலமானவை, நன்கு காற்றோட்டமானவை. இதனால் மற்ற நோயாளிகளுக்கு நோய் பரவவில்லை. 

டச்சு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோ அடிமைகள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பரவியிருந்த தொற்று நோய்களை இதே ஆஸ்பத்திரியில் தமது எஜமானர்களுக்கு அளிக்கப்பட அதே மருத்துவ வசதிகள் இவர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. 1707 ஆளுனர் யுவான் சிமோன் (Joan Simons) பின்னர் இவர்களுக்கென்று தனி ஆஸ்பத்திரியை கட்டினார்.

தற்போதைய கட்டிடம் இரண்டு முற்றங்களை மத்தியில் கொண்டுள்ளது. தற்போது சுமார் 40 x 30 அடி பரப்பளவில் புல் நடப்பட்டுள்ளது. சுமார் அரை மீற்றர் தடிமன் கொண்ட பெரிய சுவர்கள் கபுக் கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இரண்டு கூடங்களில் ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆஸ்பத்திரியின் பிரதான வாயில் இருந்த பகுதி ஆஸ்பத்திரி வீதி (Hospital street) என்று ஆங்கிலேயர் காலத்தில் பெயரிடப்பட்டது. இன்று இலங்கை வங்கி, உலக வர்த்தக மையம் (World Trade Centre)அமைந்திருக்கிற Bank of Ceylon Mawatha தான் அந்த வீதி.

ஆஸ்பத்திரி வீதியோடு சேர்தாற்போல படகுப் போக்குவரத்துக்காக ஒரு கால்வாயும் அன்று இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் கைப்பற்றியவுடன் இக்கால்வாய்களை நிரப்பி வீதிகளையும், கட்டிடங்களையும் அமைத்தார்கள். கொழும்பில் போக்குவரத்துக்காக கால்வாய்கள் பயன்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதன் எச்சங்களை இன்றும் காணலாம். 

ஆங்கிலேயர் காலத்தில் இக்கட்டிடம் சற்று விரிவாக்கப்பட்டது. மருத்துவமனையின் வடக்குப் பகுதி மட்டும் இரண்டு தளங்களாக மாற்றப்பட்டுள்ளது. பெரிய அளவிலான திடமான மற்றும் வலுவான நீளமான  மரக்கட்டைகள் கூரையின் உறுதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை இன்னும் நல்ல நிலையில் இருப்பதைக் காணலாம்.

இலங்கையின் சிவில் யுத்த காலத்தில் இந்தக் கட்டிடம் நான்காம் மாடியில் தடுத்துவிக்கப்பட்டிருந்த கைதிகளையும், சந்தேகநபர்களையும் வார இறுதியில் சந்திக்க வருபவர்களை சந்திக்க வைக்கின்ற பொலிஸ் நிலையப் பிரிவாகவும் தொழிற்பட்டது. 1980 களில் இருந்து அவ்வாறு கோட்டை பொலிசின் நடவடிக்கைகளுக்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுதக் களஞ்சியமாகவும். சில சிறைக்கூடங்களையும் உள்ளே கட்டினார்கள். கட்டிடத்தின் கட்டடக்கலை மற்றும் தொல்பொருள் மதிப்பு இன்றும் முக்கியமானது. 90 களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம் போன்ற மலையகத் தலைவர்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பல தடவைகள் அவர்களைச் சந்திக்க வார இறுதியில் இங்கு சென்று வந்திருக்கிறேன்.

View Larger Map

1996இல் மத்திய வங்கி குண்டுவெடிப்பின் போது இக்கட்டிடமும் சேதமுற்றது. யுத்தம் முடித்தபின்னர் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச நகர அபிவிருத்தி சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து கொழும்பை அழகுபடுத்தும் திட்டங்களை மேற்கொண்டார். அந்த திட்டத்தின் கீழ் இந்த டச்சு ஆஸ்பத்திரியை நவீனமயப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2011 டிசம்பரில்; இதனை உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் உயர்தர உணவு விடுதிகளையும், உயர்ரக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் கொண்ட கட்டிடத் தொகுதியாக திறந்து வைக்கப்பட்டது. அரை ஹெக்ராயர் பரப்பில் இன்று அது இருக்கிறது.

டச்சு கால கொழும்பை நினைவுறுத்தும் மிகப் பழைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் “பழைய டச்சு ஆஸ்பத்திரி”.

நன்றி - தினகரன் - 20.03.2022



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates