Headlines News :
முகப்பு » , , , , » இலங்கையின் வத்திக்கான் கொட்டாஞ்சேனை புனித லூசியா (கொழும்பின் கதை - 10) - என்.சரவணன்

இலங்கையின் வத்திக்கான் கொட்டாஞ்சேனை புனித லூசியா (கொழும்பின் கதை - 10) - என்.சரவணன்


கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள புனித லூசியா பேராலயம் (ST. LUCIA’S  CATHEDRAL) மிகவும் பிரசித்தி பெற்றது. அது இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பேராயத்தின் பேராயரின் இருப்பிடம் ஆகும். இலங்கையின் மிகப் பழமையானதும், பிரமாண்டமானதுமான திருச்சபை (Parish) அது. இரு நூற்றாண்டு வரலாற்றை உள்ளூர அமைதியாக வைத்திருக்கும் தேவாலயம் அது.

கொழும்பு நகரின் வடக்குப் பகுதியில் உள்ள கொட்டாஞ்சேனை அமைந்துள்ளது. 18,240 சதுர அடி பரப்பளவையும் மேலே கூரை வரை 151 அடிகள் உயரத்தையும் கொண்டது. இந்த தேவாலயத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வரை கூடக்கூடியது. இப் பேராலயம், புனித லூசிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் (டச்சு) காலத்தில் கத்தோலிக்கரின் வணக்கத்தலமாக சிறிய கட்டிடமாகவே இது இருந்தது.

இந்த தேவாலயத்தின் முக்கியத்துவமே அது வத்திகானிலுள்ள உலக கிறிஸ்தவர்களின் தலைமைப் புனித தேவாலயமான புனித பேதுரு பேராலயத்தின் சாயலைக் கொண்டிருப்பது தான். அதுபோல பண்டைய கிரேக்க கட்டிட தூண்களை நினைபடுத்தும் வகையில் முகப்பின் தூண்கள் காணப்படுகிறது.

கத்தோலிக்க மதத்தின் புனிதர்களில் ஒருவராக கருதப்படும் கன்னி புனித லூசியின் (Saint Lucia) பெயரில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இலங்கையின் மிகப் பழமையான, மிகப்பெரிய திருச்சபை பேராலயமாக கருதப்படுகிறது. ஏழு சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட உயரமான குவிமாடத்திற்கு முடிசூட்டப்பட்டப பட்டது போல வளைந்த அரைப்பந்து கான்கிரீட் கூரையின் மீது வானத்தை நோக்கி பார்த்தபடி நிற்கின்ற சிலுவையும் இந்த தேவாலயத்தின் மீது ஒரு பிரமாண்ட உணர்வை ஏற்படுத்திவிடும்.

டச்சு காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் ஆங்கிலேயர் காலத்தில் பெரிய அளவில் கட்டிமுடிக்கப்பட்டு புதுப்பொழிவு பெற்றது. இந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேவையாக 1856இல் தொடங்கப்பட்டது தான் அருகில் உள்ள புனித பெனடிக் வித்தியாலயம் (இப்போது கல்லூரி). அதுபோல அருகில் உள்ள கன்னியாஸ்திரி மடமும் 1869 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

உள்ளே உள்ள சிலைகள் எல்லாமே மிகவும் கலைநுட்பத்துடன் அமைக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னைய சிலைகள். 1924 ஆம் ஆண்டு சிற்பக் கலை அறிந்த பாதிரியார் ஜே.மிலினர் (Fr. J Milliner) தான் இதனை முடித்தார். ஐரோப்பிய நாடுகளில் இருந்து கப்பல்களின் மூலம் எடுத்து வரப்பட்ட சிலைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறான விசித்திரமாக; இருண்ட நிறத்தினாலான கன்னி மேரியின் சிலை இங்கே உள்ளது. அதை கொட்டாஞ்சேனையின் புனிதப் பெண்மணியாக ("Our Lady of Kotahena") கொண்டாடப்படுகிறது. அந்தச் சிலையை ஆண்டுதோறும் மே மாதம் கொட்டாஞ்சேனை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

19ஆம் நூற்றாண்டில் புனித லூசிய தேவாலயத்தின் தோற்றம்

இந்தத் தேவாலயத்தின் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள மணி சுமார் இரண்டு டன் எடையைக் கொண்டது. 1903 ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள மர்சீலஸ் (Marseilles) என்கிற தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. கிறிஸ்தவ சின்னங்களால் ஆன வேலைப்பாடுகளுடன் மிகுந்த கலைநுணுக்கத்துடன் செய்யப்பட்ட மணி அது. 

ஒரு வகையில் கொட்டாஞ்சேனை ரோமன் கத்தோலிக்க நகரம் என்று கூறினால் அது மிகையாகாது. 18ஆம் நூற்றாண்டில் கொட்டாஞ்சேனை கொச்சிக்கடைப் பகுதிகளில்  கத்தோலிக்கர்களின் செறிவை கருத்திற்கொண்டு ஒரு தேவாலயம் ஒன்றின் தேவையை டச்சு ஆட்சியாளர்களும், மிஷனரிமாரும் உணர்ந்தனர். அங்கே அதற்கு முன் ஒல்லாந்தர் காலத்தில் ஓரத்தோரியன் மிஷனரிகளால் (Orathorian  Missionary) கட்டப்பட்டிருந்த ஒரு தேவாலயம் (St. Lucia’s chaple) 1760 அளவில் கட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கொஸ்மோ அந்தோனியோ (Cosmo  Antonio) (Miguel  de  Alburquerque) மிகேல் அல்புர்குவர்க் போன்ற ஓரத்தோரியன் பாதிரியார்கள் இங்கே பூஜைகள் நடத்தியுள்ளனர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினரின் நெருக்கடிகளின் காரணமாக அவர்கள் தென்னிந்தியாவில் கோவாவுக்கு திரும்பிவிட்டனர். 

அப்போது இங்கே தென்னை ஓலைகளால் முதன் முதலில் கட்டப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் கட்டிடங்கள் இல்லாமலும், பெரும்பாலும் காடுகளாலும் காணப்பட்டதால் கொட்டாஞ்சேனையில் இருந்த இந்த மேட்டுபகுதி உயரமான இடமாக இருந்ததால் தேவாலயத்தின் அமைவிடத்துக்குப் பொருத்தமாக இருந்தது. எனவே தான் ஒல்லாந்தர் இங்கே ஒரு ஒழுங்கான தேவாலயத்தை 1779 ஆம் ஆண்டு நிறுவினர். நிக்கலஸ் ரொட்ரிகோ என்கிற பாதிரியார் தான் இங்கே நிரந்தர தேவாலயத்தை நிறுவம் பணியை 1782இல் மேற்கொண்டார். 1834 இல் தான் கோவாவிலிருந்த ஆயர்களின் அதிகாரத்திலிருந்து இலங்கை விடுபட்டபின் பாதிரியார் வின்சன்ட் ரொசாரியோ (Fr. Vincente Rozairo) அவர்கள் முதலாவது ஆயராக நியமிக்கப்பட்டதுடன் இலங்கையின் முதலாவது கதீட்ரல் தேவாலயமாக 1838 இல் ஆனது.

இலங்கையில் ரோமன் கத்தோலிக்க, அங்கிலிக்கன் கதீட்ரல் தேவாலயங்கள் பிற்காலத்தில் பல கட்டப்பட்டபோதும். கொட்டாஞ்சேனை லூசியா தேவாலயம் தான் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கதீட்ரல் தேவாலயம்.

1820இலும் 1834இலும் மேலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல மாற்றங்களுக்கு உள்ளானது. 1852 இல் முதலாவது அடிக்கல் நாட்டப்பட்டு 1873 இல் எச்.டிசில்லானி (H D Sillani), எஸ்.தப்பரானி (Fr. S Tabarrani) ஆகிய திறமையான பாதிரிமார்களின் திட்டத்தின் பிரகாரம் அழகிய வடிவம் கண்டது. 1887 டிசம்பரில் சிறந்த முழுமையான வடிவமைப்பைப் பெற்றது இது.  ஆகவே 1887 ஆம் ஆண்டைத் தான் இது உருவாகிய வருடமாக கணக்கிற் கொள்கிறார்கள். சில்லானியைத் தான் இதன் வடிவமைப்புக்கு உரியவராக கருதப்படுகிறார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அன்றைய ஆயர் கிறிஸ்தோப்பர் பொன்ஜீன் (Christopher Bonjean), பாதிரியார் தங்கநெல்லியிடம் (Tanganelli) ஒப்படைத்தார். ஆயர் கிறிஸ்தோப்பர் ஓராண்டுக்குள்ளேயே ரோமுக்கு அழைக்கப்பட்டுவிட்டார். ஆனால் திரும்பி வந்து இலங்கையில் பல முக்கியப் பணிகளை முன்னெடுத்தார். அன்றைய பாப்பரசர் லியோ (Pope Leo XIII) புனித லூசியா தேவாலயத்தை கொழும்பின் மறை மாவட்டமாக 1885 இல் அறிவித்தார். பேராயரான பொன்ஜீன் புனித லூசியாவின் சிறிய எலும்புப் பகுதியை அதிகாரபூர்வமாக கொண்டுவந்து தேவாலயத்தில் சேர்த்தார். அது இன்றும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் அவரால் உருவாக்கப்பட்ட புனித ஜோசப் கல்லூரி. அவர் இலங்கைக்கு 1855 இல் முதன் முதலில் வந்ததே யாழ்ப்பாணத்திற்குத் தான். அங்கே செய்த பணிகள் தனியாக தொகுக்கப்படவேண்டியது. அங்கே சிறிய பாடசாலைகள் பலவற்றை கல்லூரிகளாக மாற்றியது அவர் தான். புனித பற்றிக் கல்லூரி அதற்கொரு உதாரணம். கொட்டாஞ்சேனை புனித லூசிய தேவாலயத்தை உருவாக்குவதில் அவர் காட்டிய அக்கறையின் காரணமாக அந்த தேவாலயம் அமைந்திருக்கும் வீதி (கொட்டாஞ்சேனை பஸ் நிலையம் வரையானது) பொன்ஜீன் வீதி என்று தான் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பாதிரியார் பொன்ஜீன் அவர்களின் காலத்தை இலங்கை கத்தோலிக்க தேவாலய வரலாற்றின் பொற்காலமென பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேவாலயத்தின் இன்றைய முழுமையான தோற்றம் 1902 இல் தான் பூர்த்தியானது.  ஆரம்பத்தில் இதன் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தபோது அன்றே சுமார் 160,000 ரூபா செலவளிந்திருந்தது. இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் நிதிப் பங்களிப்பை செய்திருந்தனர். குறிப்பாக மீனவ சமூகத்தின் உதவியே அதிகளவு பங்களிப்பைத் தந்தது.

1956 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய பாதிரிமார்களே தலைமை பாதிரிமார்களாக இருந்தனர். 1956 ஆம் ஆண்டு நெருவஸ் பெர்னாண்டோ (Fr. Nereus Fernando) இலங்கையின் முதலாவது கதீட்ரல் பாதிரியாராக தெரிவானார். 1987 ஆம் ஆண்டு முதலாவது நூற்றாண்டு பாதிரியார் ருபுஸ் பெனடிக் (Fr. Rufus Benedict) அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் நடத்து கொண்டிருந்த போது கொழும்பில் இலகுவாக தெரியக் கூடிய இடங்கள் பல ஜப்பானின் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. அப்படியான தாக்குதலை தவிர்ப்பதற்காகவே கொழும்பு காலிமுகத்திடலில் முதலாம் உலக யுத்த நினைவுக்காக கட்டப்பட்டிருந்த மிகவும் உயரமான தூபியையே கழற்றி ஒளித்தனர். தேவாலயத்தைத் தான் அப்படி ஒளிக்க முடியுமா என்ன. 1942ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை தேவாலயம் ஜப்பானின் தாக்குதலுக்கு உள்ளானது. டோம் என்று கூறக்கூடிய பிரதான குவிமாடம் சேதமுற்றது. பின்னர் மக்களின் நிதிப் பங்களிப்புடன் அது சீர் செய்யப்பட்டது.

புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி இங்கே வந்து பூசை செய்தார். கொழும்புவாழ் லட்சக்கணக்கான கத்தோலிக்கர்கள் இங்கே தமது திருமணச் சடங்குகளை செய்துள்ளனர். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழி பூசைகளும், சேவைகளும் நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாலையில் தேவாலயத்தின் பின்னால் இருந்து சூரியன் உதித்தெழும் போது அந்த ஒளியில் தெரியும் தேவாலயம், பின்னேரத்தில் சூரியன் மறையும் போது அழகான வெளிச்சத்தில் எவரையும் கவரும் பிரமாண்டத் தோற்றத்தில் இந்த இந்த தேவாலயத்தை ஒரு முறையாவது கண்டு களியுங்கள்.

இலங்கையில் நிகழ்ந்த முதலாவது வகுப்புக் கலவரமும் இங்கிருந்து தான் தொடங்கியது. “1883 கொட்டாஞ்சேனை கலவரம்” என்று அது அழைக்கப்படுகிறது. அதில் ஒரு பௌத்தரும் ஒரு கத்தோலிக்கரும் கொல்லப்பட்டதுடன் முப்பது பேர் காயமடைந்தார்கள். இந்த தேவாலயத்தின் வரலாற்றிலும் இலங்கை, கொட்டாஞ்சேனை என்பவற்றின் வரலாற்றிலும் செலுத்திய தாக்கத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி - தினகரன்Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates