Headlines News :
முகப்பு » , , » நோர்வேஜிய இலக்கிய வழித்தடம் பற்றிய ஓர் அறிமுகம் - என்.சரவணன்

நோர்வேஜிய இலக்கிய வழித்தடம் பற்றிய ஓர் அறிமுகம் - என்.சரவணன்

கோவை - பாரதியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்காக இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டு வரும் தொடர் Refresher Course இல். “நோர்வேஜிய இலக்கிய செல்நெறி” என்கிற தலைப்பில் 20.09.2021 அன்று ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட எழுத்து வடிவம் இது.

நோர்வேயின் இலக்கியத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அதன் அமைவிடம், புவியியல், வளங்கள், பண்பாட்டு வளர்ச்சி, அரசியல் வரலாறு என்பவற்றை சற்றென்றாலும் பார்த்தாகவேண்டும். 

இங்கு பேசுகளம், கதைமாந்தர், பேசுபொருள், கதைக்குரிய பண்பாட்டுப் பின்புலம், அனைத்தையும் தீர்மானிப்பவை இம்மக்கள் கொண்டிருக்கிற வளங்கள், அதன் வரலாறு, அதன்பாற்பட்ட பண்பாட்டுத் தொடர்ச்சி, மொழியும், மொழிவழிச் சிந்தனையின் பன்முகப்பட்ட வழித்தடம் என பலவற்றைக் குறிப்பிட முடியும்.

சமீப காலமாக இலங்கையின் அரசியல் வரலாறு பற்றி பல அரிய தகவல்களைக் தேடிக் கண்டுபிடித்து தமிழ் மொழியில் மானுடவியல்சார் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். பொதுவாக தமிழில் அப்பணி மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால் நான் அதனை அதிகம் செய்ய நேரிட்டிருக்கிறது. அப்படி கடந்த மூன்று நூற்றாண்டுகால ஆவணங்கள் பலவற்றை சேகரிப்பது எனது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி தேடிக்கொண்டிருக்கும் வேளை காலனித்துவ காலத்தில் இலங்கையில் டானிஷ்காரர்களின் வகிபாகம் பற்றிய தகவல்கள் ஆங்காங்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நோர்வேஜியர்களாக இருந்ததையும் அறிய முடிகிறது. அந்தக் காலப்பகுதியைப் பார்த்தால் அது நோர்வே டென்மார்க்கோடு இணைந்திருந்த காலப்பகுதி.

அந்த டேனிஷ்காரர்களின் பாத்திரம் என்பது நோர்வேக்காரர்களின் பாத்திரமுமாகத் தான் காண வேண்டும். இது ஓர் உதாரணம் .

வட துருவ நாடான நோர்வே இந்தியாவை விட பத்தில் ஒரு மடங்கு பரப்பளவைக் கொண்ட நாடு தான். ஆனால் உலகில் கனடாவுக்கு அடுத்ததாக நீண்ட கரையோரத்தைக் கொண்ட நாடு நோர்வே. சுமார் 83,281 கிலோ மீட்டர்களைக் கொண்டது. இந்தியாவின் கரையோரப்பகுதி 7000 கிலோ மீட்டர் தான். இந்தத் தீவுகளை அண்டி ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இதைப் புரிந்துகொண்டால் நோர்வே மீன் ஏற்றுமதியில் இரண்டாவது நாடாகவும், எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். 1969 ஆம் ஆண்டு நோர்வேயில் எண்ணெய், எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டு பின்னர் இன்று உலகின் நான்காவது பணக்கார நாடாக வளர்ந்து நிற்கின்றது. உலகின் அதிகமாக மகிழ்ச்சியாக வாழும் முதல்நிலை நாடாகவும் கணிக்கப்படுகிறது.

நோர்வேயின் வடதுருவப் பகுதியில் சாமிர் என்கிற பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று தனி மொழி, தனிப் பாராளுமன்றம் உள்ளது. அதுபோல நோர்வேயில் பிரதேசத்துக்கு பிரதேசம் வெவ்வேறு பேச்சு வழக்கைக் கொண்ட மக்கள் உள்ளனர். அண்டைய அயல் சகோதர நாடுகளான டென்மார்க், சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் மொழிகளில் வித்தியாசம் இருந்தாலும் பரஸ்பரம் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமானவை. எனவே இங்குள்ள இலக்கியங்கள் மொழியால் மட்டுமல்ல, பண்பாட்டாலும், கலாசாரத்தாலும் மிகவும் நெருக்கமான தொடர்பையும், பரஸ்பர ஊடாட்டங்களைக் கொண்டவை.

நோர்வே அதிக காலம் பனியையும், குளிரையும், இருளையும் கொண்ட நாடு. இது ஆக்டிக் கண்டத்துக்கு அருகாமையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நோர்வேயின் ஒரு பகுதி ஆக்டிக் கண்டத்தில் தான் இருக்கிறது.

ஆண்டுக்கு வெறுமனே இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தலைகாட்டும் வசந்தகாலத்துக்காக எஞ்சிய ஒன்பது மாதங்களும் ஏங்கிக் காத்திருக்கும் மக்கள். கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் எனத் தமிழ் கூறும் ஆறுவகை பருவக் காலத்தையும் அனுபவிக்கும் மக்கள். இந்த ஒவ்வொரு பருவ காலத்திலும் எப்பேர்ப்பட்ட உடைகளை அணிவது, எப்பேர்ப்பட்ட உணவுகளை உண்பது, எப்பேர்ப்பட்ட உணவுகளை சேகரிப்பது, சேமிப்பது, எப்பேர்ப்பட்ட விளையாட்டுக்களை, கலைகளை பயன்படுத்திக்கொள்வது என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. இதற்கு கீழ் ஐரோப்பிய நாடுகளுடன் நிலத்தொடர்ச்சி இல்லை. வடக்கில் பின்லாந்து, ரஷ்யா, கிழக்கில் சுவீடன் என்பவற்றுடன் தான் அதன் நிலத்தொடர்ச்சி இருக்கிறது. மற்றும்படி கடல்வழிப் பயணத்தின் மூலம் தான் ஏனைய நாடுகளுடன் தொடர்பை வைத்திருக்கவேண்டும்.

எனவே நீண்ட காலமாக அவர்கள் உலகத்தில் இத்தனை நாடுகள் உள்ளதையும், இத்தனை மக்கள் கூட்டமும், பண்பாடுகளும் உள்ளன என்பதையும் அறியாதிருந்தனர். இங்கிலாந்தைக் கூட அவர்கள் கடற்கொள்ளை காலப்பகுதியில் தான் கி.பி 860 ஆம் ஆண்டளவில் கண்டுபிடித்து அங்கு கொள்ளைகளை அடித்து, அன்றைய சில ஆட்சியாளர்களை அடிபணிய வைத்து வரிகளை கொடுக்கச் செய்து அங்கு குடியேற்றங்களையும் செய்தனர்.

வீக்கிங் என்கிற கடற்கொள்ளைக் காலம்

ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைத் தான் வீக்கிங் காலம் எனப்படுகிறது.

இவர்கள் கடற்கொள்ளயர்களின் தெய்வங்களாக Odin, Thor, Freyja, Loki போன்ற தெய்வங்களை வணங்கினார்கள். இவர்கள் வணங்கிய அந்த மதத்தை “Nor Norse” (நூர் நோர்ஸ்)  என்றழைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியையும் Nor Norse மொழியென்றே அழைத்தார்கள். அது தான் பின்னர் நொர்ஸ்க் என்கிற நோர்வேஜிய மொழியாக ஆனது. அவர்களின் காவல் தெய்வங்களாக இவர்களைப் பேணுவதற்காக தமக்குள் ஒருவரையோ, பலரையோ பலி கொடுக்கும் வழக்கம்  அவர்களிடம் இருந்தது. அப்படிக் கத்தியால் நெஞ்சில் குத்தி கிழித்துப் பலிகொடுக்க அப்போது பலர் விரும்பி முன்வந்திருக்கிறார்கள். அதன்மூலம் Valhalla என்கிற அவர்களின் சொர்க்கத்துக்கு இலகுவாக சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இந்தக் கடவுளர்களைத் தவிர வேறெந்தத் தெய்வ நம்பிக்கைகளையும் கொண்டவர்களை அவர்கள் தண்டித்தார்கள். ஆனால் காலப்போக்கில் இங்கிலாந்தைக் கண்டுபிடித்ததன் பின்னர் அங்கிருந்து கத்தோலிக்க மதம் மெதுமெதுவாக நோர்வேக்குள் பரவியது. பின்னர் நோர்வே ஒரு புரட்டஸ்தாந்து செல்வாக்குள்ள மதநாடாக மாறியது. அதுமட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே நோர்வேயின் மத நிறுவனங்கள் அதிகாரம் படைத்த நிறுவனங்களாக மாறின. சில பிஷப்மார்கள் போருக்கு கூட தலைமை வகித்துள்ளனர்.

Viking என்கிற ஒரு தொடர் நாடகம் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பட்டு வருகின்றது. நெட்பிளிக்ஸ்ஸில் அதைப் பார்க்கலாம். இப்போது ஆறு சீசன்கள் முடிந்துள்ளன. நோர்வே மக்களின் கடற்கொள்ளைக் கால வாழ்க்கையையும், ஸ்கண்டிநேவிய நாடுகளின் வளர்ச்சியையும் உணர்ந்துகொள்வதற்கு அந்த நாடகத்தை பரிந்துரைக்கிறேன். மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நோர்வே 1349 இல் ஏற்பட்ட கொள்ளை நோயால் நோர்வேயின் சனத்தொகையில் 50% -60% வீதமான மக்கள் அழிந்தார்கள். 1379 இலிருந்து நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகியவை 1523 வரை கல்மார் ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கியப்பட்ட நாடுகளாக இயங்கின. ஆனால் 1521 இல் அதில் இருந்து சுவீடன் விலகியது. 1814 வரை டென்மார்க்குடன் நோர்வே சேர்ந்து ஒரே நாடாக இயங்கிவந்தது. இந்த இடைக்காலப்பகுதியில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளும் இலக்காகின. 

ஒரு சமூகம் மொழியின்றியும் கலை இலக்கியங்கள் உருவாக்கலாம், ஆனால் அது தன் மொழியால் மாத்திரமே அதனை அடுத்த நிலைகளுக்கு வளர்த்துச் செல்லலாம். ஏனைய சமூகங்களின் தரத்துக்கு நிகராக நின்று பிடிக்கலாம். ஐரோப்பாவைப் பொறுத்தளவில் கலை இலக்கியங்களின் வளர்ச்சியில் கிறஸ்தவ மதப் பிரச்சாரமும், பைபிளின் வகிபாகமும் முக்கியமானது. எப்போது பைபிளுக்கூடாக மதம் வளர்ந்ததோ அப்போதிருந்து அது சென்றடைந்த அந்தந்த மொழிகளும் செழிப்படைந்தன. அம்மொழிகளுக்கூடாக பன்முக கலை இலக்கிய வடிவங்களும் வளர்ந்து விரிந்தன.

நோர்வே பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து டென்மாக்கின் கீழ் இருந்த சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் மிகப்பெரிய தொழிற்புரட்சி, சமூகப்புரட்சிகள், இலக்கியங்கள் வளர்ந்த காலம். ஆனால் நோர்வே தமக்கான சுயத்தை வளர்த்தெடுக்க முடியாமல் போன காலம். ஏனென்றால் டேனிஷ் பண்பாடு நோர்வேக்குரிய தனித்துவமான பண்பாட்டை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது. நோர்வேஜிய இலக்கியங்கள் எல்லாமே அந்தக் காலப்பகுதியில் டேனிஷ் மொழியில் தான் எழுதப்பட்டன. அப்படி டேனிஷ்  மொழியில் எழுத்தப்பட்டதால் சில முக்கியமான படைப்புகளை நோர்வேஜிய இலக்கியங்களுக்குள் வகைப்படுத்துவதா, அல்லது டேனிஷ் இலக்கியத்துக்குள் வகைப்படுத்துவதா என்கிற சர்ச்சை இன்றும் அவ்வப்போது எழுவதுண்டு. அக்காலத்து அவ்விலக்கியங்களை “டேனிஷ் - நோர்வேஜிய பொது இலக்கியம்” (den dansk-norske felleslitteraturen) என்றும் அழைக்கபடுகிறது. நோர்வேஜிய மொழியில் ஒரு பைபிளைக் கூட உருவாக்கிக்கொள்ள டானிஷ்காரர்கள் அன்று வழிசெய்யவில்லை என்கிற விமர்சனங்களை இன்றும் கூறுவார்கள். குறிப்பாக ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடும் தமது பரவலான பேச்சுவழக்கு மொழியைக் கூட பொதுமைப்படுத்தி நிலைநிறுத்தியதில் பைபிளுக்கு பெரும் பங்களிப்பு உண்டு. டானிஷ் மொழி பைபிளைத் தான் அதுவரை நோர்வேஜியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். Old norse என்கிற பழைய நோர்வேஜிய மொழியில் பைபிளின் சில பகுதிகள் அப்போது கிடைத்தபோதும் 1862இல் அது நோர்வேஜிய மொழியில் மொழிபெயர்க்கப்படும் வரை பைபிள் இருக்கவில்லை. நினைத்துப் பாருங்கள் இதே காலத்தில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் கூட பைபிள் மொழிபெயர்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டிருந்தன. 

வீக்கிங் காலத்தில் காணப்பட்ட old norse மொழி பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. வட ஜேர்மனின் - டச்சு மொழியின் செல்வாக்கால் ஸ்கண்டிநேவிய நாடுகளில் புழக்கத்துக்கு வந்த மொழி இது. அதேவேளைநோர்வேயில் வழக்கில் இருந்த எழுத்து வடிவத்தை ரூனஸ் என்பார்கள் (Runes). அவ்வெழுத்து வடிவம் கி.பி. 100 ஆம் ஆண்டுகளில் உருவானவை. வீக்கிங் காலம் வரை அதைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். பழைய கல்வெட்டுக்கள், நாணயங்கள், நகைகள், ஆயுதங்கள் என்பவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இவ்வெழுத்துக்களைக் காண முடியும். லத்தீன் – ரோமன் எழுத்துக்களின் சாயலில் தான் அவ்வெழுத்துக்கள் இருந்தன. ஆனால் அதற்கென்று வளமான ஒரு இலக்கண யாப்பு இருக்கவில்லை. கி.பி 1000க்குப் பின் தான், இன்னும் சொல்லப்போனால் வீக்கிங் காலத்தில் தான் லத்தீன் எழுத்துக்கள் நோர்வேக்கு வந்து சேர்ந்தன. கிறிஸ்தவ மதத்தின் நுழைவோடு தான் அது நிகழ்ந்தது. குறிப்பாக கிறஸ்தவ தேவாலயங்களில் தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன. நோர்வேயில் மட்டுமல்ல ஸ்கண்டிநேவிய நாடுகள் முழுவதும் இப்படித்தான் நிகழ்ந்தன. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள் லத்தின் எழுத்துக்களைக் கொண்டு தான் ஏறக்குறைய சில வித்தியாசங்களுடன் அம்மொழிகளுக்கான எழுத்துக்கள் நிறுவப்பட்டன. ஆங்கில எழுத்துக்கள் 26 உடன் சேர்த்து மேலதிகமாக மூன்று எழுத்துக்கள் நோர்வேஜிய மொழியில் இன்று உள்ளன. அம்மொழியில் உள்ள சில விசேட ஒலி உச்சரிப்புகளை வெளிப்படுத்தப் பயன்படுபவை அவை.

தொரதி (Dorothe Engelbretsdatter)

தொரதி

நோர்வேயின் முதலாவது எழுத்தாளராகவும், முதலாவது பெண்ணியவாதியாகவும் அறியப்படுபவர் தொரதி (Dorothe Engelbretsdatter). 1634 இல் பிறந்த அவர் பல சிறந்த கவிதைகளுக்கு சொந்தக்காரர். குறிப்பாக அவர் சமயம் சார்ந்தே அதிகம் எழுதியிருக்கிறார்.

பேர்கன் நகரத்தில் உள்ள பாடசாலையின் அதிபரின் மகள் தான் தொரதி. தந்தை பின்னர் பேர்கன் பெரிய தேவாலயத்தின் டீனாக நியமிக்கப்பட்டார். தனது இளம் வயதிலேயே சிறிது காலம் கொப்பன்ஹேகனில் வசித்து வந்த தொரதி அன்று பிரபலமான ஓர் இறையியல் எழுத்தாளரான அம்போரியஸ் என்பவரை திருமணம் முடிக்கிறார்.

1968 இல் தான் தொரதியின் முதலாவது கவிதை நூல் கொப்பன்ஹேகனில் வெளியானது. அதன் பின்னர் அவர் எழுதிய கவிதை நூல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. டென்மார்க் கவிதைப் பாரம்பரியத்தின் தந்தை என்று அறியப்படும் தோமஸ் ஹன்சனுக்கு அறிமுகமாகி அவரின் இலக்கியத் தரமும் செல்வாக்கும் பெருகுகிறது. தொரதியின் கவிதைகளால் கவரப்பட்ட அரசர் ஐந்தாவது கிறிஸ்தியான் அவருக்கு வாழ்நாள் முவுவதற்குமான வரிவிலக்கு அளிக்கிறார்.

1683இல் அவரின் கணவர் இறந்து விடுகிறார். தொரதிக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளில் இரண்டு குழந்தைகள் மட்டுமே தப்புகின்றனர். ஏனையோர் இறந்துவிடுகின்றனர். 1702 பேர்கனில் ஏற்பட்ட பெருந்தீயால் 90 வீதமான நகரம் எரிந்து நாசமாகிறது. தொரதியின் வீடும் அதில் அழிந்துவிடுகிறது. அதன்பின் பத்து வருடங்களாகிறது அவருக்கென்று ஒரு வீடு உருவாவதற்கு. அதற்கடுத்த நான்காண்டுகளில் தனது 82 வது வயதில் அவர் இறந்து விடுகிறார்.

தொரதி தான் நோர்வேயின் முதலாவது தொழில்முறை எழுத்தாளராக அறியப்படுகிறார்.

அடுத்த முக்கியமான இலக்கியவாதியாக கருதபடுபவர் பெத்தர் தாஸ் Petter Dass

1647 இல் பிறந்த பெத்தர் தாஸ் தொரதியைப் போலவே பேர்கன் நகரில் வளர்ந்தவர். பின்னர் கொப்பன்ஹெகன் சென்று தன்னை வளர்த்துக்கொண்டவர். அதன் பின்னர் ஒரு பாதிரியாராகி பல கவிதை இலக்கியங்களைப் புனைந்தவர். அதுமட்டுமன்றி நிலவியல் உள்ளிட்ட பல அபுனைவு நூல்களையும் எழுதினார். அந்த நூல்கள் எல்லாம் அவர் உயிரோடு இருக்கும் வரை வெளியாகவில்லை. அவரின் இறப்பின் பின்னர் தான் அவர் கொண்டாடப்பட்டார். இன்றும் அவர் நினைவாக அவரின் பெயரில் ஆண்டு தோறும் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

அவரின் “The Trumpet of Nordland” என்கிற நூல் வட துருவ நோர்வேஜிய மக்களின் வாழ்வியலை சித்திரிக்கின்ற படைப்பு. அங்கிருக்கும் காலநிலை, இயற்கை, விலங்குகள், பறவைகள், மரங்கள், சாமீர் இனத்தவர்கள், மீனவ வாழ்க்கைமுறை என பல விபரங்களை உயர் கவித்துவத்தோடு பேசுகின்ற நூல். இன்றும் கொண்டாடப்படுகிற நூல்.


இதன் பின்னர் பல இலக்கியவாதிகள் உருவானார்கள். ஆனாலும் நோர்வேக்கு உரிய தனித்துவமான இலக்கியம் இருந்ததா? தமது சொந்த மொழியால் வளர்க்கப்பட்டு பதிவுசெய்ய வாய்ப்பில்லாமல் போன ஒரு சமூகமாக இருந்ததால் அப்படிப்பட்ட இலக்கியங்கள் வாய்மொழியில் தான் இருக்கும் என்பதை உணர்ந்த Asbjørnsen and Moe என்கிற இரு நண்பர்கள் நாடு முழுவதும் அலைந்து திரிந்து வாய்மொழி இலக்கியங்களைப் பதிவு செய்வதற்கு கிளம்பினார்கள். அவர்கள் பதினைந்து வருடங்களாக தேடித் திரிந்து கண்டடைந்தவற்றை பின்னர் (Norske folkeeventyr) “நோர்வேஜிய நாட்டுப்புறக் கதைகள்” என்கிற நூலை 1841 இல் வெளிக்கொணர்ந்தார்கள். இங்கே டென்மார்க்கிடம் இருந்து விடுதலை பெற்று சுயாதீனமான நாடாக ஆனதன் பின்னர் தான் இது அவர்களுக்கு சாத்தியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த நாட்டுப்புறக் கதைகள் பல தொகுதிகளாக, பல கதைகளாக வெளிவந்தன. அதுமட்டுமன்றி பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டன. அவர்களின் காலத்திலேயே பல பதிப்புகள் கண்டன. அவை அன்றே சித்திரங்களுடன் வெளிவந்தன. இவை பரந்துபட்ட மிகப்பெரிய நாடான நோர்வேயின் பல்வேறு பகுதிகளில் உள்ள கதைக்களங்களையும், அந்தப் பண்பாட்டு எண்ணங்களையும், சூழலையும் பிரதிபலித்தன. வடக்கில் சூனியக்காரிகள் பற்றிய கதைகளும் இதில் அடங்கும்.

இலக்கியங்களுக்கும் விவசாயத்துக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். வரலாறு நெடுகிலும் விவசாயம் வளம்பெற்ற இடங்களில் சிறந்த இலக்கியங்களும் கிடைத்துள்ளன.

பதினெட்டாம் நூற்றாண்டில் நோர்வேயில் விவசாயம் வளரத்தொடங்கியதன் பின்னர் இந்த மாற்றங்களைக் கவனிக்கலாம்.


18 ஆம் நூற்றாண்டில், அறிவொளிக் கருத்துக்களை அதிகம் எழுதிய “டேனிஷ்-நோர்வே இலக்கியத்தில்” செல்வாக்கு செலுத்திய லுட்விக் ஹோல்பெர்க் (Ludvig Holberg) நோர்வேஜிய தேசிய உணர்வை உந்துவதற்கு வழிகோலிய முக்கிய எழுத்தாளர். அவரும் நோர்வே பேர்கன் நகரில் பிறந்தவர். அவர் நாவல், கவிதைகள், நாடகங்கள் (குறிப்பாக நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு நாடகங்கள்) மட்டுமன்றி பல வரலாற்று நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார். ஒரு தத்துவவாதியாகவும், வரலாற்றாசிரியராகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய சட்ட நூல்களைத் தான்  1736 – 1936 வரையான சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு டேனிஷ் சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தினார்கள்.

இதன் பின்னர் வரிசையாக இலக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்தியவர்களில் நோர்வேயின் முதலாவது தேசிய கீதத்தை எழுதிய  யோஹான் நூர்டால் (Johan Nordahl Brun), அதன் பின்னர் ஹென்றிக் வெஜிலன்ட் (Henrik Wergeland),  யோஹான் செபஸ்தியான் (Johan Sebastian Welhaven), ஈவார்  ஆசன் (Ivar Aasen) என வரிசையாகப் பட்டியலிட முடியும்.


1850 களின் நடுப்பகுதியில், ஒரு புதிய தலைமுறைக் கவிஞர்கள் தோன்றினர், அவர்களில் ஹென்றிக் இப்சன், பியோன்சன்,  மற்றும் கமில்லா (Camilla Collett utga), ஆகியோர் முன்னணியில் இருந்தனர். 1854/1855 ஆம் ஆண்டில் நோர்வேயின் முதல் சமூக விமர்சன நாவலான “அம்ட்மண்ட் மகள்” கமிலா கோலெட் வெளியிட்டார், அதே நேரத்தில் ஓஸ்மண்ட்ஊலாஃப்சன் வின்ஜே புதிய தேசிய மொழியில் எழுதிய முதல் கவிஞர் - டோலன் 1858 இதழில் மற்றும் 1861 முதல் ஃபெர்டாமின் கட்டுரையின் சிறப்பம்சமாக. ஜார்ன்சன் 1857 முதல் சினேவ் சூல்பாக்கன் வேறும் பிற விவசாயக் கதைகளுடன் நோர்வேயின் உரைநடைகளைப் புதுப்பித்தார். அதற்கு சமகால நாடகமான A Fallit உடன் 1875 முதல் அவர் ஐரோப்பாவில் நோர்வே நாடகத்திற்கு வழி வகுத்தார். அத்தோடு இப்சன் 1879 இலிருந்து “ஏ டோல்ஸ் ஹவுஸ்”, 1881 இலிருந்து “கோஸ்ட்ஸ்” போன்ற தலைசிறந்த படைப்புகளுடன் இலக்கிய உலகின் ஒரு நட்சத்திரமாக ஆனார் .

அது போல அன்று கிரிஸ்தானியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஒஸ்லோவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஒரு புது தொழிற்படை உருவானது. இந்தப் புது தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை நிலை பற்றி பேசுகின்ற படைப்புகள் வளர்ந்தெழுந்தன.

இப்சன்

இதன் பின்னர் கிறிஸ்தியான் குரோக் (Christian Krohg) என்கிற மாபெரும் படிப்பாளியின் படைப்புகள் முக்கியமானவை.  அவர் ஒரு பன்முக கலைஞராக இருந்தார். மிகவும் பிரபலமான ஓவியராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், சிந்தனையாளராகவும் அறியப்படுகிறார். 1852 - 1925 காலப்பகுதியில் வாழ்ந்த அவர் அன்று ஐரோப்பாவில் தோன்றியிருந்த யதார்த்தவாதம் கலை இயக்க சிந்தனைகளைக் கவர்ந்திருந்தார். எனவே அவரின் படைப்புகளில் சமூக யதார்த்தம் தொனித்திருந்தது. குறிப்பாக அவர் அன்றைய காலத்து ஒஸ்லோவில் இருந்த பாலியல் தொழிலை வெறுத்தார். அதை பற்றி தனது ஓவியங்களில் வரைந்தார். கட்டுரைகளில் எழுதினார். அவர் வரைந்த Albertine i politilægens venteværelse (Albertine at the Police Doctor's Waiting Room என்கிற ஓவியம் மிகவும் புகழ்பெற்றது. இன்றும் ஒஸ்லோ தேசிய மியூசியத்தில் அது வைக்கப்பட்டிருக்கிறது. ஒஸ்லோ பாராளுமன்றத்தின் இடதுபுறமாக இன்றும் பெரிய உருவமாக அவரின் சிலை கம்பீரமாக இருப்பதைக் காணலாம்.

இந்த வரிசையில் Bjørnstjerne Bjørnson பியோன்ஷியான பியோன்சனின் படைப்புகளும் நாடகங்களும் முக்கியமானவை. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் நோர்வேஜியர் இவர் தான்.

Bjørnstjerne Bjørnson பியோன்ஷியான பியோன்சன்

இந்த வரிசையில் இப்சனை நாம் அறிவோம். அவரின் நாடகப் படைப்புகள் நோர்வேயில் செல்வாக்கு பெறுமுன்பே இத்தாலியிலும், ஜெர்மனியிலும் புகழ் பெறத் தொடங்கிவிட்டன. அதன் பின்னர் தான் நோர்வேஜியர்களால் கண்டுகொள்ள முடிந்தது என்றால் அது மிகையில்லை. அவரை மீண்டும் நோர்வேக்கு அழைத்தெடுத்து நோர்வேயில் இருந்தபடி படைப்பிலக்கியங்களை உருவாக்கச் செய்தவர்  பியோன்ஷியான பியோன்சன் தான். உலகப் புகழ்பெற்ற அவரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படாத மொழிகளே இல்லையெனலாம்.  இப்சன் காலத்தில் 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அது வழங்கப்படவில்லை. இப்சன் அப்போது வயது முதிர்ந்திருந்தார். நோபல் பரிசுக் கமிட்டியும் ஒரு இளம் எழுத்தாளருக்கு வழங்குவதில் ஆர்வமாக இருந்தது. இறுதிவரை இப்சன் நோபல் பரிசைப் பெறவில்லை. அடுத்த இரண்டாவது ஆண்டு 1906 ஆம் ஆண்டு தனது 78 வது வயதில் அவர் மரணமானார். ஆனால் இன்றும் கொண்டாடப்படுகின்ற மாபெரும் உலக இலக்கிய ஆளுமையாக அவர் கருதப்படுகிறார். ஒவ்வொரு நாளும் அவரின் நாடகங்கள் உலகின் ஏதோ ஓரிடத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இந்த வரிசையில் எட்வர்ட் முங்க் என்கிற உலகப் புகழ்பெற்ற ஓவியரையும் அறிவீர்கள்.

சூனியக்காரிகள்

உலகில் அதிகமான சூனியக்காரிகள் கொல்லப்பட்ட நாடாகவும் நோர்வே திகழ்கிறது. குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதிகமான பெண்கள் சூனியைக்காரிகளாக அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட Vardø என்கிற இடத்துக்குச் சென்று அந்த நினைவிடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன் நான் போய்ப் பார்த்தேன். நோர்வேயின் சூனியக்காரிகள் பற்றிய ஆய்வுகளின் ஒரேயொரு நிபுணராக கருதப்படும்  பிரபல ஆய்வாளர் ட்ரோம்சோ பல்கலைகழக பேராசிரியர் Liv Helene Willumsen யும் எங்களோடு வந்து அவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தந்தார். சூனியக்காரிகளைக் கொன்றொழித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்தாறு நாடுகளில் நோர்வேயும் இருக்கிறது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். பெண்கள் மட்டுமல்ல 8, 12 வயது சிறுமிகள் பலரும் கூட கொல்லப்பட்டார்கள். 

சூனியக்காரிகள் என்கிற பேரில் கொல்லப்பட்ட பல நூறு பெண்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்புத் தூபி. 

நோர்வேயின் சூனியக்காரிகள் பற்றிய ஆய்வுகளின் ஒரேயொரு நிபுணராக கருதப்படும்  பிரபல ஆய்வாளர் ட்ரோம்சோ பல்கலைகழக பேராசிரியர் Liv Helene Willumsen.


பின்னணியில் தெரிவது கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் பதியப்பட்ட Vardøவில் உள்ள  நூதனசாலை. இப்புகைப்படங்கள் 2013 யூனில் பத்திரிகையாளர்கள் குழுவாக சென்றபோது எடுக்கப்பட்டவை.

வாய்மொழிக் கதைகளையும், நம்பிக்கைகளையும் மரபாகப் பல தலைமுறைகளுக்கு கடத்தி வந்த நம்பிக்கைகளைக் கொண்டு சூனியக்காரிகளைக் கண்டுபிடிக்க சில குறியீடுகளை வைத்திருந்தனர். ‘அவளைத் தனியாக இருட்டில் கண்டேன்’, ‘அவளிடம் மீன் கவிச்சி வாடை வந்தது’, ‘அவர் தனியாக பேசிக்கொண்டிருந்ததைக் கண்டேன்’, இப்படி ஏதோ ஒரு சந்தேகத்தை ஊர் பெரியவர்களிடம் கூறிவிட்டால் ஒர் உரிய காலத்தில் ஊரைக் கூட்டி அப்பெண்ணை விசாரிப்பார்கள், சாட்சியளிப்பவர் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னதும் பெரிய விசாரணை, ஆராய்ச்சி எல்லாம் தேவைப்படாது, ஊர்க்காரர்களும் சேர்ந்து அவள் சூனியக்காரியேதான் என்று கத்தத் தொடங்குவார்கள். அதன்பின் அவளை நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மரக்கட்டையில் கட்டி வைத்து அதைச் சூழ மரக்கட்டைகளை அடுக்கி வைத்து எரித்து விடுவார்கள். 

இவற்றைப் பற்றி பல புனைகதை இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ஒரு சாத்தானின் கிறிஸ்மஸ் நாள் “En satans julekveld “ என்கிற நாவல் மிகவும் முக்கியமானது. 

குறிப்பாக நோர்வேயின் வடக்குப் பகுதிக்குச் செல்ல குளிரும், பனியும், இருளும் அதிகமோ அதிகம். எனவே அவர்கள் உணவாக அதிகம் உட்கொள்வது மீனைத்தான். வசந்த காலங்களில் மீனைக் காயவைத்து கருவாடாக்கி சேமித்து வைப்பது வழக்கம். பல விலங்குகள் வாழும் நாடல்ல நோர்வே. மான், கரடி போன்ற வெகு சில மிருகங்களே இந்த பனி நாட்டில் வாழ்கின்றன. மான்களில் பல வகையான இராட்சத மான் வகைகள் இங்குள்ளன. அவற்றைத் தான் வேட்டையாடி வெட்டி உலர்த்தி, புகையடித்து, காயவைத்து பனிக்காலத்தில் உணவாக உண்பார்கள். எனவே இவர்களின் ஆயுட்காலம் அத்தனை அதிகமானதல்ல. 

நோர்வேக்கு கிழங்கு அறிமுகமானது 1750 களில் தான். காலனித்துவ காலத்தில் கிழங்கை லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் போர்த்தேக்கேயர் தான். நோர்வேக்கு அது அறிமுகமானதன் பின்னர் அவர்களின் உணவுப் பண்பாட்டில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. வசந்த காலத்தில் தமக்குத் தேவையான கிழங்குகளை உற்பத்தி செய்தார்கள். மிகவும் வேகமாக கிழங்கை உணவாக நுகர்வு அதிகரித்தது. சராசரியாக ஓராண்டுக்கு ஒரு ஆள் 88 கிலோ கிழங்கை சமீபகாலம் வரை உண்டார்கள். ஆனால் இப்போது அதிகமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் உண்ணத் தொடங்கியதன் பின்னர் கிழங்குப் பயன்பாடு குறைந்திருக்கிறது. வசந்த காலத்தில் விவசாயம் செய்து மரக்கறிகளையும், பழங்களையும் உற்பத்தி செய்துகொள்கிறபோதும் அது தன்னிறைவுக்கு போதாது. ஆனாலும் இன்றும் அவர்களின் தேசிய கலாச்சார உணவாக கிழங்கு உள்ளது. எந்த மாமிச உணவோடும் அவித்த கிழங்குகளையும் சேர்த்து உண்பது உணவுப் பயன்பாட்டின் அம்சம். நோர்வேஜியர்களை “கிழங்கர்கள்” என்று (Potatos) எனக் கேலி செய்வது இன்றும் பேச்சுவழக்கில் உள்ளது.

வீகிங் காலத்தில் பிரித்தானியாவுக்குச் சென்று அங்குள்ள அரசர்களுடன் தாங்கள் போர்புரியாமல் இருக்க வேண்டுமென்றால் எங்களுக்கு விவசாயம் செய்ய நிலங்களைத் தாருங்கள் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு பல நோர்வேஜியர்கள் குடியேறிய வரலாறும் உண்டு. நோர்வே தாராளமான நிலப்பகுதியைக் கொண்டிருந்தபோதும், விவசாயத்துக்கு உகந்த மண்ணையும், காலநிலையையும், பருவ காலத்தையும், சீதோஸ்ண நிலையையும் கொண்டதல்ல. இன்று இருப்பதை விட மோசமான குளிர்க்காலநிலை அப்போது இருந்தது.

நோர்வேஜியர்களின் ஆயுட்காலம் இன்று சராசரி 82 வயதை விட அதிகரித்திருக்கிறது. ஆனால் சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இவர்களின் ஆயுட்காலம் முப்பதைந்தைக் கடந்ததில்லை. அதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கொள்ளையர் காலத்தில் 25-30 வயதுக்கு மேல் வாழ்ந்ததில்லை. அதற்கு காரணமாக நிதமும் சமர்களை எதிர்கொண்டதாலும் இருக்கலாம். கூடுதலாக சுகாதாரமின்மை (Hygiens) காரணமாக அதிகமாக இறந்தார்கள் என்கிறார்கள். குறிப்பாக ஆண்களை விட அதிகமாக பெண்களே இருந்திருக்கிறார்கள். இலகுவில் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். எந்த நோயினால் அதிகமாக இறந்தார்கள் என்பதற்கான பதிவுகள் இல்லை. எனவே இந்த இருபது முப்பது வருடத்துக்குள் தான் அவர்களின் மொத்த வாழ்காலமும் அடங்கிவிடுகின்றன. நாற்பது வயதை எட்டியவர் முதியவராக, மூத்தவராக ஆகிவிடுகிறார். காதல் திருமணம், சேர்ந்து வாழ்தல் எல்லாமே மிகவும் இளம் வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகின்றன.

நோர்வேஜிய மொழியானது Bokmål (புக்மோல்), Nynorsk (நியூ நோர்ஸ்க்) என இரு மொழி வழக்குகள் உள்ளன. இரண்டுக்கும் அதிக பெரிய வித்தியாசங்கள் இல்லை. நோர்வேயின் 27 மாநகரங்களில் Nynorsk அரசகரும மொழியாக பயன்படுத்தப்படுகிறது. ஜென்மானிய மொழிக் குடும்பத்தின் செல்வாக்கையொட்டி வளர்ந்தது இது. அதேவேளை அது நோர்வேயின் சனத்தொகையில் 12 வீதமானோர் மட்டுமே பயன்படுத்தும் மொழி. அதேவேளை புக்மோல் ஆனது டானிஷ் மொழியின் பாதிப்பைக் கொண்டது. அதுவே நோர்வே முழுவதும் அதிகம் பயன்படுத்தபடுகிற மொழியாக இருக்கிறது. எனவே புக்மோல் வடிவத்திலேயே அதிக இலக்கியங்களும், வெளியீடுகளும், படைப்புகளும் வெளியாவதில் ஆச்சரியம் இருக்காது.

நோர்வேஜிய இலக்கியத்தின் தோற்றுவாய் என்பது ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தான் தோன்றுகின்றன. Eddaic, Skaldic ஆகியோர் நோர்வேஜிய கவிதை இலக்கியத்தின் முன்னோடிகளாக கொண்டாடப்படுகின்றனர். 

சோபியாவின் உலகம் (Sofies verden) என்கிற நூல் தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல். அபுனைவின் புனைவு என்றும் கூறலாம்.நோர்வே நவீன இலக்கியத்தின் ஒரு மைல்கல் என்றே கூறவேண்டும். அது உலகில் அதிக விற்பனையான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ் உட்பட 59 சர்வதேச மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டிருகிறது. அதுமட்டுமன்றி திரைப்படமாகவும், நாடக வடிவத்திலும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் அது வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்றைய நிலையில் நோர்வேயிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கலை இலக்கியங்களை கொண்டாடும் தேசமாக வளர்ந்து நிற்கின்றது. வாசிப்பறிவற்றவர்கள் இல்லாத தேசமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் உலகமயமாக்கலுடனான ஒரு சவால் நிலை நோர்வேக்கு இருக்கிறது தற்கால சூழலில் அது இன்னும் பல நாடுகளுக்கும் இருப்பது தான்.

நோர்வே மொழியில் ஒரு திரைப்படத்தை, நாடகத்தை, பாடலைத் தயாரித்தால் அது நோர்வேக்குள் மட்டும் தான் நுகர முடிகிறது. நோர்வே வாழ்க்கைச் செலவு மிகுந்த நாடு. கடையில் ஒரு சாதாரண காப்பியின் விலை இருபது குரோனர்களில் இருந்து தான் தொடங்குகிறது. இந்திய விலையில் இருநூற்றைம்பது ரூபாய் எனலாம்.

இப்படியிருக்கும் போது கலை இலக்கிய படைப்புகளுக்கான தயாரிப்புச் செலவுகள் சாதாரணமானதல்ல. நோர்வேயின் இலக்கியச் சந்தை என்பது நோர்வேக்குள் மட்டும்தான் இருக்கிறது. எனவே ஒரு புறம் தரத்தையும், மறுபுறம் நட்டமின்றியும் அதை தயாரித்தெடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்தல் என்பது நோர்வேக்கு மிகவும் சவாலான விடயம். கலை இலக்கியங்களுக்கு நோர்வே மக்களின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும்  அதிகரிக்காமல் அதை உள்ளகச் சந்தையில் வெற்றிபெறச் செய்ய முடியாது என்பதை அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

சர்வதேச சந்தையில் அமெரிக்க ஹோலிவூட் தயாரிப்புகளை மலிவாக வாங்கி வெளியிடும் நிலைமையே நோர்வேயிலும் தொடர்கிறது. அந்தப் படைப்புகளை தொலைக்காட்சிகளில், தியேட்டர்களில் காட்சிப்படுத்துவது மலிவாக இருக்கிறது. நோர்வேயில் அப்படியான படைப்புகளை லாபகரமாக நிச்சயமாக தயாரிக்க முடிவதில்லை. எனவே அவற்றை அழிந்துவிடாமல் தடுப்பதற்காக அப்படியான படைப்புகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. பல ஊடகங்கள் கூட மானியத்தில் தான் இயங்குகின்றன. இங்கு இயங்குகிற அரச எதிர்ப்பு பத்திரிகைகள் அரச மானியத்தில் தான் வெளிவருகின்றன என்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆண்டுதோறும் இலாபமில்லாத கலை இலக்கியப் பணிகளுக்காக பில்லியன் கணக்கில் அரசு செலவிடுகிறது. பாரம்பரியக் கலைகளையும், இலக்கியங்களையும் மீட்டெடுப்பதற்கு அதிக பங்களிப்பை அரசு செய்து வருகிறது.

ஐரோப்பிய இலக்கிய பரப்பில் ஸ்கண்டிநேவிய இலக்கியங்கள் தனித்து நிற்பவை. அதன் புவிசார் தனித்துவம் அதன் இலக்கிய உள்ளடக்கத்தை ஏனைய ஐரோப்பிய இலக்கியங்களில் இருந்து தன்னை வேறுபடுத்தியிருக்கிறது என்கிற புரிதலில் இருந்தே நோர்வேஜிய இலக்கியத்தையும் நாம் ஆராய வேண்டும். அதற்கான ஒரு ஆரம்பப் புரிதலே இது.

நன்றி - காக்கைச் சிறகினிலே 2022 - ஜனவரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates