சேர் பொன் அருணாச்சலம் லண்டனில் கல்வி கற்ற இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட அரிய படம். |
தமிழர் மகா சபையை தொடக்கியதும் அதற்கென்று ஒரு பத்திரிகையின் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்தார் அருணாச்சலம் ஆனால் அதைத் திட்டமிட்டு ஒருசில மாதங்களில் அவர் இறந்துவிட்டார்.
இராமநாதன்; ஆரம்பத்திலேயே கொழும்பில் The Ceylonese என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார். முதல் பத்திரிகை 1913 ஆம் ஆண்டு மார்ச் 05 அன்று வெளியானது அதன் முதலாவது ஆசிரியர் அமெரிக்கரான தொம்ரைட் (Tom Wright) என்பவர். மருதானையில் இதன் அலுவலகம் இயங்கியது.. அதில் அருணாச்சலம் முக்கிய பங்கையும் வகித்தார். இராமநாதன் படித்த இலங்கையராக அரசாங்க சபைக்கு தெரிவான காலத்தில் சுதேசிய ஆங்கில ஊடகத்தின் அவசியத்தை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு அவரோடு தோள்கொடுத்தவர்கள் வழக்கறிஞர் ஹெக்ரர் ஜெயவர்த்தன, கர்னல் டீ.ஜீ.ஜெயவர்த்தன, டொக்டர் ஈ.வீ.ரத்னம், வழக்கறிஞர் பிரான்சிஸ் த சொய்சா ஆகியோர்.
1911 - கொவிகம – வெள்ளாளக் கூட்டு
இந்தப் பத்திரிகை உருவாவதற்கு வித்திட்ட சில சுவாரசியமான அரசியல் காரணங்கள் இருந்தன. இராமநாதன் 1879 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அதிலிருந்து 1892 வரையான 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசாங்க சபையில் அங்கம் வகித்தார். ஆனால் அவர் இவ்வாறு அங்கம் வகித்தது தேர்தலில் போட்டியிட்டல்ல. ஒரு நியமன உறுப்பினராகவே அங்கம் வகித்தார். 1892 இல் அவரின் பதவிக் காலம் முடிந்ததும். அவர் இலங்கையின் சட்ட மா அதிபராக நியமனம் பெற்றார். எட்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்து 1906 ஆம் ஆண்டு அதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அடுத்த ஆண்டு 1907 ஆம் ஆண்டு அவர் தேசிய சீர்திருத்தக் கலகத்தை ஆரம்பித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டாலும் அவர் இந்தக் காலப்பகுதியில் ஆன்மீகக் கடமைகளிலேயே அதிகம் மூழ்கியிருந்தார். இந்த வேளையில் 1910 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் உத்தியோகபூர்வ உறுப்பினர்களும், 10 உத்தியோக பூர்வமற்ற முறையிலும் தெரிவாகும் வகையில் அந்த சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
உத்தியோக பூர்வமற்ற 11 பேரில் ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட படித்த இலங்கையர், இரண்டு நியமனம் பெற்ற கரையோர சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர் என்கிற அடிப்படையில் அமைக்கப்பட்டன.
ஆக இவர்களில் நாடு முழுவதும் படித்த இலங்கையருக்கான ஒருவரை தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒரு வகையில் தேர்தலின் மூலம் இலங்கையர் ஒருவரை தெரிவு செய்யும் முதலாவது சந்தர்ப்பம் அதுவென்றும் கூறலாம். அதேவேளை படித்த இலங்கையரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் படித்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதியையும் பெற்றார்கள். அதன் பிரகாரம் சுமார் மூவாயிரத்துக்கும் குறைவான; அதாவது 4% வீத இலங்கையர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வைத்திய கலாநிதி மாக்கஸ் பெர்னாண்டோ முன்வந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவதை சிங்கள – பௌத்த – கொவிகம சாதி - படித்த –வசதிபடைத்த மேட்டுக்குடியினர் விரும்பவில்லை. ஏனென்றால் மாக்கஸ் பெர்னாண்டோ சிங்கள சமூகத்தின் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் அல்லர். மார்க்ஸ் பெர்னாண்டோ சிங்களவராக இருந்தபோதும் அவர் ஒரு சிங்கள கராவ (தமிழில் கரையார் சமூகம்) சாதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் தெரிவாவதை பொறுக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
மார்கஸ் பெர்னாண்டோ |
அந்த நேரத்தில் ஆங்கில ஆட்சியாளர்கள் மத்தியிலும் செல்வாக்குள்ள ஒரு கொவிகம சாதி அல்லது அதற்கு நிகரான சாதியைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்த அந்த மேட்டுக்குடியினர் ஓடித்திருந்தார்கள். அவர்களின் முதல் தெரிவாக இருந்தவர் இராமநாதன் தான். அவர் தான் சிங்கள கொவிகம சாதிக்கு நிகரான தமிழ் “கொவிகம” (வேளாள) சாதி. இராமநாதனும் அதனை ஒத்துக்கொண்டார். ஆக இந்த நேரத்தில் அவர்களுக்கு இனம், மதம், மொழி என்பவற்றால் வேறுபட்டாலும் பரவாயில்லை. சாதியால் சமமான ஒருவரே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்கிற சாதியாதிக்கச் சிந்தனையே அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. இனத்துவத்தை விட சாதி அடையாளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காலமது.
அப்படித்தான் மாக்கஸ் பெர்னாண்டோவைத் தோற்கடித்தார்கள்.
1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தல் நடந்தபோது முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். மார்கஸ் பெர்னாண்டோவை சிங்கள மேட்டுக்குடியினர் தோற்கடித்து இராமநாதனை வெல்லச் செய்ததன் தலையாய காரணம் “சாதியில் குறைந்த” ஒருவர் தமது பிரதிநிதியாக வந்து விடக்கூடாது என்பதாலும், அந்த இடத்துக்கு இராமநாதன் ஒரு தமிழராக இருந்தாலும் ஒரு உயர்த்தப்பட்ட வெள்ளாள சாதியைச் சேர்ந்தவரே தெரிவாக வேண்டும் என்கிற விடயம் தான்.
மீண்டும் பத்திரிகை விடயத்துக்கு வருவோம்.
1911 ஆம் ஆண்டு தேர்தலின் போது இராமநாதனையும் அவரின் தரப்பையும் விமர்சித்து எழுதிய பத்திரிகை அன்றைய The Morning Leader. இப்பத்திரிகையை நடத்தியவர்கள் அன்றைய சொய்சா குடும்பத்தினர். சொய்சா குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் மார்க்கஸ் பெர்னாண்டோ. எனவே மாக்கஸ் பெர்னாண்டோவின் வெற்றிக்காகவும் அப்பத்திரிகை உழைத்தது. ஆனால் அத்தேர்தலில் படித்த சிங்கள பௌத்த - கொவிகம சாதி – உயர் வர்க்கக் கூட்டு அவரை திட்டமிட்டு தோற்கடித்தது. இராமநாதன் 1645வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதுடன் மாக்கஸ் பெர்னாண்டோ 981 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இராமநாதன் புதிய சட்டசபைப் பிதிநிதிகளோடு சேர்ந்து 16 ஜனவரி 1912 அன்று தான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதிலிருந்து அவர் ஒரு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்தார். அதன் விளைவு தான் சிலோனீஸ் பத்திரிகையின் உருவாக்கம்.
அதை வாங்குவதற்கு முன் வந்தார் அவர்களின் நண்பர் பிற்காலத்தில் பத்திரிகை உலா ஜாம்பவனாக எழுச்சியடைந்த டீ.ஆர்.விஜயவர்தன. ஆனால் 1917 ஆம் டிசம்பர் நடந்த அந்த ஏலம் அவர்களின் இலக்கான 21,000 ஆயிரம் ரூபா வரை செல்லவில்லை. அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு அதை பொறுப்பேற்கும்படி விஜேவர்தனவிடன் கோரிப் பார்த்தார்கள். ஆனால் விஜேவர்தன ஏலத்தின் போக்கில் சென்றார். அந்த ஏலமும் மெதுவாகவே நகர்ந்தது. 15,000 ரூபாவுக்கு விஜேவர்தன கேட்டதற்குப் பின்னர் எவரும் கேட்கவில்லை. இறுதியில் 16,000.00 ரூபாவை அவர்களுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழங்கிவிட்டு டீ.ஆர்.விஜேவர்தன அப்பத்திரிகையை வாங்கினார்.
இலங்கை பத்திரிகை உலகின் ஜாம்பவானாக அறியப்பட்ட டீ.ஆர்.விஜயவர்தன அப்பத்திரிகையை வாங்கி The Ceylon Daily News (சிலோன் டெய்லி நியூஸ்) எனப் பெயரிட்டு புதிய தோற்றத்துடன் வெளியிடவும் தொடங்கினார். 03 ஜனவரி 1918 ஆண்டு அதன் முதலாவது பத்திரிக்கை வெளியானது. முதல் பத்திரிகையில் சேர்.பொன் அருணாச்சலத்தின் உரையோடு வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை தான் இன்றும் தொடர்ச்சியாக வெளிவரும் Daily News (டெயிலி நியூஸ் ஆனது).
இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் பெற்று இயங்கிய காலம் தான் இது. எனவே அப்போது இந்த ஆங்கிலப் பத்திரிகையின் தேவை நிறைவே உணரப்பட்டது. சுதேசிகளுக்கும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குமான உரையாடலுக்கான ஒரு பாலமாக இந்த பத்திரிகை முயற்சிகள் இருந்தன. இதே காலத்தில் சிங்களப் பத்திரிகைகள் மனிங் சீர்திருத்தத்துக்கு தமிழர் தரப்பில் மேற்கொண்ட முன்மொழிவுகளையிட்டு கடும் எதிர்ப்பையும், இனவாத விஷமங்களையும் வெளியிட்டன. அநகாரிக தர்மபால அருணாச்சலம் போன்றோரின் முன் மொழிவுகளை எதிர்த்து இனவாதம் கக்கியதுடன் “சிங்கள நாடு சிங்களவருக்கே” என்று கோஷம் எழுப்பினார். (3)
அருணாச்சலம் 1921 ஆம் ஆண்டு சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு அதே ஆண்டு தமிழர் மகா சபையை ஆரம்பித்தபோது தமிழர் தரப்புக்கென ஒரு பத்திரிகை அவசியம் என்று உணர்ந்தார். 1923.09.20 அன்று வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையில் இது பற்றிய செய்தி ஒன்று வெளிவந்திருக்கிறது. அதில்;
“இலங்கைத் தமிழர் மகா சபை: - சென்ற சனிக்கிழமையன்று கொழும்பிலே சேர் பொ.அருணாசலமவர்களின் அக்கிறாசனாதிபதித்தியத்தின் கீழ் இலங்கைத் தமிழர் மகாசன சபைக் கூட்டமொன்று கூட்டப்பட்டது. மேற்படி சபையின் நோக்கங்களையும் முயற்சிகளையுங் கொண்ட ஒரு அறிக்கைப் பத்திரம் வாசித்த பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப் பிரதமாசிரியர் மிஸ்டர் நெவின்ஸ் செல்வத்துரையாவர்களும், பிறக்டர் ஸ்ரீ க.சிதம்பரநாதனவர்களும் சிறந்த உபந்நியாசங்கள் செய்தனர். பல நிர்ணயங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கொழும்பிலே தமிழர் பொருட்டு ஒரு தினசரிப் பத்திரிக்கை ஆரம்பித்து நடத்தப்படுதல் வேண்டுமென்பதே அவற்றுள் விசேஷமான நிர்ணயமாகும்.”
என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறது. அதன்படி அக்கூட்டம் 15.09.1923 அன்று நிகழ்ந்திருக்கிறது என்று கணிக்க முடிகிறது.
இதில் இன்னொரு விசேடமும் உண்டு. அதே பத்திரிகையில் “உலகம் பலவிதம்” என்கிற தலைப்பில் வெளியான கட்டுரையில் அப்படி ஒரு தினசரிப் பத்திரிகையின் தேவையை உணர்த்தி ஒரு விரிவான கட்டுரை வெளியாகியிருக்கிறது. (4)
இந்த செய்தி வெளிவந்து நான்கே மாதங்களில் 1924 ஆண்டு 9 ஜனவரி அருணாச்சலம் மறைந்துவிட்டார்.
முதலில் அக்கட்டுரையை விரிவாகப் பார்ப்போம்...
உலகம் பலவிதம்.
சென்ற வாரம் கொழும்பிலே ஸேர் பொ. அருணாசலமவர்களை அக்கிராசன ராகக்கொண்டு கூடிய தமிழர் மகாசபை யில், தமிழர் சட்கென ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒவ்வொரு தினசரிப்பத்திரிகை ஆவசியகம் தலைநகரில் ஈடாத்தப்படல் வேண்டுமென்றவிஷயமும் பேசப்பட்டது. தமிழர்களாகிய நாம் சனத் தொகையிலன்றி வேறு எவ்வாற்றானும் சிங்களரிற் குறைந்தவர்களல்லே மெனவும், எங்க ளுக்கு அரசியற் சலாக்கியங்கள் பல வேண்டுமெனவும் பேசிக் கொண்டும் மற்றுஞ் சாதியினருடனும் அரசினருடனும் வாதாடிக்கொண்டுத் திரிகின்றேம். ஆனால் பத்திரிகை நடாத்தும் ஒரு விஷயத்தில் 'மாத்திரம் நாங்கள் எல்லாச் சாதியாரிலுக் கடையான நிலையிலிருக்கின்றேம், கொழும்பில தமிழரைத் தவிர மற்றுஞ் சாதியாரெல்லாராலும் தத்தம் குறை முறைகளையெடுத்து அரசினருக்கு விண்ணப்பஞ் செய்தற்கும் தங்கள் குறைகளை நீக்கிக்கொள்வதற்கும் தங்களைப் புகழ்தற்கும் மற்றுஞ் சாதியினரை யிகழ்தற்கும் சாதனமாகப் பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் தமிழர்களுக்கென ஆங்கிலத்திலாயினும் தமிழிலாயினும் கொழும்பில் இப்பொழுது ஒரு பத்திரிகை இல்லாதிருத்தல் பெரிதும் வெட்கமான விஷயமாகும். கொழும்பிலே தமிழ்ப் பாஷையிலும் ஆங்கில பாஷையிலும் எத்தனையோ பத்திரிகைகள் தமிழரால் ஆரம்பித்துச் சிலகாலம் மாத்திரம் நடத்தப்பட்டுப் பின்னர் இடையில் நின்றுவிட்டன. இதற்குக் காரணம் என்ன? இவர்களிடத்திற் பொருளில்லையா? விவேகமில்லையா? மற்றவில்லையா? ஏற்று வாசிக்கச் சனங்களில்லையா? இவைகளெல்லாமுண்டு; மற்றுஞ் சாதியாரால் நடத்தப்படும் பத்திரிகைகளிற் பலவற்றை ஆதரித்து வருபவர்கள் நந்தமிழ் மக்களேயாவர். பணம் கொடுத்துத் தங்கள் சாதியாரை ஓயாது வையும் பத்திரிகைகளைப் போஷித்து வருபவர் தந்தமிழ் மக்களேயாவர், கோடாலிக் காம்பு போல், சிங்களருடனும் மற்றுஞ் சாதியாருடனுஞ் சேர்ந்து கொண்டு நந்தமிழரை வையும் சில தமிழ் நன்மக்களும் நம்மவருள்ளே இருக்கின்றார்கள். பின்னர், தமிழர்களிடத்தில் என்ன இல்லையென்று கேட்டால், சாதியபிமானமில்லை; ஐக்கியமில்லை! நியதியில்லை. இவைகள் நந்தமிழரிடத்திலுண்டாகுமேல் கொழும்பிலே ஒன்றல்ல, பல தமிழ்ப் பத்திரிகைகளையும் ஆங்கில பத்திரிகைகளையும் தமிழர் வைத்து நடத்தல் முடியும்.
கொழும்பிலே சிங்களராலும் மற்றுஞ் சாதியினராலும் பல தினசரிப் பத்திரிகைகள் நெடுங்காலமாக நடத்தப்பட்டுவருதலும் தமிழர்களால் மாத்திரம் பத்திரிகை தொடர்புத் தொடங்கி இடையிடையே வெளிவராது நின்று விடுதலும் எவரும் அறிந்த விஷயம். பத்திரிகைகள் இப்படி யிடையில் நின்றுவிடுதற்கு பத்திரிகைகளை நடத்துபவர் ஏற்று வாசிப்பவர் என்றும் இருபாலாரும் காரணராகவிருக்கின்றார்கள். நம் தமிழ் மக்கள் பெரும்பான்மையும் பாதிரிகளை ஆரம்பிக்கும் போது பொதுவாகத் தமிழரின் அபிவிருத்தியை நோக்கி உழைத்தலை விடுத்து கட்சி பிரித்து ஒருகட்சியாரை இகழ்வதும் ஒருகட்சியாரைப் புகழ்வதுமாகத் தங்களுக்குள்ளேயே பிரிவினைகளை உண்டாக்கிக்கொள்ளுகின்றார்கள். ஒரு சங்கமாகக்கூடி ஒரு பத்திரிகையை நடத்தும் பொழுது சங்க அங்கத்தவர்களுக்கிடையேயுள்ள அந்தரங்க பகைமையை ஒருவரோடு ஒருவர் பத்திரிகை வாயிலாகச் சாதிக்க முயன்று பத்திராசிரியரை இடர்ப்படுத்த தொடங்குகின்றார்கள், பத்திரிகாசிரியர் எறச்சொன்னாள் எருதிற்குக் கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற பிரகாரம் இருபக்கத்தாரையும் பிரியப்படுத்தவேனும் பகைக்க வேனும் முடியாதவராய், இருதலைக் கொள்ளியெறும்பு போல் இடர்ப்பட்டு ஈற்றில் பிச்சைவேண்டாந்தாயே, நாயைப் பிடி" என்ற யாசகன் சீலமாய் தமது உத்தியோகத்தையும் விட்டு அதில் தப்பிக்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. பேராசையென்னும் பெருங்காற்றும் தமிழர்களாகிய எங்களுக்கிடையே சாடையாக வீசி, இப்படிப்பட்ட நற்கருமங்களையெல்லாம் கீழே வீழ்த்திவிடுவது வழக்கம். சிங்களர் முதலிய மற்றுஞ்சாதியாரெனிலோ, தங்களுக்குள் எவ்வகையான உள்விரோதமிருந்தாலும் பொதுக்கருமங்களில் ஒத்துழைக்குங்குணம் பூண்டவர் களாயிருக்கின்றார்கள். இதனாலேயே அவர்கள் எக்கருமத்திலும் அனுகூலமுற இஃதின்மையாலேயே நாங்கள் எக்கருமத்திலும் பிரதிகூலமடைகின்றோம்.
***
சிலபத்திரிகைகள் ஒருவரை ஏசுவதற்கென்றே ஆரம்பிக்கப்படுகின்றன. குறித்தவரை ஏசியொழிந்தபின், எழுத வேறு விஷயமில்லானடியாற் சில சமையங்களில் நின்று விடுகின்றன. நெடுங்காலமாக நடைபெற்று வந்த ஒருபத்திரிகை பொருள் முட்டினாற் சிறிது தளர்வுறக்கண்டும், சில அபிமானிகள் அப்பத்திரிகைக்குத் தம்மாலியன்ற சகாயஞ்செய்து அதனை நன்னிலைக்குக் கொண்டுவர முயலாமல் தனித்தனி ஒவ்வொரு பத்திரிகையைச் சிலநாட்களுக்கு கடத்திவிட்டுப் பின்னர் நடவாதொழிந்த பத்திரிகாசியர் என்ற பேரோடு திருப்தியடைந்து இருந்துவிடுகிறார்,
இனி, பத்திரிகைகளை ஏற்று வாசிக்குந் தமிழபிமானிகளைப்பற்றிச் சில கூறுதும், கூறும் விஷயம் அனுபவசித்தமாதலின் நண்பர்கள் அவ்விஷயமாக எம்மைக் குறை கூறாரென நினைக்கின்றேம். உண்மையான அபிமானம் வைத்துப் பத்திரிகைகளை ஏற்று வாசித்து வருவோர் நந்தமிழ் மக்களுட் சிலரேயாவர். அநேகர் பத்திரிகைகளை ஏற்றுப் படித்தலும் இக்காலத்து நாகரிகத்திலொன்றாகும் என்றெண்ணிப் பத்திரிகைகளை வரவழைத்துப் படிக்கின்றார்கள். அநேகர் முகமனுக்காகப் பத்திரிகையேற்று வாசிக்கின்றார்கள். வேறு பலர் தம்மனைவி மக்கள் சுற்றத்தவர் பொருட்டுப் பத்திரிகைகளை வரவழைக்கின்றார்கள். சிலர் தாங்களும் பத்திரிகை எடுத்தாற்றான் தங்கள் பகுதியில் நிகழும் விவாகம் மரணம் வேலை மாற்றம் உத்தியோக உயர்வு என்னுமிவைகள் வேண்டிய காலத்திலே அப்பத்திரிகைகளில் வெளியிடப்படுமென்ற எண்ணத்தினாற் பத்திரிகையை ஆதரிக்கின்றார்கள். இன்னுஞ் சிலர் "பணங்கட்டுவது தவறப் போகின்றதா" இப்பொழுது பத்திரிகையை அழைப்பிப்போம், பணம் கேட்டால் வேண்டாம் என்று சொல்லுவோம் என்ற நோக்கத்துடன் பத்திரிகையை அழைப்பிக்கின்றார்கள். இப்படிப்பட்ட நோக்கங்களுடன் பத்திரிகை எடுப்போருடன் பத்திரிகை மானேஜரும் ஆசிரியரும் ஊடாடிக் கொள்வது வெகு கஷ்மாயிருக்கின்றது. பத்திரக் கிரயத்தைப் பாக்கியின்றி அனுப்பும்படி இவர்களுட் சிலருக்கு எழுதினால், உடனே "உமது பத்திரிகையை அனுப்புவதை நிறுத்தும்." என்று ஒரே வாக்கியத்திற் கருமத்தை முடித்துவிடுகின்றார்கள். பத்திரிகை எடுக்கும் ஒருவர் பகுதியில் ஒரு மணமேனும் மரணமேனும் நிகழ்ந்துவிட அதனைப் பத்திரிகாசிரியர் தரமாக விசாரணை செய்து பத்திரிகையில் வெளியிடத் தவறினால், "உமது பத்திரிகை வேண்டாம்' என்று தெரிவித்து விடுகின்றார்கள்; ஒரு பத்திரிகாபிமானி செய்த தானசதருமத்தை நாம் பத்திரிகையில் வெளியிடத் தவறினால் உடனே அவர் உங்கள் பத்திரிகையை ஏற்றுவாசித்தென்ன, அதில் ஒரு புதினமுமில்லை, பத்திரிகை அனுப்பவேண்டாம்' என்று விடுகின்றார். வேறு சிலர் தங்கள் கொள்கைக்கு மாறாகப் பத்திரிகையில் ஏதும் எழுதினால் அதனை நிராகரித்து எழுதுவதை விடுத்துப் பத்திரிகை வேண்டாமென்று விடுகிறார்கள். பத்திரிகைக்கு விஷயதானஞ் செய்வோர் சிலர் பிறரை வரைவின்றிக் கண்டித்து, குதர்க்கம்களை யெழுதியும், திருத்துதற்கரிய பிழைகளைப் பொதிந்தும் கடிதங்கள் அனுப்ப பத்திராசிரியர் அவற்றைப் போடப் பின் விற்க, உடனே பத்திரிகை வேண்டாம், என்று நிறுத்திவிடுவார்கள் ; ஒழிந்தசிலர் பத்திரிகாசிரியர் பொதுவாக ஒருவியாசத்தை யெழுதவும், அந்தக்குறைகள் தம்மிடத்திற் காணப்படின் தம்மைக்குறித்தே அப்படி எழுதப்பட்டதென நினைத்துப் பத்திரிகாசிரியரோடு விரோதம் பாராட்டுகின்றார்கள். இவ்வாறான பல வசதியீனங்கள் இன்னமும் பத்திரிகாசிரியருக் குண்டு. அவற்றையெல்லாம் இங்கே வெளியிடின் பெரும் கசப்புண்டாகும்.
***
இவைகளை தமிழ்மக்களாகிய நாங்கள் பத்திரிகைகளைக் கிரமமாக நடத்துவதற்கு இடையூறாகவுள்ள காரணங்களாம். யானும் ஒரு தமிழகத்தான் என்னும் அபிமானம் பற்றி இக்குறைகளை எடுத்துக் காட்டியுள்ளேனாதலின் என்னை ஒருவரும் குறைகூறார். மேலே சொல்லப்பட்ட இக் குறைகளையெல்லாம் நாம் இனியேனும் அகற்றிவிடல்வேண்டும். உண்மையான அபிமானத்தை வகிக்கவேண்டும் சாதிய பிமானம் பெரிதும் தலைப்படுதல் வேண்டுமே. எங்கள் ஐக்கியஞ் சிறிதுமில்லயெனக் கண்டே சிங்களவர் எங்கள் சனத் தலைவர்களைத் தங்கள் பத்திரிகைகளில் வரைவின்றி வைது வருகின்றார்கள். ஒரு தமிழனை அந்நியர் காரணமின்றி வைதால் மற்றும் தமிழர்களும் தனித் தனி தம்மை வைததாககமதித்து, அங்ஙனம் வைவாரைக் காரணங்காட்டி அடக்க முயலல் வேண்டும். இல்லையேல் அன்னார் தொடர்பை அறவே அகற்றிவிடுதல் வேண்டும். ஸேர் பொ. இராமநாதனவர்கள் , ஸேர். அருணாசலமவர்கள் முதலிய சனத்தலைவர்களையும் தமிழ்ச் சாதியினரையும் கொழும்பிலுள்ள சிங்களப்பத்திரிகைகள் கண்டபடி வைதுவரவும் நமது தமிழ் மக்கள் அப்பத்திரிகைகளை வரவழைத்து நானமின்றிப் படித்து வருகின்றார்கள். லோகமானிய திலகர் தேகவியோகமானகாலத்து இறந்த அம்மகானைக் குறித்து ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட இந்திய பத்திரிகை ஒன்று குறை கூறியதனிமித்தம், இந்துக்கள் பலர் அந்தப் பத்திரிகைப் பிரதிகளைத் தகனஞ்செய்து கங்கைக்கரையிற் காடாற்றிப் பிரஷ்டஞ்செய்து விட்டனரென்பதை முன்னர் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளோம், அப்பத்திரிகை அரைபக்கச் சந்திரன் போற் குன்றிவிட்டது. அவ்விதமான அபிமானம் இலங்கைத் தமிழ்மக்களிடத்தில் ஏன் உதிக்க வொண்ணாது. கோடரிக் காம்பு போல்வார் எங்குமுண்டு. அவரை நாம் பொருட்படுத்தாமல், இனியேலும் எங்களிடத்துள்ள குறைகளை அகற்றி, கூடிய விரைவில் கொழும்புமாநகரிலே ஒரு தினசரி ஆங்கிலப்பத்திரிகையும் தமிழ்ப் பத்திரிகையும் நின்று நிலவும்படி செய்தல் வேண்டும், முதல் இந்தக் குறையை நீக்கிவிட்டுப் பின்னரே தமிழ் மக்கள் சுதந்திரங்களின் பொருட்டு வாதாடல் வேண்டும்.
திருஞானசம்பந்தப்பிள்ளை |
இதில் திருஞானசம்பந்தப்பிள்ளை
- தென்னிலங்கையின் சிங்களவர்கள் ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து சிங்களப் பத்திரிகைகளினூடாக தமிழ்த் தலைவர்களையும், தமிழர் நலனையும் எதிர்த்து பத்திரிகைளில் வெளியிடுகிறார்கள் என்றும் அதை எதிர்கொள்ள வழிகள் வேண்டும் என்கிறார். அவர்களின் பலம் ஒற்றுமையென்றும், நமது பலவீனம் ஐக்கியமில்லாதது என்கிறார். அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதை விடுத்து குழு குழுவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்குகிறார்கள் என்கிறார்.
- சிங்களவர்களுடன் சேர்ந்து நம் தமிழ் மக்களை எதிர்த்து இயங்குகிறார்கள் என்கிறார்.
- இந்தியாவில் திலகர் இறந்தபோது ஆங்கிலேயப் பத்திரிகை அவரைத் தூற்றி எழுதியதற்காக மக்கள் அப்பத்திரிகையை தெருவில் வைத்து தீயிட்டதை சுட்டிக்காட்டி ஏன் நாம் அப்படிச் செய்வதில்லை என்கிறார்.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழர்களின் குரல் ஒலிக்கக் கூடிய பத்திரிகைக்கான முன்மொழிவை வரவேற்று, அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ஒன்றல்ல பல பத்திரிகைகளை நடத்தும் பலம் தமிழர்களுக்கு உள்ளதென்கிறார்.
- தமிழ்ப் பத்திரிகைகள் நடாத்துவதில் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினை குறித்து விளக்குகிறார்.
- சந்தாதாரர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளால் பத்திரிகைகளை வேண்டாம் என்கிறார்கள் என்று தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகிறார்.
- அது தலைநகர் கொழும்பில் வரவேண்டும் என்றும் விதந்துரைக்கிறார்.
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பித்து விட்டன. உதயதாரகைப் பத்திரிகை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. அது ஒரு தினசரி பத்திரிகை அல்ல. அது கிறிஸ்தவ மிஷனரிகளால், கிறிஸ்தவ பிரச்சார வழிமுறைகளோடு வெகுஜன விடயங்களையும் தாங்கி வந்தப் பத்திரிகையாக இருந்தது. அதன் பின்னர் வெளிவந்த பத்திரிகைளும் கூட ஒன்றில் கிறிஸ்தவ மத சார்பாகவே அல்லது அதற்குப் போட்டியாக சைவப் பிரச்சார – சைவ தரப்பினரால் வெளியிடப்பட்டவையாகவும் தான் வெளிவந்தன. இதுவே நீண்ட காலம் நிலைத்து நின்ற நிலை.
1900 இலிருந்து 1930 வரையான காலத்தை எடுத்துக்கொண்டால் 1915 – 1930 க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளை விட 1900 – 1915 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் அதிகப் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன.(5) குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் அதிகம் செல்வாக்கு செலுத்திய பத்திரிகையாக இந்து சாதனம் பத்திரிகையே இருந்திருக்கிறது. மேலும் உதயதாரகை பத்திரிகையும் இறங்குமுகமாக போய்க்கொண்டிருந்த காலம். எனவே ஒரு செல்வாக்கு பெற்ற பத்திரிகையான “இந்து சாதனம்” பத்திரிகையிலிருந்து செல்வாக்கு பெற்ற அனுபவசாலிப் பத்திரிகையாளரான திருஞானசம்பந்தப்பிள்ளை கொழும்பில் தமிழ் பத்திரிகை தொடக்குவதில் என்ன கஷ்டம் என்று வினவியதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
கொழும்பில் 1902 இல் வெளிவந்த “திராவிட கோகிலம்” பத்திரிகை சென்னையை முகவரியாகக் கொண்டு தான் வந்தது. அதிகம் தமிழக விவகாரங்களைத் தாங்கி வந்தது. அதன் பின்னர் “திராவிடன்”, “ஆதி திராவிடன்” “திராவிட மித்திரன்”, போன்ற தலைப்புகளைத் தாங்கிய பத்திரிகைகள் உட்பட இன்னும் சில பத்திரிகைகள் கொழும்பில் இருந்து இந்திய வம்சாவளி வாசகர்களை இலக்கு வைத்து வெளிவந்தாலும் அதிகமாக அவை தமிழக விடயங்களைத் தாங்கித் தான் வெளிவந்தன.(6) இப்படி கொழும்பில் இருந்து சில பத்திரிகைகள் வெளிவந்தாலும் 1930 ஆம் ஆண்டு வீரகேசரி என்கிற பத்திரிகை வெளிவரும் வரை ஒரு நிலையான வெகுஜன நாளிதழ் வரவில்லை என்றே கூறலாம். இலங்கையில் முதலாவது பத்திரிகை Colombo Journal வெளியாகி சுமார் நூறாண்டுகளில் தான் வீரகேசரி தோன்றியது. ஈழகேசரியும் இதே ஆண்டு தான் தோன்றியது என்றாலும் அது ஒரு நாடளாவிய தேசிய பத்திரிகையாக திகழவில்லை. அதுவரை சிங்களத் தரப்பு பத்திரிகைகள் மூலம் தொடுத்துவந்த தாக்குதல்களை எதிர்கொள்ள குறிப்பான பத்திரிகைகள் வெளிவரவில்லை என்றே கூறவேண்டும்.
கீழ் வரும் பட்டியலின் மூலம் இந்தக் காலப் பகுதியில் வெளிவந்த சிங்களப் பத்திரிகைகளின் தொகையை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.(7) இவற்றில் கணிசமான பத்திரிகைகள் சிங்களத் தேசியவாத உணர்வைத் தூண்டுகிற பத்திரிகைகளாகவும், அதுவே நாளடைவில் சிங்கள பௌத்தரல்லாத சமூகங்களின் அபிலாஷைகளை மறுக்கிற/எதிர்க்கிற பத்திரிகைகளாகவும் இயங்கின. அப்படிப் பார்க்கும் போது அவற்றுக்கு எதிர்வினையாற்றும் பலமான தமிழ்ப் பத்திரிகை கொழும்பில் இருக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அருணாச்சலத்தினதும், தமிழர் மகாசபையினதும் தமிழ் பத்திரிகை தொடக்குவதற்கான முயற்சிக்கு அதிக அளவு தேவைகளும், நியாயங்களும் இருந்திருக்கிறது. ஆனால் அது நிறைவேறவில்லை. அருணாச்சலத்தின் மறைவைத் தொடர்ந்து இந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. அவருக்குப் பின் தமிழர் மகாசபையும் தேய்ந்து, மறைந்து அழிந்தது போலவே இந்த பத்திரிகை முயற்சியும் அப்படியே காற்றோடு கரைந்துவிட்டது.
தமிழர் மகா சபை இலங்கை முழுவதற்குமான இயக்கமாக அவர் தொடங்கினாலும், வடக்குத் தமிழர்களே அதில் அதிகம் ஈடுபாடு காட்டினர். ஆனால் அதன் தொடக்கக் கூட்டம் கொழும்பில் தான் நிகழ்ந்தது. அதுபோல பத்திரிகையையும் கொழும்பில் இருந்து வெளியிடுவதற்குத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் ஆங்கிலத்திலும், தமிழுலும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருகிறது. இதன் மூலம் ஒன்று உறுதியாகத் தெரிகிறது. தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வுக்காக தமிழுலும், சிங்கள, ஆங்கில சக்திகளுக்கு வினையாற்ற ஆங்கிலத்திலும் கொண்டுவர இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அது நிகழ்ந்திருந்தால் சிலவேளை இருபக்க உரையாடலுக்கான நல்லதொரு சந்தர்ப்பமாகவும், ஆரம்பமாகவும் அன்றே அது இருந்திருக்கும். பரஸ்பர அரசியல் தெளிவை எட்டுவதற்கும், சக சமூகங்களுக்கு இடையில் கருத்துப்பறிமாறலையும் அன்று ஏற்படுத்தியிருக்கும். அதுவே சிலவேளைகளில் சிக்கல்களை தணித்திருக்கும், ஏன் தீர்த்தும் கூட இருந்திருக்கும். ஆரம்பத்திலேயே அது நிகழ்ந்திருந்தால் சிலவேளை அதன் பிறகு இனப்பிரச்சினை “தேசியப் பிரச்சினையாக” எழுச்சியடையாமலும் கூட இருந்திருக்கும்.
1860 க்கும் 1916 க்கும் இடையில் வெளிவந்த சிங்களப் பத்திரிகைகள்.
- ලංකාලෝකය - 1860, 1886 - லங்கா லோகய
- ලක්මිණි පහණ - 1862,1864,1865,1881, 1883 - லக்மினி பஹானா
- ලක්රිවි කිරණ - 1883 - லக்ரிவி கிறன
- අරුණෝදය - 1863, 1895 - அருணோதய
- රුවත් මල්දම - 1866. 1889 - ருவத் மல்தம
- ඥානාර්ථ පදීපය - 1866 - ஞானார்த்த ப்ரதீபய
- සත්ය විනිශ්චය - 1867 - சத்ய வினிஷ்வய
- සත්ය මාර්ගය - 1867 - சத்ய மார்கய
- කවට කතිකයා - 1872 - கவட்ட கத்திகயா
- සත්යලංකාරය - 1873 - சத்யலங்கார
- සත්ය සමුච්චය - 1873, 1887 - சத்ய சமுச்சய
- සත්යලංකාරය - 1874 - சத்யாலங்காரய
- කනමැදිරියා - 1876 - கனமெதிரிய
- සිතුමිණි රුවත - 1876 - சிதுமினி றுவத
- ලංකා කවටයා - 1880, 1883 - லங்கா கவட்டயா
- සරසවි සඳරැස - 1880 - சரசவி சந்தரெச
- ලක්මිණි කිරුළ - 1881 - லக்மினி கிருல
- ලංකෝපකාරය - 1881 - லங்கோபகாறய
- සත්යාලෝකය. - 1881, 1893 - சத்யாலோகய
- සත්යාර්ථ ප්රකාශය - 1881 - சத்யார்த்த பிரகாஷய
- සිංහල මාණවකයා - 1881 - சிங்ஹல மானவகயா
- ක්රිස්තියානිවාද විහාතතිය - 1882 - கிரிஸ்தியானிவாத விபாதனிய
- කසය - 1883 - கசய
- කවට දක්ෂයා - 1883 - கவட்ட தக்ஷயா
- කවට සංග්රහය - 1883 - கவட்ட சங்கிராய
- ලක් විදුරවිය - 1883 - லக் விதுரவிய
- වෙළඳ මිත්රයා - 1884 - வெலந்த மித்றயா
- සත්ය සම්ය දර්ශනය - 1884 - சத்யா சம்ய தர்ஷனய
- සත් සිළුමිණ - 1884 - சத் சிலுமினி
- දිනකර ප්රකාශය - 1885 - தினகர பிரகாஷய
- දැනුමැති කවටයා - 1885, 1895 - தெனுமதி கவட்டயா
- දිනාලංකාරේ - 1886 - தினாலங்காரே
- කවට අඤජනම - 1886 - கவட்ட அக்ஞஜனம
- ප්රවෘත්ති සංග්රහව - 1886 - ப்ரோர்த்தி சங்கிராவ
- ලක්නුබමිණ - 1887 - லக்னுபமின
- රිවිරැස - 1888, 1893, 1897 - ரிவிரெச
- පියමුතුහර - 1888 - பியமுதுஹர
- හෙළදිවී රුවත - 1888 - ஹெலதிவி றுவத
- කවට මිත්රයා - 1889 - கவட்ட மித்றயா
- සත්යලෝකය - 1889 - சத்யலோகய
- කවට දූතයා - 1889, 1890 - கவட்ட தூதயா
- කවට දක්ෂයා - 1889 - கவட்ட தக்ஷயா
- ක්රිස්තියානි මිත්රයා - 1889 - கிறிஸ்தியானி மித்றயா
- ලංකා කවට පත්රය - 1890 - லங்கா கவட்ட பத்றய
- ලංකා කවට මිත්රයා - 1891 - லங்கா கவட்ட மித்றயா
- කවට නරේන්ද්රයා - 1891 - கவட்ட நரேந்திறயா
- හිරුරැස - 1892 - ஹிருரெச
- සිරිලක සිතුමිණ - 1893, 1894 - சிரிலக சிதுமின
- කල්යානෝදය - 1893 - கல்யாநோதய
- කවට රාළහාමි - 1893 - கவட்ட ராலஹாமி
- කල්යාණශීය - 1893 - கல்யாணஷீய
- පවුලේ මිත්රය - 1893 - பவுலே மித்றயா
- කවටයා - 1894 - கவட்டயா
- සත්යප්රිය - 1894 - சத்யபிரிய
- සත්සිළුමිණිරැස - 1894 - சத்சிலுமினிரெச
- කවිමිණිනිදන - 1894 - கவிமினிநிதன
- වෛද්ය ශාස්ත්රාලංකාරය - 1894 - வைத்ய ஷாஸ்திராலங்கார
- සත්යප්රදීපය - 1895 - சத்யப்ரதீபய
- සතෙයාදය - 1895 - சதயாதய
- දිනපතා ප්රවෘත්ති - 1895, 1900 - தின்பதா ப்ரோர்தி
- ලංකා ප්රදීපය - 1895, 1909 - லங்கா பிரதீபய
- දුදන බැටේ - 1895, 1902 - தூதன பெடே
- ශ්රී ලංකොනතංසය - 1895 - ஸ்ரீ லங்கொனதங்சய
- සත්මිණ කිරුළ - 1895 - சதமின கிருல
- ලංකා මිත්රයා - 1895 - லங்கா மித்றயா
- කවට කතුර - 1895 - கவட்ட கத்துற
- බැප්ටිස්ට් ප්රවෘත්ති - 1895 - பெப்டிஸ்ட் ப்ரோர்தி
- සත් සරසවිය - 1896 - சத் சரசவிய
- විද්යා ප්රදීපය - 1897 - வித்யா ப்ரதீபய
- චූළාලංකාර - 1897 - சூலாலங்கார
- ශ්රී ලංකොදය - 1897 - ஸ்ரீ லங்கொதய
- කල්යාණාලෝකය - 1898 - கல்யாணாலோகய
- සත්බස - 1899 - சத்பச
- සුවරිතොදය - 1899 - சுவரிதொதய
- භක්ති ප්රබෝධනය - 1899 - பக்தி பிரபோதய
- මොරටු තරේන්ද්රයා - 1899 - மொரட்டு நரேந்திறயா
- මෙතොදිස්ත ප්රවෘත්ති - 1900 - மெதொதிஸ்த ப்ரோர்தி
- යුධ ඝෝෂාව - 1900, 1904 - யுத கோஷாவ
- සිතුමිණ - 1900 - சிதுமினி
- සිම්ල සමය - 1901 - சிம்ல சமய
- සරසවිය - 1902 - சரசவிய
- කවට අඟණ - 1902 - கவட்ட அங்கன
- කවට රජා - 1903 - கவட்ட ரஜா
- ලංකා පුංචිහේවායා - 1903 - லங்கா புஞ்சிஹேவாயா
- අභිනව කවට අඟන - 1903, 1910 - அபிநவ கவட்ட அங்கன
- විදුමිණිරැස - 1904 - விதுமினிரெச
- සිංහල බෞද්ධයා - 1906 - சிங்ஹல பௌத்தயா
- විදුලිය - 1907 - விதுலிய
- රිවි කිරණ - 1907 - ரிவி கிறன
- විද්යාහරණය - 1907 - வித்யாஹரணய
- සිංහලයා - 1908 - சிங்ஹலயா
- ලංකාතාදය - 1908 - லங்காதாதய
- ඉර උදාව - 1908 - இர உதாவ
- කවට අන්දරේ - 1908 - கவட்ட அந்தரே
- සත්සඳකිරණ - 1908 - சத்சந்தகிறன
- සිරි අනුරාපුර පුවත - 1909 - சிறி அனுராபுர புவத்த
- හිතවාදී - 1909 - ஹிதவாதி
- කවට තරුණයා - 1909 - கவட்ட தருனயா
- දිනමිණ - 1909, 1915 - தினமின
- සිංහල කවටයා - 1910, 1913 - சிங்ஹல
- කවට රාළ - 1910 - கவட்ட றால
- සිංහල ජාතිය - 1910 - சிங்ஹல ஜாதிய
- ආර්ය සිංහල වංශය - 1912 - ஆர்ய சிங்ஹல வங்ஷய
- ලක්මිණ - 1912, 1915 - லக்மினி
- කවට තිලක - 1912 - கவட்ட திலக்க
- ලක් රුවත - 1914 - லக் றுவத
- සිහල කුළඟන - 1916 - சிஹல குலங்கன
- සරසවි සඳරැස සහ සිහල සමය - 1916 - சரசவி சந்தரெச சஹா சிஹல சமய
- ශ්රී ලංකා කවටයා - 1916 - ஸ்ரீ லங்கா கவட்டயா
உசாத்துணை :
- M.Vythilingam, “Ramanathan of Ceylon: The Life of Sir Ponnambalam Ramanathan”, Volume II, 1977.
- පී.එම්.සේනාරත්න, ලංකා දේශපාලනයේ සේනානායකවරු (இலங்கையின் அரசியலில் சேனாநாயக்கர்கள்), சூரிய பதிப்பகம், 2013
- T. Sabaratnam, The Sri Lankan Tamil Struggle, Chapter 16: The Arunachalam Factor, , November 26, 2010 (A journalist who reported Sri Lankan ethnic crisis for over 50 year)
- அக்கட்டுரையை எழுதியவர் (ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை) அவர் இந்து சாதனம் பத்திரிகையில் நாற்பது ஆண்டுகள் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். “உலகம் பலவிதம்” என்கிற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக பல கட்டுரைகளை எழுதிவந்தார். ஆனால் அக்கட்டுரைகளை யார் எழுதினார்கள் என்பதை அப்போது வெளியிடவில்லை.
- றமீஸ் அப்துல்லா, இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841 - 1950), குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை - 2012.
- சோமேசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் (1900 - 1915), குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை - 2016.
- නිහාල් රන්ජිත් ජයතිලක, සිංහල පුවත්පත් සහ වෙළඳ දැන්වීම්කරණය (சிங்கள பத்திரிகைகளும், வர்த்தக விளம்பரங்களும்), 1860-1916, PHD Media research paper, University of Sri Jayawardenapura, 2005.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...