ஜனவரி, ஆண்டு 1856. காலனிய யாழ்ப்பாணத்தில் ஊழியம் செய்தமெதடிஸ்த பாதிரியார் ஒருவருக்கும் காலனியாக்கப்பட்ட குழப்படிக்காரர் ஒருவருக்கும் கடுப்பான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. உடனடித் தூண்டுதலான காரணம் இந்த குழப்படிக்காரர் பதிப்பித்த சிறு நூல். இறையியல் எறிகுண்டான இந்தப் பிரசுரம் பாதிரியாரின் மதப்பரப்பலுக்குத் தடையாகவிருந்தது; அதுமட்டுமல்ல கிறிஸ்தவத்தின் அடிப்படைச் சித்தாந்தக்கூறுகளை விசாரித்தது. பாதிரிகளின் இரட்டைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஆண்டைகளுக்கு வரும் ஆணவத்துடனும் ஆத்திரத்துடனும் எழுதிய கடிதம், மேலோர் கீழோரிடத்தினருக்குக் காட்டும் பொய்யான பாசம், மிரட்டல், மன்றாட்டம் கொண்ட ஒரு கலவை. அந்தப் பாதிரியாரின் ஆங்கில வார்த்தைகள் மெலிதான மொழிபெயர்ப்பில்: 'இந்தத் துண்டு பிரசுரத்தை எழுதியவன் நீ. உண்மையைச்சொல்லிவிடு. அல்லா விட்டால் உன்னைப் பற்றி ஊராருக்கு அறிவிப்பேன்'.
அந்த அனாமதேயக் காலனியக் குழப்படிக்காரர் ஆறுமுக நாவலர் (1823 - 1879). மதப் பரப்பாளருக்குத் தலையிடியைக் கொடுத்த பிரதி ஏதோ ஒரு பரியாரியாரின் வைத்தியக் கைநூல் போன்ற தலைப்பைக்கொண்ட நாவலரின் சைவதூஷணபரிகாரம். ஆறுமுக நாவலரை ஆக்கினைப்படுத்திய அந்தப் பாதிரியார் ஜான் வால்டன்.
19ஆம் நூற்றாண்டில் காலனிய யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரை ஒரு பெரிய ஆளுமை என்று சொல்வது தண்ணீர் ஈரமானது என்று சொல்வதைப் போன்றது. நாவலர் சம அளவில் ஆராதிப்பையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தக்கூடியவர். சர் முத்துகுமாரசாமி (The Dance of Shiva புகழ் ஆனந்த குமாரசாமியின் தந்தையார்) நாவலரை 'இந்துக்களின் இந்து' என்றார். அவருடைய எதிரிகள் அவரைப் 'பொய்யர்,' 'நா - அலர்', 'வித்தையில்லாதவன்' என்றார்கள். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொண்டது - சிலர் ஆர்வத்துடனும் சிலர் எரிச்சலுடனும் - 'சைவ சமயம் யாழ்ப்பாணத்தில் தொடர்வதற்குக் காரணம் நாவலர்.'
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி சமயக் கண்டன இலக்கியத்தின் வளமான நாட்கள். கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் இகழ்ந்தும் தாக்கியும் பகடி செய்தும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் உச்சம் நாவலரின் சைவதூஷணபரிகாரம்.
பிரதிகள், யாழ்ப்பாணப் பனைமரம் போல் தனித்து நிற்பவை அல்ல. அவற்றுக்குப் பின்னாலும் முன்னாலும் கதைகள் உண்டு. அவை சட்டென்று உதிப்பதில்லை. சைவதூஷண பரிகாரம் தனித்திருக்கும், தனிப்பட்ட பிரதி அன்று. அதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. நாவலர் அவரின் வீட்டு விராந்தையிலிருந்து திடீரென எழுதி முடித்ததுமல்ல. முதலில் அதன் பின்புலனைச் சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையின் பிரதான விஷயத்திற்கு வருகிறேன்.
ஆறுமுக நாவலர் சைவதூஷணபரிகாரம் எழுதுவதற்கு முன் 1843இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை பத்திரிகையில் சைவகுமாரன் நன்மதரபேசன் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போது அவர் பீட்டர் பெர்சிவல் பாதிரியாரோடு தமிழ் கிறிஸ்தவ வேத தமிழ் திருப்புதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு வயது 21. சைவதூஷணபரிகாரத்தில் நாவலர் எழுதிய பொருளடக்கத்தின் சில பொதுக் கருத்துப் படிவங்களையும் சைவ, கிறிஸ்தவ திருமறைகளிலிருந்து எடுத்துக்காட்டிய உதாரணங்களையும் அவரின் உள் எண்ணங்களையும் இந்தக் கடிதத்தில் காணலாம். சைவதூஷணபரிகாரம் நாவலரின் இந்த எண்ணங்கள் நீட்டப்பட்ட ஒரு தொடர்பகம் ஆகும்.
காலனிய நாட்களில் ஆங்கில ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் கீழை நாடுகளுக்கு வந்த கிறிஸ்தவ குருமார்களின் முக்கியப் பணி நற்செய்தி பரப்புவதுதான். அதில் அவர்கள் உக்கிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அதை நிறைவேற்ற இந்து மதத்தைப் பழித்தும், சைவ தெய்வங்களைக் கேவலமாக - முக்கியமாக சைவ கோயில் வழிபாட்டை வீணான, கீழ்நிலையான கடவுள் வணக்கம் என்று கூறியும் நூல்கள், பிரசங்கங்கள் மூலமாகப் பரப்புரை செய்துவந்தார்கள். நாவலர் அக்கடிதத்தில் தானும் அவரின் ஊரவர்கள் போல் சைவத்தை அனுசரித்து வந்தவர்களென்றும் மதப்பரப்பாளர்களின் தாக்குதலால் மனம் உணர்ச்சியடைந்து கிறிஸ்தவ மதத்தை ஆராய வேண்டும் என்ற ஆர்வத்துடன் வேதத்தை வாசித்ததினால் ஏற்பட்ட சமூச்சியங்களை (நாவலரின் வார்த்தை , அதன் அர்த்தம் 'சந்தேகங்கள்') அகற்றும் பொருட்டு இக் கடிதத்தை எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
உதயதாரகைக்குக் கடிதம் எழுதிய பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாவலர் சைவதூஷணபரிகாரத்தை எழுதினார். அதற்கான காரணத்தையும் அந்த நூலிலேயே எழுதியிருந்தார். சிவன் பிசாசு என்றும், சைவ வேதங்கள் பொய் என்றும், சைவ மார்க்கம் துர்மார்க்கம் என்றும், சைவர்கள் பிசாசுக்கு அடிமைகளென்றும் கிறிஸ்தவர்கள் எழுதியும் பிரசங்கம் பண்ணியும் வந்தார்கள். இவற்றில் சில சைவசமயத்தை நிந்தித்த நூற்கள் 'குருட்டு வழி', மும்மூர்த்திலட்சணம்.' இவை பிரதிகளின் கொச்சிக்காய்ச் சம்பல்; இறையியல் காரமானவை.
சைவதூஷணபரிகாரம் இரு பாகங்களைக் கொண்டது. முதல் பகுதி சக சைவர்களுக்கும் இரண்டாவது பகுதி யாழ்ப்பாணத்தில் சுவிஷேச வேலை செய்த கிறிஸ்தவ குருமாருக்கும் எழுதப்பட்டது. சைவர்கள் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும், எப்படி மனங்கசிந்துருக - உரோமஞ்சிலிர்க்க - கண்ணீர் சொரிய தியானம் செய்யவேண்டும், எந்த நூல்களை வாசிக்க வேண்டும், பாதிரிமார்கள் சைவர்களின் மதத்தைப் பரிசித்தால் அவர்களின் வாயை எப்படி மூட வேண்டும் என்றெல்லாம் நாவலர் ஆலோசனை கொடுத்திருந்தார்.
இரண்டாம் பகுதியின் சூசீபத்திரத்தில் (பொருளடக்கம்) , 22 பிரகரணங்கள் (அத்தியாயங்கள்) பட்டியல்படுத்தப்பட்டிருக்கின்றன. நடுவிலும் இறுதியிலும் இரண்டு இடையிட்டுரைகளைப் புகுத்தியிருந்தார். நாவலர் உபயோகித்த பதம் விவேசனம் (உண்மை பொய் பிரித்துணர்தல்). இந்த இருபத்திரண்டு அத்தியாயங்களில் முதல் பதினான்கு ஆகம ஆலயவழிபாடு பற்றியது. மிகுதி சைவ வாழ்க்கை பாணி பற்றியது.
நாவலர் கையாண்ட இலக்கிய வழி, ஒப்பிடல் முறைமையாகும். கிறிஸ்தவ குருமார் எந்த சைவ ஆலய வழிபாடுகளை ஏளனம் செய்தார்களோ அவற்றுக்கு இணையான சம்பவங்களைக் கிறிஸ்தவ வேதத்திலிருந்து உதாரணங்களாக எடுத்துக்காட்டினார் அவர். பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களான யாத்திரகாமம் (25 & 37) லேவியராகமம் (17 & 24) எண்ணாகமம் (16, 19, 21) சங்கீதப்புத்தகம் (80). சாமுவேல் (6) போன்றவற்றில் நிறையவே விவரிக்கப்பட்டிருக்கும் யூத ஆலய வழிபாடுகளுக்கும் நல்லூர் கந்தசாமி கோயில் வழிபாட்டுக்கும் என்ன வித்தியாசமென்று கேட்டார். எங்களுக்கு இலிங்கம், உங்களுக்குத் தேவனைத் தொழுதுகொள்ளும் உடன்படிக்கைப் பேழை. சிவன் இலிங்கத்தில் அடித்திருத்தல் (நாவலர் தமிழ்ப் படுத்திய சமஸ்கிற சொல் adhi-stha) போல் உடன்படிக்கை பேழையில் எகோவா பிரசன்னமாகியிருக்கிறார். இலிங்கத்துக்கு முன் நாங்கள் சாஷ்டாங்கம் செய்வது போல் யோசுவா, தாவீது போன்றோர் அந்தப் பேழை முன் பிரதிட்டை பண்ணவில்லையா என்றார். நாங்கள் விக்கிரகத்திற்குத் தீபம் காட்டுகிறோம். அவ்வாறே வெள்ளைப்போளம், கலப்பில்லாச் சாம்பிராணி கடவுளுக்குப் பரிசுத்தத் தூபமாக்குவாயாக என்று யூதர்களுக்கு மோசஸ் சொல்லவில்லையா என்று வினவினார். சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் ஆண்டவருக்கு முன் தீபம் எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று லேவியராகம வசனத்தையும் எடுத்துக்காட்டினார். சிவன் கோயில்களில் நடக்கும் நடனங்களைக் கிறிஸ்தவர்கள் கேலி செய்தபோது தாவீது அரசன் கடவுளின் சன்னிதியில் நடனமாடியதை உதாரணம் காட்டினார். பூசை, உற்சவங்களின்போது சிவ சன்னிதியில் பலவகை வாத்தியங்கள் முழங்குவதை இகழ்ச்சியாகக் கருதியபோது தாவீது தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளை இட்டதை நினைவூட்டினார். புண்ணிய காலங்கள், விரதங்கள், திருவிழாக்களை அனுசரிப்பது வீண்செய்கைகள் என்று கிறிஸ்தவ குருமார்கள் கணித்தபோது நாவலர் லேவிராகமம் 23 இலிருந்து இவற்றை யூதர்கள் கடைப்பிடித்ததைச் சித்தரித்தார். யூதரின் புனித நாள், புண்ணிய காலங்களும் பண்டிகைகள் இந்த அத்தியாயத்தில் விபரிக்கப்படிருக்கின்றன. சிவாலய சேவைக்குச் சரீர சுத்தி செய்து 'தௌத' (தளர்ச்சியான) வஸ்திரம் தரிக்க வேண்டும். அதையே ஆரோனும் அவனுடைய புத்திரர்களும் சலத்தினால் ஸ்நானம் செய்து பரிசுத்த வஸ்திரங்களை அணிந்தார்கள். சரீரசுத்தி அவசியம் என்று உங்கள் சமய நூல் சொல்லும்போது எப்படி நாங்கள் செய்வது மட்டும் மடமையாகும் என்று கேட்டார்.
சைவர்கள் முண்டனம் (தலைசிரைக்கை) செய்வதையும், காவி வாஸ்திரம் தரிப்பதையும், சடைவளர்ப்பதையும் இகழ்ந்தபோது நாவலர் பவுல் நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடிவெட்டியதை நினைவூட்டினார். அர்ப்பணம் செய்துகொண்ட காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது; ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தன் தலைமுடியை நீளமாக வளரவிடுவான் என்ற பழைய ஏற்பாட்டு வசனத்தை ஞாபகப்படுத்தினார்.
இஸ்ரவேல் சந்ததியினர் இறையாட்சி சமீபிக்கும்போது மனம் திருந்துவதற்கு முரட்டுத்துணி உடுத்திச் சாம்பலில் உட்காரவேண்டியதை எடுத்துக்காட்டினார்.
சைவ கிறிஸ்தவ சமயங்களிடையே காணப்படும் ஒப்பீடுகளை எடுத்துக்காட்டிச் சில கேள்விகளை நாவலர் எழுப்பினார். "ஆலய வழிபாட்டில் சைவத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன வித்தியாசம், இவ்வளவு ஒற்றுமை இருக்கும்போது ஏன் எங்களுடைய மதத்தைப் பரிகாசம் செய்கிறீர்கள். எபிரேய மறையில் காணப்படும் இந்த ஆலய ஒழுங்குகளெல்லாம் யூதருடைய கடவுளினால் விதிக்கப்பட்ட நித்திய நியமங்கள், தலைமுறை தலைமுறையகாகக் கடைப்பிடிக்க வேண்டியவை. இவற்றை எவ்வாறு நீங்கள் கைவிடமுடியும்? உங்களுடைய வழிபாடுகள் இடுகுறியானவை என்று சொல்கிறீர்கள். அதே மதிப்பை ஏன் எங்களின் சமய முறைமைகளுக்குத் தருவதில்லை. அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் இயேசுவின் சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் அடையாளங்கள் என்கிறீர்கள். ஆனால் நாங்கள் கல்லையையும் புல்லையும் வணங்குகிறோம் என்று நேர் பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள். எங்கள் கடவுளுக்கும் கல்லுக்கும் புல்லுக்கும் வித்தியாசம் எங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்.
நாவலரும் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்களும் இரண்டு விதமான மொழிகளில் பேசினார்கள். நாவலருக்கு ஆலயச் சடங்குகள் முக்கியமாகப் பட்டன. கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு மதக் கோட்பாடும் கொள்கைகளும் பிரதானமாயின. நாவலருடைய வாதம் மதப்பரப்பாளர்கள் பரப்பிய கிறிஸ்தவம், திருமறை போதித்த மதமல்ல; நிறுவனமாக்கப்பட்ட திருச்சபையால் உருவான மதம். மதப்பரப்பாளர்கள் உருவாக்கிய மதம். வழமையான கிறிஸ்தவர்களின் எண்ணம் சைவர்கள் அவர்களுடைய வழியிலிருந்து சறுக்கிவிட்டார்கள் என்பது. இதற்குமாறாக நாவலர் கிறிஸ்தவர்கள் தான் அவர்களுடைய உண்மையான பாதையிலிருந்து வழுக்கிவிட்டார்கள் என்றார்.
சைவதூஷணபரிகாரத்தில் நாவலருடைய சரியான எரிச்சலும் கோபமும் தெரிகின்றன. அவரின் நடை நயமற்றது. மோதல் போக்கானது. மதகுருமாரை 'நீ', 'நுமது' என்றுதான் அழைத்தார். 'அதிபாதகர்', 'பணச்செருக்குடையவர்கள்', 'புல்லர்கள்', 'மதிமயக்கமானவர்கள்' என்றும் சொன்னார். அவரின் சினத்திலும் வசைத் திறன் இருந்தது. இலிங்கத்துக்குப் படைத்த பால், பழம், மோதகத்தை உங்கள் கடவுள் எப்போது புசிக்கவருவார் என்று கிறிஸ்தவர்கள் ஏளனம் செய்து சிரித்தபோது, எபிரேயப் புத்தகமான எண்ணாகமத்தை எடுத்துக்காட்டி, நீங்கள் சமாதானப் பலியாகச் செலுத்திய ஆட்டுக்கடாவையும் அதிரசத்தையும் அடையையும் புளிப்பில்லா அப்பத்தையும் உங்கள் எகோவா சாப்பிட வரும்போது என்றார். ஆனால் ஒன்று பவுத்த மதத்திற்குப் புத்துயிர் கொடுத்த அனகாரிக தர்மபாலா போல் கிறிஸ்துவைப் பற்றியோ, விவிலிய நாயகர்களாகிய பேதுரு, பவுல் போன்றவர்கள் பற்றியோ நாவலர் இழிவாகச் சொல்லவில்லை. தர்மபாலா, விவிலிய எகோவாவைக் காட்டுமிராண்டிக் கடவுள் என்றார். இயேசுவின் நற்செய்தி தாறுமாறான ஒரு இறையியல் குவியல் என்றார்.
நாவலருடைய உதயதாரகை கடிதத்திற்கு யாழ்ப்பாணக் கிறிஸ்தவக் குருமார் மூன்று இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதினார்கள். திருச்சபை தொடங்கிய காலம் முதல் வழக்கமாகக் கைப்பிடித்த கிறிஸ்தவ நிலைப்பாட்டையே மீண்டும் தொகுத்துரைத்தார்கள். அதில் முக்கியமானது. இயேசுவின் வருகையினால் பழைய ஏற்பாட்டில் மோசே நியமித்த நியாயப் பிரமாணங்கள் முற்றுப்பெற்று விட்டன. ஆகையினால் அவை இனிச் செல்லுபடியாகாது என்றார்கள். நாவலர் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படியானால் ஏன் இயேசுவிற்குச் சுன்னத்துச் செய்யப்பட்டது, பவுல் எதற்காகத் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினார் என்று கேட்டார். பவுல் ஆலயவழிபாடுகளை அனுசரித்ததை நினைவுபடுத்தினார். பவுல் அவருடைய நிரூபங்களில் பலியையும் விருத்தசேதனத்தையுமே தவிர்க்கச் சொன்னார். ஆலய வழிபாடுகளை நீட்டிக்கச்செய்தார் என்று பவுலின் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டினார். அத்துடன் விடவில்லை. இயேசு அவருடைய வருகையால் பழைய உடன்படிக்கை விருதா என்று சொன்னதாகப் புதிய ஏற்பாட்டில் வசனங்கள் இல்லை என்றார். இன்னுமொரு இறையியல் குண்டையும் தூக்கிப்போட்டார். "பழையவைகள் ஒழிந்தன என்று கட்டளையிட இயேசு என்ன கடவுளா? அப்படியானால் நீங்கள் இரு தெய்வங்களை வணக்கம் செய்கிறீர்களா,” என்றும் கேட்டார்.
யாழ்ப்பாணக் கிறிஸ்தவ குருமார் அவர்களுடைய பதிலின் இறுதியில் இரு எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தார்கள். யாத்திரகாமம் 32 இல் விக்கிரகங்களையும் பலதெய்வங்களையும் வணங்குகிறவர்களைக் கடவுள் வேருடன் பிடுங்கி அந்த நாட்டைத் தன் ஜனங்களுக்குக் கொடுப்பார். இந்த வசனத்தின் உப செய்தி: சைவ நாடுகள் அஞ்ஞானப் பழக்கங்களான பல கடவுள் கொள்கையைக் கைவிடாவிட்டால் இந்த நாடுகள் புதிய இஸ்ரவேலரான யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்படும். அதுமட்டுமல்ல மதம் மாறிய சைவர்களை மறுபடியும் இந்து சமயத்திற்கு இழுக்கிறவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒரு வேத வசனத்தைக் காட்டியிருந்தார்கள்: “உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக் கடவாய்.” (உபகாமம் 13.10) இந்த வசனத்தின் உட்கோள் நாவலர் போன்ற வம்புக்காரர்களைத் தண்டிக்கத் தயங்கவேண்டாம் என்பது. நாவலர் விடவில்லை. தன் சண்டித்தனத்தைக் காட்டினார். சண்டியர் அல்லாத யாழ்ப்பாணத்தான் யார்? சைவத்தை நிந்திக்கும் கிறிஸ்தவக் குருமாருக்கு என்ன நடக்கும் என்று சொன்னார். மறைஞான சம்பந்தரின் சிவதருமோத்தரத்தை எடுத்துக்காட்டி சிவன் அருளிச்செய்த வேத ஆகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாகவேனும் பிறிதொரு நூலைச் சொல்வோர், சிவ ஆகமங்களை நிந்தை செய்வோரும் வெம்மையுடைய எரி நகரத்தில் கிடந்து துயரடைவார்கள். எப்போது கரை ஏறுவோம் என்று வாடி ஏக்கமடைவார்கள் என்று பாதிரிமார்களுக்குப் பயம் காட்டினார்.
நாவலருடைய கிறிஸ்தவ திருமறை வாசிப்பில் யூதர்களைச் சைவர்கள் போல் ஆக்கினார். சைவர்களைப் பார்க்க திருமறை யூதர்கள் தான் "ஆசார அநாசாரங்களை அதிகமாகக் கவனித்தார்கள்” என்று சொன்னார். கிறிஸ்தவத் திருமறை நாவலரின் வாசிப்பில் ஏதோ ஆலயவழிபாட்டை அங்கீகரிக்கும் சைவ ஆகமம் போல் தென்பட்டது.
அன்றைய கால இந்துச் சீர்திருத்தவாதிகளான ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ் சுந்தர் சென் போன்றவர்களிடையே கிறிஸ்தவர்களைவிட இந்துக்களே அதிகம் துலக்கமாக, தெளிவாக கிறிஸ்துவத்தை விளங்கிக்கொண்டார்கள் என்ற ஆணவமும் அகந்தையும் இருந்தது. அந்த இறுமாப்பும் நாவலரிடம் இருந்தது.
நாவலரை இந்திய இந்து மதச் சீர்திருத்தாளர் தயானந்த சரஸ்வதியுடன் ஒப்பிடலாம் என்று க. கைலாசபதி ஒருமுறை சொன்னார். எனக்கு ஏதோ ராம் மோகன் ராய்தான் சரி என்று படுகிறது. வங்காளியான ராய் வைஷ்ணவர். தமிழரான நாவலர் சைவர். இருவரும் பள்ளிக்கூடங்கள், பத்திரிகைகள் நடத்தினார்கள். ராய் சமஸ்கிருத வேதங்களைத் தன் மக்கள் புரிந்துகொள்ளும்படி வங்காளத்தில் மொழிபெயர்த்தார். நாவலர் கவிதை வடிவில் எழுதப்பட்ட வேதாகமங்களைச் சைவர்கள் எளிதாகப் படிக்க உரைநடையில் எழுதினார். இருவருமே கிறிஸ்தவத் திருமறை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர்கள். ராய் 'கிறிஸ்தவர்களின் திருமறை மனித இயலுணர்வை அவமதிக்கிறது' என்றார். நாவலர் விவிலியம் ஒரு பொய் நூல், தூஷணப்புத்தகம்' என்றார். நாவலரைப் பொறுத்தவகையில் தேவாரம், திருவாசகம் 'திராவிட வேதங்கள்.' சிவஞானபோதம், சிவஞானசித்தியார் 'திராவிட சித்தாந்தங்கள்'. ஆலய வழிபாடு பற்றி அறிந்திருந்ததால், கிறிஸ்தவ மதப் பரப்பாளர்களைவிட தனக்கு கிறிஸ்தவத் திருமறையை விளங்கிக்கொள்ள முடிகிறதென்றார் நாவலர். எந்த இறையியல் முன்னீடுபாட்டுடனும் திருமறையை அணுகாததால், மதப்பரப்பாளர்களைவிட வேதத்தின் வகைநுணுக்கங்களை, விபரங்களைத் தன்னால் அறியமுடியும் என்றார் ராய். இருவருமே பாரபட்சமற்ற சமய குருமார் வசையாளர்கள். சமயங்களிடையே வித்தியாசம் காட்டவில்லை. ராய் வைஷ்ணவ குருக்கள் அர்த்தம் தெரியாமல் சுலோகங்களை அசைபோடுகிறார்கள் என்றார். நாவலர் சைவ குருக்கள் அந்திரேட்டி என்று எழுதத் தெரியாத காளை மாடுகள்' என்றார். இருவரும் மதமாற்றத்தை முழுமையாய் எதிர்த்தார்கள். அன்னிய மதப்பரப்பாளர்கள் அஞ் ஞானிகள் என்ற பதத்தை இவர்களுக்குப் பாவித்தபோது அதைத் திருப்பிப் பாதிரியார்களுக்கே உபயோகித்தார்கள். அற்புதங்களில் நம்பிக்கை வைக்கும் நீங்கள் தான் அஞ் ஞானிகள் என்றார் ராய். திருத்துவத்தை ஆராதிக்கும் நீங்கள் தான் அஞ்ஞானிகள் என்றார் நாவலர்.
இவர்களிடையே பெரிய வித்தியாசம். நாவலர் விக்கிரக ஆராதனையை ஆதரித்தார். ராய் முதலில் வெறுத்தார். பிற்காலத்தில் இது ஒரு பக்தனின் முதல்படி என்றார். ராய் உலக அளவில் தெரிந்திருக்கக் காரணம் அவர் ஆங்கிலத்திலும் எழுதினார். நாவலரின் எழுத்துக்கள் எல்லாமே தமிழில். நாவலருக்கு ஆங்கிலமும் நன்றாகத் தெரியும் ஆனால் ஏனோ எழுதவில்லை . அவருடைய அருந்திறனான ஆங்கிலத்திற்கு அவர் வால்டன் பாதிரியாருடன் பரிமாற்றம் செய்த நிருபங்களைப் படியுங்கள்.
நாவலரின் சாதி எல்லாருக்கும் தெரியும். அவருடைய சைவ வினாவிடையைப் படியுங்கள், அறிந்துகொள்வீர்கள். சமய சீர்திருத்தக்காரர்கள் பரிசுத்தவான்கள் அல்லர். அவர்களுக்குக் களிமண் கால்கள் உண்டு. அவர்களின் எண்ணப்பாட்டில் கறைகள் உண்டு. மார்டீன் லூதருக்கு யூத வெறுப்பு; நாவலருக்குச் சாதி பார்ப்பு.
கடைசியாக, சைவதூஷண பரிகாரம் அந்தக் காலத்துக்குத் தேவையான பிரதி. சைவக் காவலன் என்ற பத்திரிகை 'நாவலரின் இந்த எழுத்து அந்தக் காலத்துக்கும் மட்டும் உரியது அல்ல அவற்றின் சேவைக்கு இப்போதும் போதிய இடம் இருக்கிறது, இனியும் இருக்கும்' என்று எழுதியிருந்தது. ஆனால் நாவலர் சைவதூஷண பரிகாரம் எழுதிய சமய, அரசியல், சமுதாயப் பின்னணி இப்போது இல்லை. காலனிய நாட்களில் கிறிஸ்தவர்களுக்கிருந்த ஆதிக்கம் இப்போது அருகி இருக்கிறது. பிரதான மதமாற்றக் கருவியாக அவர்கள் நடத்திய பள்ளிக்கூடங்கள் இன்று அவர்கள் கையில் இல்லை. கிறிஸ்தவ வேதமும் இன்று திராணியற்றிருக்கிறது. கிறிஸ்தவர்களிடையே முன்பிருந்த ஆன்மீக அட்டகாசம் அரிதாயிருக்கிறது. இன்றைய மேலாண்மை கிறிஸ்தவம் அல்ல; கோத்தபாயாவின் பவுத்த சிங்கள இனப் பேரினவாதம். இந்த உக்கிரமான வீறுருவை எதிர்நோக்கப் புதிய பிரதி வேண்டும். நாவலரும் இதை ஒத்துக்கொள்வார்.
மின்னஞ்சல்: rssugi@blueyonder.co.uk
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...