சுமார் பத்தாண்டுகள் நாங்கள் இருவரும் வாரத்சன்தில் தொடர்புகொள்ளாத நாட்கள் குறைவு. இருவருமே சொந்தக் காரியங்களுக்காக தொடர்புகொண்டது மிக மிக சொற்பம். பொதுக் காரியங்களை இரவு பகலாக மேற்கொண்ட காலம் ஒன்று இருந்தது. நான் சற்று ஒதுங்கி என் எழுத்தில் முழுக் கவனத்தையும் குவிக்கத் தொடங்கினாலும், அவர் இன்னும் அதிகமாக பொதுக் காரியங்களில் ஈடுபட்டார்.
எந்தவொரு பொதுப் பணிகளிலும் தன்னை முதன்மைப்படுத்தும் நபர் அல்ல... ஒருபோதும் தற்பெருமை, சுயநலம், சுயவிளம்பரம் அற்ற ஒரு மனிதர் அவர். வெற்றிகரமான பணிகளுக்கு பின்னால் அவர் இருப்பார். பின்னால் இருந்தபடி அதன் வெற்றியைக் கொண்டாடுவார். தனது பாத்திரம் இது என்று உரிமை கோரமாட்டார். அந்த வெற்றிகளுக்கு சொந்தம் கொண்டாட மாட்டார். திரையின் பின்னால் இருந்து நன்மையை செய்து மற்றவர்களின் மகிழ்ச்சியிலும், வெற்றியிலும் இன்பம் காணும் மனிதர்களைக் காண்பது அரிது. இந்த விடயத்தில் தவேந்திரனுக்கு நிகராக வேறெவரையும் நான் கண்டதில்லை.
நோர்வே – சன்விக்கா பகுதியில் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியதிலும், அதன் பாடசாலையை உருவாக்கி வழிநடத்தியதிலும் முக்கிய பங்கு அவருக்குண்டு. 2001 இல் என்னையும் அதன் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி என்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு தள்ளினார். கணினி வகுப்புகளை நடத்தத் தொடங்கிய போது அவரும் ஒரு மாணவர்களில் ஒருவராக என்னிடம் கற்றார். எனக்கு வகுப்பறைகளை ஒழுங்கு செய்வது, என்னை வகுப்புகளுக்கு ஏற்றி இறக்குவது என அவர் என் மூலம் பலருக்கு அந்த நன்மைகளை பெற்றுக்கொண்டுத்தார்.
அதன் பின்னர் அந்த சங்கம் அரசியல் காரணங்களுக்காக பிளவுபட்ட வேளையில் நோர்வேயிலேயே இங்கு மட்டும் தான் அரசியல் பின்னணி இல்லாமல் ஒரு தமிழ் கல்விக் கூடமும், சங்கமும் எஞ்சியிருக்கிறது. அதை பாதுகாக்கவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து என்னையும் அதில் முக்கிய பாத்திரமேற்கச் செய்தததன் மூலம் அந்த சங்கமும் பள்ளிக்கூடமும் காப்பாற்றப்பட்டது. அந்த சங்கம் அப்படியே முழுக்க விழுங்கப்படுவதில் இருந்து பாதுகாத்ததுடன், பெரிய பிளவை தவிர்ப்பதற்காக போராடினோம். கல்வி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பதற்காக அந்த சங்கத்தில் பல நடவடிக்கைகளை அதிகரித்தோம். அதற்கு காரணமானவர்கள் பலர் இருந்த போதும் தவேந்திரனின் பாத்திரம் சொல்லித் தீராது. அவரது நேரம், உழைப்பு, சக்தி, சிந்தனை, பணம் என எதையும் அவர் அதற்காகவே செலவிட்டார்.
அச்சங்கத்துக்கு யாப்பு எழுதி முடிக்கும் பணியும் என் தலைமையில் விடப்பட்டது. அதற்கென்று இணையத்தளத்தையும் (www.abtc.no), அதற்கென்று ஒரு பத்திரிகையையும் (ஒன்றியத்தின் குரல்) ஆரம்பித்தோம். என்னை அச்சங்கத்தின் தலைமைப் பதவிக்கு கொண்டுவர அவர் ஆவல் கொண்டிருந்தபோதும் நான் கல்வி நடவடிக்கைகளை மட்டும் என்னிடம் பொறுப்பாக தந்துவிடுங்கள் என்று கோரி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். சன்விக்கா சினிமா மண்டபத்தில் நாங்கள் நடத்திய கல்வி மாநாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கலந்துனர்களையும், வளவாளர்களையும் வரவழைத்திருந்தோம்.
2000 ஆம் ஆண்டு அவருடன் சேர்ந்து "பறை" சஞ்சிகை தொடங்கிய போது அதன் ஆசிரியர்களில் ஒருவராக அவரை இணைத்துக்கொண்டேன். தனக்கு இந்தளவு எழுத்துப் பணிகள் வராது எனவே தன்னை அதில் இணைப்பதில் அர்த்தமில்லை என்று மறுத்தார். எவரும் எழுத்தாளராக பிறப்பதில்லை. உங்களை எழுத வைப்பது எனது பொறுப்பு, இப்போது சஞ்சிகையைக் கொணர்வதில் பெரும் பங்கை ஆற்றிவருகிறீர்கள்; அதுவே ஆரம்பமாக இருக்கட்டும் என்று அவரின் பெயருடன் தான் பறை சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தோம்.
சுனாமி பேரழிவு வந்தபோது இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாகவே வீடு வீடாக உதவி கேட்டு அழைந்தோம். நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய உடைகளையும் வீடு வீடாக சேகரித்தோம். ஜேம்ஸ், தவநாதன், தங்கன் உள்ளிட்ட இன்னும் பல நண்பர்கள் அந்தப் பணியில் தவேந்திரனுடன் இணைந்து கொண்டார்கள். தவேந்திரனின் வீட்டில் தான் இலங்கைக்கு அனுப்புவதற்கான கொள்கலனும் நிறுத்தப்படிருந்தது. வேகவேகமாக அதனை அனுப்புவதற்கு இரவுபகல் பாராது தலைமை கொடுத்தார்.
2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் போதும் அகதிமுகாம்களில் சிக்குண்டு தவித்த மக்களுக்கு உடனடியாகவே உதவிசெய்யும் பொருட்டு இதுபோன்றே சேகரித்து கொள்கலனை அனுப்பினோம். அங்குள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உதவும் பொருட்டு கடனளிப்பு திட்டமொன்றையும், விவசாய நடவடிகைகளுக்கும், மீள்கட்டுமான வேலைகளுக்கு கருவிகளையும், இயந்திரங்களையும் குறைந்த வாடகைக்கு கொடுக்கக் கூடிய ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து North Aid என்கிற அமைப்பை உருவாக்கினோம்.
2008 ஆம் ஆண்டு INSD மாநாட்டை நோர்வேயில் நடத்தினோம். அதன் ஏற்பாட்டுப் பொறுப்புகளிலும் பலவற்றை அவர் சுமந்தார். இலங்கையில் இருந்து இடது சாரித் தலைவர்களில் ஒருவரான (71 கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவரான) பெட்ரிக் பெர்னாண்டோவை தனது சொந்த ஸ்பொன்சரில் அந்த மாநாட்டுக்கு அழைத்தார்.
எப்போதும் கமராவுடன் திரியும் நான் பல பதிவுகளை ஆண்டு ரீதியாகவும், தலைப்புகளிட்டும் ஒழுங்கு செய்து வைத்திருக்கிறேன். இப்போது அந்தப் படங்களில் அவரைத் தேடுகிறேன். அவரை அதிகளவு காணோம். பெரும்பாலும் படங்கள் எடுக்கின்ற சமயங்களில் நிச்சயம் சீரியஸாக வேறு பணிகளில் இருந்திருப்பார். எப்போதும் திரைக்குப் பின்னால் இருந்து அதிகப் பணிகளை ஆற்றிப் பழகியவர் அல்லவா.
2009 ஆம் ஆண்டு இலக்கிய சந்திப்பை ஒஸ்லோவில் நடத்திய போது அதன் ஏற்பாட்டுக்குழுவில் அவரையும் இணைத்துக்கொண்டதால் தான் அதை சாத்தியப்படுத்த முடிந்தது. மேலும் அந்த இலக்கிய சந்திப்புக்கு இலங்கையில் இருந்து எழுத்தாளர் ஆத்மாவை அழைப்பதற்கு அவர் தனது பொறுப்பில் ஸ்பொன்சர் செய்து வந்திறங்கும் வரை சகல பொறுப்புகளையும் செய்து முடித்தார். வெளிநாடுகளில் இருந்து வந்த தோழர்களை அவர் வீட்டில் தான் வரவேற்று ஒரு உணவு விருந்தையும் ஏற்பாடு செய்து அவரது வீட்டிலேயே சிலரை தங்க வைத்தார்.
மீண்டும் 2015 இல் இலக்கிய சந்திப்பை நடத்தியபோதும் அவர் அக்குழுவில் தனது பங்களிப்பை ஆற்றினார்.
சதா திட்டங்களைப் போட்டுக்கொண்டே இருக்கும் அபாராமான தூரநோக்குள்ள மனிதர் அவர். அதுபோல அத்திட்டங்களில் பலவற்றை தகுந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்று நிறைவேற்றிவிடும் வினைத்திறன் படைத்தவர் அவர்.
தனது அரியாலை ஊருக்கு அவர் பெரும் பணியாற்றியிருக்கிறார். அரியாலை சனசமூக நிலையத்தை மையமாக வைத்து பல பணிகளை அவர் நண்பர்களுடன் இணைந்து நிறைவேற்றினார். அப்படி சில நடவடிக்கைளில் என்னையும் இணைத்திருக்கிறார். தனது செலவில் ஒரு கணினி வகுப்புக்கான அறையை அரியாலையிலுள்ள சனசமூக நிலையத்தில் ஒரு அறையை திருத்தி ஆரம்பித்தார். பெரும் பொருட்செலவு உருவாகியிருந்தது. வகுப்புகளை என்னை வைத்துத் தான் தொடக்கினர். ஒன்லைன் மூலம் முதல் கூட்டத்தையும் வகுப்பையும் நானும் அவரும் சேர்ந்து தான் ஆரம்பித்தோம். ஊரில் அதை பராமரிக்காமல் நாசமாக்கிவிட்டார்கள் என்பது வேறு கதை. ஆனாலும் அரியாலைக்கான வேறும் சில திட்டங்களில் என்னை ஈடுபடுத்தியிருக்கிறார்.
யாப்பை எழுதுவது, கூட்டத்துக்கான அவர் ஆற்ற வேண்டிய உரையைத் தமிழில் தயாரிப்பது, அறிக்கை தயாரிப்பது, அறிவித்தல்கள், விளம்பரங்கள் என அனைத்துக்கும் அவர் என்னை நாடுவார. நிச்சயம் அவரின் நடவடிக்கைகளுடன் நான் மட்டுமல்ல இப்படி பலரும் சம்பந்தபட்டிருப்பார்கள். என்னோடு மட்டும் இத்தனை நடவடிக்கை என்றால் மொத்தம் அவர் ஈடுபட்டிருக்கக் கூடிய நடவடிக்கைகள் எத்தனை என்று உங்களால் ஊகிக்க முடியும்.
பெரும்பாலும் அவர் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதாயின் நிச்சயம் அது ஒரு பொது விடயத்துடன் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும். மற்றும்படி சொந்த விடயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
***
சன்விக்காவுக்கு நான் குடியேறியபோது எனது முதல் விலாசம் அவரின் வீட்டு விலாசம் தான். சுமார் மூன்று ஆண்டுகள் எனக்கு வரும் கடிதங்கள் அத்தனையும் அங்கே தான் வந்தன. 2013இல் நான் ஒஸ்லோவில் ஒரு வீட்டை வாங்கியபோது பணப்பற்றாக்குறையை அவரிடம் தெரிவித்தபோது உடனடடியாகவே எனக்கு உதவி செய்தார். திருப்பி செலுத்த மூன்று வருடங்களாக ஆனது. அதற்காக என்னை அவர் நிர்பந்தித்தது இல்லை.
இருவரும் ஒரு கணினி திருத்தும் கடையைத் திறக்கும் திட்டமும் இருந்தது. அது தொடர்பாக ஒரு விளம்பரத்தையும் ஒரு நாள் எழுதினோம். இது வெளிவந்தால் அடுத்த நாள் அதிகாலையில் அவரின் வீட்டு வாசலில் பலர் நான் நீயென வரிசையில் நின்று ஆரவாரப்படுத்துவதைப் போல கற்பனை செய்துகொண்டு இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்தோம். இதைப் பல சந்தர்ப்பங்களில் அவர் என்னிடம் நகைச்சுவையாக நினைவு கூர்ந்து சிரிப்பார்.
நான் மீண்டும் ஒஸ்லோவுக்கு வந்ததன் பின்னர் அவருக்கும் எனக்கும் இடையில் நேரடி சந்திப்புகள் குறைந்துபோயின எங்கள் உரையாடல்கள் தொலைபேசிவழியாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாகவும் சுருங்கின. ஒஸ்லோ வரும்வேளையில் அவர் எப்போதாவது வீட்டுக்கு வந்து செல்வார். சில தடவைகள் எங்களை குடும்பமாக அழைத்து விருந்து கொடுத்தார். ஈராண்டுகளுக்கு முன்னர் தனது படகில் எங்களை குடும்பமாக அவரின் துணைவி மேகலாவுடன் அழைத்துச் சென்றார்.
இலங்கையில் அவர் தனிப்பட்ட ரீதியில் பெரும் செலவு முன்னெடுத்த பணிகள் பல அங்குள்ளவர்களின் அக்கரையீனத்தால் தோல்வியில் முடிந்தன. ஆனாலும் அவரின் சோர்வு சில நாட்கள் தான் இருக்கும். அடுத்த திட்டத்துக்கு தயாராகிவிடுவார். யுத்த காலத்தில் அவர் Excavator இயந்திரங்களை நோர்வேயில் இருந்து ஏற்றுமதி செய்து ஊருக்கு கொண்டு போய் சேர்த்தார் அப்போது அவர் அதற்காக இலங்கை சுங்கத்துக்கும் பாரிய வரியைக் கட்டினார். விடுதலைப் புலிகளுக்கும் ஏராளமான பணத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்பட்டது. ஊரில் அவருக்கு நம்பகமானவர்களிடம் அதை ஒப்படைத்து அங்கே குறைந்த வாடகைக்கு கொடுத்து காடு மண்டிப்போன வயல்வெளிகளையும் விவசாயத்தையும் மீட்கும் பணிகளுக்கு உதவுவதே அவரின் திட்டம். கூடவே யுத்தத்தால் இடிந்துபோன கட்டிட எச்சங்களை அப்புறப்படுத்தி மீள் கட்டுமானங்களுக்கு உதவும் என நம்பி அதைத் தொடங்கினார். ஆனால் நாட்டில் அவரால் நம்பப்பட்டவர்களின் ஊழல்களின் காரணமாக இங்கிருந்து அவர் செலவுக்கு மேல் செலவு செய்துகொண்டிருந்தார். கடும் நட்டத்தில் அந்தத் திட்டத்தைக் கைவிட நேரிட்டது.
நோர்வேயிலும், மேற்கு நாடுகளிலும் அவர் வியப்பாக காணும் தொழில்நுட்பங்களை எல்லாம் நாட்டில் இவை கிடைத்தால் எப்படி இருக்கும் என்றே சிந்திப்பார். அவர் பணிபுரிந்த துறை Hydrolic துறை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் hydrolic துறை சார்ந்த கற்கை கிடையாது என்பதை அங்கு சென்று அலைந்து தேடி அறிந்து முடிவுக்கு வந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அவர் யாழ் பல்கலைக்கழகம் சென்று பொறியியல் பீட மாணவர்களுக்கு அது தொடர்பில் ஒரு உரையாடலையும் செய்தார். இதுவரை hydrolic தொடர்பான கற்கைக்கு படங்கள் மூலமும், காணொளி மூலமும் தான் விளக்கமளிக்கப்படுகின்றன என்பதையும் அவர் கண்டுகொண்டார். நோர்வே வந்ததும் தான் பணிபுரியும் கம்பனியிடம் பேசி மில்லியன் பெறுமதியான Hydrolic கருவியொன்றை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தனது சொந்தச் செலவில் அனுப்பினார். ஆனால் பல்கலைக்கழகத்தினரின் அசட்டையால் சுங்கத்தினரிடமிருந்து அதை உடனடியாக எடுக்காமல் பல காலம் இழுபறிப்பட்டு அது கிடைக்காமல் போனதாக அறிந்தபோது இந்த மனிதன் எத்தனை ஏமாற்றங்களைத் தான் பொது விடயங்களில் எதிர்கொள்வார் என்று ஆதங்கப்பட்டேன்.
அவர் சேகரித்து வைத்திருந்த சுமார் பதினைந்து லெப்டாப் கணினிகளை எனக்குத் தந்து அவற்றை இல்லாதவர்களுக்கு என்னைக் கொடுக்கும்படி என் மூலம் அனுப்பினார். அவரின் கம்பனியில் வைத்துத் தான் அனுப்புவதற்கான பெட்டியை நிரப்பிக் கட்டினோம்.
சன்விக்காவில் எனக்கு கிடைத்த மோசமான அனுபவங்களால் நொந்து இனி இங்கே எந்த பொதுக் கருமங்களிலும் ஈடுபடுவதில்லை என்கிற முடிவுடன் தமிழ்ச் சமூகத்தின் கண்களில் படாத இடத்தில் இடத்தில் வாழவேண்டும் என்று தனித்து ஓரிடத்தில் வாழ்ந்து வந்தேன். எனது இருப்பிடத்தை தவேந்திரன் மட்டுமே அறிந்திருந்தார். என்னை தேடியவர்கள் தவேந்திரனைத்தான் தொடர்புகொண்டார்கள். அவசரமாக தொடர்பு கொள்ள முயற்சித்தவர்களின் விபரங்களை அவர் தான் என்னிடம் சேர்ப்பித்தார். அவர்க்கு அருகாமையில் நான் தனியாக வாழ்ந்துவந்த போது அடிக்கடி என்னை உணவுண்ண அழைப்பார். என் தனிமையைப் போக்கியிருக்கிறார். அவரை ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து நான் பார்த்திருக்கிறேன்.
தனி வீட்டை வைத்திருப்பவர்களுக்கு உள்ள வேலைச்சுமைகளை இங்கு வாழும் பலர் அறிவர். அதைப் பாராமரிப்பதும், சரிசெய்வதும், புதுபிப்பதற்கும் தனி வசதியும், சக்தியும், நேரமும் தேவை அத்த்தனையையும் செய்து கொண்டு, ஒரு புறம் தொழில், மூன்று பெண் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக கூட்டித்திரிவது என்பவற்றுக்கு மேலாகத் தான் பொது வேலைகளையும் செய்து வந்தார். இதற்கிடையில் பலரும் பல தேவைகளுக்காகவும் அவரைத் தொடர்புகொள்வார்கள். ஒருபோதும் மறுக்காமல் தன்னால் இயன்றதை செய்து கொடுக்க தனது உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பார். அதனால் அவர் எதிரிகளை சம்பாதிக்கவில்லை. ஏராளமானோரின் இதயங்களை வென்றிருந்தார். சன்விக்காவில் பல தமிழ் குடுமபங்களின் இரண்டாந்தலைமுறையினரின் வளர்ச்சியிலும், பண்பாட்டுப் பேணலிலும் திரைமறைவில் தவேந்திரன் என்கிற மாமனிதரின் பங்கு எத்தகையது என்பதை நானறிவேன். அதை எவராலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
அவரை நோயாளியாக்கியதில் இந்தப் பொதுப் பணிகளுக்கு நிச்சயம் பங்குண்டு என்பது எனது கணிப்பு. அவரை நன்றாக அறிந்ததால் இதனை என்னால் கூற முடியும். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் ஒரு நீரிழிவு நோயாளி. பொது வேலைகளுக்காக நேரத்துக்கு உணவு, நேரத்துக்கு ஓய்வு, நித்திரை எதுவும் அவருக்கு இருக்கவில்லை. தனது மனைவியின் ஆலோசனையையும், கண்டிப்பையும் மீறி மறைவாக பல காரியங்களில் தீவிரமாக ஆகி விடுவார். தன்னைக் கவனிக்காமல் ஓய்வு ஒழிச்சலின்றி அவர் ஆற்றிய பணிகள் அவரின் துணைவியை விட வெளியார்களுக்கே அதிகம் தெரியும்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் காலியில் உள்ள தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள் வாழும் வறுமை மிகுந்த தோட்டமொன்றில்; ஒரு பாடசாலையின் கூரைகளும், மதில்களும் இடிந்து விழுந்தபோது அதற்கு உதவி செய்வதற்காக முகநூலில் பதினைந்து நண்பர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கி அவர்களிடம் உதவுமாறு கோரினேன். இரண்டே நாட்களில் ஆறு பேர் உதவியதன் மூலம் இலக்கு எட்டப்பட்டதால் அத்தோடு நிறுத்திவிட்டு அந்த கட்டிடத்தை திருத்த உதவினோம். உடனடியாக உதவியர்களில் ஒருவர் தவேந்திரன். என்னிடம் தொலைபேசியில் அவர் இன்னொன்றைக் குறிபிட்டார். நிதிப் பங்களிப்பை செய்தவர்களின் பட்டியலில் எனது பெயரைத் தவிர்த்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அந்தக் குழுவில் உள்ள எனது மனைவியும் உதவியிருப்பார், நான் உதவிவிட்டதால் தானும் கொடுக்கத் தேவையில்லை என்று தன் மனைவி எண்ணியிருக்கக் கூடும் என்றார்.
சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 2002 இல் எனது தகப்பனார் திடீர் என்று இருந்துபோனார். அப்போது நான் இலங்கையில் இருந்தேன். விரக்தியுடன் இனி நோர்வே திரும்புவதில்லை என்று அங்கே மீள சென்றிருந்த சமயம் தான் அந்த இழப்பு நேரிட்டிருந்தது. இந்த நிலையில் நான் என்ன செய்வேனோ என்று எண்ணி சில நண்பர்களிடம் பணம் சேர்த்து எனக்கு அந்த நேரத்தில் கிடைக்கச்செய்திருந்தார்.
என்னோடு தொடர்புடைய அனுபவங்களை மட்டும் தான் நான் இங்கே பகிர்ந்திருக்கிறேன். அவரின் பொதுநல பங்களிப்பில் நான் பகிர்ந்தது மிகச் சிறிய அளவு தான். இதற்கு வெளியில் நான் அறியாதது, அல்லது நான் இங்கே பகிராதது பல. அதை இன்னும் பல நண்பர்கள் நிச்சயம் பகிர்வார்கள்.
***
கடந்த இரண்டாண்டுகளாக எனது உடல் நலம் சற்று மோசமாகி வந்தது. மருத்துவ அறிக்கைகள் சில எனது உடல் – உயிர் பற்றிய சில ஆபத்தான சமிக்ஞைகளை தந்திருந்தார்கள். எனக்கு என்ன நேர்ந்துகொண்டிருகிறது என்பது பற்றி எனது துணைவிக்கு கூட நான் தெரிவிக்காமல் பல மாதங்கள் இருந்தேன். ஆனால் என் நண்பர் தவேந்திரனோடு பகிர்ந்துகொள்ளத் தவறவில்லை. அவர் அதைப் பற்றி அறிந்தவுடனேயே எனது வீட்டுக்கு அவரின் துணைவி மேகலாவுடன் வந்து என்னைப் பார்த்தார். அவருக்கு எதுவும் தெரியும் என்பதை என் துணைவிக்கு அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. மிகச் சமீபத்தில் சில சிகிச்சைகளை முடித்துக்கொன்டதன் பின்னர் தான் எனது துணைவியோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
***
இறுதியாக அவர் கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி என் வீட்டுக்கு வந்தார். ஒரு லெப்டொப் ஒன்றில் பழைய “விண்டோஸ் 7”ஐப் நிறுவ வேண்டும் என்று இருவரும் முயற்சித்தோம். இப்போதெல்லாம் “விண்டோஸ் 7” கிடைக்காது என்பதால் அதை சற்று சிர்மப்பபட்டு தேடி எடுத்து இன்ஸ்டால் செய்தோம். ஒரு கண் தெரியாத மாணவி ஒருவருக்கு அனுப்புவதற்காக அதனைக் கொண்டு வந்திருந்தார். கட்புலனற்றவர்கள் பயன்படுத்துவதற்கென்று ஒரு புரோகிராம் இருப்பதாகவும் அதை புதிய சிஸ்டத்தில் நிறுவ முடியாதென்றும், பழைய விண்டாஸ் 7 இல் தான் அதை நிறுவ முடியும் என்றும் கூறினார். அங்கு இப்படியே அனுப்விட்டால் இதை தயார் செய்வதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்றும் நாமே அதை முடித்து அனுப்பிவிடுவோம் சரா என்றார். அப்படியே செய்தோம். அன்று என் துணைவி தயாரிக்கும் பால்சோறும் கட்டச்சமபலும் அவருக்கு வெகு பிரியம் அதை இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறேன் என்றார். எதையும் உன்ன மறுத்துவிட்டார். காப்பி மட்டும் சற்று குடித்தார்.
அவருக்கு குரல் அவ்வளவாக வெளியில் வரவில்லை. கொஞ்சம் தொண்டையில் தொற்று என்றும், சரியாகிவிடும் என்றும் கூறினார். உடல் மெலிந்திருப்பதைப் பற்றி என் துணைவியும் கேட்டார். சில மருத்துவ காரணங்களால் மெலிந்திருப்பதாகச் சொன்னார். வாசலில் அவரிடம் இருந்து விடைபெற்றபோது கவனம் சேர் என்றேன். இரவு வீடு சென்று அந்த கணினி பற்றி சில விபரங்களை டெக்ஸ்ட் செய்திருந்தார்.
அதன் பின்னர் ஒக்டோபர் 17 ஆம் திகதி மதியம் 11.49 அவரும் நானும் ஒன்றாக ஒரு படகுப் பிரயாணத்தில் எடுத்த படத்தை எனது முகநூல் தகவல் பெட்டிக்கு அனுப்பியிருந்தார்.
“Sweet 💘 memories thanks sir”
என்று நான் பதிலுக்கு பதில் அனுப்பியிருந்தேன். (தனிப்பட கதைக்கும் வேளைகளில் அவர் என்னையும், நான் அவரையும் அன்பின் நிமித்தம் அவ்வப்போது சேர் போட்டு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்)
அது தான் அவர் எனக்கும் நான் அவருக்கும் அனுப்பிய இறுதி செய்திகள். இறுதிப் பரிமாறல். இறுதி விடைபெறல்.
தனது முகநூலில் அவர் இறுதியாக பகிர்ந்த படம் அது தான்.
***
சஞ்சயன் சனிக்கிழமை பின்னேரம் சரியாக 6.50 க்கு எனக்கு தொலைபேசியில் தவேந்திரன் தவறிவிட்டார் என்ற போது அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தவேந்திரன் அப்படித் தவறி ஒரு மணித்தியாலத்தைக் கடந்திருந்தது.
சஞ்சயனிடம் மேலதிகமாக என்ன கேட்பது என்றும் தெரியவில்லை. அப்படியே குளிர் மேலிட இருட்டாகிவிட்டேன். என் படுக்கையறைக்குச் சென்று அழுதுகொண்டிருந்தேன். மனைவி வந்து என்னைத் தேற்றிக்கொண்டிருந்தார். என் சிறு குழந்தைகள் இருவரும் வந்து என் கண்ணீரை துடைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எவர் கேட்கும் கேள்விக்கும் என்னால் எதுவும் கதைக்க முடியாமல் இருந்தது. எட்டு நிமிடங்களின் பின் மீண்டும் சஞ்சயனுக்கு தொலைபேசி செய்து மேலதிக சுருக்க விபரங்களை அறிந்துகொண்டேன். வீட்டில் அவரின் உறவினர்கள் நிறைந்திருப்பார்கள். இன்று இரவு நீங்கள் போகத் தேவையில்லை. நாளை செல்லுங்கள் என்றார்.
ஆனால் அவரைப் பற்றிய நினைவுகளையும், அவர் இனி இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நிமிடங்களில் ரவி மாஸ்டர் என்னோடு தொடர்புக்கு வந்தார். அவர் வேறெதையும் நீட்டவில்லை. தவேந்திரனைப் பார்க்கச் செல்கிறேன். ரெடியாக இருங்கள் இன்னும் சில நிமிடங்களில் அங்கு வந்து விடுகிறேன் என்றார்.
பயணித்துக் கொண்டிருந்தவேளை இருவருமே வெறுமையாக உளறிக்கொண்டிருந்தோம். போகும் வழியிலேயே சஞ்சயனிடம் இருந்து அழைப்பு நீங்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வராதீர்கள் நேராக வீட்டுக்கு செல்லுங்கள். இங்கே எவரையும் விடமாட்டார்கள். நாங்களும் அப்படியே முடிவெடுத்தோம். ஆனால் அந்த ஆஸ்பத்திரியைத் தாண்டித் தான் தவேந்திரனின் வீட்டை அடைய வேண்டும். இடையில் ஆஸ்பத்திக்கு சென்று முயற்சி செய்து பார்ப்போம் என்று முடிவெடுத்தோம். அங்கே சென்றிருந்தபோது ஏற்கெனவே பல வந்து ஆஸ்பத்திரிக்கு வெளியில் குளிரில் காத்துக்கொண்டிருந்தார்கள். முகமூடிக் கவசமணிந்திருந்த பலரை யார் என்று அடையாளம் கூட காண முடியாமல் இருந்தது. பிரதான வாசலின் அருகில் இருந்த ஒரு தாதி அனைவரையும் வெளியே செல்லுமாறு கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். உள்ளே ஏற்கெனவே சுமார் பதினைந்து பேர் இருந்தார்கள். ஒருவர் தவேந்திரனுக்கு மாற்று வேஷ்டி கொண்டு வந்து கொடுத்ததை உள்ளே இருந்தவர் எடுத்துக்கொண்டு போனார்.
எங்களுக்கு முன் வந்தவர்கள் சிலர் இனி எப்படியும் எவரையும் உள்ளே அனுமதிக்கப் போவதில்லை நாங்கள் கிளம்புகிறோம் என்று திரும்பினார்கள். இன்னும் சிலர் வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள். குளிரிலும், சோகத்திலும் எங்கள் நெஞ்சைக் கட்டிபிடித்தபடி மேலே தெரிந்த அஆச்பத்திரி ஜன்னல்களை பார்த்த்ககொண்டிருந்தோம். சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து தவேந்திரனின் சகலன் ரமேஷ் இருவர் வாருங்கள் என்று வேறு வழியில் அழைத்தார். நாங்கள் வேகமாக படிகளைத் தாண்டி ஏறி நுழைந்தோம்.
\உள்ளே அறையில் தவேந்திரன் உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் அவரின் துணைவி மேகலா அவரின் தலையருகில் இருந்த கதிரையிலும் இளைய மகள் திஷாந்தி காலடியில் இருந்த கதிரையிலும் சலனமில்லாமல் உறைந்திருந்தார்கள்.
என் நண்பர் அல்ல அங்கே இருப்பது. மிகவும் மெலிந்த உடலைக் கொண்ட இன்னோர் மனிதர். அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர் மெலிந்திருந்தார். நெஞ்சு வெடிப்பதைப் போலிருந்தது. அவரின் உருவத்தில் அவரை விரித்துப் பார்த்தபடி தேடிக்கொண்டிருந்தேன். தேம்பித் தேம்பி அழ மட்டுமே முடிந்தது. இனி என் நண்பர் இல்லை. அவர் இல்லாத பொதுவுலகை இலகுவாக வரவேற்க முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
என்னோடு வந்த ரவி மாஸ்டர் ஒரு சில செக்கன்கள் மட்டுமே தவேந்திரனைப் பார்த்தார். உடனடியாகவே திரும்பிச் சென்று ஜன்னலைப் பார்த்தபடி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார்.
மற்றவர்களுக்கு இடம் கொடுத்து நாங்கள் அங்கிருந்து தவேந்திரனின் வீட்டுக்கு திரும்பினோம். தவேந்திரனின் வீட்டில் அவரின் உறவினர்கள் மட்டுமே இருந்தார்கள். நாங்கள் இரவு 12.30 வரை அங்கிருந்தோம்.
அந்த வீட்டில் சில நிமிடங்கள் அந்த வீட்டுச் சுவர்களையும் மேசையையும் தொட்டுத் தொட்டு பார்த்தேன். அவரும் நானும் சந்திக்கும் வேளைகளில் கதவை மூடிக்கொண்டு உரையாடும் அவரின் கணினி அறையை கதவின் ஜன்னல் வழியே எட்டி வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர்களின் கதைகளில் சில நிமிடங்கள் கவனம் செல்லவில்லை. எப்போதும் அமரும் வீட்டின் வராந்தாவிலுள்ள சாய்விருக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த வீட்டுக்கு குடியேறிய காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதனை மாற்றி எடுக்கும் சந்தர்ப்பங்கள் பலவற்றின் போது நானும் இருந்திருக்கிறேன்.
கடைசி மகள் “துத்து” வளர்த்த அவளுக்கு பிரியமான எலி மரணித்த போது அதை முறையாக அடக்கம் செய்ய நான் இப்படி ஒரு குளிர்காலத்தில் தான் வளவில் பணியகற்றி, குழி தோண்டி புதைத்து அதற்கு ஒரு அடையாளமிட்டோம். வீட்டின் கூரையோடு ஒட்டிய மாடியை குழந்தைகளின் பொழுதுபோக்கிடமாக மாற்றுவதற்கு அவரோடு சேர்ந்து நான் தான் திட்டமிட்டேன். அதன்படி விளையாட்டிடம், சினிமா பார்க்கும் ஏற்பாடு, லைட் செட்டிங் எல்லாமே திட்டமிட்டது நினைவு. பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு ஒரு காலத்தில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். மூத்த மகள் ஜீவந்தியின் குரலிசை அரங்கேற்றத்தின் போது பல மாதங்கள் தவேந்திரனோடு அலைந்து திரிந்திருக்கிறேன். இங்கு வைத்துதான் அந்த அரங்கேற்ற மலரையும் செய்து முடித்தேன். எங்கெங்கும் அந்த வீட்டில் நினைவுகள் தேங்கிக் கிடந்தன.
தவேந்திரன் இனி இல்லை என்பது மாபெரும் வெறுமையத் தருகிறது. இனி தொடர்புகொள்ள மாட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு அதனைத் தாங்கும் சக்தியைக் காலம் தரட்டும்.
என் அப்பாவின் இழப்புக்குப் பின்னர் அதிகம் நான் இடிந்து போயிருப்பது நண்பர் தவேந்திரனின் இழப்பில் தான்.
இனி போதும் ஓய்வு கொள்ளுங்கள் நண்பரே.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...