இந்தக்கட்டுரை INTERNEWS இன் EARTH JOURNALISM NETWORK இன் அனுசரணையில் அறிக்கையிடப்பட்டது.
இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர்வளம் காணப்படுவதுடன் இது அன்று தொடக்கம் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றும் பிரதான காரணியாகவும் விளங்குகிறது. விவசாய நாடான இலங்கையில் அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறுபட்ட நீர்ப்பாசன முறைகளூடாகவும் இந்நாட்டின் விவசாய பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது. இது தவிர கைத்தொழில், சேவை வழங்கல், குடிநீர் தேவை என்பன மட்டுமல்லாது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும், சுற்றுலா கைத்தொழிலுக்கும், நீர்மின் உற்பத்திகளுக்கும். இலங்கையின் நீர்வளம் மிகமுக்கிய மூலமாக அமைந்துள்ளது.
இலங்கை சுமார் 103 பிரதான நதிகளை கொண்ட ஒரு நாடாகும். இவற்றுள் சுமார் 20 நதிகள் வருடம் முழுவதும் பாய்ந்தோடும் நதிகளாக இருப்பதுடன் எஞ்சியவை பருவகாலங்களில் உயிர்ப்புடன் பெருகி பாய்ந்கோடும் நதி வகைகளுள் அடங்கும்.
விசாலத்தின் அடிப்படையில் நதிகளின் அளவும் வேறுபடுவதுடன் இவை சுமார் 10 சதுர கிலோமீற்றர் தொடக்கம் 10000 சதுர கிலோ மீட்டர் வரை வேறுபடும். பூகோள ரீதியில் நோக்கும்போது நதிகளுக்குரிய நிலத்தின் அளவானது இலங்கையின் முழு நிலப்பரப்பில் சுமார் 9 சதவீதம் ஆகும்.
அதேபோன்று உலர் வலயப் பிரதேசங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்கள் சிலவற்றை இணைப்பதன் மூலம் ஆக்கப்பட்ட அருவி தொகுதி முறைமையும் கூட இலங்கையின் நீர் வளத்தை பேணி பாதுகாப்பதில் மிக முக்கிய ஆக்ககூறாக விளங்குகிறது. இவற்றுக்கு மேலதிகமாக பெருமளவிலான நீரூற்றுக்கள் தீவு முழுவதும் பரந்து விரிந்து காணப் படுகின்றது. அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான 1544 நீரூற்றுகளும், கண்டி மாவட்டத்தில் 204 நீரூற்றுகளும், குருநாகல் மாவட்டத்தில் 319 நீரூற்றுகளும், மொனராகலை மாவட்டத்தில் 210 நீரூற்றுகளும் மாத்தளை மாவட்டத்தில் 288 நீரூற்றுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தீவு முழுவதும் இதுவரை இனங்காணப்பட்டு உள்ள நீரூற்றுகளின் எண்ணிக்கை 3540 ஆகும். இவை தவிர இலங்கையின் உலர்வலய பிரதேசங்களில் நிலத்திற்கடியில் சுண்ணாம்பு கற்பாறைகளுக்கிடையில் அமைந்துள்ள நீர் பரப்புகளும் இலங்கையின் நீர் மூலங்களுள் முக்கிய இடம் வகிக்கின்றது. குடிநீர் தேவைக்கும், விவசாய செய்கைகளுக்கும் தேவையான நீரை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலக்கீழ் நீர் பரப்புகள் பெரும் பங்காற்றுகின்றன.
அந்தவகையில் இலங்கையின் முக்கியமான நீர் மூலங்களில் ‘கும்புக்கன் ஓயா’ பிரதானமானதாகும். இது மத்திய மலைநாட்டில் லுணுகலை பிரதேசத்தில் ஊற்றெடுத்து மொனராகலை மாவட்டத்தின் பிரதான நீர் மூலமாக திகழ்கின்றது. இலங்கையில் உள்ள ஆறுகளில் 12வது நீளமான ஆறான இது நீரோட்டத்தின் படி 18வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப் பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2115 மில்லியன் கன மீற்றர் மழை பெய்கிறது. இதில் சுமார் 12 வீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி 1218 சதுர கிலோமீற்றர் நீரேந்து பகுதியை கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 14ஆவது பெரிய நீரேந்து பகுதியாகும்.
இவ்வாறு அதி முக்கியத்துவம் வாய்ந்த ‘கும்புகன் ஓயா’. இன்று சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு, மற்றும் மணல் அகழ்வு போன்ற நாசகார மனித நடவடிக்கைகளால் சீரழிந்துள்ளது. கும்புக்கன்,புத்தள,மதுருகெட்டிய,பாராவில, ஒக்கம்பிட்டிய உள்ளடங்களாக சுமார் 6000 விவசாய குடும்பங்கள் இந்த ஆற்றின் மூலம் நேரடியாக நன்மை அடைகின்றனர். இவர்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயத்துக்கும் இந்த ஆறு அடிப்படையாக அமைந்துள்ளது.இந்த விடயம் தொடர்பான ஆய்வை இண்டர் நியூஸ் [ INTERNEWS EARTH JOURNALISM NETWORK ] இன் புவிசார் ஊடகவியல் வலையமைப்பின் அனுசரணையுடன் ஆரம்பித்தோம்.
பொதுவாகவே மொனராகலை மாவட்டமானது குறைந்த வருமானம் பெறும் சமூகங்களை கொண்டதாகும். எனவே இங்குள்ள மக்களின் பொருளாதாரம் கீழ் மட்டத்திலேயே உள்ளது. இது அவர்களை சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு வசதியாக உள்ளது. இதில் கும்புக்கன் ஓயாவை அண்டிய பிரதேசங்களில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுத்தப்படும் மக்கள் அதிகரித்துள்ளனர். இது சூழல் சார்ந்த பிரச்சினையாய அதிகரித்துள்ள அதேவேளை மறுபுறம் உயிர் அச்சுறுத்தலான இந்த சட்டவிரோத பணியில் ஈடுபடும் , ஈடுபடுத்தப்படும் மக்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது.
பிரதேசவாசிகள் இல் ஒருவரான ‘கந்தசாமி’ என்பவரின் கூற்றுப்படி ஆரம்பத்தில் பிரதேச மக்கள் சிறிய அளவில் தமது எல்லைக்குட்பட்ட ஆற்றுப் பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரத்தினக்கல் அகழ்வு சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றாலும் அது பாரிய அளவில் இடம் பெறாத காரணத்தினால் சூழல் பாதிப்புகள் பாரியளவில் இடம்பெறவில்லை என்பது கந்தசாமியின் கருத்து. அதேவேளை இது காலப்போக்கில் ஒரு துணிகரமாக வியாபாரமாக தோற்றம் பெற்றுள்ளது.
இன்றைய நிலையில் வெளி பிரதேசங்களில் உள்ள செல்வந்தர்களால் ஆற்றுப் பகுதியை அண்டிய நிலம் பெருமளவான விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள மக்களின் ஏழ்மை நிலையை இனங்கண்ட வியாபாரிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என கந்தசாமி தெரிவிக்கின்றார்.
மொனராகலை மாவட்டமானது இயல்பாகவே உலர்ந்த காலநிலை நிலவும் மாவட்டமாகும். இங்கு குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக நிலவுகின்றது. எனவே இங்குள்ள நீர் முதல்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணராத சில சுயநலவாதிகள் இயற்கை வளமான கும்புக்கன் ஓயாவை இன்று ஆபத்தான பிரதேசமாக ஆக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதேச வாசியான மோகன் என்பவர் கூறுகையில் மொனராகலை பிரதேசமானது கும்புக்க ஓயாவின் காரணமாக நாடுமுழுவதும் அறியப்பட்ட ஒரு பிரதேசமாக ஆகியது. எமது நாளாந்த வாழ்க்கையுடன் ஏதோ ஒரு விதத்தில் இந்த நதி தொடர்புபடுகின்றது. எனவே இதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இன்று ஆற்றின் பல்வேறு இடங்களில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுகின்றது. இது இன்று சில பிரதேசவாசிகளாலும் ஒப்பந்தத்துக்கு அமர்த்தப்பட்ட நபர்களாலும் இடம்பெறுகிறது என்கின்றார்.
அவர் மேலும் மேலும் கூறுகையில். முன்பெல்லாம் கும்புக்கன் ஓயா நீரானது குடிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருந்தது ஆனால் இன்று சட்டவிரோத செயற்பாடுகளான மணல் அகழ்வு, இரத்தினக்கல் அகழ்வு என்பவற்றால் ஆறு சேறும் சகதியுமாக மாறி உள்ளது என்று கூறுகின்றார்.
இதனடிப்படையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் உயிர்ப்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுகிறது. நாம் இன்று கும்புக்கன் ஓயாவின் பல பிரதேசங்களிலும் அதனை அவதானிக்க முடியும். இது ஒரு குற்றச் செயலாக இருப்பினும் அனேகமான பிரதேசவாசிகள் இதில் ஈடுபடுவதால் யாரும் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் வழங்குவதில்லை. எனவே இந்த சட்டவிரோத செயற்பாடு பரவலாக இடம் பெறுகின்றது. இதனை அவ்வப்போது காவல்துறையினர் முற்றுகையிட்டும் இப்பிரச்சனைக்கு உரிய நிரந்தர தீர்வு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளால் மனித உயிர்களும் பறி போயுள்ளன என்பது இதன் ஆபத்தை புரிந்து கொள்ள நல்ல சான்றாக உள்ளது.
அதாவது இன்று நாட்சம்பளத்திற்கு ஆட்களை பணிக்கமர்த்தி இந்த சட்டவிரோத வேலையை வெளியார் செய்கின்றனர். இவர்கள் மொனராகலைக்கு வெளியில் உள்ள வர்த்தகர்கள் ஆவர். இதேபோல் இரத்தினக்கல் அகழ்வு மேலதிகமாக சட்டவிரோத மணல் அகழ்வும் இந்த நதியை மையப்படுத்தி இடம்பெறுகிறது. இதன் மூலம் இன்று இந்த ஆறு ஆபத்து நிறைந்ததாக மாறியுள்ளது. இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் நபர்கள் ஆற்றுக்குக் குறுக்காக தடுப்புகளை ஏற்படுத்துகின்றனர். அதேபோல் அவர்கள் அகழ்வுக்காக பாரிய குறிகளை தோன்றுகின்றனர். பின்னர் அவற்றை முறையாக மூடுவதில்லை இதனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவரும் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த மாதம் குடிநீருக்காக ஆற்றுக்குச் சென்ற கால்நடை ஒன்று அவ்வாறான குழி ஒன்றில் விழுந்து இறந்து விட்டது. குளிப்பதற்காக ஆற்றுக்கு வரும் மக்களும் அபாயமாக மாறியுள்ள ஆற்றின் நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் இயற்கை அழகுக்கு கேடு விளைவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண் அரிப்பு,பாரிய மரங்கள் சரிந்து விழுதல் போன்ற பல்வேறு சூழல்சார் பிரச்சினைகள் நதியை அண்டி தோன்றி உள்ளன என்று பிரதேசவாசியான மோகன் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மொனராகலையில் இயங்கும் சிவில் அமைப்பான மொனராகலை சமூக பாதுகாப்பு நிலையத்தின் பிரதான செயற்பாட்டாளர் தம்மிக லக்ஷ்மன் என்பவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியபோது, இப்பிரச்சினையின் மற்றும் ஒரு பக்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
மொனராகலை சமூகவள பாதுகாப்பு நிலையத்தின் மூலம் கடந்த 20 வருடங்களாக நாங்கள் சமூகம் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்தும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் மொனராகலை ஒரு விவசாய அடிப்படையிலான சமூக பொருளாதார பின்னணியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள். எனவே இங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி அவர்கள் தமது ஜீவனோபாய கொண்டு நடத்துகின்றனர் அதில் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள கும்புக்கன் ஓயா முக்கியமான ஒரு நீர் முதல் ஆகும்.
ஆனால் இன்று இந்த நதியானது சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வில் காரணமாக கடுமையான சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது என்கின்றார்.தம்மிக்கவின் கருத்துப்படி இந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக்கு பின்னால் பலம் பொருந்திய அரசியல்வாதிகள் இருப்பதாக அறிய முடிகின்றது. இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இன்று பாரியளவில் இடம்பெறுகின்றன. இதற்கு பின்னால் உள்ளுராட்சி மன்றங்களிலும் ஏனைய பதவிகளிலும் உள்ள அரசியல்வாதிகளே உள்ளனர், ஆரம்பகாலங்களில் பிரதேச மக்கள் சிறிய அளவில் இவ்வாறு சட்டவிரோதமாக முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டாலும் அது ஒரு சுற்றுச் சூழல் பிரச்சனையாக உருவெடுக்கவில்லை, ஆனால் இன்று இது அரசியல்வாதிகளின் பலத்தினால் அவர்களின் உதவி உள்ளோரால் பாரிய அளவில் இடம்பெறுகின்றது. கொழும்பு,இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து பெரிய முதலாளிகள் மக்களிடம் உள்ள நிலங்களை கொள்வனவு செய்து இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். தமது சொந்த நிலத்தை இந்த மக்கள் விற்றுவிட்டு இன்று அவர்களிடமே நாளாந்த கூலிக்கு இவர்கள் இரத்தினக்கல் அகழ்வு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் எந்த ஆட்சி வந்தாலும் இவ்வாறு அரசியல் பலம் பொருந்தியவர்கள் தமது பலத்தை துஷ்பிரயோகம் செய்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றார் லட்சுமண்.
எமது அமைப்பின் மூலம் நாம் இந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். குறிப்பாக பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை செய்தோம் ஆனால் அது முழுமையான எமக்கு சாதகமான பலனை தரவில்லை. இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு எமது பிரதேசத்தில் உள்ள மதத் தலைவர்கள் சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்போர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு தொடர்பாக செயற்பட்ட எமது பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இது இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை செய்யும் கும்பலின் பலத்தை காட்டுகின்றது. இவர்கள் பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தை வைத்தே செய்கின்றனர். விவசாயிகளை திரட்டி நாம் இதற்கு எதிராக போராடினோம். அதேபோல் மக்களையும் இதற்கு பொறுப்பான அரச நிறுவனங்களையும் தெளிவுபடுத்தினோம், இன்று மக்கள் தெளிவாக இருக்கின்றனர் ஆனால் அரச நிறுவனங்கள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை அவர்கள் அந்த சமயத்தில் ஏதாவது கருத்துக்களை கூறினாலும் பின்னர் அதற்கு உரிய நியமங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதில்லை என்றால் என்றார் தம்மிக்க.
அனைவரும் இணைந்து இந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முடியும். இரத்தினக்கல் அகழ்வுக்கு என்று உரிய நியமங்களை முறையாக பின்பற்ற வேண்டும். இதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்காலத்திற்கு செய்யும் அநியாயமாகும், இதற்காக தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை, பிரதேச செயலகம், வன பரிபாலன திணைக்களம், பொது மக்கள், சிவில் அமைப்புகள் என்பவற்றை இணைத்து இந்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிரான பொறிமுறையை தயாரிக்க வேண்டும்.இரத்தினக்கல் அகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த பிரதேச மக்களுக்கு கிடைக்கவேண்டும். வெளிப் பிரதேசத்தில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு எமது மக்களும், சூழலும் பலியாவதை அனுமதிக்க முடியாது என்பதே சிவில் செயற்பாட்டாளர் லக்ஷ்மன் கருத்தாக உள்ளது.
அதே போல் மொனராகலை மாவட்ட சர்வமத செயற்குழுவின் தலைவர் மாரிமுத்து ஜோதிகுமார் அவர்களின் கருத்து இவ்வாறு அமைந்தது. நான் மொனராகலை கும்புக்கன் பிரதேசத்தை சேர்ந்தவன். எமது பூர்வீக நிலமாக கும்புக்கன் பிரதேசமே திகழ்கின்றது.மொனராகலை பாரம்பரியமாக விவசாய பின்னணியைக் கொண்ட ஒரு மாவட்டம் ஆகும். இங்குள்ள மக்களுக்கு கும்புக்கன் ஓயாவனது பிரதான வாழ்வாதாரமாக திகழ்கின்றது. இன்று கும்புக்கன் ஓயா ஒரு குற்ற பிரதேசமாக மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வாகும்.அதேபோல் ஆற்றை அண்டிய பிரதேசங்களில் சட்டத்துக்கு விரோதமான முறையில் மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது.
அழகிய கும்புக்கன் ஓயாவை நம்பி மற்றும் புத்தள பிரதேசத்தில் மட்டும் 5000 இற்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளனர் .ஆனால் இன்று இந்த சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வின் காரணமாக சூழல் மாசடைவு, மண்ணரிப்பு, பாரிய மரங்கள் சரிந்து விழுதல் போன்ற சூழல் பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை இன்று கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளன. ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் D.S.சேனாநாயக்கவின் ஆரம்பிக்கப்பட்ட நீர் முகாமை திட்டமானது முறையான கையாள்கை இன்மையால் இன்று விவசாய சமூகத்துக்கு பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது.புத்தல ஒக்கம்பிட்டிய,அத்தரமண்டிய, மாளிகாவில, கலவில்லாருகம,போன்ற பிரதேசங்களில் பிரதான குடிநீர் மூலமாக இன்று கும்புக்கன் ஓயாவே காணப்படுகின்றது.
இன்று கும்புக்கன் ஓயாவை மையப்படுத்தி இடம்பெறும் வேலைத்திட்டங்கள் மற்றும் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு போன்றவற்றாலும் ஆற்றை அண்டிய பிரதேசங்கள் கடுமையான சூழல் மாசடைவை சந்தித்துள்ளது. இது தொடர்பாக நாம் பொதுமக்களை திரட்டி ஏனைய சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தினோம். இவ்விடையம் தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டிய அரச திணைக்களங்கள் இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காட்டும் கரிசனை போதாது என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.
இதனால் நாங்கள் பொதுமக்களை திரட்டி அவர்களை அறிவுட்டும் வகையில் போராட்டங்களை நடாத்தினோம் .இதன் காரணமாக இரசாயன மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை எம்மால் தடுக்க முடிந்நது. அதேபோல் இந்த ஆற்றை அண்டியுள்ள இரத்தினகல் முறையற்ற விதத்தில் அகழப்படுவதன் காரணமாக ஆற்றின் இரு பக்கமும் உள்ள பாரிய மரங்கள் சாய்வடைந்து உள்ளது. இது எதிர்காலத்தில் இந்த ஆற்றின் நீர் அற்று போகும் நிலையை உருவாக்கியுள்ளது என்கிறார். அதேபோல் இரத்தினக்கல் என்பது இலங்கைக்கு உரிய முக்கியமான கனியவளமாகும். ஆதனை முறையாக நியமப்படுத்தி கைய்லும்போது நாட்டின் தேசிய வளமாக இரத்தினங்களை எம்மால் பயன்படுத்திகொள்ள முடியும். தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை அனுமதிபத்திரங்களை வழங்கினாலும் அனுமதி பெற்றவர்களும் அதை முறையாக பயன்படுத்துவதில்லை. அனுமதி பத்திரம் வழங்கியும் அவ்றென்றால் ; சட்டவிரோதமான முறையில் இதனை செய்பவர்களின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை என்கின்றார் ஜோதிகுமார்.
இதனை அரச திணைக்களங்கள் முறையாக கையாளவில்லையென்றால் மொனறாகலை மாவட்டத்தில் சிறிது காலத்திற்கு உள்ளாகவே குடிநீர் தட்டுப்பபாடு உருவாகும். இந்த அழகிய சூழல் பாதிக்கப்படும்போது உயிர்பல்வகைமையும் இல்லாதுபோகும். இதற்காக நாம் சர்வமத அமைப்பு சார்பாக எதிர்காலத்திலும் தொடர்சியாக செயற்பட உள்ளோம். இயற்கையை அழித்து மனிதன் வாழ முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வாறான சிவில் அமைப்புகளின் எதிர்புகள் காரணமாக தற்காலிகமாக சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முடிந்தாலும் அதனை முழுமையாக தடை செய்வதற்கு முடியாமல்போய் உள்ளது என்பது சமகாலத்திலும் கும்புக்கன் ஓயாவை அவதானிக்கும்போது தெரிகின்றது.
எனவே இவ்விடயம் தொடர்பாக தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் மொனராகலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் திரு.சம்பிக்க கினிகம அவர்களிடம் வினவப்பட்டது. அவரின் கருத்து ‘நாங்கள் சட்டவிரோத இரத்தினகள் அகழ்வு தொடர்பாக கடுமையான நிலைபாட்டிலேயே உள்ளோம். இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் மற்றும் நாசாகர செயற்பாடுகள் தொடர்பாக எமது அதிகார சபையினுடாக அவ்வப்போது சுற்றி வளைப்புகளையும். மேற்கொள்வோம் ஆனால் பொதுமக்களின் சிலர் இதற்கு உதவியாக செயற்படுகின்றனர். பிரதேச மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எம்மால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்கின்றார்.
அதே போல் தேசிய இரதத்தினகல் ஆபரண அதிகார சபையின் மூலம் வருடத்திற்கு 4000 அனுமதிப்பத்திரங்கள் இரத்தினக்கல் அகழ்வுக்கு வழங்கப்படுகின்றது.அவற்றுள் சுமார் 500 அனுமதிபத்திரங்களை மாத்திரமே மொனராகலை காரியாலயம் வழங்குகின்றது. இவற்றை பெற்றுக்கொண்டு நாம் வழங்கும் நியமங்களை மீறி இரத்தினகல் அகழ்வு பணிகளில் அனேகமானோர் ஈடுபடுவதாக எமக்கு முறைபாடுகள் கிடைக்கபெறுகின்றன. அதேபோல் பிரதேச மக்களும் சட்டவிரோதமான முறையில் கும்புக்கன் ஓயாவை அண்டிய பரதேசங்களில் அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்றனர். இது இன்று ஒரு பாரிய ஒரு சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்கிறார்.
அதேபோல் இந்த பிரதேசத்தில் உள்ள மக்களில் அதிகமானோர் குறைந்த வருமானம் பெரும் மக்களாவர்.எனவே இவர்களில் அதிகமானோர் தமது பிரதேசத்திலுள்ள ஆற்றை அண்டிய பகுதிகளில் இவ்வாறு சட்ட விரோத இரத்தினகல் அகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல் துறையினருடன் நாம் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம். பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.அதனால் எமக்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியினைகொண்டு இதனை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்கிறார். அதேபோல் பிரதேச செயலகம் ,வனப்பரிபாலன தினணக்களம் , நீர்பாசன தினணக்களம் என்பவற்றுடன் இணைந்து நாம் ‘சுரகிம கங்கா’ என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். அந்த திட்டத்தின் மூலமும் நாம் இவ்வாறான சட்ட விரோத இரத்தினகல் அகழ்வு , மணல் அகழ்வு என்பவற்றையும் முகாமை செய்ய திட்டமிட்டடுள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயல்களை தவிர்க்க முடியும் என்று எதிர்பார்கின்றோம் என்று கூறினார்.
மேலும் எதிர்காலத்தில் இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் தொடர்பாக மக்களை தெளிவூட்டுவதும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் வகையில் அனுமதிப்பத்திரங்கள் வழங்களை அதிகரிப்பதும் ஒரு யோசனையாகும். என்று திரு.கினிகம கூறினார்
+ comments + 1 comments
ITS WONDERFULL ANNA.THANKS A LOT ANNA.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...