கொழும்பின் உருவாக்கம் எங்கிருந்து தொடங்கியது, அது எத்தனை அந்நிய சக்திகளிடம் சிக்குண்டு மாற்றம் கண்டு இந்த நிலையை அடைந்தது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வை இத்தொடரில் இனி வரும் வாரங்களில் செய்வோம். அதே வேளை “கொழும்பு” என்கிற பெயர் உருவானதன் காரணங்களை இங்கே ஆராய்வோம்.
- தமிழில் – கொழும்பு
- ஆங்கிலத்தில் – கொலொம்போ
- சிங்களத்தில் – கொலம்ப
என்று இப்போது பயன்பாட்டில் உள்ளது.
கொழும்பு என்கிற பெயர் வருவதற்கான ஏதுவான உறுதியான காரணம் என்ன என்பது தொடர்பாக இன்றும் குழப்பகரமான விளக்கங்களே நீடிக்கின்றன. அதிகமான விபரங்கள் வாய்மொழிக் கதைகளாக நீல்பவையாக்கவுமே உள்ளன. போர்த்துக்கேயரின் வருகையோடு தான் “கொழும்பு” என்கிற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. அதேவேளை கொழும்பு என்கிற பதத்துக்கு ஏறத்தாள நிகரான பதங்கள் அதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் கொழும்பு என்கிற பெயரானது சுதேச இலங்கையரால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக காலனித்துவ காலத்தில் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது தான்.
இலங்கைத் தீவானது உலகின் மேற்குக்கும் கிழக்குக்குமான கடற்பயணத்தின் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாக ஆவதற்கு அதன் அமைவிடம் முக்கியமானதொரு காரணம் என்பதை நாமறிவோம். அது தவிர்க்கமுடியாத தரிப்பிடமாக அது எப்போது உலக நாடுகளால் உணரப்பட்டதோ அப்போதிருந்தே இலங்கையின் பொருளாதார, அரசியல் கேந்திர முக்கியத்துவமும் உறுதியாயிற்ற என்றே கூறலாம்.
அந்த கேந்திர முக்கியத்துவத்துக்கு மேலும் பலமூட்டிய இடம் கொழும்பு தான். இந்துசமுத்திரத்தின் முத்து என்று இலங்கையை ஒரு குறியீடாக கூறினாலும்; இந்து சமுத்திரத்தின் அதி முக்கியமான கேந்திர மையமாக கொழும்பு அமையப்பற்றது.
13 ஆம் நூற்றாண்டில் இன்னும் சொல்லப்போனால்தம்பதெனிய காலப்பகுதியில் கொழும்பை ஒரு துறைமுகத் துறையாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற குறிப்புகள் உண்டு.சீனாவினூடாக இலங்கைக்கு வந்த மார்கோ போலோ இந்தியாவின் மலபார் பிரதேசங்களுக்கு செல்லுமுன் கொழும்பிலிருந்து அல்லது அதற்கு அருகாமையிலிருந்து தான் புறப்பட்டிருக்ககூடும் என்கிற ஐயங்கள் உண்டு. ஆனால் மார்கோ போலோவின் குறிப்புகளில் குறிப்பாக கொழும்பு துறைமுகம் பற்றி குறிப்பிடப்படவில்லை..
இலங்கையைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளைப் பொறுத்தளவில்; 1344 இல் மொரோக்கோவிலிருந்து இருந்து இலங்கைக்கு வந்த இபன் பதூதா எழுதிவிட்டுச் சென்ற பதிவுகளையும் வரலாற்றாசிரியர்கள் முக்கிய கவனத்திற்கெடுப்பர். அவர் அன்றைய பதிவுகளில் “கலம்பு” (Kalanbu) என்றே பயன்படுத்தியிருக்கிறார். கொழும்பையும், மேற்கு தொடர்ச்சி கப்பற்துறை பற்றிய விபரங்களையும் அவர் பல விபரங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர் “ஜலஸ்தி” என்கிற முஸ்லிம் இனத்தவர் ஒருவரே இந்த கொழும்பு நகரின் ஆட்சியாளராக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மலே இனத்தைச் சேர்ந்த ஒரு கடற்கொள்ளையர் அவர் என்று இந்தக் காலப்பகுதியில் கொழும்பு கரையோரங்களில் முஸ்லிம் வர்த்தகர்களின் செல்வாக்கு அதிகம் இருந்ததை நாம் அறிவோம். முதன்முதலில் போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றிய போது கொழும்பு போன்ற இடங்களில் அவர்கள் சண்டையிட்டது சுதேசியர்களுடன் அல்ல. முஸ்லிம் வர்த்தகர்களுடன் தான். முஸ்லிம் வியாபாரிகளை அகற்றிவிட்டுத் தான் அந்த இடத்தை அவர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.
ஏறத்தாள அதே காலப்பகுதியில் சீனப் பேரரசரின் கடற்படைத் தளபதியான வாங் - தா – யுவான் (Wang – ta - Yuan), கொழும்பு நகரத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். அவர் இந்த இடத்தை "கொலாப்பு" என்று குறிப்பிட்டிருக்கிறார். இபன் பதூதா அதை "கலங்பு" என்று குறிப்பிட்டார். அழைத்தார். ஆனால் அவர்களின் உச்சரிப்பு எந்த அளவிற்கு இதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் குறிப்பாக உறுதிசெய்துவிட முடியாது..
16 நூற்றாண்டுக்கு முன்னர் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், அதே வேளை இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் கொழும்பு விளங்கியது. கொழும்பு இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வரலாற்று வழித்தடங்களை கடந்து தான் வந்துள்ளது.
கொழும்பு ஒரு வர்த்தகத் தலை நகரமாகவும் நிர்வாகத் தலைநகராகவும் போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்னரே ஆகிவிட்டது. ஆனால் போர்த்துக்கேயர்கள் தான் அதை உறுதியாக பலப்படுத்தினார்கள். போர்த்துக்கேயரின் காலத்துக்கு அண்மைய காலத்தில் தான் சிங்கள ராஜாவலிய நூலும் எழுதப்பட்டது. மகாவம்சம், தீபவம்சம், பூஜாவலிய போன்ற இலங்கையின் வரலாற்று நூல்களின் வரிசையில் ராஜாவலியவும் முக்கியமானது. அதில் “களன் தொட்ட” என்று இந்த இடத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. “களனி கம்தொட்ட” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு என்கிற பெயர் நிலைபெறுவதற்கு முன்னரே களனி என்கிற பிரதேசமும், களனி அரசும், (களனியை கல்யாணி என்றும் சிங்களத்தில் அழைப்பார்கள்.) களனி விகாரையும், களனி கங்கையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு பிரசித்தி பெற்றிருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
பழங்காலத்தில் “கொலன் தொட்ட” என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டு வந்தது தான் மருவி கொழும்பு என்கிற பெயர் ஆனதாகவும் கூறப்படுவதுண்டு. கொலன் தொட்ட என்றால் கெலனி (களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பில் இருந்த அந்த களனி ஆறு அன்று மிகவும் பிரபல்யமானது. களனி கங்கை கொழும்பில் வந்து கலக்கும் இடங்களான இன்றைய முகத்துவாரம், காலிமுகத்திடல் போன்ற இடங்களையொட்டித் தான் அன்றைய சிறு துறைமுகம் அமைந்திருந்தது.
பிரபல வரலாற்றாசிரியர் எமர்சன் டெனன்ட் (Emmerson Tennent) கொழும்பு என்கிற பெயரின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்போது; “களன் தொட்ட” என்கிற பெயரைத் தான் போர்த்துக்கேயர் தமது உச்சரிப்புக்கு ஏற்ற ஒலியுடன் “கலம்பு” என்று மாற்றினார்கள் என்கிறார். அந்த வரிசையில் நீர்கொழும்பின் பெயரையும் போர்த்துக்கேயர் தான் “நெகம்பு” (Negombo) என்று மாற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
கொழும்பு என்கிற பெயர் எப்படி உருவானது என்கிற கதைகளில் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியது என்கிற கருத்தும் உண்டு. (கொள-பச்சை, அம்ப-மாம்பழம், தொட்ட - துறைமுகம்). மாந்தோப்புள்ள துறைமுகம் என்கிற அர்த்தத்தை அது குறிப்பதாக பல நூல்கள் குறிப்பிடுகின்றன.
அதேவேளை சிங்கள இலக்கியங்களிலும் சிங்கள நிகண்டுகளிலும் “கொழும்பு” என்கிற பெயர் பிற்காலத்தில் இடம்பெற்றிக்கிறது. குறிப்பாக சிங்கள மொழியில் (ஹெல மொழியில்) கொழும்பு என்கிற பெயர் இடம்பெற்ற முதல் நூலாக தம்பதெனிய காலத்துக்கு உரிய பிரபல இலக்கியங்களில் ஒன்றான “சிதத் சங்கராவ”என்கிற இலக்கியத்தில் முதன் முதலாக அடையாளம் காணமுடிகிறது.
பாளி மொழியில் “கதம்ப” என்று “கொலன் மரத்தைக்” குறிப்பிடுவார்கள். அதுவே காலப்போக்கில் சிங்களத்தில் மருவி “கொலம்ப” என்று ஆகியிருக்கலாம் என்கிற கருத்தும் கூட நிலவுகிறது. இதன் பிரகாரம் கொழும்பு என்கிற சொல் போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே பிறந்துவிட்டதாக வாதிப்பவர்களும் உள்ளார்கள்.
ஒருவகை படகுக்கு “கலம்பு” என்று மலையாள மொழியில் குறிப்பிடுவதாகவும், அடிக்கடி இங்குள்ள துறைமுகத்துக்கு கேரளாவில் இருந்து அந்த படகு போக்குவரத்தில் இருந்ததால் “கலம்ப” என்று இந்த இடத்துக்கு பெயர் வந்திருக்கலாம் என்கிற ஒரு கருத்துமுண்டு. இதை பிரபல சிங்கள மொழிப் புலவரான முனிதாச குமாரதுங்கவும் உடன்படுகிறார்.
தமிழின் “களப்பு” என்கிற சொல்லில் இருந்து “கலம்ப” உருவாகியிருக்கலாம் என்கிற கருத்தும் உண்டு. குறிப்பாக கொழும்பு பேறை வாவி ஒரு களப்பு போன்ற தோற்றத்தில் இருந்ததால் இந்த இடத்துக்கு கலப்பு என்று அழைக்கப்பட்டு அது திரிந்து காலம்ப என்று ஆகியிருக்கலாம் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் பேறை வாவி பிறகாலத்தில் தான் திருத்தப்பட்டு இந்த வடிவத்தைப் பெற்றது என்பதால் அந்த வாதமும் அத்தனை பலமானதாக இல்லை.
90 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் முக்கிய இடங்களின் பெயர்களைப் பற்றி ஆராய்ந்த யூலியஸ் த லெனரோல் ராஜரீக ஆசியர் கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் கொழும்பு துறைமுகத்தை ஊடறுத்துச் செல்லும் “கொலன்னாவ நதி” கடலில் விழுந்த இடத்தைத் தான் “கொலொன்தொட்ட” என்றார்கள் என்று குறிப்பிடுகிறார். 14 நூற்றாண்டில் கம்பளை இராச்சிய காலத்தைச் சேர்ந்த “நிக்காய சங்கிரஹா” என்கிற நூலில் கோட்டை அரசன் நடத்திய பௌத்த தீட்சை (உபசம்பத்தா) நடத்திய இடத்தை”கலம்பு” என்கிறார். அது “கொலன்னாவ ஆற்றைத் தான்” குறிப்பிடுவதாக அவர் தனது ஆய்வில் தெரிவிக்கிறார்.
கொழும்பு நகரத்தின் வரலாற்றைத் தேடிச்சென்ற இன்னொரு ஆய்வாளரான எஸ்.ஜே.பெரேரா என்கிற பாதிரியாரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறார்.
களனி ஆற்றின் நிரம்பி வழியும் நீரை எடுத்துக்கொண்டு மாளிகாவத்தை சதுப்பு நிலங்கள் வழியாக மருதானை புனித செபஸ்தியான் மேட்டுக்கடியில் ஊடுருவி புறக்கோட்டை கைமன் வாசல் (ஐந்துலாம்புசந்தி) வழியாக, ரேக்லமேஷன் வீதிக்கு சமாந்திரமாக வந்து கடலில் விழுவதாக குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேயர்கள் “புனித ஜோன்ஸ் ஆறு” என்று பெயரிட்டதுடன், பேறை வாவியை உருவாக்க இது பெரும்பங்கை வகித்ததாம்.
இதைவிட பிரசித்திபெற்ற இன்னோர் கதையுமுண்டு. மாம்பழம் இல்லாத மாமரம் ஒன்று கொழும்பு துறைமுகப்பகுதியில் (குறிப்பாக கோட்டை commissariat street பகுதியில்) இருந்ததாம். ஆனால் அதில் மாம்பழங்கள் இருந்ததில்லையாம், பதிலாக பச்சைநிற இலைகளால் பெருகிப் போய் இருந்ததாம். அந்த மரத்துக்குத் தான் “கொல – அம்ப” (பச்சை மாம்பழம்) என்று பெயரிடப்பட்டதாம். அதேவேளை கொலம்பஸின் நினைவாக போர்த்துக்கேயர் “கொலம்ப” என்கிற பெயரை இந்த இடத்துக்குப் பெயராக இட்டார்கள் என்கிற ஒரு பிரபல கதை உண்டு. கொழும்புத் துறையை அடையும் கப்பல் சிப்பாய்களுக்கு இந்த மரம் இலகுவாக தூரத்தில் இருந்து அப்போது தென்படுமாம்.
இதன் உண்மை பொய்யை நாம் உறுதிசெய்ய முடியாது போனாலும் இதற்கு கிட்டிய விபரமொன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஒல்லாந்தர்கள் கொழும்பு கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் கொழும்பு கோட்டைக்கென ஒரு சின்னத்தை உருவாக்கினார்கள். இலங்கையில் ஒல்லாந்த கைப்பற்றிய சகல கோட்டைகளுக்கும் ஒவ்வுறு விதமான சின்னங்களை உருவாக்கிக் பேணினார்கள். கொழும்பு கோட்டையின் சின்னத்தில் மாம்பழம் இல்லாத வெறும் இலைகளை மட்டுமே கொண்ட மாமரத்தில் ஒரு புறாவொன்று வசிப்பதாக சின்னத்தை வடிவமைத்துப் பயன்படுத்தினார்கள். இன்றும் இந்த சின்னத்தை கொழும்பில் உள்ள டச்சு மியூசியத்தில் பெரிதாகக் காணலாம்.
கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்புக்கு தப்பிவந்த ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் போர்த்துக்கேயரால் உச்சரிக்கப்பட்டது போலவே “கொழும்பொ” என்று தான் உச்சரித்தார். அதே உச்சரிப்பு தான் ஆங்கிலேயராலும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு நிலைபெற்றது.
நன்றி - தினகரன் - 30.02.2022
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...