Headlines News :
முகப்பு » , , » ஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்

ஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்

இலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம் கூறிவிடலாம். குறிப்பாக காலனித்துவ காலத்தில் இந்த பதிவுகள் அதிகமாகவே நிகழ்ந்தன. ஏறத்தாள சுதந்திரத்திற்கு முற்பட்ட நான்கரை நூற்றாண்டுகளாக இந்த நிலையே நீடித்தன. அவற்றைப் பதிவு செய்யும் போது ஆதார பூர்வமாகவும், தொல்லியல் சான்றுகளுடனும், விஞ்ஞான பூர்வமாகவும், ஆய்வு முறையியலுக்கூடாகவும் அவர்கள் பதிவு செய்தார்கள். இலங்கையர்கள் அதன்பின் அவற்றை தொடர்வதற்கான முன்னோடிகளாகவும், முன்னுதாரணர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அதற்கென்று ஒரு மரபையும், ஆய்வுப் பண்பாட்டையும் அறிமுகப்படுத்தி, கற்பித்துச் சென்றார்கள் என்றால் அது மிகையில்லை. அவர்கள் நமக்கான கல்விப் பண்பாட்டை ஜனநாயகப்படுத்தி, நவீனப்படுத்தி, வெகுஜனப்படுத்திச் சென்றதைப் போலவே நம்மையும், நம் நாட்டையும் பற்றிய பதிவுகளையும் நமக்குத் தந்துவிட்டுச் சென்றார்கள்.

அச்சுப் பண்பாட்டின் அறிமுகம் அதற்கு ஒரு பெரும் பாய்ச்சலைக் கொடுத்தது. அந்த வழியில் பல வெளிநாட்டவர்கள்; ஓவியங்களின் மூலமும், புகைப்படங்களின் மூலமும் கூட நம்மையும், நம் வாழ்வியலையும், வாழ்விடங்களையும் பதிவு செய்தமை இன்றும் நமக்கும் பெரும் ஆதாரங்களை எடுத்துத் தந்து சென்றிருக்கிறார்கள்.

பெரும்பாலும் ஆரம்பத்தில் இலங்கையைப் பற்றி நூல்கள் எழுதியவர்கள்; அவர்களே ஓவியங்களையும் வரைந்து அவ் ஓவியங்களின் மூலம் பதிவுகளை செய்திருக்கிறார்கள். 1672இல் பிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus)  “Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon” என்கிற நூலில் வரைந்திருந்த ஓவியங்கள் இன்றும் வியப்பான கதைகளை சொல்வனவாக இருப்பதைக் காண முடியும். அது போல ரொபர்ட் நொக்ஸ் போன்றோரும் இலங்கையைப் பற்றிய அறிய தகவல்களை பதிவு செய்த அதே வேளை பல ஓவியங்களின் மூலமும் அவர்களின் நூல்களில் அவற்றை விளக்கிச் சென்றுள்ளனர். இன்னும் பலர் இலங்கை பற்றிய புவியியல் வரைபடங்களை பலர் வரைந்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இலங்கையை ஓவியங்களின் மூலம் பதிவு செய்த Charlotte Gudmundsson, James Stephanoff,  Cornelis Steiger, Johannes Rach, Johann Wolfgang Heydt, Samuel Daniel,  James Cordiner,  போன்றோரின் வரிசையில் முக்கியமானவராக நாம் யான் பிராண்டஸ் (Jan Brandes) ஐக் குறிப்பிடலாம்.

யான் பிராண்டஸ்

யான் பிராண்டஸ் நெதர்லாந்தின் போதகிரேவன் (Bodegraven) என்கிற இடத்தில் 1743இல் பிறந்தார் அங்கு தான் அவரது தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர்  1770 இல் ஒரு போதகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு லெய்டன், கிரீஃப்ஸ்வால்ட் ஆகிய கல்லூரிகளில் இறையியல் படித்தார்.  1778 இல் அவர் பதாவியாவில் உள்ள Lutheran parish தேவாலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1778 இல் அவர் திருமணமானார். 1779 ஜனவரியில் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால் அதே ஆண்டு யூன் மாதம் அவரின் மனைவி அன்னா கிரப்பர் (Anna Geertruyd Krebber) மரணமானார். குறுகிய காலத்திலேயே தனது மனைவியை இழந்து நிம்மதியில்லாது வாழ்க்கையை களித்த அவர் தனது பதவியையும் இராஜினாமா ராஜினாமா செய்துவிட்டு பயணங்களில் ஆர்வம் காட்டினார்.

1785 இல் அவர் தனது பயணத்தை தொடங்கினார்  இரண்டு ஆண்டுகள் பயணங்கள் மேற்கொண்ட போது தான் 1785 ஆம் ஆண்டு தனது மகனுடன் இலங்கை வந்தடைந்தார். தனது மகனுடன் இலங்கையில் நான்கு மாதங்கள் மட்டுமே வசித்தார். அதாவது ஜனவரி 1786 வரை மாத்திரமே வசித்தார். அங்கிருந்து அவர்கள் கிழக்காசிய நாடுகளுக்கும் பயணித்து விட்டு 1787 இல் நெதர்லாந்திற்கே மீண்டும் வந்தடைந்தனர். அங்கே தனக்கு வாய்ப்புகள் மோசமாக இருப்பதை உணர்ந்துகொண்ட அவர் ஸ்வீடனுக்கு பயணம் செய்தார்,  1788 இல் அங்கே  Skälsebo தோட்டத்தை வாங்கினார். மரியா சார்லொட்ட (Maria Charlotte) எனும் பெண்ணை அங்கே மணந்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. ஆனால் 1792 ஆம் ஆண்டு அவரின் மகன் இறந்து போனது மட்டுமன்றி 1802இல் அவரின் இரண்டாவது மனைவியும் இறந்து போனார். தனது இழப்புகளை மறப்பதற்காகவும் அவருக்கு துணையாக இருந்தது ஓவியம் தான். சுவீடனில் அவர் சுவீடிஷ் மொழியையும் கற்றுக்கொண்டு ஒரு கௌரவமான பிரஜையாக வாழ்ந்து 1808 இல் அவரின் 65வது வயதில் அங்கேயே இறந்து போனார்.

இலங்கையில்...

இலங்கையில் அவர் தங்கியிருந்த அந்த ஒரு சில மாதங்கள் Lutheranஐச் சேர்ந்த பிரபல வணிகரான Van Randzouwஇன் விருந்தினராக அவர் இருந்தார். அவரின் துணையுடன் தென்னிலங்கையில் பல இடங்களுக்கு பிரயாணம் செய்தார். அப்படி கொழும்பில் இருந்த போது தான் ஒரு ஓவியரிடமிருந்து ஓவியத்தை வெகு விரைவில் கற்றுக்கொண்டார் என்று அவரைப் பற்றிய பல கட்டுரைகளில் காணக் கிடைக்கின்றன.(1) ஆனால் அவர் அதற்கு முன்னரே 1784இல் வரைந்த ஓவியங்களையும் நமக்கு காணக் கிடைக்கின்றன. இலங்கையிலும் அவர் ஓவியத்தை மேலதிகமாகக் கற்றுக்கொண்டார். நான்கே மாதங்களில் அவர் பதிவு செய்திருக்கிற ஓவியங்களின் எண்ணிக்கையையும், அதில் உள்ள நுட்பங்களையும் பார்க்கும் போது அவர் நிச்சயம் ஏற்கெனவே ஒரு அனுபவமுள்ள ஓவியர் என்று உணர முடிகிறது. அது மட்டுமன்றி இலங்கையில் அவர் கண்டவற்றை பதிவு செய்த ஓவியங்கள் பலவற்றை நகல் ஓவியமாகவும் படி எடுத்துக்கொண்டார்.

அன்றைய கால மிஷனரிகளைப் போலவே யான் பிராண்டசும் பன்மொழித் தேர்ச்சியைக் கொண்டவராக இருந்தார். இறையியல் பற்றிய ஆழ்ந்த தேடல் கொண்டவராக இருந்ததால் அவர் அந்தந்த மதங்கள் பற்றி அறிவதற்காக அம்மதங்கள் சார்ந்த மொழிகளையும் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

பிராண்டஸ் அப்போதைய இலங்கையின் டச்சு ஆளுநரான வில்லெம் ஜேக்கப் டி கிராஃப் (Willem Jacob van de Graaff 1737 - 1804) அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு விருந்துக்கு வரவழைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டார். பிராண்டஸ் இலங்கைக்கு வந்த அதே ஆண்டு தான் ஆளுநர் வில்லம் ஆளுனர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். வில்லம் ஆளுநர் பதவியில் இருந்து விலகி (1794) இரு ஆண்டுகளில் தான் டச்சு வசம் இருந்து ஆங்கிலேயர்களின் கைகளுக்கு இலங்கை போனது என்பதையும் இங்கே நினைவூட்டுவது இந்தக் காலப்பகுதியை புரிந்துகொள்ள வாசகர்களுக்கு உதவும்.


ஆளுநரின் ஒத்துழைப்புடன் அன்றைய கண்டி அரசர் ராஜாதி ராஜாசிங்கனை வருடாந்தம் சந்திக்கின்ற நிகழ்வைக் காணும் வாய்ப்பையும் பெற்றார் யான் பிராண்டஸ். அந்த சந்திப்பைப் பற்றிய சில ஓவியங்களை அவர் வரைந்தார். இன்றும் ராஜாதி ராஜசிங்கனை காட்சிப்படுத்த பலரும் தமது நூல்களிலும், கட்டுரைகளிலும் பிராண்டஸ் வரைந்த அந்த ஓவியத்தைப் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

அதுபோல பிராண்டஸுக்கு திசாவ ஒருவரும் கொழும்பில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அந்த திசாவவின் மூலம் யாணைகளுக்கு பயிற்சியளிக்கும் இடங்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பை அண்டிய ஜாஎல பகுதியில் அவர் வியக்கத்தக்க அளவில் யானைகளின் எண்ணிக்கையையும், அவற்றை காடுகளில் கையாள எடுக்கப்பட்டிருந்த நுட்பங்களையும், காட்டு யானைகளுக்கு பயிற்சியளித்து மனிதத்தேவைகளுக்கு பயன்படுத்த தயார் படுத்தும் விதங்களையும் கண்டு பிரமித்தார்.

இந்த நிகழ்வின் தனித்துவமான ஓவியப் பதிவை பிராண்டஸ் 22  நீர்வண்ண (Watercolor) ஓவியங்களை வரைந்திருக்கிறார். சுமார் ஒன்றைரை நூற்றாண்டுக்கு முன்னர் யானைகளை இவ்வாறு தயார்படுத்தியமை பற்றி காட்சிகளாக நமக்கு கிடைத்திருக்கும் பதிவுகள் இவை.












காட்டு யானைகளை சிக்க வைத்தல், அவற்றை அடக்குதல், அவற்றைக் காவல் செய்தல், பாதுகாத்து பேணுதல், பயிற்சியளித்தல் என்பவற்றை விளக்கங்களுடன் அந்த ஓவியங்களில் பதிவு செய்திருக்கிறார் பிராண்டஸ். காட்டில் பெரும் நிலப்பரப்பில் மரங்களால் நீள்முக்கோண வடிவில் வேலியமைத்து, அவற்றின் நடுவில் மூன்று கட்டங்களாக யானைகளை வேறுபடுத்தி ஓரிடத்துக்கு வரச்செய்யும் வகையில் மரத்தால் மதில்களையும் அமைத்து; இறுதியில் யானைகள் ஒவ்வொன்றாக வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்தை அவர் வரைந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நுட்பமான வடிவம் இருந்திருப்பது அந்த ஓவியத்தின் மூலம் தான் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

பிடிக்கப்பட்ட யானைகளுக்கு அவர்கள் இட்ட பெயர்கள், அவற்றின் வகைகள் போன்ற விபரங்களையும் அவர் அந்த ஓவியங்களில் பதிவு செய்தார். அந்த ஓவியங்கள் மிகவும் உயிர்ப்புள்ளதாக இருப்பதைக் காண்பீர்கள். யானைகளின் இந்த காட்சிகளை அவர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள ஜாஎல பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார். ஜாஎல பகுதி அன்று இப்பேர்பட்ட யானைகளின் பெரும் பிரதேசமாக இருந்திருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியம் அளிக்கின்ற விபரம்.

யானைகள் பற்றிய அவரின் ஓவியங்களே என்னை அதிகம் கவர்ந்த ஓவியங்கள். இக்கட்டுரைக்கு என்னை உந்தியது  கூட இலங்கையில் இன்று பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள யானைகளின் பிரச்சினை குறித்த ஒரு வரலாற்று கட்டுரைக்காக தகவல்களை தேடிக்கொண்டிருக்கும் கிடைத்த யான் பிராண்டஸ்ஸின் ஓவியங்கள் தான். இந்த இரு விடயங்களையும் ஒரே கட்டுரையில் முடிக்க திட்டமிட்டிருந்தபோதும்; அப்படி செய்தால் யான் பிராண்டஸ் என்கிற கலைஞனின் தனித்துவமான பெறுமதியை அது குழப்பிவிடும் என்பதற்காக யானைகள் பற்றிய கட்டுரையை தனியாக பிரித்துவிட்டேன்.

அதுமட்டுமன்றி அவர் அதன் பின்னர் அவர் இலங்கையில் கண்ட தாவரங்கள், மரங்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கலின் தோற்றங்களையும் பெரிய அளவிலான நுணுக்கமான ஓவியங்களாக வரைந்து விளக்கம் எழுதியிருக்கிறார்.







மேலும் அவர் கொழும்பின் சுற்றுப்புறச் சூழல், கடலில் இருந்து கொழும்பு நகரை நோக்கக் கூடிய ஓவியம், வரைபடம் என்பவற்றையும் தனது ஓவியத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

நகரம் அதன் சுற்றுப்புறங்களின் காட்சிகள், தெரு, குடும்பங்கள், தனவந்தர்களை பல்லக்கில் சுமந்துசெல்லும் காட்சிகளையும் சில ஓவியங்களில் காண முடிகிறது. அவர் தங்கியிருந்த காலத்தில் தமிழ் பிரதேசங்களுக்கு செல்லவில்லை எனத் தெரிகிறது. ஆனால் அவர் “Plankein” என்று அவ்வோவியத்தில் குறிப்பிட்டுள்ளார். “பல்லக்கு” என்கிற தமிழ்ச் சொல்லுக்கு அது நிகராக இருக்கிறது. ஆங்கிலத்தில் “Palanquin” என்று குறிப்பிடுவதைத் தான் குறிப்பிடுகிறாரா? அல்லது அன்று அதை பல்லக்கு என்று அழைத்திருந்ததைக் குறிப்பிடுகிறாரா தெரியவில்லை. இலங்கை மீனவர்கள் பயன்படுத்திய சிறிய வள்ளங்களை அவர் தோணி (Toni) என்றே அழைக்கிறார். இந்த இரண்டு சொற்களும் சிங்கள மொழியைச் சார்ந்ததல்ல என்பதை அறிவீர்கள்.


சிதைந்த புராதன விகாரைகள், பார்வையிழந்த யாசக இசைக்கலைஞர், மார்புகளை மறைக்கும் உரிமையற்ற ரொடியோ சாதிப் பெண்கள், அடிமைகள், அன்றைய டச்சுக் காலத்தில் Lascorijns எனப்படுகின்ற வெள்ளை வேட்டி மட்டுமே அணிந்த உள்ளூர் பொலிஸ் என யான் பிராண்டஸ் பதிவு செய்துள்ள முக்கிய வாழ்வியல் பதிவுகள் அன்றைய காலக்கண்ணாடி எனலாம். அந்த ஓவியங்களின் அருகில் அவர் விளக்கமாகத் தந்துள்ள விபரங்களை வாசித்தறிவது கடினமானது. ஆனால் Max de Bruijn, Remco Raben ஆகியோர் எழுதிய யான் பிராண்டசின் உலகம் (The world of jan Brandes, 1743-1808) என்கிற நூலில் இந்த ஓவியங்கள் பற்றிய விபரமான குறிப்புகளைக் காண முடிகிறது. அந்த விபரங்கள் யான் பிராண்டஸ் எழுதிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.


இப்படிப்பட்ட ஓவியங்கள் தான்; இன்று அந்த காலத்தை உருவகப்படுத்த முனையும் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், திரைப்படங்கள், ஓவியங்கள் மட்டுமன்றி ஆய்வுகளுக்கும் கூட பேருதவியாக இருக்கின்றன.

திசாவ, முதலி போன்றார் டச்சு அதிகாரிகளைச் சந்திக்கும் காட்சிகள் என்பவற்றின் ஓவியங்களையும் காண முடிகிறது. அதுபோல ஆண்கள் வெள்ளை வேட்டியை கட்டையாக உடுத்திருக்கும் வெவ்வேறு கோணங்களிலான காட்சிகள், முழுமையாக வெள்ளை ஆடை அணிந்துள்ள பெண்கள், அவர்கள் தலையில் கொண்டையை முடிந்து கட்டி அதனை அப்படியே வைப்பதற்கு பயன்படுத்திய நுட்பங்கள் என்பவற்றையும் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்கிறார்.

இந்த ஓவியங்களை அவர் தனித்தனியாக பிரேத்தியமாக வரைந்து வைத்திருக்கவில்லை. தடித்த தாள்களைக் கொண்ட பெரிய புத்தகத்தில் இவ் ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்பதைக் காண முடிகிறது. சில ஓவியங்கள் அடுத்த பக்கத்துக்கு தொடர்கிறது. நடு மடிப்பையும் மீறி அதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்துக்கு தொடர்கிறது. 

பிராண்டஸ் இலங்கை பயணத்தின் பின்னர் இந்தோனேசியாவில் ஜகார்த்தாவுக்கும் பயணித்தார். அங்கும் இலங்கையைப் போலவே பல ஓவியங்களின் மூலம் அங்குள்ள வாழ்வியலைப் பதிவு செய்தார். அவர் நெதர்லாந்துக்கு திரும்பிய பின்னரும் அங்கும் தான் காண்பவற்றை ஓவியங்களாக வரைவதை தீவிரமான பழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தான் அவர் ஒரு முக்கிய ஓவியராக பலராலும் கவனிக்கப்படுகிறார். ஆராயப்படுகிறார்.

அவரது ஓவியங்கள் முதலில் பென்சிலால் கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் நீர்வண்ணம் தீட்டப்பட்டனவாகக் காண முடிகிறது. அவரது ஓவியத் திரட்டுப் புத்தகத்தில் பல பக்கங்கள் வெறும் வர்ணம் தீட்டப்படாத கோட்டோவியங்களாக மட்டுமே முடிக்கப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

1785 டிசம்பரில் ஒரு மாத காலம் அவர் காலி நகரத்தில் தங்கிருந்தார். அந்த நினைவுகளின் சிறந்த பரிசாக அவர் தந்திருப்பது காலி கோட்டையின் ஓவியமும், காலியை கடலில் இருந்து பார்வையிட்டால் தெரியக் கூடிய நீளமான ஒரு ஓவியம். அந்த ஓவியத்தை அகலப் பரப்புக் காட்சியாக (Panoramic) குறிப்பிடலாம். கொழும்பையும் இதே அகலப் பரப்புக் காட்சியாக வரைந்திருக்கிறார். 

அவர் ஒரு தொழில்முறை ஓவியராக இராத போதும் ஒரு பொழுதுபோக்கு ஓவியராக (Amateure) இருந்த போதும் அவரின் ஓவியங்களில் பொதிந்திருக்கிற பண்பாட்டுப் பதிவுகள், மதச் சடங்குகள், தாவரவியல், பூச்சியியல், அண்டவியல்  போன்ற துறைகளுக்கு அன்று பயன்படக்கூடிய அளவுக்கு அவரின் கலைநேர்த்தி இருந்திருக்கிறது.

இன்று அவரின் ஓவியங்கள் டச்சு வரலாற்று ஆவணங்களை தொகுத்து வைத்திருக்கும் Rijksmuseum மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தொடர்பாக அவர் வரைந்த ஓவியங்கள் இரண்டு புத்தகங்களாக அங்கே உண்டு. நீர்வண்ணங்களில் வரையப்பட்ட இலங்கையின் ஐந்துவித நில அமைப்புக் காட்சிகள் காணப்படுகின்றன. கண்டி அரசரை சந்திப்பதற்கு டச்சு இந்தியக் கம்பனியைச் சேர்ந்தவர்கள் சென்றது பற்றிய ஓவியம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படமாக கருதப்படுகிறது. அதை பிராண்டஸ் நேரில் பார்த்தவரா அல்லது வேறு ஒருவரின் விபரங்களில் இருந்து உருவகப்படுத்தி வரைந்தாரா என்பது தெரியவில்லை. 1778 இலிருந்து அவர் மேற்கொண்ட பயணங்களின் போது வரையப்பட்ட ஓவியங்கள் தொடக்கம் இறுதியில் அவர் சுவீடனில் வாழ்ந்த காலம் வரைக்குமான சுமார் 200 வரையான ஓவியங்கள் அந்த காட்சியகத்தில் உள்ளன.(2) அவரின் ஓவியத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல அதன் பின்னர் வெளியாகியுள்ளன.

1786  இல் இலங்கையில் வைத்து அவர் தன்னைத் தானே வரைந்த சுயவரை (Self portrait) ஓவியம் தான் அவரின் உருவத்தை நாம் அறிவதற்கு விட்டுச் செல்லப்பட்டுள்ள ஒரே உருவப்படமாக இருக்கிறது.

யான் பிராண்டஸ் இலங்கை வரும்வழியில் தமிழகத்தில் நாகப்பட்டினத்திலும் தரையிறங்கி ஒரு சில நாட்கள் இருந்திருக்கிறார். அங்கே அவர் கண்ட பெரிய வழிபாட்டுச் சிலையையும் ஓவியமாக வரைந்திருக்கிறார்.


தனது வாழ்நாளில் அவர் வரைந்த எந்த ஓவியத்துக்கும் தனது பெயரை ஓவியத்தின் அடியில் குறித்ததில்லை. அந்தளவுக்கு தேர்ந்த ஒரு ஓவியராக அவர் தன்னைக் கருதியதில்லை. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் உலக ஓவியர்களை வரிசைப்படுத்தும் போது தவிர்க்க முடியாத ஒரு ஓவியராக யான் பிராண்டஸ் வரலாற்றில் பதிவாகிவிட்டார்.

அவரின் ஓவியங்கள் பற்றி வேறு மொழிகளில் செய்திருப்பதைப் போலவே தமிழிலும்  தனித்தனியாக நுணுக்கமான ஆய்வுகளையும், கட்டுடைப்புகளையும் செய்ய முடியும். யான் பிராண்டஸ் நமக்கு ஓவியங்களை விட்டுவிட்டுச் செல்லவில்லை. இழந்தகாலங்களின் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

அடிக்குறிப்பு:

  1. W.G.M. BEUMER, R.K. DE SILVA ஆகியோர் தொகுத்த “Illustrations and Views of Dutch Ceylon 1602-1796” என்கிற பிரபலமான நூலிலும் கூட பிராண்டஸ் இலங்கையில் தான் ஓவியத்தைக் கற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அத்தகவல் பிழை. Bulletin van het Rijksmuseum, Jaarg. 34, Nr. 2 (1986) என்கிற நூலில் யான் பிராண்டஸ் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை 123-127 பக்கங்களில் வெளியாகியுள்ளது. அதில் பிராண்டஸ் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே வரைந்த ஓவியங்கள் பற்றிய குறிப்புகளைப்  பதிவு செய்துள்ளனர். இறந்துபோன  பூச்சிகளையும், வேறு சிறிய உயிரினங்களையும் பூதக்கண்ணாடியின் உதவியுடன் பார்த்து வரைந்தது பற்றியும் அதில் குறிப்பிடப்படுகிறது.
  2. Stichting Ons Erfdeel, The Low countries : Arts and society in Flanders and the Netherlands -13, The Flemish netherlands foundation, 2005

உசாத்துணை :

  • 2004 The world of Jan Brandes 1743-1808; Drawings of a Dutch traveller in  Batavia, Ceylon and Southern Africa. Zwolle: Waanders, Amsterdam: Rijksmuseum
  • Groot Hans, Van Batavia naar Weltevreden; Het Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappan, 1778-1867, KITLV Uitgeverij, 2009
நன்றி - தாய்வீடு - மே - 2021

ஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates