பத்தேகம சமித்த தேரர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு நலமாக இருந்தவர் திடீர் சுகவீனமுற்று இறந்துபோனார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் சபித்த தேரர் முக்கியமான பாத்திரமாக கொள்ளலாம். இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர். அவர் 2001ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பத்தில் நவ சம சமாஜ கட்சியிலிருந்த அவர் அக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்ற போது அவரோடு சமித்த தேரோவும் வெளியேறினார்.
தமிழ் மக்களுக்காகவும், மலையக, முஸ்லிம் மக்களுக்காகவும் அவர் எப்போதும் குரல் கொடுத்து வந்தவர். ஒரு இடதுசாரி பிக்குவாக அவர் ஏனைய பௌத்த பிக்குகளிடமிருந்து வேறுபடுகிறார்.
அவர் எப்போதும் இனவாதத்துக்கு எதிராக இருந்தார் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் பாதுகாத்த இராஜபக்ச அணி இனவாத அணியாக இருந்தது. அவர் அந்த அணியை பாதுகாத்து நிற்கும் சூழ்நிலைக் கைதியாகவே இருந்தார். அவரை அறிந்த எங்களைப் போன்றோருக்கு அவர் மீது இருந்த சீற்றம் அது தான். வாசுதேவ நாணயக்காரரைப் போலவே அரசை பாதுகாத்து நின்றது அவரின் புரட்சிகர பாத்திரத்தையெல்லாம் மறந்துவிடச் செய்யும் ஒன்றாகவே இருந்தது.
எனக்கு தோழர் ஜெயராமன் (லெனின் மதிவாணனின் தந்தை) 91 ஆம் ஆண்டு நவசமசமாஜக் கட்சியின் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று சமித்த தேரரை அறிமுகப்படுத்தினார். அப்போது அங்கே முன்னணித் தலைவர்களின் ஒருவராக அவர் இருந்தார். அதன் பின் அக்கட்சிப் பணிகளில் ஈடுபட்டபோதெல்லாம் அவரை ஒரு கிளர்ச்சியாளராக அங்கெல்லாம் காண முடிந்தது.
அவர் 91 ஆம் ஆண்டு ஒரு கூட்டுறவுச் சங்கம் ஒன்றை சமித்த தேரர் ஆரம்பித்தார். என்னை அதில் கொண்டுபோய் இணைத்துவிட்டவர் தோழர் ஜெயராமன். முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராக சமித்த தேரர் தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் பொருளாளராக தோழர் ஜெயராமன் தெரிவானார். அதன் நிர்வாகக் குழுவில் அவர்கள் என்னையும் இணைத்துக் கொண்டார்கள். எனவே அடிக்கடி அவருடன் இரு தளங்களில் ஒன்றாக பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நவ சமசமாஜக் கட்சியில் இருந்து நீங்கியதன் பின்னரும் கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் அவருடன் ஒன்றாக பயணிக்க முடிந்தது. 93ஆம் ஆண்டு மே தினத்தன்று நவசமசமாஜக் கட்சியின் ஊர்வலத்தில் நாங்கள் டவுன்ஹோலுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது தான் ஜனாதிபதி பிரேமதாச தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்ட செய்தி எங்களை வந்தடைந்தது. அன்றைய அரசியல் சூழலில் நாங்கள் எல்லோருமே துள்ளிக்குதித்துக் அதைக் கொண்டாடினோம். ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சகல மே தினக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன. ஆனால் விக்கிரமபாகு கருணாரத்ன, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் சபித்த தேரரும் சேர்ந்து அன்றைய கூட்டத்தை ஊரடங்கையும் மீறி நடத்துவோம் என்று தோழர்களுக்கு தைரியம் கொடுத்தார்கள். இறுதியில் அக்கூட்டம் கண்ணீர்ப்புகை வீசித் தான் கலைத்தார்கள். அன்றைய எதிர்ப்புக் கூட்டங்களில் பொலிசாரின் அடிதடிகளின் போதெல்லாம் ஏனைய தோழர்களையெல்லாம் முந்திக்கொண்டு அரணாக வீரத்துடன் எதிர்கொள்பவர் சமித்த தேரர்.
சரிநிகரில் பணியாற்றத் தொடங்கியதும் பல பொது விடயங்களில் இருந்து தள்ளி நின்று முழுநேர ஊடக, அரசியல் வேலைகளில் மட்டுமே கவன செலுத்த வேண்டியதாயிற்று. சமித்த தேரரோடு இருந்த உறவும் அப்படியே விடுபட்டுப் போனது. பிக்கு அரசியல் குறித்து எனது பல்வேறு கட்டுரைகளில் அவரைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.
அவர் அரசியல் விடயங்களை விட வெகுஜன சீர்திருத்தப் பணிகளில் அதிகம் தீவிரம் செலுத்தி வந்தார் என்றே கூறவேண்டும். அதற்கு அவரிடம் ஒரு பார்வை இருந்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்த பார்வையில் குருட்டுத் தனம் இருந்தது அந்த அரசியல் குருட்டுத்தனம் இனவாதத்தையும், இனவாதிகளையும் அடையாளம் காண விடவில்லை.
தோழர் பத்தேகம தேரருக்கு செவ்வஞ்சலி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...