யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம் பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. என்னிடமும் சில ஆண்டுகளாக பலர் தொடர்புகொண்டு விசாரித்திருகிறார்கள்.
அது நிகழ்ந்தது மே முப்பத்தொன்றாம் திகதியா? அல்லது ஜூன் முதலாம் திகதியா?
பல ஆயிரக்கணக்கான ஆங்கில - தமிழ் கட்டுரைகளிலும், நூல்களிலும் குறிப்புகளிலும் மே 31 என்றே பதிவு செய்திருக்கிறார்கள். பிரபலமான பதிவொன்றில், அல்லது நம்பகமிக்க ஒருவரின் பதிவில் ஒரு பிழை வந்தாலும் அதையே பிழையென்று அறியாமல் பலரும் அதையே பின்தொடர்வதன் விளைவே இது. அது நிகழ்ந்தது யூன் 1 தான்.
இந்த குழப்பம் எனக்கும் இருந்திருக்கிறது. அளவில் அதிகமான பதிவுகளில் அப்படி மே 31 என்று குரிப்ப்டப்பட்டிருந்ததால் எனது கட்டுரைகளிலும் அப்படியே பயன்படுத்தியுமிருக்கிறேன். நூலாக வெளிவரும் போது அவற்றை நான் சரி செய்து கொள்வேன்.
ஆனால் இந்த நாளை ஒரு தேசிய துக்க நாள் என்கிற ஒரு பிரகடனத்தை செய்வதாயின் உறுதியான நாள் எது என்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.
இந்தளவு குழப்பம் நேர்ந்தமைக்கு இன்னொரு முக்கிய காரணம் அன்றுவடக்கில் அச் சம்பவங்களை பதிவு செய்ய வேண்டிய பத்திரிகைக் காரியாலயங்கள் தீக்கிரையையாக்கப்பட்டிருந்ததும், தணிக்கையும், ஊரடங்கும், தென்னிலங்கையில் அது அன்று இருட்டடிப்பு செய்யப்பட்டமையும் தான்.
பிற்காலங்களில் இத்துயரச் சமபவத்தை பதிவு செய்தவர்கள் இந்த திகதிக் குழப்பத்தை எவரும் பொருட்படுத்தவில்லை. அச்சம்பவத்தின் உள்ளடக்கத்துக்குள் தான் அதிக சிரத்தை எடுத்தார்கள்.
யாழ் நூலக எரிப்பு பற்றி நூல்களாகவே ஏறத்தாள பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவதுவிட்டன. அவற்றிலும் இந்தக் குழப்பம் உள்ளன. அவற்றில் நம்பகத்தன்மை அதிகம் உள்ள நூலாகக் கொள்ளக் கூடியது. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது! என்கிற நூல்.
செங்கை ஆழியான் என்று அறியப்பட்ட க.குணராசா இன்னும் பல புனைபெயர்களில் பல படைப்புகளை எழுதியிருப்பவர். அவர் “நீலவண்ணன்” என்கிற பெயரில் எழுதியவற்றில் ஒன்று தான் இந்த “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது” என்கிற நூல். நீலவண்ணன் என்கிற பெயரில் அதற்கு முன்னர் அவர் “12 மணி நேரம்” என்கிற தலைப்பில் 1978இல் கிழக்கில் ஏற்பட்ட கோரமான சூறாவளி பற்றியா ஒரு நூலையும், “24 மணி நேரம்” என்கிற தலைப்பில் 1978 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனகலவரம் பற்றிய நூலையும் எழுதிருக்கிறார்.
யாழ் நூலக எரிப்பு சம்பந்தமாக இந்த நூலுக்கு இருக்கிற சிறப்பு என்னவென்றால் இந்த நூல் தான் அந்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்த முதல் நூல். அதுவும் சம்பவம் நிகழ்ந்து ஒரே மாதத்தில் வெளிவந்தது.
1981 யூலை முதலாம் தகதி இந்த நூல் வெளிவந்தது. (இரண்டாம் பதிப்பும் ஓகஸ்ட் மாதமே வெளிவந்து விட்டது. அதன் பின்னர் 2003 இல் மீண்டும் அதன்) எனவே நேரடி சாட்சியமாக அவர் கண்ணுற்ற, சேகரித்தவற்றை எல்லாம் தொகுத்து அவசரமாக வெளிக்கொணர்ந்த நூல். இந்த நூலில் அவர் மே 31 நாள் தொடங்கிய அரச பயங்கரவாத அட்டூழியங்கள் ஒரு வாரமாக எப்படி தொடர்ந்தன என்பதை பட்டியலிட்டு விரிவாக அதில் எழுதியிருக்கிறார். அதில் தான் அவர் யூன் முதலாம் தகதி இரவு யாழ்ப்பாணம் எரிக்கப்பட்ட நிகழ்வை ஆதாரப்படுத்துகிறார். ஆனால் அப்போதும் இந்த எரிப்பில் சம்பந்தப்பட்டவர்களை அவரால் உறுதியாக எழுதுமளவுக்கு போதாமை இருந்திருக்க வேண்டும் எனவே எரித்தவர்கள் பொலிசார் என்கிற தகவல்களோடு அவர் நிறுத்துகிறார்.
இதோ அந்த நூலில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதிய குறிப்புகள்:
ஐயகோ, நூலகம் எரிக்கப்பட்டதே!
'பொலீஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கொடூரமானவையும் வியப்பானவையுமாகும் அதே பொலீசார் அன்று இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டனர். . ஏறத்தாழ 97000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப்போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறுவதற்கரிய நூல்கள் பல எரிந்து போயின, அந்த நூல் நிலை யம் நீண்ட காலமாகக் கட்டி எழுப்பப்பட்டது அதனை எரித்து முடித் தனர். இந்த நாட்டில் வாழ்கின்ற ஒரு சில மக்களின் மன நிலையை புரிவதற்கு இந்தச் சம்பவம் தக்க குறிகாட்டி ஆகும். இரண்டாம் உலக மாயுத்தத்தின் போது பிரித்தானியாவின் மீது குண்டுகளை வீசச் சென்ற விமானப்படை விமானிகளுக்கு ஓக்ஸ்போட் பல் கலைக் கழகத்திற்குக் குண்டுகளை வீசி அழித்துவிடக்கூடாது என ஹிட் லர் உத்தரவிட்டான். அதே போல யேர்மனியின் ஹைடல்பேர்க் பல்கலைக்கழகத்தைத் தவிர்க்கும்படி பிரித்தானியா தனது விமா னப்படைக்குப் பணிப்புரை வழங்கியது. அறிவுத் தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பகைவர்களுக்குக் கூட இருந்தது ஆனால், யாழ்ப்பாணத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொண்ட பொலீசார் அங்கிருந்த நூல் நிலையத்தைக் கூட விட்டுவைக்கவில்லை!" என எதிர்க்கட்சித் தலைவர் திரு அ. அமிர்தலிங்கம் நாடாளுமன்றத் தில் கவலையுடன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்பு. நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விசேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்துக்கு நேர் எதிரேதான் இருந்தது இவ்வளவு ' பாதுகாப்பு இருந்தும் திங்கள் இரவு, பொதுசன நூலகம் தீ பிடித்து எரிந்தது.
அன்று இரவு 10 மணிபோல, நூலகத்துக்குள் நுழைந்த கொடியவர்கள், காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக்கதவை கொத்தித் திறந்து. உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97 ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்களுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி அழித்தனர், 'லெண்டிங் செக்கன்' முற்றாக எரிந்து சாம்பலாகிவிட்டது. உருக்கு பீரோவுக்குள் இருந்த நூல்கள் கூட, எரிந்து சாம்பலாகிப் போயின 'றெபறன்ஸ் செக்சனில்' இருந்த சேகரிக்க முடியாத அற்புத நூல்கள் யாவும் தீயவர்களால் தீ வைத்துப் பொசுக்கப்பட்டது. சிறுவர் நூலகப் பிரிவிலுள்ள நூல்கள் யாவும் அழிவுற்றன. தளபாடங்கள் யாவும் ஒன்றாகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன: சுவர்கள் வெப்பத்தால் வெடித்து உதிர்ந்திருந்தன : யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துள்ளே சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுள் ஏதாவது நூல்கள் எரியாது எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் திரு, சு.ம.இமனுவேலும், திரு.அ.டொன்பொஸ் கோவும், திரு.ச.ந்தையாவும் சாம்பலைக் கிளறிக்கொண்டிருக்கின்ற நிலையைக் காண முடிந்தது.
நூலகம் கருகிக் காரைபெயர்ந்து கிடக்கின்றது. நூல் நிலையத்தின் விளம்பரப் பலகையில் நூலகம் அபிவிருத்தியின் அடித்தளம்- இலங்கை நூலகச் சங்கம்'' என்ற விளம்பரம் எஞ்சி நிற்கிறது; உண்மையில் அடித் தளம் மாத்திரமே எஞ்சிக்கிடக்கின்றது; ' புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது' என்ற அறிவித்தலும் நூலக வாசலில் இருக்கிறது. கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்.தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்று எனக் கருதப்படுவது யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் ஆகும். 97 ஆயிரம் பல்துறை சார்ந்த நூல்கள் எரிந்து போயின ஏறத்தாழ 19 ஆயிரம் அங்கத்தவர்கள் இந்த நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்று வாசித்துப் பயனடைவார்கள். மருத்துவம் இலக்கியம், ஜோதிடம் சம்பந்தமான ஓலைச் சுவடிகள் நூற்றுக்கணக்கானவை எரிந்து சாம்பலாகின.
நூல்நிலையம் அழிந்தது யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட பேரிடியாகும். வணக்கத்துக்குரிய தாவிது அடிகள் மரணமாக நேர்ந்தது கவலைக்குரியதாகும். அவர். சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவர். ஓப்பியல் ஆய்வாளர். பொது நூல் நிலையம் எரிகிறது என்ற தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். புத்தகங்களின் பெறுமதி அவருக்குத் தெரியும்' (எதிர்க்கட்சித் தலைவர் திரு எ.அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசியவை: தினபதி -11.6.81, வீரகேசரி - 11.6.81, சிலோன் டெயிலி நியூஸ் - 11.6.81) யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு! பற்குணம் என்பர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞராவர். மூன்று நான்கு நாட்கள் அவர் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.
'நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10-15 மணியளவில், மாநகரசபை ஆணையாளர் திரு. க. சிவஞானம் அறிய நேர்ந்தது. உடனே மாநகரசபை பவுசர்களையும், மாநகரசபை ஊழியர்களையும் பொதுசன நூலகத்தில் ஏற்பட்ட தீயை மேலும் பரவாது அணைக்குமாறு பணித்தார். தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டு அரங்கில் தங்கியிருந்த பொலீசார் தடுத்தனர் என்பதைக் காவலாளர்கள் கூறி அறிந்தார்' (மாநகரசபை ஆணையாளர் திரு க.சிவஞானம் போலிஸ் விசாரணைக் குழுவிடம் கூறியவை – “ஈழநாடு”, “தினபதி”)
“யாழ் விளையாட்டரங்கில் தங்கியிருந்த பொலிசாரே யாழ் நூல் நிலையத்துக்குத் தீ வைத்திருக்கவேண்டும்'' என மாநகரசபை ஆணையாளர் திரு! சிவஞானம் விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்''
மேலும் யூன் 1ஆம் திகதி வெளியான ஈழநாடு பத்திரிகையில் ஒரு செய்தியையும் இங்கே கவனிக்க வேண்டும். அச்செய்தியின் தொடர்ச்சி 8 ம் பக்கம் செல்கிறது அதில்
"பொலிஸ்மா அதிபரும் இராணுவத் தளபதியும் இன்று அதிகாலை விசேஷ விமானத்தில் யாழ்ப்பாணம் வரவிருக்கிறார்கள்..."
என்கிறது.
செங்கை ஆழியானின் இந்த பதிவில் "பொலீஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள்.." என்கிறார். ஆக அவர்கள் முதலாம் திகதி காலை வந்து சேர்ந்த செய்தியும், உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலதிகமாக அவர்களின் அனுசரணையுடனோ, ஆதரவுடனோ இது நிறைவேறியிருக்க வாய்ப்பும் உண்டு. குறைந்தபட்சம் கண்டும் காணாது விட்டிருக்கிறார்கள் என்றும் நம்மால் ஊகிக்க முடியும்.
செங்கை ஆழியானின் நூலை நூலகம் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய இணைப்பு இங்கே...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...