இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து இம்மாதத்துடன்\ 90 ஆண்டுகள் பூர்த்தியாக்கின்றன. இலங்கையில் இன்று நாம் அனுபவிக்கிற வாக்குரிமை, தேர்தல், ஜனநாயகத் தெரிவு, வெகுஜன அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது 1931 இல் நாம் பெற்ற சர்வஜன வாக்குரிமை.
இலங்கையின் அரசியல் கலாசாரத்தை ஒரு பெரும் பிரட்டு பிரட்டிய ஒரு நிகழ்வு தான் 1931 டொனமூர் திட்டத்தின் அறிமுகம்.டொனமூர் அரசியல் திட்டத்தில் போதாமைகள் இருந்தபோதும். அதற்கு முன்னிருந்த அரசியல் திட்டங்களைவிட அது ஒரு முன்னேறிய அரசியல் திட்டம் என்பதில் சந்தகம் கிடையாது. இத்திட்டத்தில் தான் ஆண்களுக்கும்பெண்களுக்கும் சேர்த்தே ஏக காலத்தில் ஒரே தடவையில் சர்வஜன வாக்குரிமையும் கிடைத்தது. மட்டக்களப்பு பிரதிநிதி E.R.தம்பிமுத்துவைத் தவிர ஏனைய அனைத்து 9 தமிழ் பிரதிநிதிகளும் எதிர்த்தார்கள். அதன் பின்னணி பற்றிய கட்டுரை தான் இது.
1920 களில் இலங்கையில் அரசியல் சீர்த்திருத்த ஆலோசனைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து 1927ஆம் ஆண்டு பிரித்தானியா ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட டொனமூர் குழுவினர் இரண்டு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பினர். டொனமூர் அறிக்கையில் கூறுவது போல,
“27.10.1927 அன்று நாங்கள் இங்கிலாந்தை விட்டு புறப்பட்டோம். நவம்பர் 13 அன்று இலங்கையை சென்றடைந்தோம். 18.01.1928 வரை அங்கு தங்கியிருந்த நாங்கள் பெப்ரவரி 04 அன்று இங்கிலாந்து சேர்ந்தோம்.” என்கிறது.
சாட்சிகளைப் பதிவிடும் பணிகள் 34 தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. 141பிரமுகர்களின் அபிப்பிராயங்களைப் பதிவு செய்தார்கள். கொழும்பில் அதிகமாகவும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் மலையகத்திலும் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புகளின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே இலங்கையைப் பற்றிய அறிதலுக்காக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரயாணம் செய்ததும் இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். 12-14 டிசம்பர் 1927 வரையான மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் மட்டக்களப்பில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். தமது பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையாக ஐந்து மாதங்களின் பின்னர் 26.06.1928 அன்று காலனித்துவ செயலாளரிடம் ஒப்படைத்தார்கள்.
டொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. படித்த, வசதி படைத்த ஆண்களிடமே அந்த உரிமை இருந்தது.
டொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆளாளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதும் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான வாக்குகளும் இதில் அடக்கம் என்பது இதில் கவனிக்கத்தக்கது.
வாக்குரிமையை எதிர்த்தவர்கள் யார்?
இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது இல்லை. அரசாங்க சபைக்கு வெளியில் தான் சர்வஜன வாக்குரிமைக்கான போராட்டமும், கோரிக்கைகளும், அழுத்தங்களும் வலுவாக இருந்தன.
சேர் பொன்னம்பலம் இராமநாதன் |
சர்வஜன வாக்குரிமை பற்றிய யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் இருந்த பொதுப்புரிதல் என்ன என்பதை கீழே பகிரப்பட்டுள்ள இந்து சாதனம் பத்திரிகையில் அன்று வெளியான ஆசிரியர் தலையங்கப் பத்தியில் நீங்கள் காணலாம். அதுமட்டுமன்றி பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று தொடர்ச்சியாக செய்திகளையும், கட்டுரைகளையும், ஆசிரியர் பத்திகளையும் பெண்களின் வாக்குரிமைக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்கிவந்தது.
டொனமூர் குழுவினர் 1927 நவம்பர் 13 அன்று இலங்கை வந்தடைந்தனர். சரியாக அதற்கு முதல் நாள் வம்பர் 12 அன்று மகாத்மா காந்தி இலங்கை வந்தடைந்தார் என்பதையும் இங்கே கருத்திற் கொள்ள வேண்டும். சுமார் மூன்று வாரங்கள் அவர் தங்கியிருந்து கொழும்பு, கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலிய, பாணந்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, சிலாபம், குருநாகல் என பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களை நடத்தினார். இந்த பயணத்தின் போது அவரின் பிரச்சாரங்கள் அந்த சமயத்தில் டொனமூர் குழுவின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பது மறுப்பதற்கில்லை.
இந்த விபரங்களை மகாவம்சத்தின் மூன்றாவது பாகம் (1815-1936) குறிப்பிடத் தவறவுமில்லை.
சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான உணர்வுநிலை அன்றைய யாழ் – சைவ – வேளாள – ஆணாதிக்க அதிகார வர்க்கத்தினரின் வெகுஜன அபிப்பிராயமாக இருந்திருக்கிறது. அந்த தரப்பின் ஊதுகுழலாக இருந்த இந்து சாதனம் பத்திரிகை அன்றைய அந்த மனநிலையை நாடிபிடித்தறிய முக்கிய சாதனமாக நமக்கு ஆதாரமாக இருக்கிறது. சேர் பொன் இராமநாதனை எப்போதும் ஆதரித்து அனுசரித்து வந்த முக்கிய பத்திரிகையும் கூட. அதில் வெளிவந்துள்ள அக்கால பல்வேறு செய்திகள் கட்டுரைகளிலிருந்து நாம் அதனை அறிந்துகொள்ள முடியும்.
இராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அவர் 30.11.1927 அன்று தமிழர் மகாசபை சார்பிலும் 02.01.1928 அன்று மீண்டும் தனிப்பட்ட ரீதியிலும் டொனமூர் குழுவை கொழும்பில் சந்தித்து தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.
அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அரசியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.”
அன்றைய இலங்கையில் கல்வி கற்றோர் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகமாக இருந்தார்கள். எனவே சிங்களவர்களை அரசியல் அதிகாரத்துக்கு வர விடாமல் தடுக்க எடுத்த முயற்சியைத் தான் இராமநாதன் செய்தார் என்கிற குற்றச்சாட்டை சிங்களத் தர்ப்பு இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.
சரி; 22.11.1928 அன்று வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை சற்று கூர்ந்து கவனிப்போம்.
பிரதிநிதிகளை தெரிவு செய்தல்
ஒருவர் பிரதிநிதியாக வர விரும்பி தாமே சென்று தம்மை பிரதிநிதியாக தெரிவு செய்யும்படி ஊரவரை இரத்தல் ஒரு ஆடவன் ஒரு கன்னிகையிடம் போய் “அய்யோ நீ என்னை கல்யாணம் முடி” என்று இரந்து நிற்றல் போல் அவமரியாதை ஆகும். சென்ற சனிக்கிழமை நடந்த பட்டின பரிபாலன சங்கம் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் விஷயத்தில் அங்கத்தினர் ஆய்வதற்கு முற்பட்டு நின்று வரும் வட்டார வாசிகளும் பலரும் செய்த முயற்சிகளும் நடந்து கொண்ட விதமும் அவமதித்தற்கேதுவானவையாகும். அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக காலம் வர வட்டார வாசிகள் யாரை தெரிவு செய்யலாம் என்று யோசித்து அதற்குதானும் நேரம் விடாமல் “என்னைத் தெரி, அய்யோ என்னைத்தெரி” என்று பலர் எவரும் கேளாதிருப்ப தாமாகவே மழைக்காலத்தில் புறப்படும் புற்றீசல் போலப் புறப்பட்டு வருகின்றனர் முந்தி இரண்டு மூன்று முறை தொடர்பாக அங்கத்துவம் வைத்திருந்த பழைய அங்கத்தவர்கள் செத்தாலும் நாம் இந்த பதவியை விட மாட்டோம் என்றவராய் பதவியை விட பிரியம் இல்லாமல் இருக்கின்றார்கள்.
01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன். அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்கு முதிர்ச்சிபெறவில்லை என்றார்.
“பன்றிகளின் முன்னாள் முத்துக்களை வீசுவதைப் போன்றது தான் வாக்குரிமையின் அருமை தெரியாத பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது”
என்றார் அவர்.
அதே நாள் விவாதத்தில் ஈ.ஆர்.தம்பிமுத்துவும் படிக்காதவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படக்கூடாது என்று விவாதித்தார். ஆனால் இறுதியில் அத்திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த ஒரே ஒரு தமிழர் அவர் தான்.
அதேவேளை இராமநாதன் வாக்குரிமையை எதிர்த்து சட்டசபையில் உரையாற்றியதோடு நில்லாமல் கட்டுரைகளை எழுதினர். கூட்டங்களை நடத்தினார். பலரையும் பேசி சரிகட்ட முயற்சித்தார். இறுதியில் டொனமூர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்குரிமையும் அதில் அங்கீகரிக்கப்பட்டதனால் அவர் ஏமாற்றமடைந்தார். குடியேற்ற அமைச்சருக்கு மேலதிக அதிகாரம் இருந்ததால் இங்கிலாந்து சென்று முறையிட்டு இதனை மாற்றலாம் என்று நம்பினார். அவர் விரிவாக ஒரு முறைப்பாட்டு அறிக்கையை தயாரித்துக் கொண்டு 10.05.1930 அன்று இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டார். அதனை 27.06.1930 அன்று அங்கு சமர்பித்தார். அந்த அறிக்கையை (Memorandum of Sir Ponnambalam Ramanathan on the recommendations of the Donoughmore Commission) இன்றும் பல அரசியல் விமர்சகர்கள் பயன்படுத்துவதைக் காணலாம்.
“It would be ruinous to introduce Universal Suffrage in Ceylon at that stage.”
“இந்த சமயத்தில் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவது இலங்கைக்கு கேடு விளைவிக்கும்” என்று அதில் வலியுறுத்தினார்.
ஜேன் ரஸ்ஸல் தனது “டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கையின் இனத்துவ அரசியல்” என்கிற நூலில் இராமநாதனின் அந்த டொனமூர் திட்டத்துக்கான பரிந்துரைகளைப் பற்றி குறிப்பிடும் போது...
“ராமநாதன் மற்றும் பெரும்பாலான "பழமைவாதிகள்" (செல்வதுரை, ஸ்ரீ பத்மநாதன், மற்றும் ஈ.ஆர்.தம்பிமுத்து விதிவிலக்குகள்) வெள்ளாளர் அல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்களிப்பது ஒரு பெரிய தவறு மட்டுமல்ல, இது "கும்பல் ஆட்சிக்கு" வழிவகுத்துவிடும் என்று நம்பியது மட்டுமன்றி வாதிட்டனர். ஆனால் ராமநாதன் குறிப்பாக இது இந்துக்களின் வாழ்க்கை முறைக்கு கேடானது என்று பரிந்துரைத்தார்”
என்கிறார். சேர் பொன் இராமநாதன் வசதிபடைத்த, உயர்சாதி, ஆண்களுக்கே வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பதையே வலியுறுத்தினார் என்பதே அதன் சாரம்.
தொகுதிவாரி பிரதிநிதித்துவத்துக்காக பெரும்பான்மை சிறுபான்மை கட்சிகளுக்குள் சர்ச்சை தலை தூக்கியிருந்த சமயம் அது.
நிறைவேற்றம்
12.12.1929 அன்று அரச சபையில் இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது நூலிலையில் டொனமூர் திட்டம் தப்பித்தது. டொனமூர் அரசியல் திட்டம் வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 19வாக்குகள் ஆதரவாகவும், 17வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவளித்தவர்களில் 13 சிங்களவர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு தமிழர் தான் ஆதரித்திருந்தார். எதிர்த்த 17 பேரில் இரண்டு சிங்களவர்கள், எட்டு இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவர், மூன்று முஸ்லிம்கள், இரு பறங்கியர் ஆவர்.
எதிர்த்து வாக்களித்த இரு சிங்களவர்களும் சுதேசிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்திருந்தார்கள். ஒருவர் ஈ.டபிள்யு பெரேரா, அடுத்தவர் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர.
டொனமூர் பரிந்துரைகளை எதிர்த்து அதிகம் அன்று பேசியவரான சேர் பொன் இராமநாதன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து மணிக்கணக்காக உரையாற்றியிருக்கிறார்.
“நான் 1879இலிருந்து இன்று வரை சட்டசபையில் இருந்து வருகிறேன். இது வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பாதகமாக இருந்ததில்லை. நான் தமிழ் சைவர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கும், சோனகருக்கும், மலாயருக்கும் பிரதிநிதித்துவம் வகித்திருக்கிறேன்”
என்றார்.
பண்டாரநாயக்கா டொனமூர் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் என்கிற தொணியில் பல்வேறு சிங்கள கட்டுரைகளைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இறுதி வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆணைக்குழுவை சந்தித்து வாக்குரிமையானது கல்வி, சொத்து, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தத் தான் வேண்டும் என்றே அவரும் கோரிக்கை விடுத்தார்.
டொனமூர் ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து பல நாட்கள் பல தலைப்புகளில் அரச சபையில் நிகழ்ந்தன. ஒவ்வொரு தனித் தனி விவாகரங்களின் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. ஆனால் இடைநடுவில் குறிக்கிட்ட குடியேற்றச் செயலாளர் முர்ச்சிசன் பிளாட்ச்சர் (Murchison Fletcher) அன்றைய குடியேற்ற அமைச்சரின் செய்தியொன்றை அங்கு படித்துக் காட்டினார். அதன் படி
“டொனமூரின் அறிக்கையில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யப்படக்கூடாது என்றும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி மட்டுமே தீர்மானம் எடுக்க வேண்டும்”
என்று அதில் ஆணையிடப்பட்டிருந்தது.
அதுவரை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட தீமானங்களை எடுத்துக்காட்டி விளக்கினால் குடியேற்ற அமைச்சர் நிராகரிக்கமாட்டார் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் 05.12.1929 தொடர்ந்தும் வாதிட்டார். இறுதியில் டொனமூர் திட்டத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறித்து ஆளுநர் ஸ்டான்லி குடியேற்ற அமைச்சர் பஸ்வீல்ட் பிரபுக்கு (Lord Passfield) தெரிவித்தார். அவற்றை ஆராய்ந்த பஸ்வீல்ட் டொனமூர் திட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்தார்.
அந்த டொனமூர் மசோதா மாற்றங்களின் படி
- 1. பெண்களின் வாக்குரிமை வயது 30 இலிருந்து 21 ஆக மாற்றப்பட்டது. (ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே)
- 2. மொத்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 65 என்பதை மாற்றி 61ஆகக் குறைத்து 50 பேர் தேர்தலின் மூலம் தெரிவாவதாகவும், நியமன உறுப்பினர்கள் 12 பேரின் எண்ணிகையை 8 ஆகவும் குறைத்தார்.
அரசாங்க சபைக் கூட்டங்களை கொழும்பில் மட்டுமன்றி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம் என்கிற பரிந்துரையையும் நடைமுறைப்படுத்தலாம் என்று மாற்றினார்.
இதில் மூன்றாவதாகக் கூறிய காரணி முன்னைய இராஜதானிகள் இருந்த இடங்களில் அரசாங்க சபைக் கூட்டங்களைக் கூட்டுவதன் மூலம் இனத்துவ கெடுபிடி நிலைமையை சமநிலைப்படுத்தலாம் என்று அவர் கருதினார் எனலாம்.
டொனமூர் திட்டத்தை எப்படியும் இலங்கையர் தலையில் திணித்துவிடுவதற்கு ஆளுநர் பல்வேறு வழிகளிலும் முயற்சித்தார். அதற்கு இருக்கும் எதிர்ப்பு நிலையை உணர்ந்த அவர் அது தோற்கடிப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தார். அதற்காக அரசாங்க சபை உறுப்பினர்களை தனிப்பட அழைத்து சந்தித்து நட்புடன் சரிகட்ட முயற்சித்தார். தனது அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று குடியேற்ற அமைச்சருக்கும் எழுதினார்.
கோ.நடேசய்யர் |
இந்திய வம்சாவளியினரின் தலைவிதி
இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமையை கட்டுப்படுத்துவதாக உடன்பட்டால்; சிங்களப் பிரமுகர்கள் சர்வசன வாக்குரிமையுடன் சேர்த்து டொனமூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.
அதுபோல இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் சுதேசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தயிருந்தது. சவரஜன வாக்குரிமையின் பலன்களை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களால் சகிக்க முடியாதிருந்தது.
டொனமூர் குழுவினரை சந்தித்த இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள்
- 24 நவம்பர் 1927 - ஐ.எக்ஸ்.பெரேரா உள்ளிட்டோர் - இலங்கை இந்தியர் சபை
- 07.டிசம்பர் 1927 - நடேச ஐயர், டி.சி.மணி, பெரி சுந்தரம், ஐ. தாவீது
- 20.டிசம்பர் 1927 - நடேச ஐயரும் பிறரும் – இந்தியர் சபை
தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க டொனமூர் திட்டத்தை எதிர்த்து நின்ற போதும் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்திருந்தார். இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களோ சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தே நின்றார்கள். பெரும்பாலான சிங்கள உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை அனுபவிக்க முடியாதபடி செய்தால் சர்வஜன வாக்குரிமையை ஆதரிக்கத் தயாராக இருந்தார்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவே செய்திருக்கிறார்கள்.
டொனமூர் திட்டத்துக்கு ஆதரவு தேடுவதற்காக சிங்களப் பிரதிநிதிகளை சரிகட்ட முடிவு செய்தார்கள். அதன் பிரகாரம் வாக்குரிமை பெறுபவர் 5 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்தவராகவும், தொடர்ந்தும் வசிக்க விருப்பபவராகவும் இருத்தல் வேண்டும் என விதித்தார்கள்.
1931 டொனமூர் திட்டத்துடன் நிலைமை மாறியது. அதுவரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சுதேச உறுப்பினர்களையும் கொண்டிருந்த சட்ட சட்டசபையில் சுதேசிகள் ஆட்சியதிகாரமற்று விளங்கியதால் இந்தியர்களுக்கு பிரதிநிதிதிதுவம் இல்லாத போதும் அதுவொரு பெரிய பாதிப்பாக இந்திய வம்சாவளியினர் உணரவில்லை. எப்போது சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு சுதேசிகள் போதியளவு பிரதிநிதித்துவம் பெறத் தொடங்கினார்களோ அப்போதிருந்து இந்திய வம்சாவளியினருக்கு அநியாயம் தொடங்கியது. டொனமூர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வாக்குரிமையின் விளைவாக இந்தியாவம்சவளியினரும் தேர்தலில் போட்டியிட்டு அப்போது நிரந்தரமாக வசித்து வந்த 7 லட்சம் இந்திய வம்சாவளியினர் தமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுகொண்டது தான்; புதிதாகத் தோன்றிய சுதேசிய மேட்டுக்குடி அரசியல் குழாமினருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது.
டொனமூர் திட்டம் பற்றிய சட்டசபை விவாதத்தில் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று சிங்களத் தலைவர்கள் பலர் கடுமையாக வாதிட்டனர். இறுதியில் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை பெறுவதற்கென்று சில மேலதிக தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டன. சட்டபூர்வமான நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ், எழுத்தறிவு, சொத்து, வருமானத் தகுதி என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில். ஏறத்தாழ ஒரு லட்சம் இதியர்கள் மாத்திரமே வாக்குரிமைக்கு தகுதி பெற்றனர். இந்த சிங்களத் தலைவர்களுடன் சமரசம் செய்து தான் அந்த வாக்குரிமை கிடைத்தது.
1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்றபோதும் 1936 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாக்களிப்பதற்கு மலையக மக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனமூர் |
பெண்கள்
பாலினம், சொத்து அல்லது கல்வி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையை வழங்கிய ஆசியாவின் முதல் நாடாக இலங்கை அமைந்தது. அப்போது அவுஸ்திரேலியா, நியூசீலாந்து கூட சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. மேலும் இந்த சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்திய பிரித்தானியா கூட டொனமூர் திட்டம் குறித்த விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்த 1928 இல் தான் தமது சொந்த நாட்டில் ஆண்களுக்கும் – பெண்களுக்குமாக சம சர்வஜன வாக்குரிமையை வழங்கியிருந்தது (Representation of the People (Equal Franchise) Act 1928) என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஆளுநரால் நியமிக்கப்படும் 08 உறுப்பினர்களும், நாட்டின் மூன்று தலைமை அரச அதிகாரிகள் உட்பட 61 உறுப்பினர்களைக் கொண்டதாக அரசாங்க சபை அமைக்கப்பட்டது.
1931 ஏப்ரல் 15 அன்று, புதிய அரசாங்க சபை பற்றிய கட்டளைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டமன்றம் 1931 ஏப்ரல் 17இல் அதுவரையான அரசாங்கசபை கலைக்கப்பட்டது. மே 04 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சர்வஜன வாக்குரிமையின்படி முதல் பொதுத் தேர்தல் மே 1931 யூன் மாதம் 13இலிருந்து 20 வரையான ஒரு வார காலம் நடைபெற்றது. இத் தேர்தலில் மொத்த 15,77,932 வாக்காளர்களில் 5,99,384 பெண்களாக இருந்தார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்களுக்கு வெவ்வேறு வர்ணங்கள் வழங்கப்பட்டன. வேட்பாளர்களுக்கு உரிய அந்தந்த நிறங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு உரிய நிறத்தைக் கொண்ட வாக்குப் பெட்டியில் வாக்கை அளிப்பர். அத் தேர்தலில் ருவன்வெல்ல தொகுதியில் ஜே.எச். மீதெனிய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1931 இல் டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இலங்கையின் சர்வஜன வாக்குரிமை அளிக்கப்பட்டபோது பெண்களும் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டார்கள். 14.01.1928 அன்று கொழும்பில் வைத்து டொனமூர் குழுவைச் சந்தித்த இந்த சங்கத்தைச் சேர்ந்த மேரி ரட்னம் உள்ளிட்ட பல பெண்கள் அளித்த சாட்சியம் வரலாற்றுப் பதிவுமிக்க கருத்துக்கள். டொனமூர் குழுவினரின் இறுதி சந்திப்பு அது தான். இதன் விளைவாக 1931 இல் நடந்த தேர்தலில் எடலின் மொலமூரே, நேசம் சரவணமுத்து ஆகியோர் சட்டசபைக்கு முதலாவது பெண்களாக தெரிவானார்கள்.
டொனமூர் குழுவை சந்தித்த வாக்குரிமைச் சங்க உறுபினர்களில் ஒருவர் அக்னஸ் த சில்வா அவர் ஒரு நேர்காணலில் இப்படி கூறுகிறார். "சமூக அநீதிக்கு எதிராக வீரமாக போராடியவர்களின் உற்சாகத்துடன் நாங்கள் அங்கு சென்றோம். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தோம். “தோட்டங்களில் பணிபுரியும் இந்திய தமிழ் பெண் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று டொனமூர் பிரபு எங்களிடம் வினவினார். "அவர்களும் பெண்கள். சகல பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."
இந்த இயக்கத்தின் சார்பாக சென்றிருந்த மற்றொரு முக்கிய நபர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் தாயார் - டெய்ஸி பண்டாரநாயக்க. எந்தவொரு சாதி, இன, மத, வர்க்க வேறுபாடுகளும் இன்றி சகலருக்கும் சமமான சர்வஜன வாக்குரிமையை வலியுறுத்திய ஒரே தரப்பாக இவ்வியக்கத்தைத் தான் கூறவேண்டும். எனவே இந்த நேரத்தில் அந்த பெண்கள் இயக்கம் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக...
இந்தத் தேர்தலில் டீ.பி.ஜயதிலக்க (களனி), எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க (வேயன்கொட), டீ.எஸ்.சேனநாயக்க (மினுவன்கொட), பெரி சுந்தரம் (ஹட்டன்), டீ.எச்.கொத்தலாவல (பதுளை), ஜி.சீ.ரம்புக்பொத (பிபிலே), ஏ.எப்.மொலமூரே (தெடிகம), எச்.மீதேனிய அதிகாரம் (ருவன்வெல்ல),சீ.ரத்வத்த (பலங்கொட) ஆகிய 9 பேரும் போட்டியின்றி தெரிவானார்கள். அதே வேளை வடக்கில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஐந்து தொகுதிகளில் நான்கு அதாவது ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் இருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை. மன்னார், முல்லைத்தீவு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆனந்தன் அதிக வாக்கு வித்தியாசத்தில் தெரிவானார்.
1934 வடக்கில் நடந்த இடைத்தேர்தல்
பின்னர் 1934இல் மீண்டும் வட மாகாணத் தமிழர்கள் பிரித்தானிய அரசைகேட்டுக்கொண்டதற்கிணங்க 1934 இல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்படி ஜீ.ஜீ.பொன்னம்பலம் (பருத்தித்துறை), அருணாச்சலம் மகாதேவா (யாழ்ப்பாணம்), நெவின்ஸ் செல்வதுரை (ஊர்காவற்துறை), எஸ்.நடேசன் (காங்கேசன்துறை) ஆகியோர் தெரிவானார்கள். ஆனால் அரசாங்க சபையில் எஞ்சிய ஒரு வருடத்திற்கு தான் அவர்களால் பிரதிநிதித்துவம் வகிக்க முடிந்தது. டொனமூர் திட்டத்தின் கீழ் 1936 இல் நடந்த இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தலில் உருவான அரசாங்கத்தில் அமைச்சரவையானது தனிச்சிங்கள அமைச்சரவையாக ஆக்கப்பட்டதையும் இங்கே குறித்துக்கொள்வோம்.
ஆக, டொனமூர் திட்டத்தின் கீழ் நடந்த முதலாவது தேர்தலில் 46 பேர் மட்டுமே தெரிவாகியிருந்தார்கள். அரசியல் கட்சிகள் காலத்துக்கு வராத காலமது. எனவே 1931 தேர்தலில் ஏ.ஈ.குணசிங்கவின் இலங்கை தொழிற்கட்சி மாத்திரமே கட்சியாக களமிறங்கியது. கொம்யூனிஸ்ட் தலைவரான டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க மொரவக்க தொகுதியில் வெற்றியிட்ட போதும் அவர் ஒரு கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. 1935 டிசம்பர் 18 இல் தான் லங்கா சமசமாஜக் கட்சி உருவாக்கப்பட்டது.
முதலாவது அரசாங்க சபை 07.07.1931 அன்று கூடியவேளை ஆங்கிலேய தரப்பு முதலாவது தடவையே தோல்வியை சந்திக்க நேரிட்டது. அது சபாநாயகர் தெரிவின் போது. ஏனென்றால் இப்போது சுதேசிகள் பெரும்பான்மை வகிக்கின்ற ஒரு அரசாங்க சபையை ஆங்கிலேயர்கள் எதிர்கொள்கிறார்கள். சபாநாயகராக பிரான்சிஸ் மொலமூரேவை தெரிவு செய்வதற்காக டபிள்யு .ஏ.த.சில்வா முன்மொழிந்தார். அதனை டீ.பீ.கரலியத்த அமோதித்தார். அதே வேளை சேர் ஸ்டுவர்ட் ஸ்னைதரை; டீ.எல்.விலியஸ் முன்மொழிய, எச்.ஐ.மாகர் அமோதித்தார். இறுதியில் மொலமூரேவுக்கு 35வாக்குகளும் ஸ்னைதருக்கு 18 வாக்குகளும் மட்டுமே கிடைத்ததன. மொலமூரே இலங்கையின் முதலாவது சபாநாயகராக தெரிவானார்.
1931 யூலை 10 அன்று முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமானபோது ஆளுநரின் உரையைத் தொடர்ந்து பிரதி சபாநாயகராக போஸ்டர் ஒபேசேகரவும், குழுத்தலைவராக எம்.சுப்பிரமணியமும் அதிக வாக்குகளால் தெரிவானார்கள்.
டொனமூர் அரசியல் அமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் சுதந்திரத்திற்குமிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு இணைப்புப் பாலம் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இந்த யாப்பில் சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையையும், பயிற்சியும் சுதேசிகளுக்கு ஏற்படுத்தியது. சுதந்திரத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்தத்தைக் கொண்டுத்தது என்றும் கூறலாம்.
சுதந்திர நிலைக்கான அம்சங்களாகப் பின்வருவனவற்றைத் தொகுத்துநோக்கலாம்.
- இனரீதியான தெரிவு முறை ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதியான தெரிவுமுறை ஏற்படுத்தப்பட்டது.
- நிர்வாகக்குழு முறையினூடாக உள்நாட்டு நிர்வாகப்பொறுப்புக்கள் சுதேசிகளிடம் கையளிக்கப்பட்டமை
- சர்வஜன வாக்குரிமை மூலமாக ஜனநாயக தெரிவு உரிமையை இலங்கை மக்கள் பெற்றுக்கொண்டார்கள்.
இனவாரி – பிரதேசவாரி
டொனமூர் யாப்பிற்கு முன்னைய குறு மெக்கலம்-(1910) தற்காலிக மனிங் - (1921) மனிங் - (1924) ஆகிய யாப்புக்களின் பிரகாரம் சட்ட நிரூபணசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கையில் இனரீதியான தெரிவு முறையும் பின்பற்றப்பட்டது.
இனவாரித் தெரிவுமுரையை நீக்கக்கோரி இலங்கை தேசிய காங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய தலைவர்களும் நீண்ட நாட்களாக குரலெழுப்பி வந்தனர். இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இனரீதியான தெரிவு முறையானது இனப்பிரிவினைக்கு வித்திட்டதென்கிற விமர்சனம் பலமாக முன்வைக்கப்பட்டிருந்தன.
டொனமூர் ஆணைக்குழுவின் பிரதான சிபாரிசுகளாகளில் சர்வஜன வாக்குரிமையைப் போல தனி அங்கத்துவ தேர்தல் முறையையும் முன்வைத்தது. இலங்கையை 09 மாகாணங்களாகப் பிரித்து 50 தேர்தல் தொகுதிகளை பரிந்துரைத்தனர். அந்த 50 தொகுதிகளுக்குமான உறுப்பினர்கள் சர்வஜன வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது.
டொனமூர் யாப்பின் இனரீதியான தெரிவுமுறை ஒழிக்கப்பட்டு; பிரதேச ரீதியான தெரிவின் மூலம் அமைக்கப்பட்ட அரசாங்க சபையில் மொத்தம் 61 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்கள் தொகுதி வாரியாக சர்வஜன தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 08 உறுப்பினர்கள் சிறுபான்மையினரின் நல உரிமைகளைப் பாதுகாக்க தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். தேர்தலின் மூலம் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாத சிறுபான்மை இனத்தவரின் நலனுக்காகவே இந்த நியமனமுறை தொடர்ந்தும் இடம் பெற்றது. (இது இனரீதியில் அமைந்த தெரிவுமுறையல்ல, நியமன முறையே. அதைத்தவிர உத்தியோக சார்புடைய அங்கத்தவர்களாக 03 உறுப்பினர்களும் தெரிவானார்கள்.
சுயாட்சியை நோக்கிய வழி, அல்லது சுதந்திரத்துக்கான இன்னொரு அத்திவாரம் என்றுகூட இதனைக் கொள்ளலாம். டொனமூர் யாப்புக்கு முந்திய யாப்புக்களை எடுத்துக்கொண்டால் சுதேசிய பிரதிநிதிகளுக்கு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.
தற்காலிக மனிங் யாப்பில் மூன்று சுதேசியருக்கும், மனிங் யாப்பில் நான்கு சுதேசியருக்கும் நிர்வாக வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட நிர்வாகத்தில் எவ்விதத்திலும் இவர்களால் வினைத்திறனை ஏற்படுத்த முடியவில்லை.
ஆனால் டொனமூர் யாப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்நாட்டு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
அவ்வாறு ஒரு சுயாட்சியை நோக்கிய வழியில் ஏற்பாடு என்ற ரீதியிலும் சர்வஜன வாக்குரிமையை கூறலாம்.
ஏ.ஈ.குணசிங்க, டீ.எஸ்.சேனநாயக்க |
சர்வஜன வாக்குரிமை
ஒரு நாட்டிற்குரிய தகைமை பெற்ற சகல பிரஜைக்கும் இனம், மதம், மொழி, சாதி, குலம், கல்வி, சொத்துரிமை, பிறப்பு, பிறப்பிடம், ஆண், பெண் ஆகிய எதுவித பேதங்களும் அற்ற வகையில் நாட்டின் அதிகார நிருவாகத்தில் பங்கேற்கும் உரிமையும், அத்துடன் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான உரிமையும் கொண்டதுவே சர்வஜன வாக்குரிமை என்போம்.
1910 குறு - மெக்கலம் திட்டத்தின்படி பத்து உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மட்டுமே வரையறுக்கப்பட்ட வாக்களிப்பின் பிரகாரம் தெரிவு செய்யும் உரிமை பெற்றவர்கள் என்பதை இங்கு சுட்டியாகவேண்டும். வரையறுக்கப்பட்ட எனும் போது படித்த, 1500 ரூபாவுக்கு குறையாத ஆண்டு வருமானமுடைய, 21 வயதுக்கு மேற்பட்ட, அதுவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. அதன் பிரகாரம் இரு ஐரோப்பியர்களும், ஒரு பறங்கியரும், படித்த இலங்கையர் ஒரே ஒருவர் மாத்திரமே தெரிவானார். அந்த ஒருவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன்.
நவீன உலகில் சனத்தொகையின் பெருக்கம், பரம்பல், குடிமக்களுக்குள் இருக்கிற பிரிவினைகள், குடிசனங்களின் தேவைகள் எல்லாவற்றையும் கையாள அதிகாரப்பரவலாகமும், அதற்கான ஜனநாயகப் பொறிமுறையும் இன்றிமையாததாக ஆகியிருக்கிறது. அந்த வகையில் பிரதிநிதித்துவ ஜனநாயக அம்சம் என்பதே அதற்கான எளிமையானதும், தவிர்க்க இயலாததுமான பொறிமுறை. அந்த ஜனநாயக அம்சத்தின் இன்றிமையாத வழிமுறையாக சர்வஜன வாக்குரிமை கொள்ளப்படுகிறது. 1931இல் அவ்வுரிமையை டொனமூர் யாப்பின் மூலம் தான் முதன் முதலில் பெற்றுக்கொண்டார்கள்.
டொனமூர் யாப்புக்கு முன்னர் இலங்கையில் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது. 1910-ம் ஆண்டில் குரு-மெகலம் யாப்பினால்அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையைக் கற்ற சொத்துள்ள ஆண்கள் மாத்திரமே பெற்றிருந்தனர்.
1924ம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் மொத்த சனத்தொகையில் சுமார் 4% மக்கள் மாத்திரமே (204,996 பேர்) வாக்களிக்கும் தகுதியினைப் பெற்றிருந்தனர். ஆனால் டொனமூர் யாப்பின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இத்தகைய வாக்குரிமையை வழங்கப்பட்டமையினால் வாக்காளர் தொகை சுமார் 18 1/2 இலட்சமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இது ஜனநாயக சக்தியின் கட்டவிழ்ப்பாகும்.
டொனமூர் திட்டத்தின் கீழ் இரு தேர்தல்கள் மட்டும் தான் நிகழ்ந்தன. 1931, 1936 ஆகிய வருடங்களில் அவை நடந்தன. இரண்டாம் உலகப் போரின் காரணமாக அடுத்த தேர்தல் உரிய காலத்தில் நடக்கவில்லை. எனவே 1936 இல் அமைக்கப்பட்ட அதே அரசாங்கம் 1947 தேர்தல் வரை நீடித்தது. ஆனால் அத்தேர்தல் சோல்பரி அரசியல் திட்டத்தின் நடந்தது. டொனமூர் திட்டத்தின் உள்ளடக்கம் தான் அடுத்த நிலையான சோல்பரி திட்டத்தின் விரிவாக்கத்துக்கு வழிவகுத்தது என்பதை சொல்லித்தேரியத் தேவையில்லை.
இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட டொனமூர் திட்டமானது அதனை எதிர்த்த தமிழர்களால் மட்டுமல்ல அதனை வெறுத்த ஏனைய இனத்தவர்களாலும் அதன் நடைமுறைப்படுத்தலை தடுக்க முடியவில்லை.
சர்வஜன வாக்குரிமையை பெற்று 90 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்ட போதும் அதை உரிய வகையில் பயன்படுத்தும் அரசியல் ஜனநாயகப் பண்பாட்டுக்கு பழகிவிட்டோமோ என்றால் நமக்கு திருப்தியான பதில் கிடைக்கபோவதில்லை.ஆனால் இலங்கையில் இன்று நாம் அனுபவிக்கிற வாக்குரிமை, தேர்தல், ஜனநாயகத் தெரிவு, வெகுஜன அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது 1931 இல் நாம் பெற்ற சர்வஜன வாக்குரிமை
+ comments + 3 comments
Nice article.
Vaazthukkal.
Ahil
மிகவும் விரிவான தகவல்களுடன் கூடிய கட்டுரை. ஆய்வாளருக்கு மாணவருக்கும் ஒருங்கே பயன்தரும்.
வாழ்த்துக்கள். மேலும் வேறு தலைப்புகளில் தொடர்க.
Very useful article.
Thank you
Priya
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...