Headlines News :
முகப்பு » » மாகாண சபையும், உள்ளூராட்சியும் அவசியமும் விமர்சனமும் - அருள்கார்க்கி

மாகாண சபையும், உள்ளூராட்சியும் அவசியமும் விமர்சனமும் - அருள்கார்க்கி

அதிகாரப்பரவலாக்கத்தின் ஆரம்பகட்டமே இலங்கை போன்ற பல்லின நாடுகளில் பாரிய விமர்சனங்களுக்குள்ளானது. இலங்கையில் வாழும் அனைத்து இன, மத, மொழிப் பிரிவினரையும் கருத்தியல் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றுவரை சாத்தியப்படாத ஒரு சூழலில் அதற்கான முயற்சிகள் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் இனப்பிரச்சினையானது இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மலையக மக்கள் குறித்த தேசிய கவனம் செலுத்தப்படாமையும் அம்மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் குறித்த சட்டரீதியான முன்னெடுப்புகள் குறித்தும் இதுவரை எவ்வித பொறிமுறையும் வகுக்கப்படவில்லை. நாட்டுக்குள்ளேயே அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகவும், அரசியல், தொழிற்சங்க ரீதியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகவும் மலையக சமூகத்தை இன்றும் அடையாளப்படுத்தலாம்.

காலனித்துவ ஆட்சியாளர்களின் காலத்திலிருந்து பெருந்தோட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை காலனித்துவவாதிகளின் பின்னர் வந்த கம்பனிகளிடம் அடகு வைக்கப்பட்டது. எனவே மலையக மக்கள் தமது கல்வி, கலாசாரம், சுகாதாரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் பெருந்தோட்ட கம்பனிகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றுவரை இந்நிலைமையிலிருந்து மீள முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை மக்களுக்குச் சாதகமான சொற்ப சலுகைகளான மாகாண சபை முறை, உள்ளூராட்சி முறை என்பவற்றை கேள்விக்குட்படுத்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய சாதகமான நுழைவாயில்களை பயன்படுத்தி மலையக மக்களையும் அரசியல் ரீதியாக பலப்படுத்தும் முயற்சிக்கு இது பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். எனவே நடைமுறையிலுள்ள சிறுபான்மையினர் காப்பீடுகளான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பை பலப்படுத்துவதனூடாக மலையக மக்களையும் அதனுள் ஒருங்கிணைக்கும் நகர்வுகள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். ஆனாலும் இன்று எந்தவொரு மாகாண சபையும் ஆட்சியில் இல்லாத சந்தர்ப்பத்தில் அதிகாரத்தை மத்திய அரசை நோக்கி குவிமையப்படுத்தும் செயற்பாடுகள் கொவிட் - 19 பெருந்தொற்றை தொடர்ந்து வேகமெடுத்துள்ளன.

1987 ஜூலை 29 ஆம் திகதி ஜே.ஆர். ஜெயவர்தனாவிற்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இடம்பெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினூடாக கொண்டு வரப்பட்டதே மாகாண சபை முறையாகும். இந்தியாவின் முழுமையான அழுத்தத்துக்கு மத்தியில் இடம்பெற்ற ஒப்பந்தமாக இது அமைந்தாலும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்த எந்தவொரு ஏற்பாடுகளும் 13 வது திருத்தத்தில் உள்வாங்கப்படவில்லை. இதை ஒரு வரலாற்று தவறாகவே அணுக வேண்டியுள்ளது. மலையகத்தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை மையப்படுத்தி மாகாண சபை முறையில் சிறப்பு ஏற்பாடுகளும் விகிதாசார ஒதுக்கீடுகளும் அவசியம்.    

மாகாண சபைகளின் அங்கத்துவத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை, பரப்பளவு என்பவற்றின் அடிப்படையிலேயே மாகாண சபைகளுக்கான அங்கத்துவ எண்ணிக்கை வரையறுக்கப்படும். இதன் அடிப்படையில் மாகாண சபைகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதுடன் அங்கத்தவர்கள் விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே தெரிவுச் செய்யப்பட்டார்கள். இவ்விடத்தில் வடகிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் அரசியல் தேவைகளை éர்த்திச் செய்யும் விதமாக ஒப்பீட்டு அடிப்படையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளை வலுப்படுத்துவது இன்றுவரை சாத்தியப்படவில்லை.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைத்தல், நிதிவளங்களை குறைத்தல், தேர்தலை பிற்போடுதல் போன்ற விடயங்கள் மாகாண சபை முறையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்பட வேண்டும். மாகாண சபைகளில் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை விடவும் மேலான அதிகாரங்கள் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுனருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தனித்த விருப்பத்துக்கு அமைவாக நியமிக்கப்படும் ஆளனர் ஒவ்வொரு மாகாண சபையினதும் நிர்வாக அலுவல்களுக்கு தலைவராக இருப்பார். அவரின் அதிகாரங்களை அவரால் நியமிக்கப்பட்ட மாகாண முதலமைச்சர் மற்றும் நான்கு மாகாண அமைச்சர்கள் மூலம் செயற்படுத்துவார்.

இவ்விடத்தில் காலங்காலமாக அரசுடன் இணைந்திருந்த மலையக கட்சிகள் ஆளுனருக்கூடாகவும் மாகாண சபைகளை மலையக மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த தவறியுள்ளனர். இதன் காரணமாக இன்று மாகாண சபைகள் மலையக மக்களுக்கு பிரயோசனம் அற்றவை என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மாகாண மட்டத்தில் முகங்கொடுக்கும் சிறுபான்மையினர் சார் பிரச்சினைகளை ஆளுனருக்கு ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்புகளையும் பாராளுமன்றத்தில் சாத்தியமாகாத பிரேரணைகளை மாகாண மட்டத்தில் கொண்டு வந்து பிராந்திய ரீதியாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய வாய்ப்புகளையும் மலையக பிரதிநிதிகள் சரியாக பயன்படுத்தவில்லை.

மாகாண சபை முறையின் அவசியம் குறித்து நீண்டகால பொதுத்துறை அனுபவங்களை கொண்டு வரும் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் அவர்களின் கூற்றுப்படி மாகாண சபைகள் என்பது ஒரு பயிற்சிக்காலமாகும். சிறுபான்மை இனத்தவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை இந்த மாகாண சபை முறைமையாகும். தேசிய அமைச்சுகள் மூலமாக சமூகத்தின் அடிமட்டம் வரை ஊடுருவி பொதுச்சேவைகளை பரவலடைய செய்ய முடியாது. எனவே உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபையும் பொதுச்சேவை சமூகத்தின் கீழ்மட்டம் வரை கொண்டு செல்கின்றன. ஆனால் அதனை எவ்வளவுத் தூரம் சாதகமாக பயன்படுத்தியுள்ளோம் என்பது ஆதாயப்பட வேண்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், கைத்தொழில், வீதி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட விடயங்களில் மாகாண சபைகள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டுள்ளன. முழுமையான அதிகாரம் தரப்படவில்லை. நிதி வளத்துக்காக மத்திய அரசாங்கத்தையே தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது என்கின்றார். அரசியலமைப்பின் 154 A உறுப்புரையின் கீழ் தாபிக்கப்பட்ட நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினையும் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குகின்றது. அரச அபிவிருத்தி கொள்கைக்கு ஏற்பவும், பொருளாதார உபாயத்துக்கு அடித்தளமாகவும் மாகாண நிதி, திட்டமிடல் என்பவை இடம்பெற வேண்டியது அவசியமாகும்.

ஆயினும் மாகாண சபைகளின் நிர்’வாகத்தின் கீழ் வரும் பரப்பு, சனத்தொகை, இன விகிதாசாரம் உள்ளிட்ட விசேட காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணசபையும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் முழுமையான அதிகாரம் கொண்ட தமிழ்க்கல்வி அமைச்சுகள் இருக்கவேண்டும். ஆனாலும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள தமிழ்க்கல்வி அமைச்சு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண அமைச்சு அதிகாரத்தை தவறாக பிரயோகித்தமை காரணமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன என்கின்றார்.

மேலும் பெருந்தோட்டங்களுக்கான பிரத்தியேக அமைச்சு மூலம் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நிதிசார் உதவிகளை வழங்க நாம் முயற்சிகளை  மேற்கொண்ட போது மாகாணசபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் முறைமைப்படுத்தப்பட்ட உறவு இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. அதேபோல் மாகாண அமைச்சு பதவியை பயன்படுத்தி அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றன. எனவே இவ்வாறான அனுபவங்கள் மலையக மக்களுக்கு மாகாண சபைகளின் அவசியத்தை எதிர்மறையான விளைவுகளாக கட்டமைக்கின்றன. ஆனால் இவற்றை மட்டும் வைத்து மாகாண சபை முறையை வலுவிழக்க செய்யவோ இல்லாதொழிக்கவோ முடியாது. இம்முறை சிறுபான்மை இனங்களுக்கு எவ்விதத்திலும் பிரயோசனமற்றதாக அமையாது என்கின்றார்.

 மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டதிலிருந்து மாகாண சபைகளின் பிரதான கடமை மாகாண அரசாங்கங்களுக்குரிய சட்டங்களை இயற்றுவதாகும். இந்த வகையில் மாகாண சபை பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரம் இச்சபைக்கு உண்டு. இவ்வாறு 37 விடயங்களில் மாகாண சபைகள் சட்டங்களை இயற்றலாம். அவ்வாறானவை.

1. உள்ளூராட்சி சட்டமும் ஒழுங்கும்

2. காணியும் காணி அமர்வும்

3. விவசாயமும் கைத்தொழிலும்

4. கல்வியும் கலாசாரமும்

ஆகும். ஆனால் இவற்றிற்குட்பட்டு மலையக மக்களுக்கான அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கு போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது புலனாகின்றது. அதேபோல் திரு. வாமதேவன் அவர்கள் கூறுவது போல் மாகாண சபை முறையில் காணப்பட்ட குறைபாடுகள் அரசியல் ரீதியானதாகவும், கட்சிகள் சார்ந்ததாகவுமே உணரப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுடன் நேர்மறையான உறவுகளை கட்டியெழுப்புவதன் கூலம் அபிவிருத்திகளை துரிதப்படுத்தலாம். என்றும் கூறுகின்றார். உதாரணமாக வீதி அபிவிருத்தியை கூறலாம். A,B ஆகிய வீதி அபிவிருத்தி அதிகார சபையே பராமரிப்பு, அபிவிருத்தி என்பவற்றை மேற்கொள்ளும். C,D ஆகிய தரங்களை உடைய பாதைகள் மாகாண சபையின் பொறுப்பாகும். அதேபோல் E தர வீதிகள் பிரதேச சபையின் பொறுப்பாகும்.

எனவே பெருந்தோட்ட உட்கட்டமைப்பில் முக்கிய இடம் பிடிக்கும் வீதி அபிவிருத்தியை மாகாண சபையின் நிதி மூலம் சாத்தியமாக்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய, ஊவா மாகாண சபைகளில் நெடுங்காலமாக மலையகப் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தாலும் வீதி அபிவிருத்தி இன்னும் தன்னிறைவு அடையாத ஒரு துறையாகவே இன்றும் இருப்பது கவனிக்கத்தக்கது. எனவே திரு. வாமதேவன் அவர்களின் கருத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மாகாண சபை முறைமையானது மலையக மக்களுக்கு அத்தியாவசியமானதாகவே காணப்படுகின்றது. எனினும் ஆட்சிமுறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டியது சிறுபான்மை மக்களின் உரிமையாகும் என்பது திரு. வாமதேவனின் சாராம்சமாகவுள்ளது.

அதேபோல் இருமொழிக் கொள்கையை ஆட்சித்துறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபை முறை மற்றும் உள்ளூராட்சி பொறிமுறைகள் ஒரு காலமாக காணப்படுகின்றது. அதாவது வடகிழக்கை பொறுத்தவரையில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருந்தாலும் வடகிழக்குக்கு வெளியில் தேசிய மொழிக் கொள்கையை அரச நிர்வாக துறைக்குள் கொண்டு வருகின்ற வேலையை மாகாண சபைகள் செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இது மலையக மக்கள் தமது சொந்த மொழியில் அரச நிர்வாக செயற்பாடுகள் நுகர்கின்ற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே அதிகாரப்பரவலாக்கத்தின் பிரதான விடயமான மொழி சமவாய்ப்பு பேணப்படுவதற்கும் இது அடிப்படையாக உள்ளமை உணரப்பட வேண்டும்.

இவ்விடயங்கள் தொடர்பாக அரசியல ஆய்வாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி.எஸ். கருணாகரன் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர் இவ்வாறு தனது அபிப்பிராயத்தை பகிர்ந்துக் கொண்டார். மாகாண சபைகள் என்பவை வளர்ச்சியடைந்த ஒரு அதிகாரப்பரவலாக்கல் வடிவமாக பார்க்கப்பட முடியாவிட்டாலும் இலங்கையை பொறுத்தவரையில் முக்கியத்துவம் மிக்கதான துணை ஆட்சி முறையாகும். 13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையானது நீண்ட காலமாக இலங்கையில் வேரூன்றியிருந்த இன முரண்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவின் தலையீட்டின் மூலம் கொண்டு வரப்பட்ட ஒரு வடிவமாகும். மாகாணங்களுக்கு அதிகார பரவலை விஸ்தரிக்கும் முகமாக ஆட்சி நிர்வாகத்தை கையளித்தல் இதன் மூலம் இடம்பெறுகின்றது. குறிப்பாக வடகிழக்கை மையப்படுத்தி இந்த மாகாண சபை முறை கொண்டு வரப்பட்டாலும் வடகிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். முக்கியமாக மலையக மக்கள் செறிந்து வாழும் மாகாணங்களில் தமிழ் மொழிக்கு ஆட்சி கருமங்களில் இடம் கிடைப்பதற்கும், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் மலையக பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதற்கும் இந்த முறைமை வாய்ப்பளித்துள்ளது. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் அதிகாரப்பரவலாக்கல் முறைக்கு ஈடானது என்று சொல்லப்பட முடியாவிட்டாலும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது முக்கியத்துவமிக்கதாகின்றது.

மேலும் ஒற்றையாட்சிக்குள் ஒரு அதிகாரப்பகிர்வான மாகாண சபை முறையானது பிரதேச அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒரு அலகாகும். தேசிய அரசால் அணுக முடியாத பிரதேச ரீதியான அபிவிருத்திகளை மாகாண சபையும் உள்ளூராட்சி முறையும் சாத்தியப்படுத்துகின்றன. இது அபிவிருத்தியடைந்து வரும் மலையக சமூகத்துக்கு அவசியமான ஒரு காரணியாகும் என்கின்றார்.

அதேபோல் அரசியல் ரீதியாக மக்களை அணி திரட்டுவதற்கு மாகாண சபை முறையானது அடிப்படையானது. பிராந்திய ரீதியில் மக்களின் அரசயல், சமூக, பொருளாதார அபிவிருத்திகளுக்கும் ஆட்சிமாற்றங்களுக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண சபைகள் அடிப்படையாக இருந்திருக்கின்றன. அதாவது ஆட்சிமாற்றங்களுக்கான காள்கோளாகவும் மாகாண சபைகள் இருந்திருக்கின்றன. எடுத்துகாட்டாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை வசப்படுத்தியதை தொடர்ந்து நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கும் இது காரணமாக அமைந்தது. இதில் முக்கியமான விடயம் ஊவா மாகாணத்தில் பெருவாரியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பெருந்தோட்ட தமிழ் மக்களே. அவர்களின் அதிகப்படியான வாக்குகளே ஊவா மாகாண  சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது.

கலாநிதி கருணாகரன் அவர்களின் கூற்றுப்படி பிராந்திய கட்சிகளின் வளர்ச்சிக்கும் மாகாண சபை முறையே தளமாகும். அதாவது பெரும்பாலான மலையக கட்சிகள் மாகாண சபை தேர்தல்களிலேயே தமது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தன. இது அம்மக்களின் அரசியல் பயணத்துக்கு இலகுவான வழியாக அமைந்தது. பிராந்திய ரீதியில் அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் மாகாண சபை முறைமை வழிகோலியது. இது மலையக கட்சிகள் தேசிய அடையாளம் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது. மக்களின் ஜனநாயக பயிற்சிக்கு பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதி

தேர்தல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் மாகாண சபைத் தேர்தல் மிகவும் நெருக்கமானது. மாவட்ட ரீதியில் பெரும்பான்மையினர் செல்வாக்கு செலுத்தும் பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து இளைஞர்கள் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கு மாகாண சபைகளே வழியேற்படுத்தின. எனவே மலையக சமூகத்துக்கு இம்முறையினால் நன்மையில்லை எனும் வாதங்களை ஏற்க்கொள்ள முடியாது. மலையக மக்களின் அதிகார வரம்புக்குள் அவர்கள் மாகாண ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஊவா, மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ளனர் என்கின்றார்.

எனவே இவற்றை தொகுத்து நோக்கும் போது அதிகாரப்பரவலாக்கத்தின் எளிய வடிவமான மாகாண சபை முறை பரவலாக்கப்பட வேண்டும். தேர்தல் ஜனநாயம் மீறப்படாமல் இருப்பதும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாகாண மற்றும் உள்ளூராட்சி பொறிமுறையை சிதைக்காமல் இருப்பதும் அவசியம். நாட்டில் இன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் காலந்தாழ்த்தப்படுகின்றமை கூட ஒரு விதத்தில் இம்முறையை மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள உடன்பாடின்மையையே காட்டுகின்றது. அதேபோல் தேர்தல் முறை மாற்றத்தினூடு சிறுபான்மை சமூகங்களிடம் வழங்கப்படுகின்ற சொற்ப அதிகாரங்களையும் பறிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

மலையக மக்கயை பொறுத்தவரையில் ஒரு தனித் தேசிய இனமாக அதிகாரப்பரவலாக்கத்துக்கு உட்பட வேண்டிய நியாயமான காரணம் உண்டு. எனவே அதனை அடைந்துக் கொள்வதற்கான வழிமுறையாக மாகாண சபை முறையை முழுமையாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாக இருக்கின்றது. எனவே இம்முறையிலுள்ள குறைபாடுகள் களையப்பட்டு மாகாண சபை முறைமை வலுப்படுத்தபட வேண்டும்.

Share this post :

+ comments + 1 comments

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates