Headlines News :
முகப்பு » , » மலையகத்தில் சுகாதார சேவைகளில் பாரபட்சம் : ஒரு மனிதவுரிமை நோக்கு - அருள்கார்க்கி

மலையகத்தில் சுகாதார சேவைகளில் பாரபட்சம் : ஒரு மனிதவுரிமை நோக்கு - அருள்கார்க்கி

காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் மலையக மக்களின் சுகாதார நிலைமைகளில் ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் கட்டம் கட்டமாக வீழ்ச்சி அடையத் தொடங்கின. மலையக சுகாதார சேவைகளின் இன்றைய நிலைக்கு அடிப்படையாக அமைந்த இந்த காலப்பகுதியானது இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டதன் பின்னர் இவர்களது சுகாதார தேவைகளை தேசிய திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாவதற்கான காலமாகும். இந்நிலைமை இன்று இவர்கள் அனுபவிக்கும் சுகாதார நிலைகளின் அடைவு வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததாகும். இது இந்நாட்டில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட மலையக மக்கள் கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு தடையாக அமைந்த காரணிகளாகும். ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் இன்னும் மோசமான சுகாதார சேவைகளை மலையக மக்களே அனுபவிக்கின்றனர்.

1930 களில் இலங்கையின் பெரும்பான்மை மக்கள் பிரதேசங்களை விடவும் ஒப்பீட்டளவில் சிறந்த சுகாதார சேவைகளை உடையவர்களாக பெருந்தோட்ட மக்கள் காணப்பட்டனர். அந்நிலைமை 1970 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் தலைகீழாக மாற்றமடைந்தது. சிசு மரண வீதம், தொற்று நோய் பரவல் என்பன மலையகத்தில் அதிகரித்தது. ஆனால் அவர்களுக்கான குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பவை உறுதி செய்யப்பட்ட பின்னரும், 1972 ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம், மற்றும் ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை என்பனவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னரும் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் பாரிய அபிவிருத்தியை அடையவில்லை. ஆனால் அதற்கான ஆரம்பம் அக்காலப்பகுதியில் இடப்பட்டது. அன்றைய காலப்பகுதியில் பெருந்தோட்டத் தமிழர்கள் பிரஜாவுரிமை அற்றவர்களாக இருந்தும் கூட ளுடுளுPஊஇ  மற்றும் துநுனுடீ  ஆகிய நிறுவனங்கள் பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவைகளை பகுதியளவில் பொறுப்பேற்றுக் கொண்டன. அதன் தொடர்ச்சியாக அக்காலத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிய குடும்ப சுகாதார பணியகம் பெருந்தோட்ட மக்களின் சுகாதார திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை பொறுப்பேற்று நடாத்தியது.

1990 களின் ஆரம்பத்தில் பெருந்தோட்டங்கள் 23 பெருந்தோட்ட பிராந்தியக் கம்பனிகளின் கீழ் கொண்டுவரப்பட்டதன் ஊடாக தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவாக அந்த தோட்டங்களின் சுகாதார நலத் தேவைகள் தோட்ட நிர்வாகங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டன. இவ்வாறு பெருந்தோட்ட சுகாதாரத்துறை பிராந்திய கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் விளைவாக மீண்டும் பெருந்தோட்ட சுகாதாரத்துறை குறிகாட்டிகள் வீழ்ச்சியேற்பட ஆரம்பித்தது. பின்னர் அரசின் பங்களிப்புடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி நிதியத்தை (Pர்ளுறுவு) 1993 ஆம் ஆண்டு ஸ்தாபித்து பிராந்திய கம்பனிகளின் பங்களிப்புடன் பெருந்தோட்ட சுகாதார சேவைகளை வழங்க வழியேற்படுத்தியது. முக்கியமாக இந்நிதியம் பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்;டுப்பாட்டிலேயே இருக்கின்றமையால் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் இன்னும் முழுமையான வளர்ச்சியடையவில்லை. அதன் பின்னர் இம்மக்களது குடியுரிமை உறுதிசெய்யப்பட்ட பின்னரும் மூன்றாம் தரப்பான கம்பனிகளின் பொறுப்பிலேயே தொடர்ந்து இவர்களின் சுகாதாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இது ஒரு மனிதவுரிமை மீறலாகவே அவதானிக்கப்பட வேண்டும்.

எனவே பெருந்தோட்ட மக்கள் எவ்வளவுத் தூரம் இந்நிலைமையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது இன்றுவரை அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மூலம் புலனாகின்றது. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொண்ட கள விஜயத்தின் போது சுகாதார சேவைகள் மிகவும் அரிதான ஒரு தோட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றினூடாக பல்வேறு விடயங்களை அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இத்தோட்டத்தில் உள்ள பிள்ளைகள் அதிகமானோர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையானது தாய் சேய் நலம், போசாக்கான உணவு, கர்ப்பிணித் தாய் சுகாதாரம், அவசர மருத்துவ வசதிகள், குடும்ப பொருளாதாரம் என்பவற்றுடன் நேரடியான தொடர்புள்ளது. கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதார வழிகாட்டல்கள் தொடக்கம் அவர்கள் பிள்ளை பெறும் வரை தேவையான சுகாதார சேவைகள் இப்பிரதேச மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அச்சேவைகளை பெற்றுக் கொள்ள நகரங்களை நோக்கி செல்வதற்கும் பாதை கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள், பொருளாதாரம் என்பன சவாலாக இருந்ததாக எம்மோடு உரையாடிய பெண் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தமது சொந்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட அப்பெண்மணி தனது ஊரில் பலருக்கும் தேவையான ஆரம்பகட்ட மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் மிகுந்த சிரமத்துடனும், பொருட்செலவிலும் நகரங்களை நோக்கி தாம் சென்று வருவதாகவும் தெரிவித்தார். தமக்குக் கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் மருத்துவ தேவைகளை பெற்றுக் கொள்ள அதிகளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதும், சீரற்ற பாதைகளினூடு சென்று வருகையில் வயதானவர்களும், கர்ப்பிணித் தாய்மாரும் மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அப்பிரதேசத்திலும் தோட்ட வைத்தியசாலை ஒன்று இருக்கின்றது. இருப்பினும் தகுதியுடைய ஆளணியினரோ, அடிப்படை வசதிகளோ இல்லை. பிராந்திய தோட்டக் கம்பனிகளின் கீழ் சுகாதார முறைமை காணப்படும் பல்வேறு தோட்டங்களிலுள்ள நிலைமை இவ்வாறுதான் இருக்கின்றது. இங்கு பணியிலிருக்கும் ஒரு சிலரும் எவ்வித பயிற்சியோ தகைமைகளோ அற்றவர்களாகவே பெரும்பாலும் காணப்படுகின்றனர். ஒரு சில தோட்டங்களில் இவை மூடப்பட்டும் உள்ளன. எனவே அவசர தேவைகளான சிறியளவிலான நோய்களுக்கு கூட இவர்கள் நகரங்களை நோக்கியே செல்ல வேண்டியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட வைத்தியசாலைகள் உரிய இடம் மற்றும் மருத்துவ வசதிகள் போதியளவில் காணப்படாமை, ஆளணியினரின் பற்றாக்குறை, மேலதிக சிகிச்சை வசதிகள் இல்லாமை, போக்குவரத்துக்கு தோட்ட நிர்வாகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை, தோட்டத்தில் வேலை செய்யாதோர் புறக்கணிக்கப்படுகின்றமை, பொருளாதார போதாமை, நகரங்களுக்கு செல்வதற்கான செலவீனங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை போன்ற காரணிகளை இன்றளவும் தோட்டங்களில் காணமுடியும்.

அதேபோல் இவர்கள் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதாயினும் கூட அதற்காக தமது ஒருநாள் வேலையையும் அதற்கான சம்பளத்தையும் இழக்க வேண்டியுள்ளது. நகரங்களில் அமைந்துள்ள அரச வைத்தியசாலைகளில் இம்மக்கள் எதிர்நோக்கும் மொழிப்பிரச்சினை மற்றும் பெரும்பான்மை சமூகத்தவர்கள் மத்தியில் காணப்படும் பாரபட்சம் என்பன இவர்களை மனவுளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. அங்கு இவர்கள் நடாத்தப்படும் முறையில் அதிருப்திக்குள்ளாகும் இவர்கள் அங்குச் செல்வதற்கான தயக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பதையும் இவர்களின் கூற்றுக்கள் மூலமாக அறியக் கூடியதாயுள்ளது.

மேலும், குடும்பத்திட்டமிடல், கர்ப்பக்கால சுகாதார சேவைகள், தேசிய சுகாதார சேவை ஏற்பாடுகளுக்கு ஈடாக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப் பெறாமை மற்றுமொரு பாரிய பிரச்சினையாகும். இதனால் அண்மைக்காலம் வரையில் தோட்டப்பகுதிகளில் சிசுமரண வீதம் அதிகளவில் காணப்பட்டது. தொடர்ச்சியாக மகப்பேற்று தாதியரின் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பாரிய பின்னடைவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தோட்டப்பகுதிகளில் தொழில் புரியும் மகப்பேற்று தாதியரில் பெரும்பாலானோர் உரிய தகைமைகள் அற்றவர்களாக காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேப்போல் தோட்டங்களில் பணியாற்றும் அனேகமான மகப்பேற்று தாதியர்களும் குடும்பநல உத்தியோகத்தர்களும் பெரும்பான்மை சிங்கள இனத்தினராகவே காணப்படுகின்றனர். இதன் காரணமாக மொழிப்பிரச்சினையையும் எதிர் கொள்ளுகின்றனர். இது இவர்கள் அடிப்படை மருத்துவ தேவைகளை பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு கடினத்தன்மையை உருவாக்குகின்றது. எனவே கர்ப்பக்கால ஆலோசனைகள், குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் என்பன இவர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. இதன் பிரதிபலனாக குறைபோசணையுடைய பிள்ளைகள் நாம் ஆய்வு செய்த பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப்பட்டார்கள். எனவே அவர்களின் எதிர்காலத்திலும் இதன் பாதிப்புகள் இருப்பதை உணர முடியும்.

இப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர் ஒருவரை நேர்கண்ட போது அவரின் கூற்றுக்கள் இவ்வாறமைந்தன. அதாவது குழந்தைப் பருவத்தில் போதிய போசணை, ஊட்டச்சத்துக்கள் என்பவை வழங்கப்படாத பிள்ளைகள் கல்வியிலும், விளையாட்டிலும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். அதேப்போல் அவர்கள் சோர்வு, இலகுவில் நோய்வாய்ப்படல் போன்றவற்றுக்கும் ஆளாகின்றனர். எனவே இது ஒரு சமூகப் பிரச்சினையாக அவதானிக்கப்பட வேண்டும். இம்மக்களின் வாக்குகளும், வரிப்பணமும் இந்த நாட்டிற்கே வழங்கப்படுகின்றன. எனினும் பெருந்தோட்ட மக்களின் மீது மட்டும் வெளிப்படுத்தப்படும் இவ்வாறான பாரபட்சமானது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.

மேலும் அரசியல் பாரபட்சங்கள் மற்றும் இனரீதியான வேறுபாடுகள் காரணமாகவும் பெருந்தோட்ட மக்கள் அண்மைக்காலமாக நுணுக்கமான சுகாதார அச்சுறுத்தல்களை அனுபவிக்கின்றனர். எடுத்துக்காட்டாக பெருந்தோட்ட பெண்கள் மத்தியில் அரசியல் நோக்கோடு செய்யப்படும் கட்டாய கருக்கலைப்புக்கள், கருத்தடைகள் போன்றவை இன்று பெருந்தோட்டங்களில் அதிகரித்து வரும் ஒரு சமூகப்பிரச்சினையாகும். இது மலையகத் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்திலும், சனத்தொகையிலும் நேரடியான தாக்கங்களை உண்டு பண்ணும் காரணிகளாகும்.

குறைêட்டத்துடன் பிள்ளைகள் பிறப்பதற்கும் இவ்வாறான அலட்சியப் போக்கே காரணமாக அமைந்துள்ளது. எனவே இது இம்மக்கள் மீது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு மனிதவுரிமை மீறலாகும். அதேப்போல் பெருந்தோட்ட மக்களின் பொருளாதார பின்னடைவானது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது. அதாவது அவர்களின் உணவு, போசாக்கு, உள்ளிட்ட விடயங்களுடன் இது பாரியளவில் தாக்கத்தை உண்டாக்குகின்றமை எமக்கு குறித்த பிரதேசத்தில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வருகின்றது.

அவர்களின் அன்றாட உணவாக கோதுமை ரொட்டியும், அரிசிச்சோறுமே பிரதான இடம் வகிக்கின்றது. இது எவ்விதத்திலும் பிள்ளைகளுக்கோ தாய்மாருக்கோ போதுமான போசணையை வழங்கப்போவதில்லை. அவர்களின் பொருளாதாரம் நாளாந்த உணவு வேளையை போக்கான உணவாக அமைத்துக்கொள்ளவும் போதுமானதாக இல்லை. எனவே பிள்ளைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நேரடியாக பாதிக்கின்றது. மறுபுறம் தோட்டங்களில் காணப்படும் ஆரோக்கியமான கீரை வகை, பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை அவர்கள் எவ்வாறு உணவு வேளையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு அறிëட்டல் தேவைப்படுகின்றது.

அவ்வாறான அறிëட்டல் சேவைகளையும் தொடர் கண்காணிப்புக்களையும் வழங்க வேண்டியது மருத்துவ சேவையினரின் கடமையாகும். அது இல்லாததன் காரணமாக அவர்கள் போதிய விளக்கமின்றி உள்ளனர். இதன் காரணமாகவே  தேசிய ரீதியில் ஒப்பிடும்போது பெருந்தோட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இது சுகாதார சேவைகளின் வழங்கலில் சமமின்மையையே காட்டுகின்றது.

பொதுமக்களின் சுகாதார சேவைகளிற்கான பொறுப்பு ஒரு பரவலாக்கப்பட்ட விடயமாகும். எனவே தேசிய சுகாதார அமைச்சிற்கு மேலதிகமாக மேலும் ஒன்பது மாகாண சுகாதார அமைச்சுக்களும், ஆயர்வேத மருத்துவ வழங்கலிற்கு பொறுப்பான சுதேச மருத்துவ அமைச்சும் உள்ளது. இதில் 90 மூ – 95 மூ சதவீதமான மக்கள் அரச சுகாதார சேவைகளையே நுகர்பவர்களாக உள்ளனர். தேசிய ரீதியில் 50 மூ சதவீதமான மக்கள் தனியார் சுகாதார சேவைகளை பெறுவதாக ஒரு ஆய்வு கூறுகின்றது. தேசிய ரீதியில் அரசாங்கம் குணப்படுத்தல் மற்றும் தடுப்பு போன்ற சுகாதார சேவைகளை இலவசமாக வழங்கினாலும் குடும்பங்களின் சுகவீனங்கள், அவசர நிலைமைகள் போன்றவற்றுக்கான செலவீனங்கள் அதிகரித்தே காணப்படுகின்றன.

சமீபகாலமாக அதிகரித்துவரும் தொற்றுநோய்கள் மற்றும் நீண்டகால நோய்கள், போக்குவரத்து செலவுகள் தொடர்பாகவும் போக்குவரத்து அடிப்படை தேவைகள் தொடர்பான உடனடி செலவீனங்களையும் மக்களே சுமக்க வேண்டும். இது பெருந்தோட்டங்களில் அவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் சவாலானதாகும். எமது ஆய்வுப்பிரதேசத்தில் நீண்டகாலமாக பக்கவாதத்தால் அவதியுறும் 78 வயதான நபரொருவர் அரச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமானால் பிரத்தியேகமான வாகனம், உதவியாள் செலவுகள் என்பவற்றை தயார்படுத்த வேண்டும். மாதாந்த பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறான அதிகரித்த செலவுகளால் அவரால் மருத்துவ வசதிகளை அணுக முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். கர்ப்பிணித்தாய்மார் மாதாந்த சிகிச்சைகளுக்கு செல்வதற்கும் தோட்டங்களில் உள்ள லொறிகளிலேயே செல்வதாக அறிய முடிகின்றது. இங்கு அம்புலன்ஸ் வசதிகளோ, அல்லது மருத்துவ குழு தோட்டங்களுக்கு விஜயம் செய்யும் நடைமுறையோ சமீபகாலம் வரை இருக்கவில்லை. எனவே இப்பிரதேச மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை பெருந்தோட்டங்களில் காணப்படுகின்றது.

இலங்கையில் 2007 இன் இறுதியில் 608 வைத்தியசாலைகள் இருந்ததாக கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வீட்டிலிருந்தும் 4.8 மஅ தூரத்துக்குள் இலவச ஆங்கில மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் குறித்த ஆய்வில் கணிப்பிடப்பட்டுள்ளது. 2000 முதல் 2007 வரையான காலப்பகுதியில் 100 000 பேரிற்கான மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை 41.4 முதல் 55.1 வரை அதிகரித்துள்ளதுடன் இதே காலப்பகுதியில் 100 000 பேரிற்கான தாதிகளின் எண்ணிக்கையும் 78 இலிருந்து 157.3 வரை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின்  ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு புவியியல் பிரதேசங்களிற்கும் இவ்வமைப்பு பரம்பலடையவில்லை. குறித்த விடயத்தில் ஒப்பீட்டளவில் அபிவிருத்தி காணப்படுகின்ற போதிலும் அண்மைக்காலத்தில் மேல் மாகாணத்துடன் ஒப்பிடும் போது மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குறைந்தளவு அரச வைத்தியசாலைகளே இருந்ததாக இலங்கை மனித அபிவிருத்தி அறிக்கை தெரிவிக்கின்றது. இதில் இவ்விரு மாகாணங்களி;ல் உள்ள பெருந்தோட்டப் பிரதேசங்களே அதிகமாகும். எனவே மேற்குறித்த புள்ளிவிபரங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பது புலனாகின்றது.

சுகாதார சேவைகள் வழங்கலில் காலத்துக்குக் காலம் அதிகரித்துள்ள அரச முதலீடுகளில் சீரமைப்பு இருப்பினும் தொடர்ந்து பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. மந்த போசணை, வயதானோர் குடித்தொகை போக்குவரத்து சேவைகள் என்பவற்றையும் மையப்படுத்தி பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்பை சீரமைக்க வேண்டியதும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் மலையகத்துக்கான அவசர தேவைகளாகும். இது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் கடமையாகும். குறிப்பாக தேர்தல்கால வாக்குறுதிகளில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவதில்லை. மாறாக சொற்ப சலுகைகளையே அவர்கள் உள்ளடக்குகின்றனர். எனவே இது ஒரு அலட்சியமான போக்காக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சியமைக்கும் ஒவ்வொரு அரசும் கூட இவ்விடயத்தை பெருந்தோட்ட மக்கள் மீதான ஒரு பாரபட்சமாகவே கொண்டு நடாத்துகின்றன. அடிப்படையான விடயங்களான போசாக்கு, மற்றும் அவசர மருத்துவ சேவைகளிலும் கூட இம்மக்கள் தொடர்ந்து பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர். எனவே இது அரசியல் ரீதியான ஒரு பாரபட்சமாகும். பல்வேறு ஆய்வுகளும் ஆதாரங்களும் அதற்கு சான்று பகர்கின்றன.

உதாரணமாக பெருந்தோட்டத்துறை சிறுவர்கள் மோசமான நிலையில் உள்ளதுடன் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 41 மூ மற்றும் 35 மூ ஆன ஐந்து வயதிற்கு கீழான சிறுவர்கள் குறைந்த நிறையுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் போசணைக் குறைபாடானது வீட்டு வருமானம், தாய்மார் போசணை நிலை மற்றும் தாய்மார் கல்வி மட்டத்துடனும் நேரடியான தொடர்புடையதாக உள்ளது.

                             

இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட சுகாதார துறையை கட்டம் கட்டமாக அரசுடமையாக்கும் வேலைத்திட்டங்கள் பல்வேறு காலப்பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதற்கான முக்கியத்துவமும், நிதி வளங்களும் முறையாக வழங்கப்படவில்லை. சமீபத்தில் அதிகரித்துள்ள கொவிட் - 19 தொற்றுநோயுடன் தொடர்புபடுத்தி பெருந்தோட்ட சுகாதாரத்துறையை முழுமையாக அரசுமயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளையும் உள்ளடக்கி தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அதன் முதல் கட்டமாக வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் முறையே 21 மூ , 7.6 மூ சதவீதமாக இருக்கும் வறுமையானது சமீபகால ஆய்வு வரை 10.9 மூ சதவீதமாக காணப்பட்டது. எனவே நாட்டின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் சுகாதார சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதலோடு பெருந்தோட்ட மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் வழங்குவதே நிலைபேறான சுகாதார  அபிவிருத்தியை அடைவதற்கான வழிமுறையாகும். அதன் முதல் கட்டமாக சுகாதார சேவைகள் மறுசீரமைப்பு ஒன்று தேவைப்படுகின்றது. பெருந்தோட்ட பிராந்தியங்களை மையப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள சுகாதார தேவைகள் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரல் அவசியம்.

2016 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் கொண்டுவரப்பட்ட சுகாதார தேவைகள் சட்டத்தை திருத்துதலும், அச்சட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட சுகாதார தேவைகள் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அவசியம். அதேபோல் சுகாதார அமைச்சினால் கொண்டு வரப்பட்ட தோட்ட சுகாதார கொள்கையை (2016) அவசியம் கருதியும் விரைவாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய சுகாதார நியமங்களை பின்பற்றி பெருந்தோட்ட சுகாதார சேவைகளை அரசுடைமையாக்குவதற்கான மூலோபாய கொள்கை வகுப்பு செய்வதும் தேசிய ரீதியான தரத்துக்கு ஒப்பாக பெருந்தோட்ட சுகாதார அடைவுகளை கொண்டு வருவதும் முக்கியமாகும்.

1980  ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மருத்துவ பதிவுச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தோட்ட வைத்திய உதவியாளர்கள் பயிற்சி தொடர்பான சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து பெருந்தோட்ட மக்கள் தகுதியுடைய மருத்துவ சேவையாளர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். எனவே இவற்றினூடாக 2016 – 2020 தேசிய சுகாதார மூலோபாய திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி தோட்ட சுகாதார பாதுகாப்பு தேசிய கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். இது பெருந்தோட்ட மக்களின் அடிப்படை மனிதவுரிமையாக அணுகி இவ்விடயம் நடைமுறைப்படுத்த வேண்டும். 

Share this post :

+ comments + 1 comments

Thanks anna

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates