உள்ளூராட்சி தேர்தல் காய்ச்சல் இன்று வேகமாகப்பரவி வருகிறது. மலையகத்தையும் ஆட்டிப்படைத்திருக்கும் இத் தேர்தல் காய்ச்சல் பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது. வாக்காளர் ஒரு புறமும் வேட்பாளர் மறுபுறமும் என்று தேர்தல் தொடர்பான மும்முரம் சூடுபிடித்துள்ளது.
மக்கள் சேவை செய்வதற்கு வரிசையில் நிற்கும் பேராளர்களைப் பற்றிய சமூகப்புரிதல் எவ்வாறிருக்கும் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியாதுள்ளது. காரணம் சிறந்த நிலை வேட்பாளர் தெரிவு என விளம்பரப்படுத்தப்பட்டாலும், வழமையான நடைமுறையை போல அரசியல் வட்டாரங்களில் செல்வாக்குள்ளோரையே இம்முறையும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்திருக்கின்றனர்.
சாதாரண பிரஜைகளும், இளைஞர், யுவதிகளும் பங்குபற்ற முடியாத அளவிற்கு நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுகின்றன. அரசியலில் உள்ளவர்கள் வெளியார் வருகையை திட்டமிட்டு மழுங்கடிக்கின்றனர்.
மலையக அரசியல் வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து தொழிற்சங்க பலம், சாதி, சமூக அந்தஸ்து போன்ற காரணிகள் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக எந்த ஒரு அரசியல் கட்சியோ? தொழிற்சங்கமோ? இக்காரணிகளை அடிப்படையாக வைத்தே சிந்தனை செலுத்துகின்றமையை இன்றுவரை காணலாம். காலங்காலமாக உயர்மட்ட சமூகத்திற்குள் காணப்படும் அரசியல் பிரதிநிதித்துவம்- ஏனையோரை வாக்காளர்களாகவே பார்க்கும் அவலம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
சாதாரண சமூகங்களைச் சேர்ந்த கற்றவர்கள் அரசியலில் பங்குபற்றுவது குறைவாகவே காணப்படுவதால் இந்தக்கூட்டத்தினரின் கூச்சல் ஊடகங்களை நிரப்பி வெற்றியடைகின்றனர். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஒற்றுமையின்மையும், பிற்போக்குச் சிந்தனைவாதமும் கணிசமான அளவுக்கு சமூகத்தைக் கூறுபோடும் முக்கிய கருத்தியல்களாகும். இன்றுவரை மீளமுடியாத ஒரு சமூகமாக நாம் அதே இடத்தில் இருப்பதற்குக் காரணமும் இவ்வாறான சமூக சமத்துவமின்மையும் சுயலாப அரசியலும்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
வாக்காளர் சமூகம் காலங்காலமாகவே தேர்தல் தினத்தில் மட்டும் அரசியல் பேசிவிட்டு அடுத்தநாள் தன் வேலையைப் பார்க்கப் போய்விடும். இதைத்தான் எதிர்பார்க்கின்றனர் அதிகாரத்திலுள்ளவர்களும். மக்கள் சேவையென்று அதிகாரத்தில் அமர்ந்தவுடன் சுயலாப ஆசையால் தன்னை சூழவுள்ளோரைப் பாதுகாத்து வளர்த்துவிடும் நடைமுறையையே பின்பற்றுகின்றனர்.
மறுபுறம் அடாவடி அரசியலும், பழிவாங்கும் படலமும் மலையகத்தில் அதிகரித்து வருவதும் கவனிக்கத்தக்கது. அரசியல் எனப்படுவது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு என தமக்குள்ளேயே வரையறை செய்துகொண்டு வெளியார் தாக்கத்தினை அதிகாரத்தாலும், அடக்குமுறையாலும் கட்டுப்படுத்தும் நிலையானது பாரதூரமானது. குறிப்பாக தமக்கு சார்பானவர்களை தம்முடன் வைத்துக்கொள்வதும் தம்மை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதும் இன்று மலையக அரசியலில் வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக படித்த இளைஞர்– யுவதிகள் தன்னிச்சையாக அரசியல் பேசுவதற்கும், அது சார்ந்து இயங்குவதற்கும் அச்சப்படு கின்றனர். இந்த உண்மை இம்முறை உள்ளூராட்சித் தேர்தலிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தோட்டப்புறங்களை மையப்படுத்தி தொழிற்சங்க கட்டமைப்பைக் கொண்டு நடத்துவதில் தோட்டத்தலைவர்களின் வகிபாகம் அளப்பரியது. மேல் மட்டத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தொழிற்சங்க கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதும் கட்சிகளுக்கு உறுப்பினர்களைக் கொள்வனவு செய்வதும் இவர்களின் முக்கிய கடமைகள். உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுபவர்கள் முதற்கட்டமாக இந்தத் தோட்டத்தலைவர்களின் ஆதரவைப்பெறவேண்டும். அடுத்ததாக அவர்களின் சிபாரிசும் பெறப்படவேண்டியது அவசியமாகும். பின்னர்தான் கட்சிகளுக்கு ஊடாக தேர்தலில் போட்டியிடலாம். இவையெல்லாவற்றுக்கும் மேலதிகமாக பொருளாதார ஸ்திரத்தன்மை காணப்பட வேண்டும். மத்திய வருமானம் அல்லது மாதாந்தச் சம்பளம் பெறும் நபர்களுக்கு இது ஏற்புடையதாகாது. காரணம் தமக்கு ஆதரவானவர்களைத் திரட்டுவதற்கு பெருமளவு பணத்தையும் செலவு செய்வதற்கான இயலுமை உடையோரையே கட்சித் தலைமைகள் அங்கீகரிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. வர்த்தகர்களும் கொந்தராத்துக்காரர்களும் இதற்குப் பொருத்தமானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தத்தமது கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் தமது கொந்தராத்துக்களைச் செய்து லாபமீட்டித் தந்தவர்களுக்கும் தமக்கு நிதியுதவி வழங்கிய வள்ளல்களுக்கும் தம் துதிபாடிய அரசஊழியர்களுக்கும் மற்றும் காலாவதியான ஆசிரியர், அதிபர்களுக்கும் குறிப்பாக ஏற்கனவே பிரதேச சபைகளை அலங்கரித்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
புதியவர்கள், கற்றவர்கள், சமூகநோக்கம் கொண்ட முற்போக்கானவர்கள் இம்முறையும் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுயேச்சையாகக் களமிறங்கி தேர்தலைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும் அதிகார பலத்தால் அரசியல்வாதிகள் அடக்குகின்றனர். மறுபுறம் சமூக மட்டத்தில் செல்வாக்குடையோரையும் பேரம்பேசி விலைக்கு வாங்கும் கைங்கரியத்தை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளன. எவ்வாறாயினும் வேட்பாளர் தெரிவுகள் கணிசமான அளவுக்கு நான்கு சுவருக்குள்ளேயே நடந்துமுடிந்திருக்கின்றன.
பாடசாலைகளில் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் தன்னிறைவான சேவையைச் செய்துமுடித்து ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்கள் அடுத்த கட்ட சமூக சேவைக்குத் தயாராகி விட்டனர். இவர்களும் ஏதாவதொரு அரசியல் கட்சியைப் பிடித்துக் கொண்டு வேட்பாளர் ஆவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் இன்னும் பல சுவாரசியங்களும் நிறைந்திருக்கின்றன. மக்கள் சார்ந்தும் தூரநோக்கோடும் இருக்கின்ற எந்த ஒரு நபருக்கும் வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு குறைவு. மாறாக அதிகாரத்தின் அடிவருடிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வேட்பாளர்கள் நாளை மக்கள் பிரதிநிதிகளாகி வேலையை ஆரம்பித்து விடுவர். இவ்வாறான வேட்பாளர் நெரிசலில் சராசரி மலையக இளைஞன் ஒதுங்கிநிற்கிறான்.
நன்றி - வீரகேசரி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...