Headlines News :
முகப்பு » » விரிசல்களால் பிரதிநிதித்துவம் பறிபோகும் - துரைசாமி நடராஜா

விரிசல்களால் பிரதிநிதித்துவம் பறிபோகும் - துரைசாமி நடராஜா




உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. மலையகக் கட்சிகள் அதிகமாக தேர்தல் குறித்த ஈடுபாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் இலங்கையில் இடம்பெறும் மிகவும் முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலாக உள்ளது. அத்தோடு பாரிய அளவிலான தேர்தலும் இதுவேயாகும் என்றும் அரசியல் அவதானிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

தேர்தல்கள் குறித்து நாம் பேசுகின்ற போது ஜனநாயகத்தை மறந்துவிட முடியாது. ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. மக்களுடைய மக்களுக்கான அரசாங்கமே ஜனநாயகம் என்கிறார் தோமஸ் கூப்பர். எனினும் இவ்வரைவிலக்கணத்தை உதவியாகக் கொண்டு ஒரு சர்வாதிகார அரசு தன்னை ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளக்கூடிய அபாயம் உள்ளதாக கருத்துகள் பலவும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் டேனியல் வெப்ஸ்ட்டர் ‘மக்களுக்காக ஆக்கப்பட்ட, மக்களினால் ஆக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய மக்கள் அரசே ஜனநாயகம்’ என்று ஜனநாயகத்தை வரைவிலக்கணப்படுத்தி இருந்தார். இதேவேளை மக்களால் மக்களுக்கான மக்களாட்சியே ஜனநாயகம் என்கிறார் ஆபிரகாம் லிங்கன். சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆட்சியே ஜனநாயகம் என்பது ரொபர்ட் என்பவரின் கருத்தாக உள்ளது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்று இரண்டு வகைப்படுகின்றது. கிரேக்க அரசுகளில் ஆரம்ப காலத்தில் நேரடி ஜனநாயக முறைமை காணப்பட்டது.

எனினும் மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க நேரடி ஜனநாயகம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாக விளங்கியது. எனவே உலக நாடுகளில் தற்போது பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையானது வழக்காக உள்ளது. மக்கள் தமது சார்பாக பிரதிநிதிகளை நியமித்து ஆட்சி அலுவல்களில் பங்குகொள்ளச் செய்கின்றனர். இந்நிலையில் தேர்தல்கள் என்பது மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாக விளங்குகின்றது. எனினும் தேர்தல்களின் ஊடாக மக்கள் சரியானவர்களை, தமது சமூகத்தின் எழுச்சிக்கு வித்திடக்கூடியவர்களை தெரிவு செய்கின்றார்களா? என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது. பல சந்தர்ப்பங்களில் வாக்காளர்கள் திசை திருப்பப்பட்டு வாக்குகளை கொள்ளை யிடுகின்ற வேட்பாளர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இத்தகையோர் வாக்குகளை கவர்ந்துகொண்டு அரசியலுக்குள் நுழைந் ததும் மக்களை மறந்து செயற்படுவதும் தெரிந்த விடயமாகும்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்

ஜனாதிபதி தேர்தல், மாகாணசபை தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்றெல்லாம் பல தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இவற்றுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது அதிகளவிலான வேட்பாளர்கள் பங்கேற்கும் முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலாக விளங்கப்படுகின்றது. உள்ளூ ராட்சி மன்றங்களின் முக்கியத்துவம் தொடர் பில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் சற்று ஆழமாகவே வலியுறுத்தி இருக்கின்றார். மக்கள் அதிகளவில் பங்குகொள்வது என் பது ஜனநாயகமாகும். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நிலைப்படுத்தவும் பாராளு மன்றம் மட்டும் போதுமாகாது. 225 பேர்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் உள்ளனர். இதேவேளை மாகாண சபைகளும் ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டுக்கு போதுமா னதல்ல. இந்நிலையில் ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு முக்கியமான நிலையில் உள்ளூராட்சி மன்றங்கள் இதற்கு தோள் கொடுப்பனவாக உள்ளன. இது வரவேற்கத்தக்கதாக உள்ளது. மக்கள் பங்கேற்புக்கு வழிகோலுவது உள்ளூராட்சி மன்றங்களாகும் இலங்கை எந்தளவிற்கு ஜனநாயகத்திற்கு இடமளிக்கின்றது என்பதனை சர்வதேசம் நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. எனவே இலங்கை உள்ளூராட்சி மன்றங்களை இயங்கச்செய்து ஜனநாயகத்திற்கு வலுசேர்க்க வேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு அருகில் இருக்கின்றன. மக்களின் அடிமட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் இயங்காதவிடத்து மக்களின் அடிமட்ட தேவைகளில் தடங்கல் நிலை ஏற்படும். மக்களின் அரசியல் கல்வியை புகட்டுவதாக உள்ளூராட்சி மன்றங்கள் விளங்குகின்றன. அரசியல் பயிற்சியை மக்களுக்காக பெற்றுக்கொடுக்கின்றன. கட்சி அரசியலின் வளர்ச்சிக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் வாய்ப்பளிக்கின்றன. ஜனநாயக அடிப்படையில் நோக்கும்போது பல கட்சி முறை சிறப்பிடம் பெறுகின்றது. பல சிந்தனைகள், பல கருத்துகள் என்பன ஒருநாட்டில் இருக்கத்தான் செய்யும். இதனை பிரதிபலிப்பதே பல கட்சி ஆட்சிமுறை. ஜனநாயகத்தில் குறைபாடு உள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும் மாற்றுவழி முறை என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. முன்னைய அரசர்கள் கிராமத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தி தமது ஆட்சி அலுவல்களை இலகுபடுத்திக் கொண்டனர். கம்சபா அமைப்புகள் இதில் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. இதன் ஒரு வளர்ச்சியாகவே உள்ளூராட்சி மன்றங்களை கொள்ளுதல் வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் உரிய சேவையினை வழங்குவதன் ஊடாக சமூக எழுச்சிக்கு வித்திடும் நிலைமை உருவாகும்.  

இழுபறியான நிலை

நாட்டில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை உடனடியாக நடத்தி மன்றங்களை இயங்கச் செய்ய வேண்டுமென்று அரசியல் கட்சிகளும் புத்திஜீவிகளும் தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தமையும் தெரிந்த விடயமாகும். சர்வதேசத்தின் பார்வையும் இது தொடர்பில் இருந்து வந்தது. அரசாங்கம் பல்வேறு விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. ஜனநாயகத்திற்கு முரணான செயலில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர். அரசாங்கம் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயங்குவதேன்? தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளதா? என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றமை குறித்தும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அமைச்சர் ஆங்கிலத்தில் முன்வைத்த திருத்தங்களுக்கும், சிங்கள மொழி மூலமான சட்ட மூலத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டமை தொடர்பிலும் எடுத்துக்கூறல்கள் இடம்பெற்றிருந்தன. .எல்லை நிர்ணய விடயங்களும் தேர்தல்களில் தாமத நிலையை ஏற்படுத்தி இருந்தது. நிலைமைகள் இப்போது மாற்றம் பெற்றுள்ளன.  

பெப்ரவரி 17 க்கு முன்னர் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முற்பட்ட ஒரு தினத்திலோ நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுயாதீன ஆணைக்குழுவின் (தேர்தல்கள்) தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார். 350 கோடி ரூபாய் தேர்தலுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 24 மாநகர சபைகள், 40 நகர சபைகள், 276 பிரதேச சபைகளின் நான்காயிரத்து 919 வட்டாரங்களில் ஐந்தாயிரத்து 92 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான தேர்தல் இடம்பெற இருக்கின்றது. இலங்கையில் நடைபெறும் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக இத்தேர்தல் காணப்படுகிறது. அத்தோடு பாரிய அளவிலான ஒரு தேர்தலாகவும் இத்தேர்தல் விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து இப்போது நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகின்றது. இத்தேர்தலில் வெற்றிபெறப் போவது எந்தக் கட்சி என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதற்கேற்ப நடவடிக்கைகளை அரசியற் கட்சிகள் முடுக்கிவிட்டிருக்கின்றன.

கலப்பு முறையில் தேர்தல்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் இம்முறை கலப்பு முறையில் இடம்பெற உள்ளன. விகிதாசார தேர்தல் முறை பல்வேறு விரிசல்களுக்கும் ஏற்கனவே வித்திட்டிருந்தது. மக்களுக்கு பிரதிநிதிகள் சிறந்த சேவையினை வழங்க முடியாத நிலை மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தொடர்பு குறைவடைந்து காணப்படுவதால் இடைவெளி அதிகரித்து செல்கின்றமை, வாக்கு கணிப்பீட்டு முறை சிக்கலானதாக இருக்கின்றமை, உட்கட்சி பூசல்களுக்கு வித்திடுதல், இடைத்தேர்தல்கள் இல்லாததால் அரசின் மீதான மக்களின் அபிப்பிராயத்தினை அறிந்துகொள்ள முடியாத நிலை, பிரதிநிதிகள் தமது தொகுதி பற்றியும் அங்கு வாழ்கின்ற மக்களைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்வது கடினமாக உள்ளமை என்று பல சிக்கல்களையும் விகிதாசார முறைமை தோற்றுவித்திருப்பதாக புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் விகிதாசார தேர்தல் முறையானது அதிகரித்த செலவுகளுக்கு வித்திடுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றுத் தேர்தல் முறைமை தொடர்பில் சிந்திக்கப்பட்டது. இதற்கான அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் இம்முறை கலப்பு தேர்தல் முறையில் இடம்பெற இருக்கின்றன. வட்டாரம் மற்றும் விகிதாசாரம் என்பவற்றின் கலவையாக தேர்தல் இடம்பெற உள்ளது. இந்நிலையில் வட்டார தேர்தல்முறை பல்வேறு சாதக விளைவுகளையும் ஏற்படுத் துவதாக அமையும் என்று தமிழ் முற்போ க்கு கூட்டணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார். இம்முறை யின் மூலம் மக்களுக்கு நேர்மையாக பொறுப்பு கூறவேண்டிய ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிறிய பகுதி மக்களை பிரதிநிதிகள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். விகிதாசார முறைமையின் கீழ் பரப்பெல்லை அதிகமாக இருந்தது. இது பல்வேறு சிக்கல்க ளையும் தோற்றுவித்திருந்தது. வட்டார முறையின் கீழ் இந்நிலை மாற்றமடைந்துள்ளது. முன்பெல்லாம் பெரிய பெரிய பணக்காரர் கள்தான் தேர்தலில் போட்டி போடலாம் என்று ஒரு நிலைமை காணப்பட்டது. இன்று அப்படி இல்லை. சாதாரண ஒரு குடிமகன் கூட தேர்தலில் வேட்பாளராக போட்டியி ட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக் கின்றது. இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. மலையக வட்டாரங்களில் மக்களின் தொகை அதிகமாக இருக்கின்றது. ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வட்டாரங்களில் குறைந்தளவிலான மக்கள் தொகையினரே காணப்படுவதனையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும். உட்கட்சிப் பூசல்கள், குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பவற்றுக்கு கலப்புத் தேர்தல் முறை முற்றுப்புள்ளியை வைத்திருக்கின்றது. இது ஒரு நல்ல விடயமாகவே தென்படுவதனையும் இங்கு கூறியாதல் வேண்டும் என்று லோறன்ஸ் கலப்பு முறை தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி இருக்கின்றார்.  

மலையகத்திற்கு கிடைத்த வெற்றி

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையானது மலையகத்திற்கு கிடைத்த ஒரு வரலாற்று வெற்றி என்பதனை எவராலும் மறுத்துவிட முடியாது. அரசியல், சமூக ரீதியாக இம்மக்களுக்கு இவ்வெற்றி கிடைத்திருப்பதனை பலரும் புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன பிரதேச சபைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தி வந்துள்ளன. இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பார்வை சற்று ஆழமாகவே விழுந்திருந்தது. கட்சிகளின் முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கின்றது. நுவரெலியா, அம்பகமுவ உள்ளூராட்சி சபைகள் ஆறு சபைகளாக அதிகரிப்பினை கொண்டிருக்கின்றன. இதற்கேற்ப அம்பகமுவ, மஸ்கெலியா, நோர்வூட், நுவரெலியா, அக்கரபத்தனை, கொட்டகலை என்று பிரதேச சபைகள் அமைய இருக்கின்றன. இதேவேளை ஹங்குரான்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளை தலா இரண்டாக அதிகரித்து ஆறு சபைகளாக உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை பிரித்து ஆறாக அதிகரிப்பதற்கே அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. பிரதேச சபைகளின் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தெலைநோக்கு தேசிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக இது அமைகின்றது என்று தெரிவித்திருந்தார். மத்திய மாகாண சபை அமைச்சர் மருதுபாண்டி ரமேஷ் மற்றும் இ.தொ.கா.வின் முக்கியஸ்தர்கள் போன்றோர் பிரதேச சபைகளின் அதிகரிப்பு இ.தொ.கா.வின் நீண்டநாள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று வரவேற்றுப் பேசி இருந்தனர். நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க வெற்றியேயாகும். மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் இத்தகைய நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசியல் கட்சிகள்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த முன்னெடுப்புகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் இப்போது முழு மூச்சுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. வேட்பாளர் தெரிவு பணிகளை பல கட்சிகள் நிறைவு செய்துள்ளன. இன்னும் சில கட்சிகள் இப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. மஹிந்தவையும் மைத்திரியையும் இணைத்து தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இது சாத்தியப்படாத ஒரு நிலையினையே அடைந்திருந்தமையும் தெரிந்த விடயமாகும். இதற்கிடையில் கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சி இன்னும் ஓயவில்லை. அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து பல்வேறு வழிகளில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. எந்த வகையிலாவது இரண்டு தரப்புகளும் இணைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு தரப்புகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமாக இருக்கும். தனித்துப் போட்டியிடுவதாவது நெருக்கடிகளையே கொண்டுவரும். எனவே இணைவதற்கான முயற்சிகளிலேயே தொடர்ந்தும் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் ஜோன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப க் ஷ எம்முடன் இணைய வேண்டுமே தவிர நாம் அவர்களுடன் கைகோர்க்க எந்தத் தேவையும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷ இல்லாமலும் தேர்தல்களை வெற்றிகொள்வோம். உள்ளூராட்சி சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட பல சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. மேலும் கட்சிகளை இணைத்துக்கொண்டு செயற்படவும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்போதும் உறுதியான கட்சியான மக்களின் கட்சியாக இருந்தே செயற்பட்டு வருகின்றது. வேறு யாரையும் நம்பியோ அல்லது இன்னொரு கட்சியின் தயவில் இருந்தோ எம்மை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைமை எமக்கு வரவில்லை என்று மஹிந்த சமரசிங்க சற்று காரசாரமாகவே தனது நிலைப்பாட்டினை முன்வைத்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது.

மஹிந்தவுடன் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து செயற்படுவதனை இவர் வன்மையாக கண்டித்திருக்கின்றார். கூட்டு எதிரணியுடன் ஜனாதிபதி ஒருபோதும் இணையப்போவதில்லை என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதியின் பலத்தை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றும் அசாத் சாலி கூறியிருக்கின்றார். இவரது கூற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுமானால் அதனால் ஐக்கிய தேசிய கட்சி பெரிதும் நன்மையடையும் என்று சிலர் கூறி வருகின்ற நிலையில் மைத்திரி– மஹிந்த ஒன்று சேராவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சில பின்னடைவுகளை எதிர் நோக்கவேண்டி வரலாம் என்றும் கருத்து கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின் றன. இந்த பின்னடைவு பல மட்டங்களி லும் எதிரொலிக்கும் நிலைமை காணப்படுவதா கவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.  

இதற்கிடையில் கூட்டு எதிரணியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் தேர்தலில் இணைந்து போட்டியிடுமிடத்து இந்நிலைமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு போடு போட்டிருக்கின்றார். இரண்டு கட்சிகளும் இணையும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாகவும் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்நிலையில் கூட்டு எதிரணிக்குள் இப்போது குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. கூட்டு இப்போது சிதைந்துபோகும் ஒரு அபாயமும் மேலோங்கி காணப்படுகின்றது. கூட்டு எதிரணியின் குழப்பத்திற்கு செல்வாக்கு செலுத்தும் பிரதான இரண்டு காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஆசனப்பகிர்வு தொடர்பில் பஷில் ராஜபக் ஷ தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்று பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தி இருக்கின்றன. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியினருடன் இணையாது தனித்து போட்டியிட வேண்டும் என்றும், கூட்டிணைந்து போட்டியிட்டு ஐ.தே.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று கருத்துக்கள் மேலோங்கியமையுமே குழப்பத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிரணியின் உட்பூசல்கள் எந்தளவிற்கு உள்ளூராட்சி தேர்தலில் தாக்க விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றன?

கூட்டு எதிரணி வலுவிழக்குமாறு தேர்தலில் வாக்குகள் பறிபோகுமா? உட்கட்சி பூசல்களால் உரிய பிரதிநிதித்துவத்தைக் கூட்டு எதிரணியால் பெற்றுக்கொள்ள முடியாமல் இக்கட்சி நிலைகுலையுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டி இருக்கின்றது.

மலையக கட்சிகள்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் போட்டியிட உள்ளதாக தெரியவருகின்றது. எனினும் இது குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என்றும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுகள் தெரியவரும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபையின் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோர் தெரிவித்தனர். இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சில இடங்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இன்னும் சில இடங்களில் இ.தொ.கா. தனித்து போட்டியிட உள்ளதாகவும் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இதனடிப்படையில் நுவரெலியா பிரதேச சபையின் மூன்று பிரிவுகளிலும், ஹட்டன், டிக்கோயா, தலவாக்கலை, லிந்துலை நகரசபை, மஸ்கெலியா, நோர்வூட் போன்ற இடங்களில் இ.தொ.கா. தனித்து கேட்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிய வருகின்றது. மேலும் கொத்மலை, ஹங்குரான்கெத்த, வலப்பனை போன்ற பல இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகின்றது. தனித்தும், இணைந்தும் போட்டியிடும் இ.தொ.கா. எத்தனை உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டி இருக்கிறது. இந்நிலையில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் எஸ். சதாசிவத்தினை பொதுச்செயலாளராகக் கொண்ட இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது. இப்போது ஐ.ம.சு.மு. வின் முக்கியஸ்தர்களுடன் முக்கிய சில சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் இறுதி முடிவு நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் சதாசிவம் தெரிவித்தார். நமது கோரி க்கைகளை ஏற்றுக்கொள்ளுமிடத்து ஐ.ம.சு.மு. வுடன் இணைந்து போட்டியிட நாம் தயாரா கவுள்ளதாகவும் இல்லையேல் தனித்து போட்டி யிடவுள்ளதாகவும் சதாசிவம் மேலும் தெரிவித் தார். எவ்வாறெனினும் தனித்து போட்டியி டுமிடத்து இளைஞர், யுவதிகளுக்கு கூடுத லான வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும்அவர் நம்பிக்கை தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. 

உரிமை மீறல் மனுத்தாக்கல்

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மற்றும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தெடார்பில் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் லிதானகமகே நந்தராஜா வினால் கடந்த திங்கட்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு தொடர்பிலான புதிய எல்லை நிர்ணயம் காரணமாக பொது மக்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தினை கோரி இருக்கிறார். எல்லை நிர்ணயமானது மத நல்லிணக்கத்துக்கு பாதகமாக உள்ளதாகவும் லிதானகமகே சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வகிபாகம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது மலையகத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. அத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும், மலையக மக்களுக்கும் மேலான வகிபாகம் காணப்படுகிறது. இவ்விரு சாராரும் பொறுப்புடன் நடந்து கொண்டு சமூக எழுச்சிக்கு வித்திடவேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றார்கள். இனவாதிகள் அரசியல் ரீதியாகவும் இன்னும் பல துறைகளிலும் மலையக மக்களை ஓரம்கட்டுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் மலையகக் கட்சிகளின் விரிசல்களை உணர்ந்துகொண்டு பிரிந்து நின்று செயற்படாமல் சமூக அபிவிருத்தி கருதி புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல் முக்கியமாகியுள்ள நிலையில் ஏனோ தானோ என்று மலையகக் கட்சிகள் இத்தேர்தலுக்கு முகம்கொடுக்கக்கூடாது. மலையகத்தின் சில கட்சிகள் குறுகிய சில நோக்கத்துடன் செயற்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இத்தகைய குறுகிய நோக்கமானது மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தினை இழக்கச்செய்யும். மேலும் சமூக எழுச்சிகளையும் கேள்விக்கு றியாக்கிவிடும். மலையக கட்சிகள் இதனை கருத்தில் கொண்டு செயற்படுதல் வேண்டும். 

இதேவேளை மலையக மக்களுக்கென்றும் ஒரு கடமை இருக்கின்றது. இவர்கள் சிறப்பாக சேவையாற்றக்கூடிய வேட்பாளர்களை இனம்கண்டு வாக்களிக்க வேண்டும். வெறுமனே நாற்காலிகளை சூடேற்றும் சுயநலவாதி பிரதிநிதித்துவர்களால் ஒருபோதும் நன்மை ஏற்பட மாட்டாது என்பதனை இவர்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். சேவைத்திறன்மிக்க வேட்பாளர்களின் வெற்றியானது சமூக எழுச்சிக்கு உந்து சக்தியாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை என்று புத்திஜீவிகள் ஆழமாகவே வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates