Headlines News :
முகப்பு » , , » மலையக அடையாளம்: தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி தனித்துக் காட்டுவதல்ல- மல்லியப்புசந்தி திலகர்

மலையக அடையாளம்: தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி தனித்துக் காட்டுவதல்ல- மல்லியப்புசந்தி திலகர்

மலையக ஆய்வரங்கம் - 12


மலையகம் என்ற இனத்துவ அடையாளம் மலையகத் தமிழரின் தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி அவர்களைத் தனித்துக் காட்டுவதல்ல என மலையகம் என்ற கருத்து நிலையின் முக்கியத்துவத்தை உணர்த்திய செல்லத்துரை சுதர்ஷனின் கட்டுரை மலையக இலக்கிய வரலாற்றாக்கம் சார் முயற்சிகளையும் முக்கியமாக பன்னிரண்டு பரிந்துரைகளையும் முன்வைத்தது.

இதுவரை நடைபெற்ற மலையக இலக்கிய வரலாற்றாக்கம்சார் முயற்சிகள் அனைத்தையும் பின்வரும் நான்கு பிரிவாகக் குறித்துக் கொள்ளலாம். 

01. மலையக இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதற்கான கோட்பாட்டு அடிப்படையை நல்கும் புலமைசார் எழுத்துக்கள்.
02. மலையக இலக்கியம் பற்றிச் சிறிய அளவில் இடம்பெற்றிருக்கும் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்த பொதுநிலைசார் வரலாற்று நூல்கள்.
03.சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் விழா மலர்களிலும் வெளியாகிய மலையக இலக்கியம் தொடர்பான வரலாறுசார் கட்டுரைகள்.
04. மலையக இலக்கிய வரலாற்றாக்க நூல்கள்
இவற்றுள் நான்காவது பிரிவான மலையக இலக்கிய வரலாற்றாக்கம்சார் நூல்கள் தொடர்பாகச் சற்று விரிவாக நோக்கலாம். இங்கு முன்னோடியான முக்கிய முயற்சிகள் மட்டுமே கவனத்திற் கொள்ளப் படுகின்றன. அந்த வகையில் க.அருணாசலம், தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், அந்தனி ஜீவா, மு.நித்தியானந்தன் ஆகியோரின் மலையக இலக்கிய வரலாற்றாக்க முயற்சிகளே நோக்கப்படுகின்றன. 

பிரயோக வரலாற்றாய்வு எழுத்துக்களும் பிரயோக விமர்சன எழுத்துக்களும்
மலையக இலக்கிய வரலாற்றாக்கம் பற்றிப்பேசும்போது மலையகம் பற்றிய பிரயோக வரலாற்றாய்வின் போதாமைகளும் பிரயோக விமர்சன எழுத்துக்களின் போதாமையும் அதிகமாகத் தெரிகின்றன. மனித நடத்தை பற்றிய பொதுவிதிகளைக் காணல், சகல துறைகளையும் உள்ளடக்கிய நோக்குநிலை கொள்ளல், எட்டும் தகவல்களைத் தற்காலச் சமூக அறிவியலின் துணைகொண்டு பரீட்சித்தல் என்பன பிரயோக வரலாற்றாய்வின் முக்கிய குணாம்சங்கள். 

மலையகத் தமிழரின் சமூக பண்பாட்டு வரலாறு உலகப் பரப்பில் சமூகவியல் மற்றும் மானிடவியல் மொழிந்த மனித இன வரலாற்று எழுது முறையில் எழுதப்படுவதும் முக்கியமானது. அவ்வாறு எழுதப்படும்போதுதான் வரலாற்றில் உள்முகமாகப் பின்னப்பட்ட வரலாறுகளைக் கண்டறிய முடியும். எழுதாதவற்றை அடையாளங் காண முடியும். பிற இனக்குழுக்களுடனான கொண்டும் கொடுத்தும் நிலைபெற்றதன் தொடுபுள்ளிகளைச் சுட்ட முடியும். இதனால் வரலாறு ஸ்திரத்தன்மை பெறும். இதன்மீது கட்டப்படும் இலக்கிய வரலாறு இனத்துவ அடையாளத்தின் வரலாறாக அமையும். வரலாற்றின் இயக்கவியல் ஒழுங்கில் மலையக இலக்கிய எழுத்துக்களை  வாசிக்கவும் உரையாடவும் முடியும். தனித்த ஒரு படைப்போ, ஒரு காலகட்டத்தின் படைப்போ இத்தகையதொரு பிரயோக விமர்சனத்தினால் துலக்கம்பெறும். 'நாம்', 'நம்முடையவை' என்ற அகச்சார்பு நிலைகளுக்கு அப்பாலான புற நிலைப்பாடுகொள்ளல் இதற்கு மிகவும் அடிப்படையானது. 

இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகப் பின்வரும் முயற்சிகளைப் பரிந்துரைகளாக முன்வைக்கலாம்.

*மலையகத் தமிழர் வரலாற்றைப் பல்துறைச்சங்கம ஆய்வொழுங்கில் எழுதுதல்.
*மலையகச் சாதிமுறைகள் பற்றியும் வர்க்க முறைகள் பற்றியதுமான புலமைமிகு வரலாற்றாய்வுகளை எழுதுதல்.
*மலையகத் தமிழரின் இனத்துவ அடையாள அரசியலையும் வரலாற்றையும் எழுதுதல்.
*மலையகச் சமூகம் பற்றியும் சமூக அசைவியக்கம் பற்றியுமான வரலாற்றை எழுதுதல்.
*மலையகச் சமயம் மற்றும் சடங்குகள், ஆற்றுகைக் கலைகள் முதலியன பண்பாட்டுடன் இணைவுற்ற தன்மையை வரலாறாக எழுதுதல்
*மலையகம் தொடர்பாக வெளிவந்த படைப்புக்களைக் கால அடிப்படையில் பெருந்தொகுதிகளாக வெளியிடல்.
*மலையகச் சிற்றிதழ்களை நூலாக்கம் பெறச்செய்தல்.
* மலையகம் தொடர்பான பழைய ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பித்தல்.
*மலையக ஆளுமையாளர் தொடர்பாகவும் அவர்களது பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தனித்தனியே எழுதித் தொகுத்தல்.
*மலையக நூல்கள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான வழிகாட்டி ஒன்றைத் துறைவாரியாகச் சுட்டியாகத் தொகுத்தல்.
*மலையகக் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், சிற்றிதழ் முதலிய பிரிவுகள் தொடர்பாகத் தனித்தனியே வரலாறு எழுதுதல்.
*மலையகம் பற்றிப் பிறமொழிகளில் வெளிவந்த படைப்புக்களை, ஆய்வுகளைத் தமிழுக்குக் கொண்டு வருதல்.
இவற்றை ஆய்வாளர் ஒருவர் பரிந்துரை செய்வதன் தேவை என்ன என்ற வினா எழலாம். முன்னர் குறிப்பிட்ட, மலையக இலக்கிய வரலாற்றாக்க முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் கொண்ட சிரமங்களும் மனக் கவலையுமே காரணங்களின்றி இதற்கு வேறு பதில் இல்லை. இலக்கிய வரலாற்றாக்க ஆய்வாளர்களாக அவர்கள் அடைந்த பெருந்துயரை, ஏக்கத்தை அவர்களின் துயரம் தோய்ந்த மொழியில் பதிவுசெய்து வைத்துள்ளார்கள். 

அவர்களின் அத்தகைய பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு மலையக இலக்கிய வரலாற்றாக்கத்திற்குத் தடையாக அமையும் காரணிகளை (1) மலையக இலக்கியங்கள் தொலைந்து போதல், (2) அவற்றை மீளப்பெற முடியாமை, (3) மக்களிடம் வரலாற்றுணர்வு இன்மை என மூன்றாகக் குறிக்க முடியும். இதற்கு உதாரணமாக மலையக ஆய்வாளர் சாரல் நாடன் தமது 'மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலிற்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதியைக் குறிப்பிடலாம். 

'இலங்கை மண்ணில் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தோட்டப்புற வாழ்க்கையும் அதற்கு முற்பட்ட கண்டி மன்னன் காலத்தினதும் கறுவாப்பட்டைக் காலத்தினதும் வாழ்க்கையில் எழுந்த இலக்கிய வடிவங்கள் காணக் கிடைக்கவில்லை. இந்த உண்மையால்தான் இன்று அவைகளைத் தேடிக்கொள்வதில் சிரமப்படுகிறோம். 
இலங்கையில் கடைசி மன்னனாகக் கொள்ளப்படும் முத்துச்சாமியைப் பற்றிய அக்கறையோ அவர்காலத்துக் காவியமாகிய சின்னமுத்து கதை குறித்த அக்கறையோ நமக்கு இல்லாததால் அந்தக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பறிகொடுத்துவிட்டோம். தனியார் நூலகங்களிலும் விகாரைகளிலும் திணைக்களத்திலும் தேடி அலைகிறோம்' (2000: முன்னுரை)

மலையக இலக்கியமும் வரலாற்றாக்கமும் எனும் பொதுநிலைப் பரப்பினுள் மலையக நவீன இலக்கிய வரலாற்றாக்க எழுத்துக்கள் மலையக இலக்கியத்தின் அனைத்துப் பரப்பினைத் தழுவியனவாக இருந்தமை முக்கியமான ஓர் அம்சமாகும். அதற்குத் தொடர்ச்சியான விவாதம் தேவை. வரலாற்றறிஞர் ஜான் எச். அர்னால்டுவின் பின்வரும் கூற்றுடன் இந்த உரையை நிறைவுசெய்வது பொருத்தமானது.

'வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம். வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான விவாதம். உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள விவாதம். விவாதங்கள் முக்கியமானவை. அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன.'(2005:19)

நன்றி சூரியகாந்தி 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates