Headlines News :
முகப்பு » » உள்ளூராட்சித் தேர்தலில் மலையகக் கட்சிகள் - பானா தங்கம்

உள்ளூராட்சித் தேர்தலில் மலையகக் கட்சிகள் - பானா தங்கம்


கடந்த இரண்டு வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையகக் கட்சிகள் தனித்தும் கூட்டுச் சேர்ந்தும் தமது வேட்பாளர்களை களம் இறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்து வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சனத் தொகைக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள 5 பிரதேச சபைகளை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று மலையக அமைப்புகள் விடுத்து வந்த கோரிக்கை ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டு நுவரெலியா  மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மாத்திரம் இரண்டாக இருந்த பிரதேச சபைகள் 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகள் 9 ஆக காணப்படுகின்றன. அவை நுவரெலியா, கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா பிரதேச சபைகள் ஆகும். இவற்றின் பதவிக் காலம் 2018.02.15 முதல் அமுலுக்கு வரவுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு:

நுவரெலியா – 3 பிரதேச சபைகள்

நுவரெலியா பிரதேச சபை உறுபினர்களின் எண்ணிக்கை 14 ஆகும். இவர்களில் 9 பேர் தேர்தல் ஊடாகவும், 5 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது கந்தப்பொல, பார்க், கல்பாலம, பீட்ரூ, சாந்திபுர, நானுஓயா, மாகொட, ருவன்எலிய, சீதாஎலிய, மீபிலிமான, பெரக்கும்பர, கிரிமெட்டிய, வோல்ட்ரீம், அம்பேவெல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளாடக்கியதாகும்.

கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை – 10 ஆகும். இவர்களில் 6 பேர் தேர்தல் ஊடாகவும், 4 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது கிரேட்வெஸ்டன், வட்டகொடை, ரத்னகிரிய, கூம்வூட், டெவன், திம்புள்ள, போகாவத்தை, கொட்டகலை, குடாஓயா, யுளிபீல்ட் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.

அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆகும். இவர்களில் 6 பேர் தேர்தல் மூலமாகவும் 3 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது ரஹன்வத்தை, நாகசேன, ஹோல்புரூக், ஹென்போல்ட், தங்ககெல, டயகம, வோர்லி, அக்கரபத்தனை, எல்பெத்த, ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.

அம்பகமுவ – 3 பிரதேச சபைகள்

அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இவர்களில் 8 பேர் தேர்தல் ஊடாகவும், 5 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யபடுவார்கள். இது செல்லிப்பிகம, ரம்பதெனிய, கலுகல, பொல்பிட்டிய, ஜம்புதென்ன, கெஹோல்வராவ, லக்ஸபான, விதுலிபுர, கினிகத்தேன, வட்டவளை, ரொசல்ல, செனன், ருவன்புர ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.

நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகும். இவர்களில் 8 பேர் தேர்தல் ஊடாகவும், 4 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது சமரவெளி, வனராஜா, சலங்கந்தை, நவவெலிகம, நோர்வூட், தென்மதுரை, லெட்சுமி கீழ்ப்பிரிவு, புளியாவத்தை, லெட்சுமி மேற்பிரிவு, பொகவான, லொயினோன், பொகவந்தலாவ ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.

மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆகும். இவர்களில் 6 பேர் தேர்தல் ஊடாகவும், 4 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது மவுசாகலை, பிரவுன்லோ, சீத்தகங்குல, மறே, பிரன்ஸ்விக், மஸ்கெலியா, மஹாநெலு, அப்கொட், தெய்வகந்த, தம்பேதென்ன ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.

போட்டியிடும் கட்சிகள் –

தமிழ் முற்போக்கு கூட்டணி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய “தமிழ் முற்போக்கு கூட்டணி” ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கொடுத்து வந்த ஆதரவைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கிடையில் வட்டாரப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தந்த அமைப்புகளுக்கு இருக்கும் செல்வாக்கு, அங்கத்தவர்கள் தொகைக்கு ஏற்ப தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடுகள் இடம்பெறவுள்ளன. போட்டியிடும் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று சபைகளைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்போடு சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் பேரப் பேச்சுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா, கண்டி, மாத்தளை, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பிரதேச சபைகள், நகர சபை, மாநகர சபைத் தேர்தல்களிலும் ஐ.தே.க. வுடன் இணைந்தே போட்டியிடவுள்ளன.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து போட்டியிட்டது . எனினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நுவரெலியா, அம்பகமுவ, வலப்பன, பிரதேச சபைகளில் அதன் “சேவல்” சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இ.தொ.கா. வுடன் இணைந்து அதன் சேவல் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல், நுவரெலியா மாநகர சபை மற்றும் கொத்மலை பிரதேச சபைகளில் இ.தொ.கா. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதற்கேற்ப தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளார்கள்.

இவைதவிர, கண்டி, பதுளை, மாத்தளை, கொழும்பு, வன்னி முதலான மாவட்டங்களிலும் இ.தொ.கா. போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி

கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் எஸ். சதாசிவம் வெற்றி பெற்று உறுப்பினராகத் தெரிவானார். எனினும், அதன் பிறகு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அந்த அமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என்று ஆராய்ந்து வருகின்றது. தனித்துப் போட்டியிடலாம் என்று அதன் உறுப்பினர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ள நேரத்தில், மலையகத்தில் பலம் பொருந்திய இரண்டு அமைப்புகள் மோதிக் கொள்ளும் போது, யாருடன் இணைந்து போட்டியிட்டால் தமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை பேரம் பேசி தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, ஜே.வி.பி. தனித்துப் போட்டியிடவுள்ளதோடு, சில சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றதாக அறிய முடிகின்றது.

மலையகத் தேர்தல் களம் விரைவில் சூடு பிடிக்க உள்ளது. அதற்கிடையில் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்க கட்சிகள் மந்திராலோசனை நடத்தி வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. புதிய முறையில் நடைபெறப் போகும் முதலாவது தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் குழப்பமும் நிலவி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தல் நடைபெற்றாலும், ஒத்தி வைக்கப்பட்டாலும் எதற்கும் முகங் கொடுக்கும் வகையில் கட்சிகள் தயாராகவே உள்ளன.  

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates