இன்று நாட்டில் வாழும் மலையகப் பெண்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் என்பது தீராத ஒரு தாகமாய் இருக்கின்றது. மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப் பெண்களாக செல்வோரின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பாதகமான விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன என்பது உண்மை!
நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள் மலையகத்தவர்கள். இதில் மலையகப் பெண்கள் முக்கிய பங்குதாரர்களாக இருக்கின்றார்கள். மலையகப் பெண்கள் பெரும்பாலும் தேயிலைத் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, மட்டுமின்றி, ஏனைய தொழில்துறைகளிலும் பங்கேற்று நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தன்னை உருக்கிக்கொண்டு நாட்டின் உயர்வுக்காக பாடுபடும் இவர்கள் கூடியநேரம் வேலைசெய்து மிகவும் குறைந்தளவிலான ஊதியத்தை பெறுவோர் என்பதே நிதர்சனம்.
அதிலும், குறிப்பாக மலையகப் பெண்களில் பலரும் ஆடைத் தொழிற்துறையில் தங்களை இணைத்துக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன்னுடைய குடும்பக் கஷ்டத்தின் காரணமாக நகர்புறங்களுக்கு வரும் இவர்கள் தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். வேலை நேர அதிகரிப்பு மற்றும் மேலதிகாரிகளால் ஏற்படும் தொல்லைகள் உட்பட சொல்லொணா துயரங்களுக்கும் பலவிதமான நோய் நொடிகளுக்கும் ஆளாகிறார்கள். அதிலும், குறிப்பாக ஊதிய ரீதியிலும் திருப்தி கொள்ள முடியாத ஒரு நிலைமையே வெளிப்படுகின்றது. பெண்கள் சராசரியாக 9முதல்10மணி நேர வேலை செய்வதானது, அவர்களுக்கு போதுமான அளவு ஓய்வின்மையும் போஷாக் கின்மையும் ஏற்படுத்துகின்றது.
வெளிநாட்டு வேலை மீது மோகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை என்பது இன்று எமது நாட்டிற்கு கூடுதலான வருமானத்தை ஈட்டித் தருகின்ற ஒரு துறையாக மாற்றமடைந்திருக்கின்றது. கூடுதலான நபர்கள் வெளிநாட்டு தொழிலில் மோகம் கொண்டு பலவித தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வருடா வருடம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் தொகை அதிகரித்த நிலைமையையே காண முடிகின்றது.
அந்த வகையில் நோக்கும் போது 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும் கணிச மான எண்ணிக்கையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கென்று எமது நாட்டில் இருந்தும் வெளியேறியுள்ளனர். உள்ளூரில் வருமானம் பற்றாக்குறையை காரணம் காட்டி பல பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வெளிநாட்டுப் பணிகளுக்காக நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் சென்றிருந்தனர்.
இவர்களில் இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார்களும் அடங்குவர். 2008ஆம் ஆண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486 பேர் சென்றிருந்தனர். இவர்களில் 40 ஆயிரத்து 665 பேர் தாய்மார்கள். 2009 இல் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றிருந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 508 பேரில் 60 ஆயிரத்து 448 பேர் தாய்மார்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாறான பயணங்களால் பல பாதகமான விடயங்களை எதிர்கொள்கின்றனர். இதில் மலையகப் பெண்களும் அடங்குகின்றனர்.
பாதக விளைவுகள்
தனது வாழ்வாதாரத்தை சிறிதளவாவது உயர்த்தும் நோக்கில் தன் குடும்பத்தை விட்டுவிட்டு, படிப்பையும் பாதியில் நிறுத்தி தனது தாய் தந்தையின் சுமையைக் குறைப்பதற்கு வெளிநாட்டை நோக்கி பணிப்பெண்ணாக விரைகின்றார்கள். வெளிநாடு என்பதில் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்லும் சிலரின் வாழ்க்கை திசைமாறிப்போய் இருக்கின்றது. உழைப்பின் மூலமாக பெரும் பணத்தை திரட்ட வேண்டும், குடும்பத்தின் வறுமையை சீர்செய்ய வேண்டும் என்று கனவு கண்ட சில பெண்களின் வாழ்க்கை கல்லறையில் முடிந்திருக்கின்றது. சூடு வைத்தல், கை, கால், உடம்புகளில் ஆணி அறைதல், சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்துதல், அடி, உதை மற்றும் பாலியல் ரீதியிலான பல்வேறான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகின்றார்கள். இப்பெண்களில் சிலர் எஜமான்களையோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையோ எதிர்த்துப் பேசினால் அவ்வளவு தான். அவர்களை கொன்று, வீட்டாருக்கு தெரியாமலேயே புதைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் கொடுமைப்படுத்துபவர்களின் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் ஆயுள் கைதிகளாய் இருக்கிறார்கள்.
இவ்வாறாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக் கருதி சென்ற சில பெண்கள் தொடர்பான தகவல்கள் இன்றி உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைத் தேடிச் சென்று முறைப்பாடுகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் தமது உறவுகளின் இறப்புகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் வெளிநாடு சென்ற தம்முடைய பெண் அல்லது மனைவியின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத பல குடும்பங்கள் கண்ணீரில் மிதப்பதை காணக் கூடியதாக உள்ளது. அவர்களுடைய பிள்ளைகளின் கல்விநிலை பாதிப்பு சுகாதார பாதிப்பு, போஷாக்கு பாதிப்பு, சமூக வாழ்க்கை நிலை என அவர்களின் துயரங்கள் சொல்லில் அடங்காதவை.
இதில் குறிப்பாக சில பெண்களுடைய கணவன்மார், பிள்ளைகளுக்குரிய பாதுகாப்பையும் அன்பையும் வழங்காது நெறிதவறி போன சம்பவங்களும் அநேகமாக பதிவாகிய வண்ணமே இருக்கின்றன. இதனால் பிள்ளைகளின் நிலைமை மென்மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. வெளிநாடு செல்லும் பெண்களுடைய குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் பலர் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருகின்றமையையும் காணலாம். தந்தையால், சகோதரனால், உறவினர்களால், நண்பர்களால், அயலவரால் என்று பல நிலைகளிலும் பிள்ளைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றமையும், வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணம் அப்பிள்ளைகளின் தாய் வெளிநாடு சென்றுள்ளமையை காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். சில நேரங்களில் தந்தையே அதற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றார் என்கிறது ஆய்வு. எனவே, மலையகப்பெண்கள் அது விடயத்தில் கவனம் கொண்டு செயல்பட வேண்டியது அவசியமானது ஆகும். இது குறித்து பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. சோபனாதேவி இராஜேந்திரன் குறிப்பிடும்போது, மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதன் காரணமாக நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுகின்றது. எனினும் அவர்களது குடும்ப நிலைமையை பொறுத்தவரையில் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பல குடும்பங்களில் இடம்பெறவில்லை. குறுகிய கால சுகபோகங்களை சில குடும்பங்கள் அனுபவிக்கின்றன. காலப்போக்கில் இத்தகைய குடும்பங்களும் வறுமையில் சிக்கி அல்லல்படுகின்றன.
வெளிநாடு செல்லும் பெண்கள் உள்நாட்டு உழைப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தோட்டப்பகுதிகளில் வளங்கள் பல அதிகமாக காணப்படுகின்றன. இவ்வளங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலமாக உள்நாட்டில் உற்பத்தி மற்றும் வருமானத்துக்கான ஒரு களத்தை பெண்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். கோழி வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். இன்று கிராமத்துப் பெண்களை எடுத்துக் கொண்டால் அப்பெண்கள் வருமானத்தை நோக்காகக் கொண்டு பல விதமான தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மலையகப் பெண்கள் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளல் வேண்டும்.
அரசு இன்று பல்வேறு தொழில் முயற்சிகளை மேற்கொள்ள பயிற்சிகளையும் ஏனைய உதவிகளையும் வழங்கி வருகின்றது. மலையகப் பெண்களில் சிலர் இத்தகைய பயிற்சி நெறிகளில் பங்குக் கொண்டு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்கின்ற போதும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டியே வருகின்றனர். முழுமையான பயிற்சி நெறியில் ஈடுபடாது இடைநடுவில் பெண்கள் திரும்பி வருவதும் உண்டு. உடனடி வருமானத்தை எதிர்பார்க்கின்ற இப்பெண்கள் ஆலோசித்து நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
வெளிநாடு என்ற மாயையில் இருந்தும் பெண்கள் விடுபட வேண்டும். இப்பெண்களை சரியாக வழிநடத்த வேண்டும். மலையக அறிவியல் மற்றும் தொழிற் சங்கவாதிகள், தொழில் ரீதியான ஆலோசனையையும் வழிகாட்டல்களையும் உரியவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று தொழிலாளர்களுக்கு வழங்குதல் வேண்டும். இதிலிருந்தும் அவர்கள் பின்வாங்கி விடக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல்கள் இருக்ளகின்றன. இத்தகைய ஆற்றல்களை ஒவ்வொரு பெண்ணும் சரியாக இனங்கண்டு செயற் பட்டால் வாழ்க்கையை சிறப்புடன் அமைத்துக் கொள்ள முடியும். இதனை விடுத்து, வெளிநாட்டு மோகத்தில் அலைந்து திரிவதால் எவ்விதமான சாதகமான விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்பதை விளங்கிச் செயற்படுதல் வேண்டும். இக்கரையில் இருந்து பார்க்கும்போது அக்கரை பச்சையாகத் தான் தெரியும். அதை நம்பி எதிலும் விளைவுகளை அறியாமல் கால் வைத்துவிடக்கூடாது அவதானமாக இருக்கவேண்டும் என்கிறார்.
நன்றி - சுடரொளி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...