Headlines News :
முகப்பு » , , » நாங்கள் மலைகளை நேசிக்கின்றோம் அவர்கள் அதிகாரத்தை நேசிக்கிறார்கள் - மல்லியப்புசந்தி திலகர்

நாங்கள் மலைகளை நேசிக்கின்றோம் அவர்கள் அதிகாரத்தை நேசிக்கிறார்கள் - மல்லியப்புசந்தி திலகர்

மலையக ஆய்வரங்கம் - 11


மலையக இலக்கியம் எனும் அமர்வு இலங்கை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகரின் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் மலையக இலக்கியமும் வரலாறு எழுதியலும்: மலையக நவீன இலக்கிய வரலாற்றாக்க எழுத்துக்கள் எனும் தலைப்பில்  பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் செல்லத்துரை சுதர்சன்; ஆற்றியிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான இவர் பேராதனைப்பல்கைலக் கழகத்தில் கற்றதனாலும் பணிபுரிவதனாலும் இலங்கை மலையக இலக்கியத்தோடு நெருங்கிய உறவைக் கொண்டிருப்பவர். 

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கலகத்தில் ஆய்வு மாணவராக கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவர் தமிழ்நாடு, திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 08.09.2017 அன்று நடைபெற்ற 'இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம்' எனும் சர்வதேச மாநாட்டில் இணைந்துகொண்டார். இவரது உரை மலையக நவீன இலக்கிய வரலாற்று எழுத்துக்களை குறுக்கு விசாரணை செய்வதாக நேர்த்தியாக அமைந்திருந்தது. 

1948இல் இலங்கை அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மலையகத் தமிழருக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்தினால் குடியுரிமையும் பதவியும் ஒருங்கே இழந்த, மலையக இலக்கியத்தின் அடிப்படை அடையாளமான சி.வி.வேலுப்பிள்ளை, பாராளுமன்றத்தில் கூறிய கூற்றொன்றை, அறிஞர் எம்.ஏ.நுஃமான் மலையக இலக்கியம் பற்றிய தனது ஆய்வொன்றில் அண்மையில் வெளியிட்டார். சி.வி.வேலுப்பிள்ளையின், வராலாற்று முதன்மைமிக்க அக்கூற்றினை மீளவும் இங்கே கூறி எனது உரையை ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகிறேன் என ஓர் அரசியல் சார்ந்த பின்புலத்துடனேயே தனது கட்டுரையை வழங்கியிருந்தார் சுதர்ஷன்.

'சபாநாயகர் அவர்களே எனது மூதாதையர் 85 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டுக்கு வந்தார்கள். நான் இந்தியாவுக்குப் போனதே இல்லை. நான் பாக்கு நீரிணையைக் கடந்ததே இல்லை. இந்த நாட்டின்மீது எனக்குள்ள பற்று பிரதம மந்திரியின் பற்றைவிடக் குறைந்ததல்ல. ஆனால், இங்கு ஒரு வேறுபாடு உண்டு. நான் இந்த நாட்டின் அருவிகளை, மலைகளை, மரங்களை, புற்களை நேசிக்கிறேன். ஆனால்,  பிரதமர்  இந்த நாட்டின் வளங்களை, அதிகாரத்தை நேசிக்கிறார். அதுதான் வேறுபாடு.'

இலங்கை நாட்டின் அருவிகளை, மலைகளை, மரங்களைப், புற்களை நேசித்த, 'இங்கெவர் வாழவோ தன்னுயிர் நீந்த' மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாழ்வுதான் மலையக இலக்கியம். துயரம் தோய்ந்த அந்த மக்களது இலக்கியங்களின் வரலாறுதான் மலையக இலக்கிய வரலாறு. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற பெருநதியின் கிளைநதியாக விளங்குவது மலையக இலக்கிய வரலாறு. மலையகம் என்ற அடையாளத்தை இலங்கையின் ஏனைய சமூகத்தினருக்கும் இலங்கைக்கு அப்பால் பிறநாட்டவருக்கும் தெரிவிப்பதிலும் பிரதிநிதித்துவம் செய்வதிலும் மலையக இலக்கியமே பெரும்பங்கு வகிக்கிறது. இத்தன்மை வாய்ந்த மலையக இலக்கியங்களின் வரலாற்றாக்க எழுத்துக்கள் அமைகிறது. 

மலையகம் என்ற இனத்துவ அடையாளம் மலையகத் தமிழரின் தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி அவர்களைத் தனித்துக் காட்டுவதல்ல. அது பன்மைத்துவம் மிக்க இனத்துவ சமூக அரசியல் சூழலையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவநிலை என்பதை மறந்துவிடக் கூடாது. எம்.ஏ.நுஃமான்  பின்வரும் கூற்று இங்குநோக்கத்தக்கது.

'இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் தமிழர் எனும் தனித்துவமான மூன்று இனக்குழுமத்தினாலும் இலங்கையில் தமிழ்மொழி தாய்மொழியாகப் பேசப்படுகிறது. அவர்களுக்கேயுரிய சில கிளைமொழி வேறுபாடுகளையும் நாம் அவதானிக்கலாம். இந்த மொழி வேறுபாடுகளும் இனத்துவத் தனிப் பண்புகளும் வேறுபட்ட பண்பாட்டு அரசியற் கூறுகளும் இவர்களின் இலக்கியப் படைப்புக்களிலும் வெளிப்படக் காணலாம். அவ்வகையில் இனத்துவ அடிப்படையில் பிளவுபட்ட சமகால இலங்கையில் தமிழ் இலக்கியம் என்று பேசும்போது இச் சொல் ஒரு பல் - இனத்துவ சமூக அரசியற் சூழலையும் உள்ளடக்குவதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.' (2012:74)

எனவே மலையகத் தமிழ் இலக்கியம் என்பது கருத்துநிலை அடிப்படையில் இனத்துவ அடையாளத்தின் வெளிப்பாடே. மலையக அரசியல் மற்றும் பண்பாட்டைத் தமது இனத்துவ அடையாளமாகக் கொண்டு தமது இருப்பியல் பேசும் மலையகத் தமிழரின் மொழிவழி வெளிப்பாடுகளாக மலையகத் தமிழ் இலக்கியங்கள் அமைந்தன.

பல்லின பண்பாட்டைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு  அவர்களது இலக்கியம் பற்றிய வரலாறு ஏன் அவசியமானது என்ற வினா இங்கு முக்கியமானது. அந்த வகையில் மலையக இலக்கிய வரலாறு மலையகத் தமிழரது வரலாற்றில் பெறும் முக்கியத்துவத்தைப் பின்வரும் மூன்று அம்சங்களாகக் குறித்துக் கொள்ளலாம்.

முதலாவது, மலையக இலக்கிய வரலாற்றால் கிடைக்கும் மகிழ்வூட்டல் ஆகும். மலையகத் தமிழ் இனத்தின் கடந்த காலத்தை அவ் இனத்தின் நிகழ்காலத்திலிருந்து கற்பதிலும் கடந்தகால வரலாற்றின் குறிப்பிட்ட கூறுகளை இலக்கியத்திலே வரலாற்றொழுங்கில் காண்பதிலும் உருவாகும் மகிழ்ச்சி சார்ந்ததாக இது அமையும். 

இரண்டாவது, மலையக இலக்கிய வரலாற்றை, மலையகத் தமிழர் எனும் இன வரலாற்றைப் பற்றிச் சிந்திப்பதற்குரிய ஒன்றாகப் பார்ப்பதும் பயன்படுத்துவதுமாகும். மலையகத் தமிழரின் இனத்துவ அடையாளத்தையும் அதன் இயங்கு நிலையையும் அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் விலக்குகளையும்  பற்றி ஆய்வறிவு ரீதியாகச் சிந்தித்தலாக இது அமையும்.
மூன்றாவது, மலையக இலக்கிய வரலாற்றை வேறுவிதமாகச் சிந்திப்பது தொடர்பானதாகும். 

இனத்துவ அடையாளம் கொண்ட மனிதர்களாகவும் அந்த மனிதர்களின் வரலாறாகவும் ஒருமைத் தன்மையில், தூய்மை நிலையில் நோக்காது அடையாளம் என்பதிலிருந்து அடையாளங்களுக்கும் கருத்தியல் என்பதிலிருந்து கருத்தியல்களுக்கும் வரலாறு என்பதில் இருந்து வரலாறுகளுக்கும் செல்லும் மாற்றுச் சிந்தனை பற்றியதாகும்.

வரலாறு அடையாளத்தைத் தருகிறது என்பது வரலாற்றறிஞர் கண்ட முடிவாகும். 'நினைவு என்பது ஒரு மனிதனுக்கு அடையாளம் ஒன்றை அளிப்பது போல வரலாறு நமக்கு அடையாளத்தை அளிக்கிறது' (2005:174) என்றார், ஜான்.எச்.அர்னால்டு. எனவே மலையக இலக்கிய வரலாறு 'மலையகம்' என்ற இனத்துவ அடையாளத்தை அளிக்கிறது, வலுவாக்குகிறது, இனிவரும் வரலாற்றிலும் எடுத்துச் செல்கிறது.  

நன்றி சூரியகாந்தி 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates