பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தல்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். மலையகத்திலும் குறிப்பாக நுவரேலியா மாவட்டத்தில் மிகுந்த பரபரப்புக்குள்ளாகி வருகிறது. ஏற்கனவே பிரதேச சபைகளின் உறுப்பினர்களாக இருந்த சிலரது திடீர் செல்வச்செழிப்புக்களைப் பார்த்து பலருக்கும் ஆசை வந்து விட்டது.
பெருந்தோட்டங்களில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களின் தலைமைகளே தொழிற்சங்கங்களின் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். கட்சிகளிடம் டீல் செய்து கொண்டு பெறவேண்டியதை பெற்றுக் கொண்டு தலைவர்களாகி விடுகிறார்கள். உறவினர்களும் வேறு வழியின்றி சந்தா பத்திரத்தில் ஒப்பமிட்டு ஆதரவு தெரிவித்து விடுகிறார்கள். தலைவர்களானதும் உறவினர்கள், நண்பர்களை நினைத்தும் பார்க்க மாட்டார்கள் “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே….” என்றவாறு அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு தாங்களே பெரிய ஆளாக மாறி விடுவார்கள்.
தோட்ட நிர்வாகம் இவர்களை வளைத்துப் போட்டுக் கொள்ளும்வகையில் பல்வேறு சலுகைகளையும் வழங்கும். தொழிலுக்குப் போகாமலேயே சம்பளம் வாங்கும் கலையை இவர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தொழிற்சங்கங்களும் இப்படிப்பட்டவர்களைத் தேடியே தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்வார்கள்.
இத்தகைய உள்ளூர்த் தலைவர்கள் சிலருக்கு நேரடியாகவே தேர்தலில் களம் இறங்கும் ஆசை வந்து விட்டது. அரசியல் வாதிகளின் அடியாட்களாக இருந்து தேர்தல் நுணுக்கங்களை இவர்களில் சிலர் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பக் காலங்களில் மாகாண சபைகளிலும் கூட தொழிற்சங்கத் தலைவர்களே உறுப்பினர்களாக இருந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
நுவரேலியா மாவட்டத்தில் புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருப்பதால் தோட்டத் தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் புதிய விதிமுறைகளில் தேர்தல் நடைபெறுவதால் உள்ளூர்த் தலைவர்களின் தேவை தொழிற்சங்க அரசியல் வாதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை பிரதேச சபைகளின் மூலமாக தோட்டப் பகுதிகளுக்கு ஒன்றுமே செய்ய முடியாது! என குறை கூறப்பட்டு வந்தது. இப்போது தோட்டப்பகுதிகளுக்கே பிரதேச சபைகள் வந்து விட்டதால் எதையாவது செய்தே ஆகவேண்டிய நிலை உருவாகி விட்டது. வேட்பாளர்கள் எவ்விதமான வாக்குறுதிகளை வழங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஒரு சில கட்சிகளுக்கு அமைச்சின் மூலமாக நிதியுதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. அவற்றைக்கொண்டு என்னவிதமான அபிவிருத்திகளை தோட்டப்பகுதிகளுக்கு செய்ய முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். தகரங்களையும், கதிரைகளையும், சிலைகளையும், சிமெந்து மூடைகளையும் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்.?
பாதை போடுவது, வீடு கட்டுவது போன்றவற்றை அமைச்சுகள் செய்கின்றன. தண்ணீர் வசதி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களின் தேவைகளை அரச சார்பற்ற சில நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன. வேலைவாய்ப்பு, சுகாதாரம், தோட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டியவை.
எனவே வேட்பாளர்களை அச்சுறுத்தும் கோரிக்கையாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வே இருக்கப்போகிறது. இப்போதே அதற்கான முன்னெடுப்புகளைக் காண முடிகிறது. ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. அதற்குள் விலைவாசிகள் வானை முட்டும் அளவு உயர்ந்து நிற்கின்றன. எதை எடுத்தாலும் நூறு ரூபா என்ற அளவில் பொருட்களின் விலைகள் உள்ளன. எந்தவிதமான உணவுப் பொருட்களும் தோட்டப்பகுதிகளில் கிடைக்காத நிலையில் சம்பளத்தை மட்டுமே நம்பி உயிர்வாழும் சூழலே நிலவுகின்றன.
இன்னமும் ஆயிரம் ரூபா கோரிக்கையை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தனியார் துறையில் தொழிலுக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் உணவு மற்றும் தேநீர் போன்றவற்றுடன் ஆயிரம் ரூபாவை சர்வ சாதாரணமாகப் பெறுகிறார்கள். இதன் காரணமாகவே தொழிலாளர்கள் பலர் நகரங்களை நோக்கி தொழிலுக்குச் செல்கிறார்கள். நிரந்தரமான தொழிலாக இல்லாவிடினும் தற்காலிகமாக வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.
எனவே தொழிலாளர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது சம்பள உயர்வே! வாக்குக் கேட்க வரும் வேட்பாளர்களிடம் சம்பள உயர்வு கோரிக்கையை முன்னெடுக்கத் தயாராகி வருகிறார்கள். பொய் வாக்குறுதிகளைக் கேட்டுக்கேட்டு அவர்களும் சலிப்படைந்து விட்டார்கள்.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது முற்பணம் கேட்டு போராடியதை இன்னமும் அவர்கள் மறந்து விடவில்லை. பண்டிகைக்கு முதல் நாள்தான் பல இடங்களில் முற்பணம் கிடைத்தது. மூவாயிரம், ஐயாயிரம்,பத்தாயிரம் என பல்வேறு தொகைகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் அது கூட கிடைக்கவில்லை. அரச சேவையாளர்களுக்கு முன் கூட்டியே சம்பளம் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையால் அவர்களும் சோகத்தில் ஆழ்ந்தார்கள். இதைக்கூட பெற்றுத்தர முடியாதவர்களுக்கு வாக்களிப்பதில் என்ன பிரயோசனம் என நினைக்கிறார்கள்.
குறிப்பிட்ட ஒரு தோட்ட நிர்வாகம் இருபதாயிரம் ரூபாவை முற்பணமாக வழங்கியிருந்தது. ஓய்வு பெற்றவர்கள் வேட்டி,சேலை ரூபா ௭௦௦௦/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் பெற்றனர். மேலும் இலவசமாக கதிரைகள் , மரணத்திற்கு பத்தாயிரம் ரூபா என கேட்காமலே வழங்கப்பட்டன. மேலும் ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நாங்கள் தருகிறோம். தொழிற்சங்க அரசியல் வாதிகளுக்குப் பின்னே அலையாதீர்கள் என நிர்வாகம் கூறியதாம்.
இது ஒரு அபாய அறிவிப்பாகும். அடுத்ததாக தொழிற்சங்கங்கள் முடக்கப்படலாம். சந்தா நிறுத்தப்படலாம். அரசியல் வாதிகளும் தொழிற்சங்க வாதிகளும் தங்களுக்கு விடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...