Headlines News :
முகப்பு » , , , » அறியாதவற்றை அறியத் தந்த என்.சரவணனின் இரு நூல்கள் - லண்டனில் நிகழ்ந்த விமர்சனக் கூட்ட நிகழ்வு

அறியாதவற்றை அறியத் தந்த என்.சரவணனின் இரு நூல்கள் - லண்டனில் நிகழ்ந்த விமர்சனக் கூட்ட நிகழ்வு


லண்டன் ஈஸ்ட்காம் நகரில் கடந்த நவம்பர் 18 அன்று நடைபெற்ற என்.சரவணனின் இரு நூல்களின் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நிகழ்ந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூக அரசியல், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களாக இருந்தமை இதன் சிறப்பு. முகஸ்துதிக்காக கூடும் கூட்டத்தைப் போலல்லாது காத்திரமான விமர்சகர்களும், காத்திரமான சிந்தனையைக் கொண்டவர்களையே அங்கு காண முடிந்தது.

தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் தலைமையில் நிகழ்ந்த இக் கூட்டத்தில்   “1915- கண்டிக் கலவரம்” நூல் குறித்து எஸ்.வேலு மற்றும் பி.ஏ.காதர் ஆகியோர் உரையாற்றினர்.

“அறிந்தவர்களும் அறியாதவையும்” என்னும் நூல் குறித்து மு.நித்தியானந்தன் மற்றும் பா.நடசேன் அகியோர் உரையாற்றினர்.

பா.நடேசன் தனது விமர்சன உரையில் குறிப்பிடும் போது இந்த நூலில் பல கட்டுரைகளில் விளிம்பு நிலை மக்களின் நிலை குறித்த பிரக்ஞையை காண முடிந்ததை தொட்டுக் காட்டினார்.

மு.நித்தியானந்தன் அவர்கள் தனது உரையை இப்படித் தொடங்கினார். 

“இதில் 25 ஆளுமைகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.
ஊடகத்தோடு தொடர்புடைய அரசியல் ஈடுபாடும் மிக்க ஒருவரை தோராயமாகத் தெரிவு செய்து   அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் இந்தக் கேள்வியை கேட்டேன். கேள்வி இது தான்.
“நான் 25 பேரைப் பற்றிய ஒரு பட்டியலைக் குறிப்பிடுவேன்.  அதில் நீங்கள் அறிந்திருந்தீர்கள் என்றால் யெஸ் என்றும் இல்லையென்றால் நோ என்றும் பதில் கூற வேண்டும். என்று இந்த பெயர்களை வாசித்தேன். இவர்களில் மூன்று பெயர்களைப் பற்றி மாத்திரம் தான் ஓரளவு கேட்டிருக்கிறேன்" என்றார் அவர்.
மொத்தத்தில் வரலாற்றில் புதைக்கப்பட்ட ஆளுமைகளை வெளியே கொண்டுவந்துள்ளார் சரவணன். உண்மையிலேயே இப்படிப்பட்ட அற்புதமான  நூலுக்கு “அறிந்தவர்களும் அறியாதவையும்” என்கிற தலைப்பு நியாயம் செய்யவில்லை. இவர்களில் பலர் அறியப்படாதவர்கள்.
இந்த ஆய்வுக்காக அவர் நடத்திய அற்புதமான தேடல்களுக்குப் பயன்படுத்திய மும்மொழியிலுமான மூலங்களை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் ஆதாரம் காட்டியிருப்பது இந் நூலின் மற்றுமொரு சிறப்பு. நானும் கூட பல விடயங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன்.
சில திருத்தங்களை மாத்திரம் செய்துவிட்டால் இது ஒரு பாடநூலுக்கு தகுந்தது என்று கூறிவிடலாம் என்றார்.
ஆயிஷா ரவுப், நடேசய்யர், மேரி ரத்னம், “விதேச” ஆளுமை என்று அவர்களைக் குறிப்பிட்டிருக்கத் தேவையில்லை என்றார்.

பின்னர் தனதுரையின் போது பதிலளித்த நூலாசிரியர் சரவணன் இலங்கையர்கள் அல்லாதவர்களாக இருந்தவர்களாக இருந்து; பின்னர் இலங்கைக்காக பாடுபட்ட அந்த ஆளுமைகளின் வரலாற்றுப் பாத்திரத்தை விளக்குவதற்காகவே அவர்களை “விதேச” என்கிற அடைமொழிக்குள் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.


1915 கலவரம் பற்றி  பீ.ஏ.காதர், எஸ். வேலு ஆகியோர் உரையாற்றினார்கள்.

எஸ்.வேலு அவர்களின் உரையின் பெரும்பகுதி இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பற்றிய விளக்கத்தை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் இனவாதம் பலப்படுத்திக் கொண்டு முன்னேறிய விதம், கண்டி கலவர நிகழ்வு, காலனித்துவ ஆட்சியின் பயங்கரம் போன்றவற்றை விளக்கினார்.

அடுத்ததாக பீ.ஏ.காதர் அவர்கள் தனது உரையில் இப்படி குறிப்பிட்டார்,
"கடந்த ஒரு நூற்றாண்டாக இடம்பெற்றுவரும் கலவரங்களின் பின்னணியில் ஒரே சக்திகள் தான் பின்னணியில் இருந்து வந்திருக்கிறது. ஒரே சித்தாந்தந்தம் வழிநடத்தி வந்திருக்கிறது. அந்த வழித்தடத்தை நாம் 1915 இல் இருந்து தான் தேட வேண்டும். அந்தத் தேடலைத் தான் சரவணன் கச்சிதமாக செய்திருக்கிறார். நூலாசிரியர் அவரது பாசையிலேயே இப்படி கூறுகிறார். “இராணுவச் சட்டத்திநாள் நிகழ்ந்த கொடுமைகளை விசாரிப்பதில் செலுத்தப்பட்ட கவனம் இந்த கலவரத்துக்கு அடிப்படையான காரணமாக இருந்த இனத்துவ முறுகலுக்கான காரணிகளை முறையாக ராயப்பாவுமில்லை அதற்கான தீர்வு தேடப்படவுமில்லை. அதுவே ஈற்றில் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட இனக்குரோதத்துக்கு வழிவிட்டது.”
இது ஒரு நேர்மையான முயற்சி. எங்கள் முன் ஒரு கதை சொல்வதைப் போல விபரமாக இந்த 400 பக்க நூல் விளக்கிச் செல்கிறது. அதில் வரும் ஒரு கதையை இப்படி சொல்கிறார்.
ஒரு சதியின் மூலம் பிடிக்கப்பட்டு மரணதண்டைக்காக சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹென்றி பேதிரிஸ் பற்றிய இறுதி முடிவு இங்கிலாந்திலிருந்து மகாராணி மூலம் பிறப்பிக்கப்பட்ட தந்தியாக வந்து சேருகிறது. அதில்
“Kill him not, let him go” என்கிற செய்தி “Kill him, not let him go” என்று அனுப்பப்படுகிறது.
"கொல்லவேண்டாம் அவனை விட்டுவிடுங்கள்" என்கிற ஆணை திரிபுபெற்று "அவனை விட்டுவிடாதீர்கள். கொள்ளுங்கள்" என்று விளங்கிக் கொள்ளப்படுகிறது. ஒரு காற்புள்ளியின் இடமாற்றம் ஒரு அப்பாவியின் உயிரைப் பறிக்கிறது. இந்த கதை நன்றாக விபரிக்கப்படுகிறது.
இந்த நூலில் இனவாதத்துக்கான தயாரிப்பு, கலவர நிகழ்வு, இராணுவச் சட்ட அடக்குமுறை, மற்றும் அதன் மீதான் விசாரணை என்கிற நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். இதில் கலவரம் நிகழ்ந்த அந்த 10 நாட்களில் நடந்த சம்பவங்களை மேலும் விளக்கியிருக்கலாம் என்கிற கருத்தையும் பீ.ஏ.காதர் அவர்கள் முன்வைத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும் இறுதியில் கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைத்தார்கள்.

ஏறத்தாள மூன்று மணித்தியாலங்கள் நிகழ்ந்த இந் நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் சரவணன் ஏற்புரை வழங்கினார்.
“இனத்துவம், சாதியம், மதத்துவம், வர்க்கம், பால்நிலை போன்ற பிரக்ஞையை எனது எழுத்தில் பிரதிபலிக்கக்கூடியவகையிலேயே இந்த நூல்களை எழுதியிருக்கிறேன்.  பேரினவாதம் பற்றிய எனது 25 வருட கால தொடர்ச்சியான எழுத்தும், அது சார்ந்த தேடலின் போதும் சிங்கள பேரினவாத தரப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை பரப்புவதற்கு 1915 கலவரத்தை எப்போதும் குறிப்பிட்டு வருவதைக் கவனித்து இருக்கிறேன். முஸ்லிம்களே அதற்கான காரணம் என்று பழியைப் போடும் அந்த குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த தொகுப்பை எழுத ஆரம்பித்தேன்.
1915 ஆண்டு கலவரம் நிகழும் போது பேரினவாதம் தன்னளவில் எந்த நேரத்திலும் ஏனைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக கிளர்வதற்கு தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அது எப்படி தயார்படுத்தியது என்பதை விளக்குவதற்குத் தான் நூலின் முதல் கால் பகுதியை செலவிட்டிருக்கிறேன்.
பல நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் மும்மொழியிலும் இதற்காக பயன்படுத்தியிருந்தேன். தேசிய சுவடிக் கூடம், மியூசியம் நூலகம், போது நூலக சேவைகள் சபை என்பவற்றில் பல நாட்கள் இதற்கான ஆதாரங்களை தொகுத்திருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட அந்த கலவர 10 நாட்கள் குறித்து போதிய தகவல்கள் எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அன்றைய ஊடகங்களும் இராணுவச் சட்டத்தின் கீழ் தணிக்கைக்கு உள்ளாகியிருந்ததால் அன்றைய நாட்களில் வெளியான பத்திரிகைகளிலும் எதுவும் பெற முடியவில்லை. ஆனால் இந்த கலவரத்துக்கான முன் தயாரிப்பும், பின் விளைவுகளையும் இந்த நூல் முழுவதும் பெருமளவு விளக்கியிருக்கிறேன்”
என்றும் குறிப்பிட்டார்.

அங்கு முன்வைக்கப்பட்ட நேர்மையான விமர்சனங்களை அடுத்த பதிப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்வேன் என்று நன்றி கூறி விடைபெற்றார்.

நன்றி - வீரகேசரி
படங்கள் : கே.கே.ராஜா  (லண்டன்)







Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates