Headlines News :
முகப்பு » » மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உண்மையான தீர்வு எது? - தனுஷன் ஆறுமுகம்

மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உண்மையான தீர்வு எது? - தனுஷன் ஆறுமுகம்


போராட்டங்களில் அதிக நாட்டமும், அதற்கான நேரமும் வாய்க்காத மக்கள் பிரிவினராகவும் பலகாலமாக தமது அரசியல் தலைமைகளினால் தமது தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கொண்டிருந்தவர்களாகவும் மலையக மக்கள் காணப்பட்டு வந்தனர். அரசியல் பூச்சாண்டிகளின் அறிக்கைகளும் அலட்டல்களும் இந்த மக்களை ஏமாற்றிய காலம் கடந்து தமது அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கையிழந்து தமக்கான கோரிக்கைகளுக்காக தாமே இன்று வீதிக்கு இறங்கியிருக்கின்றனர். சமீபத்தில் போராட்ட நிலைமைகளில் செய்தி சேகரிக்க சென்றோரிடம் “எங்கள் அரசியல்வாதிகளிடம் ஏன் பேட்டி எடுக்கின்றீர்கள், அவர்களால் இயலாது என்று தெரிந்துதானே நாங்கள் வீதிக்கு இறங்கியுள்ளோம்” என முழங்கிய அந்த கோசங்கள் இந்த நம்பிக்கை இழப்பிற்கு சான்று பகர்கின்றன.

உண்மையில் இந்த 1000 ரூபாய் என்ற நிர்ணயத்தை செய்தவர்கள் இந்த மக்களல்ல. இந்த மக்களிடம் கருத்துக்களை பெற்று தீர்மானிக்கப்பட்ட சம்பளமும் அல்ல. மாறாக அரசியல் மேடைகளில் ஒருவருக்கோரம் ஏலமாக சொல்லிய தொகையிலே உயர்ந்து ஒலித்த இறுதி பெருமானமேயிது. ஆமாம் உழைப்பவன் இருக்க சுரண்டுபவன் தீர்மானித்த விலையே இது. இதற்கிடையில் நிவாரணத் தொகை என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டு முடிக்கப்பட்டு உழைத்த களைப்பில் ஓய்வில் இருக்கின்றார்கள் நாடகத்தை நடத்திய தரப்பினர்.

சரி 1000 ரூபாய் சம்பளம் சாத்தியப்படுமா? இல்லையா? அல்லது மாற்றுத் தீர்வுகள் ஏதேனும் உண்டா என்பன குறித்து நோக்க வேண்டிய அல்லது தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில் நாமும் தெளிய வேண்டிய கட்டத்தில் மக்களும் இருக்கின்றார்கள். 730 ரூபாய்களாக நின்றுக் கொண்டிருக்கும் தற்சமய பேச்சுவார்த்தை முடிவுகள் என்ன நிலையை எட்டும் என்பது இன்னும் முடிவில்லாதிருக்கின்றது.

இந்த 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதில் முதலாளிமார் சொல்லும் பிரதான முட்டுக்கட்டை தோட்டங்களில் வருமானம் போதாது, தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதேயாகும். இந்த கருத்து எந்தளவு நம்பும் படியாக இருக்கின்றது அப்படியே உண்மையெனின் காரணம் யார் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமே.

உண்மையில் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி குறித்த வருமானம் குறைந்துள்ளதை நாம் மத்திய வங்கி அறிக்கையூடாக அறிந்துக் கொள்ள முடிகின்றது. வருமானம் குறைந்தமையின் பின்னணியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த நிகர எடையின் அளவு குறைந்துள்ளது ஒரு பிரதான காரணமே. (2014 – 338 KG mn : 2015– 329 Kg mn) இந்த காரணங்களின் பின்னணியில் இருப்பது யார்? காரணம் யார்? தோட்ட தொழிலாளிகளா? தோட்ட நிர்வாகமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமல்ல. நிர்வாகமே பிரதான காரணம் என்பது இந்த பதிவின் பிற பகுதிகளைக் கொண்டு உணரக் கூடியதாக இருக்கும்.

இந்த உற்பத்தி குறைவிற்கு பிரதான காரணம் பெருந்தோட்டங்கள் உரியவாறு பராமரிக்கப்படாமையாகும். உண்மையில் இன்று மலையகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிறு தோட்டங்களாக உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் அதிகமாகவே உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். பெருந்தோட்டப்புறங்களிலே கடந்த காலங்களில் தேயிலை தோட்டங்கள் உரியவாறு பராமரிக்கப்பட்டன. தோட்டத்தில் ஒரு பகுதி வேலை நடந்துக் கொண்டிருக்கும் போதே ஏனைய பகுதிகள் பராமரிப்பிற்கான வேலைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன. எனவே தொடர்ந்தேர்;ச்சியாக உற்பத்தி காணப்பட்டது. இது இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழவும் வழி சமைத்தது.

எனினும் தொடர்ந்து வந்த காலங்களில் தேயிலை தோட்டங்கள் உரியவாறு பராமரிக்கப்படாது அதிலிருந்து உச்ச இலாபத்தை மட்டும் பெற்றுக் கொள்ள அவை தொடர்ந்தேர்ச்சியான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் பராமரிப்பு செயற்பாடுகள் மறக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவ்வாறு ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு பெரும்பகுதி காடாகியது என்ற உண்மை மறைக்கப்பட முடியாத ஒன்றே. இதற்கு மலையக பெருந்தோட்டங்களில் உற்பத்தி பரப்பானது குறைவடைந்திருக்கின்றமை சான்றாகும். எனவே உற்பத்தி பரப்பு குறையும் போது உற்பத்தியின் அளவு குறையும் என்பது தெளிவு. எனவே இந்த உற்பத்தி குறைவிற்கும், சீரான பராமரிப்பு இன்மைக்கும் காரணம் தோட்ட நிர்வாகமே.

அதே போலவே பராமரிப்பு இன்மையால் உற்பத்தியில் தொடர்ந்தேர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் செடிகளிலும் உற்பத்தி குறைவது தடுக்கப்பட முடியாத ஒன்று. சம காலங்களில் மீள் நடுகை, புதிய கன்றுருவாக்கம் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்படாத நிலையில் பல பெருந்தோட்டப் பகுதிகள் காடாகி வருகின்றன. இது ஒரு புறமிருக்க சில தோட்ட நிருவாகங்கள் தங்களது வருமானத்தை கருத்திற் கொண்டு பராமரிப்பின்றி காடாகிய பகுதிகளில் உயரிய வகை மரக்கன்றுகளை நாட்டும் செயற்பாடும் அரங்கேரிக் கொண்டு இருக்கின்றது. இதற்கு தேயிலைக்கான மண் சரியில்லை என போலியான சான்றுகளும் தேயிலையை மாத்திரமே கண்டு வளர்ந்த மண்ணிற்கு கூட வழங்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேரியே உள்ளன. ஆக இன்று மூடப்பட்டு வரும் பெருந்தோட்டங்களின் பின்னணியில் இத்தகைய முறையற்ற நிர்வாக நடவடிக்கையே காரணமாக அமைகின்றது. 

பெருந்தோட்டங்களில் மக்கள் ஒன்றாக ஒரு தோட்டமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். தோட்டங்கள் மூடப்படுவதால் பலர் இடம்பெயர்ந்து வேலைவாய்ப்புக்களை தேடி தலைநகரையும், பிரதான நகரங்களையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார். ஒன்றாக, பலமான சக்திகளாக தோட்டங்களில் இருக்கும் இந்த மக்களை பிரித்தாண்டு அவர்களை அரசியல் ரீதியாக மேலும் பின்னடைவிற்கு ஆக்க வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ அரசாங்கம் உரிய கவனத்தை இந்த சம்பள பிரச்சினையின் மீது செலுத்தாது இருக்கின்றது.

இன்று 75 சதவீதத்திற்கு அதிக வரவைக் கொண்ட தோட்ட தொழிலாளி ஒருவரின் சம்பளமே நாளொன்றிற்கு 620 ரூபாய்களாக இருக்கின்றது. அடிப்படை சம்பளம் என்பது இன்னும் 450 ரூபாய்களாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்டங்களிலே உச்ச வருமானங்களைப் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த மக்களிடம் அந்த வருமானத்தின் வாசனையை கூட காட்டவில்லை. இன்று வருமானம் குறைவு என்பதைக் காரணம் காட்டி சம்பள உயர்வை புறக்கணிப்பது எந்தளவில் சாத்தியம். இந்த வருமானக் குறைவின் பின்னணியில் மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் தோட்ட நிருவாகங்களே காணப்படுகின்றன.

முறையற்ற நிர்வாகமே காரணம் என நான் சொல்வதற்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு பிரதான விடயம் தான், தேயிலை, தேயிலை என நாம் சொல்லிக் கொண்டிருந்தாலும் செடிகளிலே வகைப்பாடுகள் பல இருக்கின்றன. சீனதேயிலை (சைனா டீ), மற்றும் வீபி எனப்படும் செடிகள் அவற்றில் பிரதானமானவை. ஆரம்ப காலங்களிலே உருவாக்கப்பட்ட சீன தேயிலை உயர் தரத்தைக் கொண்ட உற்பத்தியை தரவல்லது. எனினும் இன்றைய காலங்களில் அதிகம் காணப்படும் வீ.பி தேயிலைகளில் கிடைக்கும் தரம் அதனிலும் குறைந்தது. தரத்திற்கேற்ற விலையே கிடைக்கின்றது. எனவே உற்பத்தி தொடர்பில் புதிய நுட்பங்களை பாவிக்க தோட்ட நிருவாகங்கள் முன்வர வேண்டும், அதற்கான ஆய்வுகளும் பலப்படுத்தப்பட வேண்டும். மரபணு தொழிநுட்ப முறைகளில் புரட்சிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி தொடர்பிலும், அவற்றைக் கொண்டு தோட்டங்களிலே மீள் நடுகை செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தோட்ட நிருவாகம் முன் வர வேண்டும். எனவே தேயிலையின் தரத்தின் குறைவால் ஏற்பட்டுள்ள விலைக் குறைவு எனும் பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும். 

இன்று இலாபமில்லை என சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பல தோட்டங்களின் முகாமையாளர்கள் இலட்சங்களிலே சம்பளத்தைப் (நேரடியாக மற்றும் மறைமுகமாக) பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தோட்ட தொழிலாளியை தவிர எவனுக்கும் இந்த வருமானம் குறைவு எனும் கதை பாதிப்பை ஏற்படுத்தாது காலம் காலமாக தொழிலாளிகள் மாத்திரம் தனித்து பாதிக்கப்படுவது எங்ஙனம் ஏற்பாகும். 
வருமானக் குறைவிற்கு தொழிலாளிகளின் போக்;கும் ஒரு காரணமாக அமைகின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. வேலை நேரத்தில் எதிர்பார்க்கப்படும் உழைப்பினை வழங்க தவறுகின்றமை காரணமாக சுட்டிக் காட்டப்படுகின்றது. எனினும் வழங்கப்படும் 450 ரூபாய் எனும் அடிப்படை சம்hளத்திற்கு அதுவும் அதிகமெனவே நான் கருதுகின்றேன். எனினும் இந்த தொழிலாளிகளின் தந்த கதியிலான செயற்பாடுகளும் தோட்ட நிருவாகத்தின் செயலால் சீர் செய்யப்படக் கூடியதே.

அதே போலவே அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் செலவுகளைக் குறைக்கவும் பல தோட்டங்களிலே தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு அங்கே அரைக்கப்பட வேண்டிய தேயிலை ஒரு பிரத்தியேக இடத்திற்கு மாற்றப்படுகின்றது. அதாவது மூன்று தொழிற்சாலைகளிலே அரைக்கப்பட்ட தேயிலை ஒரு தொழிற்சாலையில் அரைக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டது. இதனால் அதிக தேயிலை உற்பத்தி நிகழும் காலப்பகுதியில் அரைக்கப்பட முடியாது கொழுந்துகள் வீசப்படும் நிலையும் காணப்படுகின்றது. இதுவும் நிருவாகத்தினரின் மட்டமான செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைவின் ஒரு பக்க காரணமே. 

உப்பைத்; தின்றவன் ஒருவன் தண்ணீர் குடிப்பவன் ஒருவன் என்ற கதையாய் தோட்ட நிர்வாகத்தின் முறையற்ற செயற்பாட்டிற்கான பலனை மக்கள் மீது சார்த்துவது எந்தளவு நியாயம். இலாபமில்லை, வருமானமில்லை எனச் சொல்லிக் கொண்டு ஏன் தொடர்து தோட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கேள்வி. அங்ஙனம் இயலாத தோட்டங்களை அரசு பொறுப்பேற்று முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். ஆனால் அரசு அவ்விடயம் தொடர்பில் முனைப்பு காட்டாது இருப்பது நான் மேலே சொன்னதை போல பிரித்தாலும் சூழ்ச்சியாகவே தென்படுகின்றது. அத்தோடு முறையற்ற நிருவாகத்தைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம், இத்தகைய அரசின் மிகச் சிறந்த நிருவாகச் செயற்பாடுகளின் விளைவாக அரசு பொறுப்பேற்ற பல தோட்டங்கள் (மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஊடாக – Via JEDP) இன்று மூடப்பட்டுள்ளமையை குறிப்பிடலாம். அதாவது கம்பனிகளுக்கு நிகராகவே ஏன் அவற்றை விட பல மடங்கு அதிகமாக அரச பெருந்தோட்டங்கள் முறையற்ற பராமரிப்பிற்கும், சீரற்ற செயற்பாட்டிற்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றன என்பதாகும். எனவே இதனடிப்படையில் அரசு தோட்டங்களை பொறுப்பேற்பின் அது மக்களுக்கு எந்தளவு சாதகமாக அமையும் என்பது கேள்விக் குறியே. 

பராமரிப்பு தொடர்பான செயற்பாடுகள் சீராக இடம்பெற்றுக் கொண்டிருந்திருக்மேயானால் உற்பத்தி வீழ்ச்சியோ, வருமான தாழ்ச்சியோ ஏற்பட்டிருக்காது. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவை விட அதிகமாகவே கோரியிருக்க முடியும். ஆனால் காலம் கடந்த நிலையில் இந்த சம்பளத்தை பெறுவது குதிரைக் கொம்பே. அவ்வாறே தற்போது பேசப்பட்டு வருகின்ற 730ரூபாய் என்கின்ற உத்தேச சம்பளமும் பல கட்டுப்பாடுகளை கொண்டு காணப்படுகின்றது, வேலை நாள், பறிக்கப்படும் தேயிலையின் அளவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இச்சம்பளம் வழங்கப்பட இருக்கின்றது. ஆகவே முறையான பராமரிப்பற்ற, குறைந்த உற்பத்தியை வழங்கும் செடிகளிலிருந்து எத்தனை பேர் இந்த சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியே. எனினும் அரசாங்கம் உதவும் பட்சத்தில் 1000 ரூபாய் சம்பளம் என்பது சாத்தியமே. எனினும் உத்தரவாதமில்லை.

சரி, இலாபமில்லாது நட்டத்தில் இயங்கிக் கொண்டு தர்மசத்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் தேயிலை தோட்டஙகளின் முதலாளிமார் தேயிலை தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தாலென்ன? அரசாங்கம் முறையான நடவடிக்கையூடாக அதனை அத்தோட்ட தொழிலாளிகளுக்கே பிரித்து வழங்கினாலென்ன? “தோட்ட நிர்வாகமே முடியுமெனின் சம்பளத்தை கொடு, இல்லையெனில் தோட்டங்களை கையளித்து விட்டு வெளிவேறு” என முழக்கமிட்ட தற்போதைய தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால்; என்ன என்பதே எனது வினாவாகும். ஆமாம், தொழிலாளிகளாக பார்த்தது போதும் என் மலையக மக்களை, இவர்களை தொழிலாளி சாயம் பூசி ஏமாற்றியதும் போதும், முதலாளிகளாக்கிப் பார்ப்போம், தோட்டங்களை பகிர்ந்தளிப்போம்.

ஆமாம் உரியவாறு முகாமை செய்யும் தோட்டங்களை பகிர்ந்தளிப்பது நாட்டிற்கும், தோட்ட மக்களுக்கும் நன்மைகளை கொண்டு சேர்க்கும். பகிர்ந்தளிக்கப்படின் உரியவாறு முகாமை செய்யப்படும் எப்படியென்றால் முகாமையாளரை விட, கம்பனிக்காரர்களை விட, மலையகம் பேசும் அரசியல்வாதிகளை விட, மலையக சித்தாந்திகளை விட, ஏன் எழுதிக் கொண்டிருக்கும் எம்மை விட தேயிலையை பற்றி நன்கு அறிந்த அந்த உழைப்பாளி என் தொழிலாளி. அந்த செடிக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்யக் கூடியவன், தோட்ட முகாமையின் ஆணைக்காக காத்திருக்க தேவையில்லை. அவன் வளர்த்த செடி, அவனுக்கு சொந்தமான செடி, தேவையானதை செய்வான். செடி செழிக்கும், தோட்டம் செழிக்கும், நாடும் செழிக்கும் சேர்ந்தே என் தொழிலாளியும் செழிப்பான் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இன்று பெருந்தோட்டங்களை விட அதிகமாகவே சிறு தோட்ட உடமையாளர்களின் தோட்டங்களிலே தேயிலை உற்பத்தி செய்யப்படுவது இதற்கு நல்லதொரு சான்று. 

எனவே உடமையாக லயன் அறையை மட்டுமே கொண்டுள்ள மலையக தொழிலாளிக்கு இந்த தோட்டங்களை பகிர்ந்தளிப்பதே ஒரே தீர்வு. சொந்தமாக நிலமும் கிடைத்திருக்கும், உழைப்பும் செழித்திருக்கும். கூட்டு ஒப்பந்தத்திற்கும், அரசியல் அறிக்கைகளுக்கும் ஏமாற வேண்டிய தேவையிருக்காது அரசு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தேயிலை விற்று இலாபமோ நட்டமோ நேரடியாக சந்திக்க கூடிய ஒரு நிலையானது எம் மக்களுக்கு கிட்டும். இதற்கு மேலதிகமாக காணியைப் பெற்று தருகின்றேன், வீட்டு திட்டத்தை அமைத்து தருகின்றோம் என்ற போலிகளின் பேச்சுக்களுக்கு ஏமாறவும் தேவையில்லை இந்த நில உரிமையாளர்கள். 

எனவே நாட்டினுடைய விலை நிலவரங்களைக் கருத்திற் கொள்ளாது, குறிப்பிட்ட காலத்திற்கு இதுதான் (இது மட்டும்தான்) சம்பளம் என தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் எனும் மாயைக்குள் சிக்காது, தொழிற்சங்கங்கள் குறித்து கவலைப்படாது எம்மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடாத்த தோட்டக்காணிகளை தோட்ட தொழிலாளிகளுக்கு (தேயிலை செடிகளின் உரமானவர்களுக்கு) பகிர்ந்தளிப்பது ஒன்றே சிறந்த தீர்வு என்பதோடு தற்காலிக மாயை எனும் இந்த சம்பள நிர்ணயம் என்பது காலம் கடந்த ஒன்றே.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates