கலவரத்தின் பின்னர் குற்றமிழைத்தவர்கள் இழப்பீடு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் பலர் சாதாரண அப்பாவிகள் என்பதை ஆங்காங்கு சில சம்பவங்களின் மூலம் கண்டோம். 1915 கலவரம் குறித்து ஆராய்ந்த பல எழுத்தாளர்களும் இந்த அநீதியான இழப்பீடு குறித்து நிறையவே பிரஸ்தாபித்துள்ளனர்.
ஆனால் இந்த இழப்பீட்டை சுவிருப்பின்பேரில் வழங்க முன்வந்தார்கள் என்று ஆளுநர் சார்மஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது அப்படி நிகழவில்லை. இழப்புகள் நிகழ்ந்த இடங்களில் இழப்புகளைக் கணித்து அங்கேயே ஒரு முடிவு எடுக்கும்படி அனைத்து ஆணையாளர்களுக்கும் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சகல கிராமங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 500 அல்லது 600 முறைப்பாடுகள் அரசாங்க சபைக்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அனுப்பட்டிருக்கிறது. அந்த முறைப்பாடுகளில் ஆணையாளர்கள் வலுக்கட்டாயமாகவும், மிரட்டியும் பெறப்பட்டிருப்பதைத் தெரிவித்திருந்தனர். சில இடங்களில் முஸ்லிம்களுக்கோ அவர்களின் சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படாத கிராமங்கள் கூட இந்த இழப்பீட்டை வழங்க நேரிட்டிருப்பதை அந்த கடிதங்களில் இருந்து தெரியவருகின்றன.
அறிவித்தல்“இல - 123
கிராமம் – வெலிகம
பெயர் – எச்.லபில்யு.சாமவீர
வசிப்பிடம் – வல்லிவல
கலகக்காரர்களால் வெலிகமயில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்காக உம்மால் வழங்கப்பட வேண்டிய 450,00 ரூபாவை எடுத்துக்கொண்டு 1915 ஓகஸ்ட் 12ஆம் திகதி பிற்பகல் 1க்கு மாத்தறை கச்சேரிக்கு வரும்படி இத்தால் அறிவிக்கிறோம். உரிய பணத்தை வழங்க முடியவில்லையாயின் அதற்குப்பதிலாக சொத்துக்களை அடகு வைத்து அரசாங்கத்துக்கு அந்த பணத்தை செலுத்தும்வகையில் வரும்போது சொத்து பற்றிய சகல தஸ்தாவேஜூகளையும் கொண்டுவரவேண்டும். இதனைப் புறக்கணித்தால் சிறைசெயயப்படுவீர்.
ஜீ.எப்.ஆர்.பிரவுனிங்விசேட ஆணையாளர்”
ஜீ.எப்.ஆர்.பிரவுனிங் (G. F. R. Browning) பின்னர் இலங்கையில் தொல்பொருள் ஆணையாளராகவும் கடமை வகித்தவர். இவர் மட்டுமன்றி தாம் குறிப்பிட்ட இழப்பீட்டை வழங்கும்படி பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இராணுவ ஆணையின்படி இதனை மீறுவோர் கண்ட இடத்தில் சுடப்படவும் முடியும். அதாவது சுயவிருப்பின் பேரில் பெறப்படவேண்டும் என்கிற ஆணையை ஒருபுறத்தில் வைத்துவிட்டு கொலை மிரட்டலையும், சிறைவைப்பு போன்ற மிரட்டலையும் செய்து வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டன. தம்மிடம் மீதமிருந்த சொத்துக்களை விற்றோ, அடகுவைத்தோ அந்தப் பணத்தை வழங்கியுள்ளனர்.
சீ.ஏ.விக்கிரமசிங்க இவை குறித்து காலைத்துவ செயலாளருக்கு முறையிட்டுள்ளார். சியன் ஆராச்சிகே அந்திரிஸ் என்பவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு காலி பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டது. (வழக்கு இல 987). அந்திரிஸ் ஏற்கெனவே மூன்று நாள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்த நிலையில் பொலிசார் வந்து தம்மை கலவரத்துக்கான இழப்பீட்டை வழங்கும்படி கேட்டனர் எனவும் இதிலிருந்து மீள்வதற்கு தான் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார். இது தானா “சுயவிருப்பு” என்கிற கேள்வியை விக்கிரமசிங்க எழுப்பியிருந்தார்.
இந்த ஆங்கிலேய அராஜகம் சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை. புத்தளம் உதவி அரசாங்க அதிபர் எச்.டபிள்யு கொட்ரிங்டன் 1915 செப்டம்பர் 10ஆம் திகதி ஈ.எல்.எப் டீ சொய்சாவுக்கு இப்படி எழுதினார்.
4 வயது சிறுவரும் இழப்பீடு வழங்கவேண்டியேற்பட்டது என்கிறார் ஆர்மண்ட் டீ சொய்சா.
இழப்பீட்டிலிருந்து விடுதலை பெறுவது குறித்து போனார் லோ ஒரு அறிவிப்பை செய்திருந்தார். 1915 ஜூலை 27 அன்று அவர் பிரித்தானிய சட்டசபையில் வேடிக்கையான அறிவிப்பை செய்தார்.
“குறிப்பிட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாம் கலவரத்தில் ஈடுபடவில்லை என்பதை நிரூபித்தாலேயொழிய, குறிப்பட்ட மாவட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ட கிராமத்தவர்கள் அனைவரும் இழப்பீடு வழங்கியே ஆக வேண்டும்”
இதன்படி கலவரம் நிகழாத கிராமங்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை. குற்றமிழைக்கவில்லை என்பதை வலிந்து நிரூபிக்கும் பொறுப்பு கிராமத்தவர் மீது சுமத்தப்பட்டது. கலவரம் நிகழ்ந்த பிரதேசத்தைச் சூழ உள்ள பிரதேசங்கலைச் சேர்ந்தவர்களும் கலவரத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி இழப்பீடு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தாம் நினைத்தபடி இந்த வரையறை தீர்மானிக்கப்பட்டது. மேலும் இது திட்டமிட்ட ஒரு கலவரம் என்கிற எண்ணக்கருவுடனேயே இந்த போக்கை கடைப்பிடித்தனர்.
இதைத்தவிர பாதிக்கப்பட்ட இரு தரப்புக்கும் இந்த இழப்பீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்பது இன்னொரு கதை. பெரும்பாலும் கலவரக் குற்றச்சாட்டுக்கள் முழுவதும் சிங்களவர்கள் மீது சுமத்தப்பட்டதால் அதே கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு அந்த இழப்பீடுகள் கிடைக்கவில்லை. டீ.எச்.பெர்னாண்டோவின் முறைப்பாடு ஒரு உதாரணம். கலவரக்காரர்களால் அவரது வீடு எரிக்கப்பட்டு 7500 ரூபா பெறுமதியான நட்டம் அவருக்கு ஏற்பட்டது என கேகாலை உதவி அரசாங்க அதிபர் எச்.ஏ.பேர்டன் என்பவருக்கு முறைப்பாடு செய்தார். அவருக்கு இப்படி பதில் கிடைத்தது.
இல 2611
1915 ஓகஸ்ட் 28
கேகாலை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து
நீர்கொழும்பைச் சேர்ந்த டீ.எச்.பெர்னாண்டோ அவர்களுக்கு
கடந்த ஜூன் 29ஆம் திகதி இடப்பட்ட உமது முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. சிங்களவர்களுக்கு இழப்ப்ட்டுகளை வழங்குவதில்லை என்பதை இத்தால் தெரிவித்துகொள்கிறோம்.
எச்.ஏ.பேர்டன்உதவி அரசாங்க அதிபர்
இந்த பிரச்சினை அரசாங்க சபையில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய இனத்தவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
கலவரத்துக்கு முழுமையான காரணம் சிங்களவர்களே என்கிற முடிந்த முடிவுடன் ஆங்கிலேயர்களின் மனநிலை இருந்ததால் இழப்பீடு குறித்த விடயத்திலும் சிங்களவர்களே முழுமையாக செலுத்தவேண்டும் என்கிற முடிவில் அவர்கள் செயற்பட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் தமக்கு இழப்பீடு பெறுவதற்கு முடியாது இருந்ததுடன். மறுபுறம் முஸ்லிம் தரப்பில் பல்வேறு இடங்களில் எந்தத் தயக்கமுமின்றி போலியான இழப்பீடு குறித்த முறைப்பாடுகளைப் பதிந்து இழப்பீடு பெற்றார்கள் என்பதை சம்பவங்களாக பட்டியலிடுகிறார் ஆர்மண்ட் டீ சூசாவும், ராமநாதனும்.
கரையோர சிறு நகரான பாணந்துறை வாசிகள் 4,80,000 ரூபா இழப்பீடு கொடுக்கப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. (நினைவில் இருக்கட்டும் இது 100 ஆண்டுகளுக்கு முன்னர்). பாணந்துறை வாசிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள் அரசாங்கத்துக்கும் இது ஒரு அநியாயமான தொகை என்று புலப்பட்டிருக்கவேண்டும். பின்னர் இந்த தொகை 250,000 ஆக (அன்றைய காலத்தில் 16,666 பவுன்கள்) குறைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அரைவாசியாக குறைக்கப்பட்டதைப் பார்த்தால் இழப்பீடு குறித்த கணிப்பு நினைத்தபடி நிகழ்ந்திருகிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
அந்தந்த பிரதேசங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் படி தான் இந்த இழப்பீடு குறித்த கணிப்பை அரசாங்கம் செய்திருந்தது. கொழும்பு நகரசபை பிரதேசத்தில் மாத்திரம் 31,41,017 ரூபா தொகை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கோரப்பட்டிருந்தது. பின்னர் இந்த தொகை மீள் பரிசீலிக்கப்பட்டு 9,16,696 ரூபாவாக குறைக்கப்பட்டது.
கொழும்பில் முஸ்லிம் ஒருவரால் தமக்கு 40,000 ரூபா இழப்பு ஏற்பட்டதாக பதிவு செய்திருந்தார். பின்னர் இது போலித்தனமான ஒரு கோரிக்கை என்பதை கண்டுபிடித்தனர். இது விசாரணைக்குள்ளாக வாய்ப்பிருப்பதை அறிந்த முறைப்பாட்டாளர் அந்த முழு முறைப்பாட்டையும் ஒரு வழக்கறிஞரைக் கொண்டு மீளப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு இழப்பீட்டுத் தொகையில் உண்மைத்தன்மை எங்கும் இருக்கவில்லை. இதனை ஆய்வு செய்த பலர் இந்த விடயத்தை சாடியிருக்கின்றனர். சிங்களவர்கள் மீதிருந்த வெறுப்புணர்ச்சி பெரும் பங்கை வகித்திருந்தன என்பது இந்த கலவரம் குறித்து ஆங்கிலேய அரசு நடந்து கொண்ட அத்தனை வழிமுறைகளிலிருந்தும் அறியக்கூடியதாக இருக்கிறது.
பல இடங்களில் முதலிமாருடன், பொலீசார், பஞ்சாப் படையினர், ஆணையாளர் போன்றோர் அந்த பிரதேசங்களுக்குச் சென்று மொழி தெரியாத சிங்கள சாதாரண பிரதேசவாசிகளிடம் இழப்பீட்டைத் தருவதாக ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். அவர்களை மறுத்து பேச முடியாத பீதியுற்ற மக்கள் அவற்றில் கையெழுத்திட்டிருந்தனர். மேல்மாகானத்தைச் சேர்ந்த பலர் பின்னர் அம்மாகானத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய ஆணையாளர் ஜெ.ஜீ.பிரேசர் குறித்த தமது அதிருப்தியை ஒரு முறைப்பாடாக அனுப்பினர். ஏறத்தாழ 600 க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைபட்டை செய்தார்கள். ஓகஸ்ட் 11 அன்று ஆளுநர் ரொபர்ட் சார்மர்ஸ் “ஆளுநர் என்கிற வகையிலும் அரசாங்க சபையில் தலைவர் என்கிற வகையிலும் எனக்கு கிடைக்கபெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் கவனமாக ஆராய்கிறேன்.” என்றார். அதுபோல நீதிபதியாலும் ஒக்டோபர் 14 இப்படி தெரிவிக்கப்பட்டது “அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளும் பரிசீலனைக்காக அனுப்பட்டிருக்கிறது.”.
ஆனால் அரசாங்க சபையின் கமிட்டியால் இந்த சகல பிரச்சினைகள் குறித்தும் விசாரணை செய்வதை நிராகரிக்கப்பட்டன.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் எந்த அதிகாருக்கு எதிராக முறையிட்டார்களோ அதே அதிகாரிக்கே அந்த முறைப்பாடு போய் சேர்ந்தது தான். குற்றம்சாட்டப்பட்டவேரே குற்றத்தை விசாரிக்கும் வேடிக்கை நிலை இருந்தது. பின் எப்படி நீதி கிடைக்கும். கிடைக்கவுமில்லை. ஒக்டோபர் 14 அன்று அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதில் அரசாங்க சபையில் வாசிக்கப்பட்டது.
“தம்மிட்ட கிராமவாசிகளால் ஆளுனருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட முறைப்பாடு பற்றியது. விசேட ஆணையாளர் முவர் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்த கிராமவாசிகள் செலுத்தவேண்டிய இழப்பீட்டுத் தொகை நியாமானது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன். இறுதியில் இந்தத் தொகை குறைத்துக்கொள்ளலாம். ஆனால் அது குறித்து இப்போதைக்கு உறுதியளிக்கமுடியாது.
ஜே.ஜீ.பிரேசர்
விசேட ஆணையாளர்.
ஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிக்கே ஆளுநர் அனுப்பிவைத்தது எந்த விதத்தில் தீர்வைப் பெற்று தரும் என்கிற கேள்வி எழுகிறது. இராணுவ சட்டம் அமுலிலிருந்த காலத்தில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நாடுமுழுவதும் மோட்டார் வண்டிகள் வைத்திருப்போர் அவற்றை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் அங்கிர ஆணை பிறப்பிக்கப்பட்டது. சில கார் உரிமையாளர்கள் சுயவிருப்பின் பேரில் அப்படி ஒப்படைத்தார்கள். மேலும் பலர் விருப்பின்றியே ஒப்படைக்க வேண்டியேற்பட்டது. இராணுவச் சட்டம் நீக்கப்படும் வரை அவை பயன்படுத்தப்பட்டது. பல வாகனங்களால் அலட்சியமான பாவனையால் சேதத்துக்கும் உள்ளாகியிருந்தது. பலவாகனங்களுக்கு எந்தவித கொடுப்பனவோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. சிலவற்றுக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றவற்றை நிராகரித்தது.
தொடரும்..
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...