கலவரத்துக்குப் பின் நாட்டில் நிகழ்ந்த பிரிட்டிஷ் அரச அட்டூழியங்களுக்கான பெரும்பொறுப்பு ஆளுநர் சார்மர்சையே சாரும். அதிகாரிகளின் மேலோட்டமான அறிக்கைகளை எந்த பரீசீலிப்பும் இல்லாமல் வேகமான முடிவுகளை எதேச்சதிகாரமாக எடுத்ததே பின் நிகழ்ந்த அநீதிகளுக்கெல்லாம் பிரதான காரணமாக இருந்தது. இராணுவச் சட்டத்தை பிறப்பிக்குமளவுக்கு தேவையேற்படாத நிலையில் அவர் அதனை மோசமாக அமுல்படுத்தியதன் பின்னணியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது நிகழ்ந்த சோகமும் ஒரு காரணம் எனக் கண்டோம். முதலாவது உலக யுத்தத்தில் அவரது மகன்மார் வெவ்வேறு போர்க்களத்தில் ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட செய்தியால் விரக்திக்குள்ளாகியிருந்த தருணம் அது. அதுவும் இலங்கையில் கலவரம் நிகழ்ந்த அதே ஆண்டு. மகன்மார் கொல்லப்பட்டதும் கலவரம் நிகழ்ந்த அதே மே மாதம். ஆக அந்த இழப்பு நிகழ்ந்து ஒரு சில நாட்களில் இந்த கலவரம் நிகழ்ந்தது. கலவரம் நிகழ்ந்துகொண்டிருந்த முதல் மூன்று நாளும் அவர் நுவரெலியாவில் உள்ள உத்தியோகபூர்வ இராணி இல்லத்தில் ஓய்வுபெற்றபடி இருந்தார். இலங்கையில் ஆளுநராக அவர் இருந்த காலம் இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் தான். கலவரத்தின் விளைவாக அவர் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டது வரை டிசம்பர் 4 வரை அவர் ஆளுநராக கடமையாற்றினார்.
இந்த கலவரம் குறித்து பாராளுமன்றத்தின் “ப்ளு புக்” என்கிற உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ள விபரங்களுக்களைத் தவிர ஆளுநர் சேர் ரொபர்ட் சார்மஸ்ஸின் (Sir Robert Chalmers) ஏனைய அனைத்து ஆவணங்களிலும் எதிர்ப்புணர்ச்சி மிக்க மூர்க்கத்தனமான கலவரமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.
மே 31இல் அவரின் அறிக்கையில் “கண்டியைச் சூழ நடந்த அசம்பாவிதங்கள் கண்டியைச் சேர்ந்தவர்களால் நிகழ்ந்திருக்கிறது, கண்டியைச் சூழ மட்டும் தான் இவை நிகழ்ந்தன” என்று அறிக்கையிட்டிருக்கிறார்.
கொழும்பில் தொடங்கிய கலவரத்தை தொடக்கி தலைமை தாங்கியவர்கள் இரயில்வே தொழிலாளர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான சிங்கள வியாபாரிகள் மத உணர்வுகளை பரப்பி இருந்தனர் என்றும் குறிப்பிட்ட அவர் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருந்தனர் என்று அவரது அறிக்கைகளில் தொடர்ச்சியாக விளக்கிவந்திருக்கிறார்.
முஸ்லிம் விரோதபோக்குக்கு துணை சேர்ப்பதற்காக அவர்கள் அரசாங்கத்தை பிழையாக திசைதிருப்பினர் என்று சூட்சுமமாக நியாயப்படுத்தினார் அவர்.
“பிரித்தானியாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிகழ்ந்துவந்ததால் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களும் பிரித்தானியாவின் எதிரிகளாக கருதப்படுவார்கள் என்கிற எண்ணம் அவர்களிடத்தில் இருக்கிறது” என்று ஜூன் 7 அன்று அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் இரு மாதங்களுக்குப் பின்னர் ஓகஸ்ட் 11 அன்று காலனித்துவ செயலாளருக்கு இப்படி அறிவித்திருக்கிறார்.
“துருக்கி பிரித்தானியாவுக்கு எதிரான போரில் இறங்கியிருப்பதால், இங்கிருக்கும் முஸ்லிம்களுக்கும் துன்பம் கொடுத்து நாட்டிலிருந்து விரட்டிவிடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்கிற கதையை கெட்டித்தனமாக பல பிரதேசங்களுக்கு பரப்பியுள்ளனர்.” இப்படிச் சொல்வதன் மூலம், அரசாங்கம் அதகயவர்களைத் தான் ஒடுக்கவேண்டி ஏற்பட்டது என்றும் முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டி ஏற்பட்டதாகவும் கூற முனைகிறார்.
ஆளுநரின் ஆரம்ப அறிக்கைகளில் இந்த கலவரத்தை ஒரு சதி முயற்சியாக சித்திரிக்கவில்லை. ஜூன் 1ஆம் திகதி கடிதத்தில் அவர் “ஐரோப்பியர்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கமோ, இரயில்களுக்கு சேதம் விளைவிக்கவோ, முஸ்லிம் அல்லாதோரின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கமோ அவர்களிடத்தில் இருக்கவில்லை.”
ஆனால் அதன் பின்னர் நிகழ்ந்த ஆங்கிலேய அட்டூழியங்களை நியாயப்படுத்த உரிய காரணங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டது. எனவே இந்த கலவரம் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான சதியென்று தொடர்ச்சியாக நிறுவும் தேவைக்கு தள்ளப்பட்டார் அவர். இவை பற்றிய உண்மைகளை வெளியுலகுக்கு வெளிவராத வண்ணம் ஊடக தணிக்கையை அமுல்படுத்தியிருந்தார். சிங்களத்தில் வெளியிடப்பட்ட பல வெளியீடுகள் கூட மக்கள் பார்வைக்கு 1916ஆண்டு பெப்ரவரி தான் கிடைத்தன. பத்திரிகை ஆசிரியர்களுக்குக் கூட சேர் ரொபர்ட் சார்மஸ் நாட்டை விட்டுச் சென்று இரண்டு மாதங்களின் பின்னர் தான் அந்த பதிப்புகளைக் காணக்கிடைத்தன. ஆனால் அவரது கண்களில் மண்ணைத்தூவி விட்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்து சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்கள் சேர்.பொன் இராமநாதன், ஈ.டபிள்யு.பெரேரா போன்றோர். ஆளுனர் எதிர்பாராதவை அவை.
சேர் ரொபர்ட் சார்மஸ் (Sir Robert Chalmers) |
இங்கிலாந்தில் உயர் மட்ட அதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களுக்கு நாட்டின் இக்கட்டான நிலைமையை விபரித்து, விசாரணைகுழு அமைக்க வேண்டினர். அநியாயமாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை, தண்டிக்கப்பட்டவர்களுக்கும், இழப்புகளை எதிர்கொண்டவர்களுக்கும் நீதி என்கிற நோக்கங்களுக்காக இந்த விசாரணைக் கொமிசன் நியமிக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர். இவை குறித்து ஆளுனருக்கு காலனித்துவ செயலாளரால் கடிதங்கள் அனுப்பட்டன. ஆத்திரமுற்ற ஆளுநர் இலங்கையர்களில அதிருப்தியாளர்கள் பலரம் உள்ளார்கள் என்று பதில் கொடுத்ததுடன் “அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டால் அது பெரும் விபரீதங்களை உண்டுபண்ணுவதுடன் எதிராளிகளை மேலும் பலப்படுத்தும்” என்று பதில் அனுப்பினார். மேலும் இதனால் தமது தரப்பு பிழைகளை விளங்கிக்கொண்ட அதிகாரிகள், இராணுவத்தினரை கூட இதனால் பீதியுறச்செய்யும் என்றும் எழுதினார்.
அவரது அறிக்கைகளில் தனது செய்கைகளை நியாயப்படுத்துவதற்காக நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை விமர்சித்து வந்த சக்திகளின் மீது பழிகளை அடுக்கிக்கொண்டுச் சென்றார். அப்படிப்பட்ட பழிகளுக்கு இலக்கான ஒரு அமைப்பு “மகாபோதி சங்கம்”
“மகா போதி சங்கம்”
மகாபோதி சங்கத்தை ஒரு ஆங்கிலேய விரோத அமைப்பாகவே சார்மஸ் முன்னிறுத்தினார். மகாபோதி சங்கம் அநகாரிக தர்மபாலவால் கல்கத்தாவிலுள்ள புத்தகயாவை ஹிந்துக்களிடம் மீட்பதற்காகவும், பௌத்த மறுமலர்ச்சி, பௌத்த புனருத்தாரணம், ஆங்கிலேய கத்தோலிக்க மிஷனரிமாரின் கத்தோலிக்கமயப்படுத்தளிலிருந்து பௌத்தத்தை மீட்பதற்காகவும் 17.07.1891 இல் உருவாக்கப்பட்டது. “Maha Bodhi society” என்கிற பேரில் ஒரு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. அதைவிட முக்கியமாக “சிங்கள பௌத்தயா” என்கிற இனவாத பத்திரிகையும் கூட இந்த அமைப்பால் தான் வெளியிடப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுநிலையை பரப்பியதில் அறைய காலப்பகுதியில் அநகாரிக்க தர்மபாலவுக்கும், மகாபோதி சங்கத்தின் கீழ் இயங்கிய வெளியீடுகள் திணை அமைப்புகளுக்கும் பெரும் பாத்திரமிருந்ததால் இவை அனைத்தும் ஆளுநரால் குறிவைக்கப்பட்டன. ஆளுநரின் பழிசுமத்தலுக்கு இலகுவாக இருந்தன. எனவே தான் அநகாரிக்க தர்மபால கல்கத்தாவில் பல வருடங்களுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதும், இலங்கையில் மகாபோதி சங்கத்தின் அலுவலகத்திற்கும், அச்சகத்திற்கும் புகுந்து ஆவணங்களையும், வெளியீடுகளையும் அள்ளிக்கொண்டு சென்றது மட்டுமன்றி “சிங்கள பௌத்தயா” பத்திரிகை தடை செய்யப்பட்டதும் இதன் தொடர்ச்சி தான்.
ஒருபுறம் இனவாத கருத்துக்களைக் கொண்டிருந்த இந்த மகாபோதி சங்கம் மறுபுறம் பௌத்த மறுமலர்ச்சிக்கு ஆற்றிய தொண்டும், புத்தகயா மீதப் பணியில் ஆற்றிய பாத்திரமும் ஆளுனருக்கு நன்கு தெரியும். ஆளுனர் சார்மஸ் இலங்கைக்கு ஆளுனராக வந்தவர்களிலேயே பௌத்தத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் என்றால் அது மிகையில்லை. அவர் பாலி மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். பாலி மொழியில் பௌத்த இலக்கியங்களைக் கற்றறிந்தவர். அது மட்டுமன்றி ஆங்கிலத்தில் பௌத்த இலக்கியங்கள் குறித்து தர்க்கபூர்வமான ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறார். அப்பேர்பட்ட அவர் பௌத்த செயற்பாடுகளை 1915 கலவரத்துக்கு காரணமாக இலகுவில் குற்றம் சுமத்தவைத்தது எது என்கிற கேள்வி எழுகின்றது.
அவர் அன்று தனிப்பட்ட இழப்புகளால் கொண்டிருந்த மனநிலையில் எடுத்த உணர்ச்சிவயப்பட்ட அரசியல் முடிவுகளை நியாயப்படுத்தவே ஒன்றன்பின் ஒன்றாக சிங்கள பௌத்த சக்திகள் மீது இலகுவாக பழிகளை சுமத்தி இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பினார். சிங்கள பௌத்த சக்திகளின் அதுவரையான ஆங்கிலேய எதிர்ப்பு பரப்புரை சாதகமாக அமைந்தன. அவற்றின் செயற்பாடுகள் ஆங்கிலேய அரசை கவிழ்க்க சதிசெய்யும் அளவுக்கு பின்புலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆளுநர் அறிந்திருந்தும் கூட அந்த சக்திகளின் மீது இலகுவாக பழியைப் போட்டுவிட்டு தப்புவதற்கு எது தள்ளியது என்கிற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
சிங்கள பௌத்த சக்திகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேற்கொண்ட சிங்கள பௌத்த இனவாத எழுச்சி அந்த காலப்பகுதியில் சிங்கள சாதாரணர்களின் இனவாத உணர்ச்சியத் தூண்டியிருந்தது உண்மை தான். அவை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகலையும் ஊக்குவித்திருந்தன என்பதும் உண்மையே.
ஆனால், 1915 கலவரம் திட்டமிடப்பட்ட ஒரு கலவரம் அல்ல. கலவரத்தில் நேரடி பாத்திரத்தை இந்த சிங்கள பௌத்த சக்திகள் வகிக்கவும்வில்லை, ஆங்கிலேய ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதியும் இருக்கவில்லை என்பது உண்மையிலும் உண்மை. ஆனால் அது தான் நடந்தது என்று ஆளுநர் சார்மஸ் வெவ்வேறு கடிதங்களுக்கூடாக தெரிவித்திருந்தார். மேலும் சொல்லப்போனால் இந்த கலவரத்தை ஒரு பாரிய இனவாத கலவரமாக வரலாற்றில் பதியச் செய்ததும் சார்மஸ் தான் என்றால் அது மிகையாகாது.
தொடரும்..
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...