Headlines News :
முகப்பு » , , , , » டீ.எஸ்.சேனநாயக்க: 40 நாள் சிறை வாழ்க்கை (1915 கண்டி கலகம் –54) - என்.சரவணன்

டீ.எஸ்.சேனநாயக்க: 40 நாள் சிறை வாழ்க்கை (1915 கண்டி கலகம் –54) - என்.சரவணன்


டீ.எஸ்.சேனநாயக்க
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் டீ.எஸ்.சேனநாயக்க. பிற்காலத்தில் சுதந்திர இலங்கையில் முதலாவது பிரதமராக தெரிவானவர். அவர் ஆங்கிலம் கற்ற நிலபிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தர். அரசியல் செயற்பாடுகளுக்கு பேர்போன குடும்பம். குறிப்பாக இந்த கலவரத்திரகு காரணமென குற்றம் சுமத்தப்பட்ட மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர். அன்றைய பௌத்த மறுமலர்ச்சிக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியவரும் கூட.

இதை எல்லாவற்றையும் விட அவர் கொழும்பு நகரப் பாதுகாப்பு சேனையின் ஒரு ஊக்குவிப்புக் குழுவின் உறுப்பினரும் கூட. அதுமட்டுமன்றி கலவரம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்த நகரப்பாதுகாப்பு படையின் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கியவர். அவரது சேவையைப் பாராட்டி அவரது உயர் அதிகாரியால் ஒரு வர்த்தக விளம்பரத்தின் ஊடாக செய்தி கூட வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் 21 ஆம் திகதி அவர் இன்னும் சிலருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் 40 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அவர் மீது இறுதிவரை எதுவித குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாத நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையானதன் பின்னர் நகரப் பாதுகாப்பு படையுடன் தொடர்ந்து சேவையில் இருக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்படையின் உயர் அதிகாரியால் ஆணையிடப்பட்டிருந்தது. இதே வகை நிபந்தனை டபிள்யு ஏ.டி.சில்வாவுக்கும் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது. ஒரு சுயேட்சைத தொண்டராகவே அவர் அபடையின் சேவையில் அவர் இருந்ததாலும் எந்தவித குற்றத்தையும் செய்து கைது செய்யப்படாததாலும் அவர் அப்பேர்பட்ட ஒரு நிபந்தனைக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைப்பாட்டில் அவர் இருந்தார். இது ஒரு இராணுவ ஆணையா அல்லது வெறும் அறிவித்தலா என்பதை தான் அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார். அது வெறும் அறிவித்தலெ என்றும் ஆனால் டீ.எஸ் சேனநாயக்க ஆளுநரின் நற்சான்றிதழ் ஒன்றினை பெற்றுக்கொண்டு சமர்பித்தாலே ஒழிய தொடர்ந்தும் அந்த படையில் அவர் அங்கம் வகிக்க முடியாது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. அப்படி ஒரு அறிவித்தலை டீ.எஸ்.சேனநாயக்க எதிர்கொண்ட விதத்தைக் கண்டு அதிகாரிகள் குழப்பமடைந்தார்கள்.

டீ.எஸ்.சேனநாயக்க வெளிப்படையாகவே இதனை அறிவித்தார். அப்பேர்பட்ட ஒரு நற்சான்றிதழைப் பெறுவதை தான் நிராகரிப்பதாக உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவித்தார். தனது நன்னடத்தையை புனருத்தாபனம் செய்ய வேண்டிய அளவுக்கு எதுவித அவசியமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தன்னைப் போன்ற மனிதர்களை சிறை செய்தவர்களின் கைகளால் தனது பெயரின் களங்கத்தைத் தீர்க்க முடியாது என்றும். தன்னை கைது செய்தவர்களிடம் அத்தகையவற்றை பெரும் படியும் அவர் துணிச்சலுடன் தெரிவித்தார். அப்படி செய்தால் தான் அதனுடன் பணிபுரிவற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள இயலும் என்றும் அவர் எழுதினார். தனக்கான நற்சான்றிதழைப் பெறுவதற்கு ஆளுநர் ரொபர்ட் சார்மசிடம் தான் செல்வதற்கான அவசியம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். டீ.எஸ்.சேனநாயக்கவை கைது செய்வதற்கான அடிப்படைக் காரணம் எது என்பதை அறிவிக்க இயலாத நிலையில் அவரை எந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பது என்பதையும் கூட அறிவிக்க முடியாது திண்டாடியிருந்தனர் ஆங்கிலேயப் படையினர். இப்பேர்பட்ட நற்சான்றிதழை தன்னிடமிருந்து அல்ல, அதனை படையினரிடமிருந்தே பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை தான் கூட அறியாத நிலையில் தன்னை ஒரு நிரபராதியாக வெளிப்படுத்துவது என்ன அடிப்படையில் என்கிற அவரது நியாயமான கேள்விக்கு அவர்களால் விடைபகர முடியவில்லை. இந்த வேடிக்கையான போக்கை கேலி செய்த அவர் இதற்கு மேல் தான் அதில் அங்கம் வகிக்கத் தான் வேண்டுமா என்று கேட்டார்.

இறுதியில் நிகழ்ந்த வேடிக்கையான பிரதிபலன் கவனிக்கத்தக்கது. சில நாட்களின் பின்னர் டீ.எஸ்.சேனநாயக்கவின் எந்த வித கடிதமோ, சான்றிதழோ இல்லாத நிலையில் கூட அவர் நகரப் பாதுகாப்பு படையின் சேவையில் ஈடுபடுவதை ஆளுநர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிராகரிப்பைக் காரணம் காட்டி ஆளுனரால் அவர் கைது செய்யப்படவும் முடியும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

நிரபராதிகளை காரணமே இன்றி ஒடுக்கியவர்களிடம் போய் நற்சான்றிதழ் பெறுவதை டீ.எஸ்.சேனநாயக்க போன்ற பலரும் ஒரு வெட்கத்துக்குரிய செயலாகவே கருதினார்கள். அவர்கள் அதனை வெளிப்படையாக துணிச்சலாக அறிவிக்கவும் செய்தார்கள்.

டபிள்யு.ஏ.டீ.சில்வா
டபிள்யு.ஏ.டீ.சில்வா இந்த விடயத்தில் சற்று மாறுபட்டு நடந்துகொண்டார். அவர் இந்த நற்சான்றிதழ் விடயத்தில் சிக்கவைக்கப்பட்டிருந்தார். அவர் 1915 ஜூன் 21 ஆம் திகதி இன்னும் சில சிங்களத் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஏனையோரைப் போலவே வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்படிருந்தார்கள். அவர்கள் மீது எந்த வித குற்றச்சாட்டையும் முன் வைக்கவுமில்லை. அதுபோல அவர்கள் தாம் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம், குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது குறித்து அறிவதற்கு எந்த வித சந்தர்ப்பமும் இருக்கவில்லை. அவர்கள் படித்த, வசதி படைத்தவர்களாகவும் இருந்ததால் வேகமாக தமக்கான வழக்கறிஞர்களை அமர்த்த முடிந்தது. உயர் நீதிமன்ற நீதியரசராக அப்போது இருந்தவர் சேர்.ஏ.வூட் ரெண்டன் (Chief Justice Wood Renton). 1915 கலவர வழக்குகளில் முக்கிய வழக்கான கேகாலை படுகொலை சம்பவத்தை விசாரணை செய்த ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர் இவர். ஆனால் டீ சில்வா வழக்கில் ரெண்டன் நீதியாக நடந்துகொள்ளவில்லை.
டபிள்யு.ஏ.டீ.சில்வா
டபிள்யு.ஏ.டீ.சில்வா இதற்குமேல் தாமதிக்காது பிரிவுக் கவுன்சிலுக்கு முறையீடு செய்வதே சிறந்த வழி என்று தனது சட்ட ஆலோசகர் ஈ.டபிள்யு.பெரேராவை இங்கிலாந்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். தனது பயணத்தின் நோக்கத்தை விளக்கி ஈ.டபிள்யு.பெரேரா நீதிமன்றத்துக்கு விளக்கமளித்தார். ஈ.டபிள்யு.பெரேராவின் இங்கிலாந்து பயணத்தை ஆங்கில ஆட்சியாளர்களால் நிறுத்த முடியவில்லை. அவரது பயணத்துக்கு இடமளிக்க வேண்டியேற்பட்டது. அதே வேளை இவர்கள் மீதான கைதுகுறித்து மேலதிக விசாரணையை மேற்கொள்ள தள்ளப்பட்டனர். இங்கிலாந்துக்கு சென்ற ஈ.டபிள்யு.பெரேரா அங்கு மேலதிக விசாரணையை வலியுறுத்துவார் என்பதை இலங்கையில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். விசாரணைக்கான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த ஆளுநர் சார்மஸ் உடனடிப் பணிகளில் இறங்க தீர்மானித்தார். டபிள்யு.ஏ.டீ.சில்வா தன்னை விடுவிக்கும் வரை அவர் ஓயா மாட்டார் என்பதை அதிகாரிகள் அறிந்திருந்தனர். வேறு வழியின்றி இங்கிலாந்தில் இருந்து ஆணை வருவதற்கு முன்னரே அவரை விடுதலை செய்தனர்.

அவர் விடுதலையானதும் ஆங்கில உறுப்பினரான சேர் ஹெக்டர் வென்குய்லெம்பர்க் டபிள்யு.ஏ.டீ.சில்வாவை பார்பதற்காக சென்றிருந்தார். இந்த கலவரத்துக்கு பிரதான காரணமானவர்கள் இங்கிலாந்து சென்று கற்று திரும்பிய சிங்களவர்களே என்றும் அவர்களின் இறுதி லட்சியம் சிங்கள அரசை ஸ்தாபிப்பதே என்றும் அவர் அரசாங்க சபையில் ஒரு தடவை உரையாற்றியிருந்தார். டபிள்யு.ஏ.டீ.சில்வாவை சரி செய்வதற்காகவே ஹெக்டர் அனுப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் எழுப்புகிறார். டபிள்யு.ஏ.டீ.சில்வாவுடன் ஹெக்டர் நடத்திய நீண்ட உரையாடலில்  சில்வாவுக்கு ஆளுநர் பெரும் அநீதி இழைத்திருப்பதை தான் அறிவதாகவும் அதனை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சில்வாவின் பெயருக்கு எந்த வித களங்கமும் ஏற்படவில்லை, கவலைகொள்ளவேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

டபிள்யு.ஏ.டீ.சில்வா அமைதியான நபர். அவர் வாத விவாதங்களையோ, சர்ச்சைகளையோ தவிர்த்து வரும் நபர். அதே வேளை தனது சுய கௌரவத்தில் கறாராக இருப்பவர். அவர் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். காலம்கடந்த விடுதலையாக இருந்தபோதும் ஆளுநர் இந்த விடயத்தில் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், தன் மீதுள்ள சுமத்தப்பட்ட பொய்க்காரணங்களை நீக்க வேண்டும் என்றும் என்றும் கேட்டுக்கொண்டார். தன்னை கைது செய்து, சிறையில் வைத்து, பின்னர் விடுதலை செய்தமை குறித்து விரிவாக விளக்கி ஆளுநருக்கு அவர் எழுதிய அந்த கடிதத்தில் தன் மீது சந்தேகம் கொள்வதற்கும், அவநம்பிக்கை ஏற்படுவதற்கும் அடிப்படை என்ன என்பதை தான் அறிய விரும்புவதாக ஆளுநரிடம் கேட்டுகொண்டார்.
ஈ.டபிள்யு.பெரேரா
இந்த கடித்தத்தை அவர் பகிரங்கப்படுத்தவில்லை. அது அந்தளவு முக்கியமில்லை என்று அவர் கருதியிருக்கலாம். இந்த கடிதம் குறித்து சேர் ஹெக்டர் அறிந்திருந்தார். எவ்வாறாயினும் இறுதியில் ஆளுநர் சார்மஸ் டபிள்யு.ஏ.டீ.சில்வாவுக்கு பதிலனுப்பினார். இதில் அவர் சிக்கவைக்கப்பட்டமை குறித்து தனது கவலையைத தெரிவித்ததுடன், சில்வாவின் பெயரில் சிறிதும் களங்கமில்லை என்பதையும் தெரிவித்தார். டபிள்யு.ஏ.டீ.சில்வா இந்தக் கடிதத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். அவை பிரசுரிக்கப்பட்டன. இதன் மூலம் இங்கிலாந்து சென்ற ஈ.டபிள்யு. பெரேராவை திருப்பி அழைப்பதற்கு விரும்பினார். ஒரு தேசபக்தனான சில்வா பெரேராவை திருப்பி அழைக்கவோ, நாட்டு மக்களின் அன்றைய கோரிக்கையையும் அபிலாசையையும் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.

ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்தில் நடத்திய முயற்சியின் விளைவாக ஆளுநர் திருப்பி அழைக்கபட்டார். ஆளுநர் ரொபர்ட் சார்மஸ் பதவியை இழந்து இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டதன் பின்னரும் கூட சில காலம் ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்திலேயே தங்கியிருந்து மேலதிக பணிகளை முடிக்க வேண்டியிருந்தது. ஆளுநரிடம் இருந்து இப்பேர்பட்ட ஒரு வருத்தம் தெரிவிக்கும் கடித்தத்தை பெற்றது டபிள்யு.ஏ.டீ.சில்வா மட்டுமே.

ஆளுநரின் நோக்கம் நிறைவேறவில்லை, ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்தில் செய்த முறைப்பாடுகள் ஆளுநருக்கு அங்கிருந்து அதிகாரிகளால் அனுப்பப்பட்டிருந்தது.

“பெரேரா போன்ற தகுதியில் இருப்பவர் ஒருவர் குறிப்பிடுபவற்றை ஆளுநரோ அல்லது காலனித்துவ செயலாளராலோ ஏற்றுக்கொள்ள தகுந்தவை அல்ல என்பதை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று ஆளுநர் சார்மஸ் பதில் எழுதினார். ஆத்திரமடைந்த ஆளுநரின் கீழ்த்தரமான வெளிப்பாடு அது. பெரேராவின் “தகுதி” குறித்து அவர் குறிப்பிட்ட விடயம் விசனத்துக்கு உள்ளானது.

ஈ.டபிள்யு.பெரேரா ஒரு தேர்ந்த சட்ட வல்லுநர். வழக்கறிஞர். சிங்கள சமூகம் அறிந்த படித்த சமூகத் தொண்டர். அரசியல் தலைவர். அப்பேர்பட்ட ஒருவரின் முறைப்பாடுகளை ஏற்பதில் தகுதியை ஒரு காரணமாக குறிப்பிட்டு ஆளுநர் ஆத்திரத்தில் தனது தகுதியை கீழிறக்கிக் கொண்டார் என்கிறார் ஆர்மண்ட் டீ சூசா. தன்னால் சரியான விளக்கமளிக்க முடியாத பலவீனத்தின் விளைவே இத்தகைய பதில் என்பதை காலனித்துவ செயலகம் விளங்கியிருக்க வேண்டும். எனவே தான் இறுதியில் சார்மஸ் பதவி இழந்து திரும்பும் நிலை ஏற்பட்டது.

தொடரும்...
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates