Headlines News :
முகப்பு » , , , , » பிராயச்சித்தம் தேடிய ஆளுநர் அண்டர்சன் (1915 கண்டி கலகம் –53) - என்.சரவணன்

பிராயச்சித்தம் தேடிய ஆளுநர் அண்டர்சன் (1915 கண்டி கலகம் –53) - என்.சரவணன்

Sir John Anderson
மகாபோதி சங்கம் குறித்து ஆளுநர் சார்மஸ் எடுத்த தவறான  முடிவுகளை சரி செய்ய அவருக்கு இருந்த அனைத்து சந்தர்ப்பங்களையும் புறக்கணித்தார். போதுமான விசாரணைகள் இன்றி தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி அவ்வியக்கத்தின் செயற்ப்பாடுகளையும், செயற்பாட்டாளர்களையும் மோசமாக ஒடுக்கினார்.

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அரசாங்க சபையில் ஹெரி கிரீசி 9.06.1916 அதாவது கலவரம் நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் பிரேரனையைக் கொண்டு வந்தார். அந்த பிரேரணையில் அவர் அதிகமாக வலியுறுத்தியது தேசத்துரோகம் குறித்த வரைவிலக்கணத்துக்குள் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொருந்துகின்றனவா என்பது குறித்தது. 

அன்டன் பேட்ரம்
ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட மோசமான அதிரடி முடிவுகளுக்கு அன்டன் பேட்ரமும் துணைபோனவர் தான். அன்டன் பேட்ரம் (Anton Bertram)  1911-18 காலப்பகுதியில் சட்ட மா அதிபராக கடமை வகித்தவர். அதன் பின்னர் 1918-25 வரை இலங்கையின் பிரதம நீதியரசராக கடமையாற்றியவர்.
Anton Bertram

“தேச நிந்தனை”, “தேசத்துரோகம்”, “திட்டமிட்ட சதி”, “நன்கு தயாரிக்கப்பட்ட வன்செயல்” போன்ற குற்றச்சாட்டுக்களை உருதிபடுத்தியத்தில் அவருக்கு முக்கிய பாத்திரம் உண்டு. அன்டன் பேட்ரத்தோடு விவாதித்த பல சம்பவங்களை சேர். பொன் இராமநாதன் தனது நூலில் பல இடங்களில் விளக்குகிறார். ஆனால் அன்டன் பேட்ரம் பின்னர் தனது கருத்துக்களை மாற்றிக்கொண்டு உண்மையை ஏற்றுக்கொண்டார் என்று பிளக்டோன் (Blackton, Charles) எழுதிய 1915 கலவரங்களில் அதிரடி கட்டம் (The Action Phase of the 1915 Riots) என்கிற ஆய்வில் விளக்குகின்றார்.

பலமுனை அழுத்தங்களின் விளைவாக அவர் பிழையான முடிவுகளுக்கு துணைபோனார் என்று அவரது நண்பர் மேசன் மூர் (Henry Monck-Mason Moore) பிற்காலத்தில் குறிப்பிடுகிறார்.  மேசன் மூர் பின்னர் இலங்கையின் ஆளுநராக கடமையாற்றியவர். இலங்கையில் இறுதி ஆங்கில ஆளுநர் (1944-1948)அவர் தான். இலங்கையின் சுதந்திர சாசனத்தில் டீ.எஸ்.சேனநாயக்கவுடன் சேர்ந்து கையெழுத்திட்டவரும் அவர் தான்.

அன்டன் பேட்ரம் பின்னர் தன்னை விளங்கிக் கொண்டதன் பின்னர் அரசாங்கம் குறித்து அதிகாரபூர்வமாக அரசாங்க சபையில் இப்படி குறிப்பிட்டார்.
Henry Monck-Mason Moore
“இந்தக் கலவரத்தை உருவாக்கிய பிரதேசவாசிகளும் ஏனையோரும் அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ, கிளர்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடனோ, இந்த நாட்டில் அரசரின் அரசாங்கத்தை அழிக்கும் நோக்கத்துடனோ, அரசருக்கு எதிரான துரோகம் செய்யும் நோக்குடனோ மேற்கொண்டார்கள் என்று நாங்கள் கருதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்த நாட்டின் இன்னொரு இனத்தவர் மீது தாக்குதல் தொடுத்தார்கள் என்பது பற்றியது தான் இது. இப்போது சிறைகளில் இருக்கின்ற பலரை என்ன செய்வது என்பது பற்றிய இந்த விவாதத்தில் நீங்கள் குறிப்பட்டது போல சிங்கள மக்களின் அரச விசுவாசம் குறித்தும் கவனத்தில் எடுப்பதற்கு பின் வாங்கிவிடக் கூடாது.”
இந்த கருத்தை அவர் வெளியிட்ட வேளை சேர் சார்மர்ஸ் பதிவியிழந்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சேர் அண்டர்சன் அவருக்குப் பதிலாக ஆளுநராக பதவியிலமர்ந்து இருந்தார். 

ஆளுநர் சார்மஸ் அனுப்பிய இறுதி அறிக்கையில் தன்னையும், அதிகாரிகளையும் தர்காத்துக்கொள்வதற்காக பல வசங்களைச் சேர்த்திருந்தார்.
“சட்டபூர்வமான சேவை குறித்த அனுபவமுள்ள சிவில் சேவையில் இருந்தவர்களில் தெரிவு செய்யப்பட இந்த ஆணையாளர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மிகவும் ஆழமாக விசாரித்து மதிப்பீடு செய்தார்கள்.”
ஈ.டபிள்யு.பெரேராவின் முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும்முகமாகவே நவம்பர் 4 அன்று அவர் இதனை எழுதியிருந்தார்.

ஆனால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது செப்டம்பர் 17 ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்படி
“முன்னர் மேற்கொண்டிருந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்பது உறுதியாகியிருக்கிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஏறத்தாழ ஐந்தரை மில்லியன்கள் என்று இத்தால் அறிவித்துக்கொள்கிறேன். இவை மீள் திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற போதும் அதில் பெரிய மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.”
சேத மதிப்பீடுகளை சரியாகத்தான் மேற்கொள்ளப்பட்டிருப்பின் இது அதிகமானது என்று மீண்டும் முடிவுக்கு வர வேண்டிய அவசியம் என்ன. அதுவும் பலரிடம் இருந்து மிகவும் மோசமான மிரட்டல்களை விடுத்து அந்தத் தொகைகள் பெறப்பட்டன.

இந்த பிழையான முடிவுகளுக்கு சிறந்த முன்னுதாரணம் யாதெனில் கலவரம் நிகழ்ந்த முதல் வாரத்தில் மாத்திரம் பத்து மில்லியன்களுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆளுநர் காலனித்துவ செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில் அனுப்பியிருக்கிறார். இந்தத் தொகை கிட்டத்தட்ட அரைவாசியாக குறைந்தது எப்படி என்கிற கேள்வி எழுகிறது.

ஆளுநர் சார்மஸ் ஆரம்பத்திலிருந்தே பொறுப்பற்ற முறையில் எதேச்சதிகாரமாக மேற்கொண்ட அத்தனையையும் அவர் பின்னர் நியாயப்படுத்த அதிக பிரயத்தனப்பட்டார் என்பதை அவரது பிந்திய நடவடிக்கைகள் பல நிரூபித்தன.

சார்மஸ் தனது அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக “இந்த கனவான்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைது செயப்பட்டார்கள்” என்றார். டபிள்யு ஏ.டீ.சில்வா குறித்து இப்படி குறிப்பட்டார்.

“கலாநிதி . டபிள்யு ஏ.டீ.சில்வா விடயத்தில் தவறு நிகழ்ந்திருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு எதிரான எத்தனைப் பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை அவர் விடுதலையானதன் பின்னர் தெரிவித்தேன். டபிள்யு ஏ.டீ.சில்வா இந்த விடயத்திற்கு அதிக ஊடக பிரச்சாரம் செய்திருந்தார்.

ஆளுநர் சார்மஸ் இது போல கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் குறித்தும் கருத்து வெளியிட்டிருக்கலாம். அது அவரால் இறுதிவரை முடியவில்லை.

ஆளுநர் அண்டர்சன்
புதிய ஆளுநர் அண்டர்சன் (Sir John Anderson) முந்திய ஆளுனரின் பிழைகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள நேர்ந்தது. அவர் ஆளுனராக வந்ததும் முதலில் மொறட்டுவ பிரதேசத்தவர்கள் வழங்க வேண்டிய நட்டஈட்டை குறைத்தார். அதே பாணியில் ஏனைய பிரதேசங்களுக்கும் தொடர்ந்தார்.

தமது சுய விருப்பின் பேரில் பல பிரதேசத்தவர்கள் இழப்பீடு வழங்க முன்வந்தார்கள் என்று சார்மஸ் கூறிய போதும் அப்படி “சுயவிருப்பின் பேரில்” தருமாறு ஆணையாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது பல முறைப்பாடுகளில் வெளியானது. அப்படி கையெழுத்திட்டு வாங்கப்பட்ட ரசீதுகள், சத்தியக்கடதாசிகள் அரசாங்க சபையில் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. அந்த நட்ட ஈடுகள் வழங்காவிட்டால் அவர்களை சிறையில் தள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டதும், இராணுவ சட்டத்தின் கீழ் அரச ஆணையை புறக்கணித்தால் மரண தண்டனை வழங்கப்படும் என்று மிரட்டப்பட்டதும் கூட பதிவாகியிருக்கிறது.

முறைப்பாடு செய்யப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அவை சிவில் சேவையில் இருந்தவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட விசேட ஆணையாளர்களால் விசாரிக்கப்பட்டன. சில சிக்கலான வழக்குகளை அவர்கள் இராணுவ நீதிமன்றத்துக்கு அனுப்பினர். அதற்கு முன்னர் அப்படியான வழக்குகள் சட்ட மா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இந்த நடைமுறையின்படி மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் பலவற்றை புதிய ஆளுநர் பரிசீலனைக்கு எடுத்தார்.

அண்டர்சன் தலைமையில் வழக்குகள் பல மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு பலர் விடுதலையானார்கள். பலர் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டார்கள். ஆளுநர் சார்மஸ் மீள திருப்பி அழைக்கப்பட்டதும் அவருக்குப் பதிலாக சேர் ஜோன் அண்டர்சன் 15.04.1916 இலிருந்து ஆளுனராக பதவி வகித்தார். சரியாக இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே அவர் பதவி வகிக்க முடிந்தது. அதற்குள் அவர் தன்னை ஈடுபடுத்திய முக்கியமான பணியே இந்த கலவராம் குறித்த சிக்கல்களை நிவர்த்தி செய்வதே. நேரடியாக தனது தற்றுணிவின் பேரில் இந்த மாற்றங்களைச் செய்தார்.

அவர் நுவரெலியாவிலுள்ள இராணி விடுதியில் தங்கியிருந்த போது 24.03.1918 அன்று திடீரெண்டு விழுந்து மரணமானார். அவர் அப்படி அப்படி இறந்த வேளை அவரது அருகில் இருந்தவர் மகா முதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க (SWRD.பண்டாரநாயக்கவின் தகப்பனார்). அவர் எழுதிய குறிப்பில் “தனது பதவிக் காலம் முடியுமுன்னரே இலங்கையில் இறந்துபோன முதல் ஆளுனர் சேர் ஜோன் அண்டர்சன் அவர்கள். ஒரு நேர்மையான மகத்தான மனிதனின் ஈடிணையற்ற இழப்பானது தனிப்பட்ட ரீதியிலும் எனக்கு பேரிழப்பு.” என்றார்.

தொடரும்...

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates