Headlines News :
முகப்பு » , , , , » கேகாலை படுகொலைகளும்! பித்தலாட்ட ஆணைக்குழுவும் (1915 கண்டி கலகம் –55) - என்.சரவணன்

கேகாலை படுகொலைகளும்! பித்தலாட்ட ஆணைக்குழுவும் (1915 கண்டி கலகம் –55) - என்.சரவணன்

Sir-Gualterus-Stewart-Schneider
1915 கலவரத்தின் போது நிகழ்ந்த மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக கேகாலை சூட்டுச் சம்பவம் கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த முறைப்பாடுகளும் விவாதஞளும் இங்கிலாந்து வரை பரவியிருந்தது. அதன் விளைவு தான் இந்த சம்பவத்தை விசாரிக்கவென ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

புதிய ஆளுநர் ஜோன் அண்டர்சன் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட ஆங்கிலேய படையினர் அனைவரும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது சுத்த பித்தலாட்டமே. வெறும் கண்துடைப்பே. அப்படி அழைக்கபடுவதாக அறிவிக்கப்பட்ட விசேட இராணுவ அதிகாரிகளின் பெயர்கள்.

  • மேஜர் பெலி
  • எப்.என்.சட்லோ,
  • டபிள்யு.எல்.எச்.கெண்டலோ
  • ஏ.டீ.ஸ்லய்
  • ஜே.சீ.மிச்சேல்,
  • ஏ.எல்.பென்ஸ்,
  • டபிள்யு.எஸ்கின் ஸ்மித்


இந்த அதிகாரிகளுடன் சில பஞ்சாப் படையினரும் சேர்ந்து 03.06.1915 அன்று கேகாலையில் அம்பே என்கிற கிராமத்துக்குள் நுழைந்தனர். அங்கு கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வியிடச் சென்றதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இப்படி அவர்கள் அந்த இடத்துக்கு சென்றது சம்பவம் நிகழ்ந்து ஒருவாரத்தின் பின்னர் தான்.

இவர்களுடன் அந்த பிரதேசத்தின் கிராமத் தலைவரும் (ரட்டே மாத்தயா)வும் செல்ல நேரிட்டிருந்தது. அந்த கிராமத்துக்குள் புகுந்து சந்தேகத்தின் பேரின் சிலரை சேர்த்துக்கொண்டு அங்கிருக்கும் நேர் களஞ்சியம் ஒன்றுக்குள் அடைத்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்திற்கு தலைமை தாங்கினார் என்று கூறி ரொமானிஸ் பெரேரா என்பவரை அங்கேயே சுட்டுத் தள்ளினர். இவர்களுடன் இருந்த போலிஸ் அதிகாரியான லவர் என்பவர் அங்கிருக்கும் சிங்களவர்களை நோக்கி மிகவும் கூடாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன் அங்கிருக்கும் பெண்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக்கொடுப்பதாக கூறி நிந்தித்திருக்கிறார். மேலும் அவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களவர்கள் இந்த நாட்டில் நாய்களைப் போலவும், வேடுவர்களாகவுமே இருந்ததாகவும் பிரித்தானியர்களுக்கு நன்றிக் கடன் பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

ஜூன் 9 அன்று சட்லோ உள்ளிட்ட குழு கொஹுபிடிய எனும் பகுதிக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு நுழையும் போது கலவரம் அடங்கியிருந்தது. அந்த பிரதேசத்தின் ஆராச்சி இப்ராஹிம் லெப்பை என்பவரை அவர்கள் சந்தித்தார்கள். சட்லோவின் குழு பல சிங்கள வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியில் இழுத்து வந்தார்கள். அவர்களை சுடும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் அங்கு நிகழ்ந்த சில நிகழ்சிகளின் பின்னர் இழுத்து வரப்பட்ட ஆண்களில் சிலர் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு தாக்கப்பட்டனர். அர்னோலிஸ், ஜூவானிஸ் ஆகிய இரண்டு அப்பாவிகளை பகிரங்கமாக சுட்டுக்கொன்றனர்.

அதே தினம் பெளியின் தலைமையில் பஞ்சாப் படையினரின் தலைமையில் யட்டியந்தோட்ட பகுதிக்குள் புகுந்து அங்கு ஜூவான் அப்பு என்பவரை இழுத்து வந்து சுட்டுக்கொன்றனர். இத்தனைக்கும் இந்த பிரதேசத்தில் எந்தவித கலவர நிகழ்வுகளும் நடக்கவுமில்லை. அமைதியாக இருந்த அந்த இடத்தில இத்தகைய பகிரங்க மரணதண்டனையை நிறைவேற்றியது அங்குள்ளவர்களை மிரட்டுவதற்காகவே. தம்மீதான பீதியை உணரச் செய்து அதிகாரத் திமிரை நிலைநாட்டுவதற்காகவே.
பின்னர்  இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணையின் போது சாட்சி கூறிய படையினர் ஜூவான் அப்பு என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த சண்டியர் என்றும் அந்த கிராமத்துக்கே அபகீர்த்தியை உண்டுபண்ணி வந்த ஒருவர் என்றும் அவரை கைது செய்து ஹோட்டலுக்குள் கொண்டு வந்து வழக்கு விசாரணை செய்து ஏனையோருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறினர்.

இதற்கு அடுத்த நாள் ஜூன் 10 அன்று தெஹியோவிட்ட எல்கொட கிராமத்துக்குச் சென்ற படையினர் தெள்னுஸ் அப்பு, போடி சிங்கே, ஜேம்ஸ் பாஸ் ஆகிய மூவரை பிடித்துச் சென்றனர். கிராமத்திலிருப்பவர்களில் மிகவும் மோசமானவர்கள் என்று கூறி அவர்களை பகிரங்கமாக அவர்களின் சிறு குழந்தைகளின் முன்னிலையில் சுட்டுக்கொன்றனர். 
ஜூன் 13 அன்று இலங்கை குதிரைப்படையைச் சேர்ந்த பெனிஸ் என்கிற சிப்பாய் தெரனியகல பகுதிக்கு சென்று சேரஹாமி  என்பவரை இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லும்படி ஆணையிடப்பட்டது. தனக்கு உயிர்பிச்சைத் தரும்படி கால்களில் விழுந்து மன்றாடி அழுது புரண்டபோதும் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டார் சேரஹாமி.

அன்று அதே தினம் நூதுறு என்கிற பிரதேசத்தில் பீட்டர் என்பவரை கைது செய்த படையினர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதன் ஒரே காரணம் அவரிடம் கத்தி இருந்தது என்பதற்காகவே.

ஜூன் 15 ஆம் திகதி ஸ்லைன் எனும் படையினன் டிங்கிரி பண்டா என்கிற உடுவே பிரதேசத்தைச் சேர்ந்த ஆராச்சியை சுட்டுக் கொன்றார். ஊரைச் சேர்ந்த ஆராச்சிமார் அரசாங்கத்தின் சேவகர்களாக கடமையாற்றியவர்கள். 12 சந்தேகநபர்களைக் கொண்ட பட்டியலொன்றை கொண்டுவந்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தரும்படி டிங்கிரி பண்டாவை முதல் நாள் ஸ்லைன் பணித்துள்ளார். 15 திகதி அந்த பட்டியலில் உள்ளவர்களில் மூன்று பேரை மாத்திரமே கண்டுபிடிக்க முடிந்திருந்தது. ஆத்திரமுற்ற ஸ்லைன் 15 நிமிடங்களுக்குள் ஏனையோரையும் பிடித்துத் தரும்படி ஆணையிட்டுள்ளார். 15 நிமிட முடிவில் ஆராச்சியை ஒரு மரத்தில் கட்டிவைத்து சுட்டுக் கொன்றுள்ளார் ஸ்லைன்.

நாடு முழுவதும் இப்படி படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் குறித்து ஆரம்பத்தில் பொதுமக்கள் மத்தியில் போதிய விளக்கமின்றி இருந்தனர். குறிப்பாக இவர்கள் உண்மையில் குற்றவாளிகளா இல்லையா என்பது குறித்து கூட போதிய விளக்கமின்றி குழப்பத்துடன் இருந்தார்கள். ஆனால் சகலதும் அடங்கியதன் பின்னர் கொல்லப்பட்டவர்கள் பலர் சாதாரண அப்பாவிகள் என்றும் இந்த கலவரத்துடன் சம்பந்தமே இல்லாதவர்கள் என்றும் தெரியவந்தது.

கேகாலையில் நிகழ்ந்த இந்த அநியாயத்துக்கு எதிராக துணிச்சலாக எதிர்க்கத் துணிந்தவர் ஏ.ஏ.விக்கிரமசிங்க என்பவர். அவர் ஒரு பிரசித்தி பெற்ற வழக்கறிஞர். ஆரம்பத்தில் கொள்ளைச் சம்பவங்களை அடக்குவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வந்த விக்கிரமசிங்க அரசாகத்தின் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்டு விரக்தியுற்றார். அதன் பின்னர் இராணுவச் சட்டம் அமுலில் இருந்த மூன்று மாதங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரி ஒரு கூட்டத்தை கொழும்பில் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பல அரசியல் தலைவர்களும் பங்குபற்றினர். அதன் விளைவு இந்த விடயங்களை முன்னெடுக்கவென ஒரு குழு அமைக்கப்பட்டது அதில் டீ.எஸ்.சேனநாயக்க எப்.ஆர்.சேனநாயக்க, விக்கிரமசிங்க, ஆகியோரைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்தனர். ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும்படி அவர்கள் காலனித்துவ செயலகத்திற்கு நிர்ப்பந்தித்தனர். இதன் பின்னர் தான் சேர் பொன் இராமநாதன், டீ.பீ.ஜயதிலக்க, ஈ.டபிள்யு பெரேரா போன்றோரின் இங்கிலாந்து விஜயம் நிகழ்ந்தது. இதன் போது தான் ஈ.டபிள்யு பெரேரா முக்கிய சாட்சியங்களை சப்பாத்துகடியில் வைத்து தைத்து எடுத்துக்கொண்டு சென்றார்.

அரசாங்க சபையில் பொன்னம்பலம் இராமநாதன் ஆளுநரின் முன்னிலையிலேயே பல பயங்கர சம்பவங்களை விபரித்தார். ஆனால் அதற்கு பதிலளித்த காலனித்துவ செயலாளர் அனைத்து தண்டைகளும் உரிய விசாரைகளின் பின்னரே நிகழ்ந்ததாக உண்மைக்குப் புறம்பான பதில் கூறப்பட்டது. அரசாங்க சபையில் எடுத்துரைப்பதன் மூலம் மாத்திரம் இதற்கு நியாயம் கிடைக்காது என்று விக்கிரமசிங்க கூட்டங்கள் நடத்தினார். சுட்டுக்கொல்லப்படவர்களில் ஒருவரான ஆராச்சியின் மனைவி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விக்கிரமசிங்க விசாரணை செய்தார். அவருக்கு கேகாலை மாவட்டத்தில் நிகழ்ந்த மேலும் பல படுகொலைகள் குறித்து பல தகவல்கள் அங்கு அவருக்குக் கிடைத்தன. அந்த தகவல்களைக் கொண்டு அவர் தயாரித்த அறிக்கையை பொன்னம்பலம் இராமநாதன், பரங்கி இனத்தைச் சேர்ந்த அரசாங்க சபை உறுப்பினரான வேந்தர் வோல்ட் ஆகியோரிடம் கையளித்தார்.

இந்த முயற்சியின் விளைவாக 1916 ஒக்டோபர் 26 ஆம் திகதி கேகாலை துப்பாக்கிச் சூட்டுச சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்தார் புதிய ஆளுநர் ஜோன் அண்டர்சன். அந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி சேர் அலக்சாண்டர் வூட் ரெண்டன் (Sir Alexander Wood Renton (1861-1933)) மற்றும் நீதிபதி கோல்டர்ஸ் ஸ்டுவர்ட் (Sir Gualterus Stewart Schneider (1864-1938)) நியமிக்கப்பட்டனர். இந்த ஆணைக்குழு விசாரணைக்கு மேலதிக விசாரணையாளராக நியமிக்கப்பட்டவர் சட்ட மா அதிபராக கடமையாற்றிய (பின்னர் பிரதம நீதியரசாகவும் நைட் பட்டம் பெற்றவருமான) எண்டன் பேட்ரம். அரச வழக்கறிஞரான பீ.டபிள்யு.பாவா, எப்,ஏ,ஹேலி போன்றோர் இந்த வழக்கு நடவைக்கைகளில் ஈடுபட்டார்கள். ஏ.ஏ.விக்கிரமசிங்கவின் ஆலோசனைப்படி வழக்கறிஞர் எச்.ஜே.சீ.பெரேரா, ஆர்.எல்.பெரேரா. ஈ.டபிள்யு ஜெயவர்தன. எப்.ஆர்.சேனநாயக்க. சீ.பட்டுவன்குடாவ, ஏ.மகாதேவா போன்றோர் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சார்பாக வாதாடினார்கள்.

இந்த வழக்கு பக்க சார்பாகவே நிகழ்ந்தது. பிரித்தானிய அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அதன் போக்கு தொடர்ந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை பாதுகாக்கும் நோக்கில் சட்ட மாதிபர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  கொல்லப்பட்டவர்களுக்கு சார்பாக வாதாடி வந்த வழக்கறிஞர்கள் அந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இதனை ஜே.சீ.பெரேரா ஆணைக்குழுவிடம் அறிவித்தார். இந்த வழக்கில் அரசாங்கத் தரப்புக்கு சலுகைகளும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொல்லும் வகையில் ஆணையாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டிய அவர்கள். கொல்லப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வதற்கு தடுத்து வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கிடையில் இந்த வழக்கில் கொல்லப்பட்டவர்கள் சார்பாக இயங்கிய விக்கிரமசிங்கவை சட்ட மா அதிபர் பொய்க்குற்றம் சுமத்தி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பானை விடுத்தார். ஆனால் சட்ட மா அதிபரால் அதனை நிரூபிக்க முடியாது போனது. அதற்காக சட்ட மா அதிபர் வருத்தம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விசாரணையில் சகல மரண தண்டனைகளும் உரிய விசாரணையின் பின்னரே வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. 1917 ஜனவரி 18 ஆம் திகதி இந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஆளுநர் ஜோன் அண்டர்சனிடம் கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவரான சே அலெக்சாண்டர் வூட்ரெண்டன் அரசாங்க தரப்பை பாதுகாக்கவும், சகலத்தையும் நியாயப்படுத்தும் வகையிலேயே இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரித்தார் என்பதை இறுதியில் உணரக் கூடியதாக இருந்தது. ஒரு கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநாட்டுவதற்கான சட்டத்தின் ஆட்சி எப்படி நிகழ்ந்திருக்க முடியும் என்பதை நீண்ட விளக்கத்தின் மூலம் அவர் கூற முற்படுவதே அத்தனையும் நியாயம் என்பதைத் தான். இராணுவச் சட்டத்தை பற்றியும் அப்படித்தான் நீண்ட வியாக்கியானம் அதில் உள்ளடங்கியிருந்தது.
சேர் ஜோன் அண்டர்சன்
இந்த படுகொலைகள் அத்தனையும் கலவரம்ம் அடங்கிய சில நாட்களின் பின்னர் தான் மேற்கொள்ளப்பட்டவை என்பதை அரசாங்கமும் ஏற்றுகொண்டது. ஆனால் மக்களின் பாதுகாப்புக்காகவே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டன என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட படையினர் விடுவிக்கப்பட்டனர். ஆணையாளரின் இந்த அறிக்கை குறித்து எரிச்சலடைந்தார் புதிய ஆளுநர் ஜோன் அண்டர்சன். அவர் காலனித்து நாடுகளின் செயலாளருக்கு தனது அதிர்ப்தியை விளக்கி ஒரு கடிதம் எழுதினார். அப்படி குற்றமே செய்திருந்தாலும் இருந்தாலும் அந்த மக்களுக்கு மரண தண்டனை அளித்தது குறித்து தனது கவலையும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவங்களுக்கு அதிகமாக பொறுப்பு கூரப்படவேண்டியவர் சட்லோ என்று குற்றம்சாட்டினர். மேற்கத்தேய திரைப்படங்களிலும், சித்திரக் கதைகளிலும் வரும் வில்லன் குழுக்களின் தலைவர் பாணியில் சட்லோ செயற்பட்டிருக்கிறார் என்று ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அரச ஆணையின் பிரகாரம் இத்தகைய வழக்குகளின் மூலம் ஒருவரை நாடு கடத்த முடியாது. அதேவேளை கலவரத்தை அடக்குவது என்கிற பேரில் நாகரிகமுள்ள ஆங்கிலேயர்கள் நடந்துகொள்ளக்கூடாத முறை இது. என்னால் எனது இந்த மனக்கிலேசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என்று ஆளுநர் அண்டர்சன் வெளிப்படையாக தெரிவித்தார்.

1915 கேகாலையில் நிகழ்ந்த சம்பவங்களில் ஒன்று புளத்கொஹோபிட்டிய எனும் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம். அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிங்களத்தில் நாவலும் 2010இல் ஒரு தொலைகாட்சித் தொடரும் தயாரிக்கப்பட்டு இலங்கையில் ஒளிபரப்பட்டது. கேகாலை ஆணைக்குழு குறித்த சில மேலதிக விபரங்களை அடுத்த இதழில் காணலாம்.

தொடரும்..

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates