Headlines News :
முகப்பு » » மலையகத்தில் தமிழில் நிர்வாகம் - சட்டத்தரணி ச. ஜேசுநேசன்

மலையகத்தில் தமிழில் நிர்வாகம் - சட்டத்தரணி ச. ஜேசுநேசன்


வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும்.இங்கு 59.76 விழுக்காட்டினர் தமிழர்களாவர்.நுவரெலியா மாவட்டத்தை அடுத்துள்ள பதுளை மாவட்டத்திலும் 27.59 விழுக்காட்டினர் தமிழர். கண்டி மாவட்டத்தில் 25.51 விழுக்காட்டினரும் தமிழர்களே.மாத்தளை மாவட்டத்தில் 19.48,கேகாலை மாவட்டத்தில் 14.30 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 13.27 விழுக்காட்டினர் தமிழர்.முஸ்லிம் மக்களும் இத்தமிழ் பேசும் மக்களில் அடங்குவர்.இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்தியவம்சாவளித் தமிழர்களாவர்.அவர்கள் சமீபகாலம் வரை இந்தியத் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுவந்தனர்.அரசியல் அடிப்படையிலும் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் படித்த இளைஞர் சமூகம் அவர்கள் மத்தியில் இன்று பலம் பெற்று வருகின்றது.இந்தச் சமூகத்துக்கு இந்தியா பற்றிய அக்கறை இல்லை.அவர்கள் எல்லோரும் இலங்கையில் பிறந்தவர்களாகவும் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களாகவும் இருப்பதால் தம்மை இந்தியத் தமிழர்கள் என்று அழைப்பதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்றே அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் இலங்கைத் தமிழர் என்றொரு பிரிவு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருவதால் மத்திய மலை நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களாக தம்மை "மலையகத் தமிழர்' என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

அது நியாயமாகவேபடுகின்றது.தாம் வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி தம்மை அப்பிரதேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர்.இது இயல்பானதே. இதனால் தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப தம்மை "மலையகத்தமிழர்'என்று அழைக்கின்றனர்.மலையகத்தில் கற்றோர்,கல்லாதோர் யாவருமே தம்மை மலையகத் தமிழர் என்றே கடந்த அரை நுற்றாண்டுக்கும் மேலாக அழைத்துவருகின்றனர்.சிங்களவரில் கண்டிச் சிங்களவர் என்ற பிரிவு இருக்கின்றது.அதுபோல தமிழரில் மலையகத் தமிழர் என்ற பிரிவு இருப்பதில் எந்தவித தவறும் பின்னடைவும் இருக்க முடியாது.

அதனை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட வேண்டியதில்லை.

மலையகத் தமிழரின் வரலாறு இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.ஆனால் 1815 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்த கண்டி இராச்சியத்தில் தமிழரின் வரலாறு 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

இவர்களின் வரலாறு இந்த இடத்தில் தேவைப்படாததால் அதனை இத்துடன் நிறுத்திவிடுவோம்.

அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் புகுந்த ஐரோப்பியர் 200 ஆண்டுகளுக்கு அக்கண்டங்களையே தமதாக்கிக் கொண்டனர்.ஆனால் இலங்கையில் மலையகத்திற்கு வந்த தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்மை இங்கு நிலைநிறுத்திக்கொள்ளமுடியாமல் இருக்கின்றார்கள்.அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாடுபிடிக்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை.பிழைப்புக்காகத்தான் வந்தார்கள் என்பதைவிட அழைத்து வரப்பட்டார்கள் அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். பிழைப்புக்காக வந்ததால் பிழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் மந்தைகளைப்போல நடத்தப்படுகின்றார்கள். குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் குதிரைலாயம் எனப்படும்.இவை வரிசையாக இருக்கும். இதைப்போன்ற லயங்களில்தான்  மலையக மக்களும் வாழ்கிறார்கள்.

இந்த 150 ஆண்டு வரலாற்றில் அவர்களின் லயத்து(Lines)வாழ்க்கை முறை இன்னும் மாறாவிட்டாலும் பல வித முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.1948 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் இலங்கையின் ஏனைய மக்களோடு பிரித்தானிய குடிமக்கள் (British Subjects) இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசினால் அவர்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர்.அவர்களின் மரபுவழித் தாயகமான தமிழ் நாட்டினரும் அவர்களை நாடற்றவர்களாகக் கருதினர். அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகப் பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் முற்போக்கு வாதியும் என்று கருதப்பட்ட அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூட அவர்களை நாடற்றவர்களாகவே கருதினார்.அவர்கள் தமது மரபுவழித்தாயகமான தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதை தான் 1964 மே 27 இல் இறக்கும் வரை அவர் அனுமதிக்கவில்லை.அவர் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தார். அவற்றில் மனிதாபிமானம் உள்ளடக்கப்படவில்லை.எங்கோ 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள காஷ்மீரின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு, தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோர் திரும்பிவருவதை அனுமதிக்காதிருந்ததும்,அவரைத் தட்டிக்கேட்கத் திராணியற்று தமிழகத் தலைமைகள் இருந்ததும் இன்றும் அது போலவே நடந்துகொள்வதும் தமிழரின் "விதி' என்றே கூறலாம்.

நேருவின் பரம்பரையினர் தான் இன்றும் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்பதை மலையகத் தமிழர்கள் என்றோ மறந்துவிட்டனர். ஆனால் என்ன புதுமை! இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை!.

சரியோ தவறோ நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியப் பிரதமராக வந்த லால்பகதுர் சாஸ்திரியினால் தான் இலங்கையில் நாடற்றவர்கள் எனப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது.1964 டிசம்பரில் அவர்களை 7:4 (ஏழிற்கு நான்கு) என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள அவரோடு அன்றைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் செய்தார்.

உண்மையில் அடிப்படை உரிமை,மனித உரிமை போன்ற அனைத்துலகக் கோட்பாடுகள் இவ் ஒப்பந்தத்தின் போது கவனிக்கப்படவில்லை.17ஆம் 18ஆம் நுற்றாண்டுகளில் ஆபிரிக்க மக்களைப் பொருட்களாகக் (பண்டம்) கணித்து அமெரிக்காவுக்கு பண்டமாற்றம் செய்தது போல சிறிமாவும் சாஸ்திரியும் மலையக மக்களைப் பண்டங்களாகக் கருதிதொகையை நிர்ணயித்துக்கொண்டனர்.எதுவாயினும் இவ்வொப்பந்தம் ஒரு முடிவின் ஆரம்பமாக அமைந்தது.

1948 இல் ஆரம்பமான நாடற்றவர் பிரச்சினை ஓரளவு திருப்தியுடன் முடிவடைய 40 ஆண்டுகள் சென்றன.எனவே மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினைவிட 40 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர்.(வடக்குகிழக்கில் ஏற்பட்டிருந்த விடுதலைப் போர் காரணமாக அவர்களுக்கு 30 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.)

இன்று மலையகத் தமிழ் மக்கள் பலவழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்கள் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக்குறைவு.

இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக (Tamil is an equal language of administration with Sinhala அரசாங்க வர்த்தமானிகள் (Government Gazette) ப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை.

இதில் அக்கறை கொள்ளவேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற்சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.

1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999
டி) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும்.

அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும்.

டிடி) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.

2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003.

டி) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்.

டிடி) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள்.

அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (ஊணிதணூ எணூச்திஞுtண்), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல்வேண்டும்.

14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம்! வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு "கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்கவேண்டும். ஏனெனில் இது "உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனைவிடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத்தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது.

இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.

மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில்வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates