Headlines News :
முகப்பு » » சம்பளப் போராட்டமும், மலையக மக்களும்! இது தேர்தல் காலமில்லையே! - தனுஷன் ஆறுமுகம்

சம்பளப் போராட்டமும், மலையக மக்களும்! இது தேர்தல் காலமில்லையே! - தனுஷன் ஆறுமுகம்


கடந்த நாட்களில் எந்த செய்திச் சேவையை புரட்டினாலும், முகநூலை உருட்டினாலும் அதிகமாகக் காணக்கிடைப்பது சம்பள உயர்வைக் கோரி மலையக மக்களின் போராட்ட செய்திதான். ஒவ்வொரு தோட்டங்களிலும் இந்தப் போராட்டம் தொடர்கிறது. உண்மையில் பல சந்தரப்பங்களில் அடங்கிக் கிடந்த மக்கள் இன்று வாய்திறந்து வீதிக்கு இறங்கியுள்ளமை உண்மையில் மலையகமும் தனது உரிமைக்காக போராடும் குணம் கொண்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

இம்மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு யார் காரணம்? மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியாத வீர வசனத்தின் மன்னர்களும், அறிக்கை அறிஞர்களும், 

விலைவாசியை கருத்திற் கொண்டாவது மக்களுக்கு சம்பள உயர்வினைப் பெற்றுத் தராது இருக்கின்றார்கள்! 

இது அரசியல் கையாளாகாத தனமா அல்லது ''நம்ம மக்கள்'' தானே ஏதேனும் ஒன்றை சொல்லி சமாளித்து விடலாம் என்ற அசமந்த போக்கா எனத் தெரியவில்லை. 

இன்று போராட்டத்தில் மக்கள் இறங்கியிருப்பதும், நியாயமான சம்பளத்தைப் பெற்றுத் தருவதில் உள்ள சிக்கல் நிலைக்கும் சந்தையில் காணப்படுகின்ற தேயிலையின் விலை நிலவரம் என்றும் காரணம் கூறப்படுகிறது. 

இருந்த போதும், போதுமான இலாபத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் கம்பனிகள் அதில் ஒரு பங்கிலாவது தொழிலாளர்களின் நிலைப்பாட்டினைக் கருத்திற் கொண்டு சம்பள அதிகரிப்பு தொடர்பில் கவனத்திற் எடுக்கவேண்டியமை இவ்வளவு காலம் தோட்ட தொழிலளார்களின் உழைப்பில் வயிற்றை நிரப்பிய கூட்டத்தின் கட்டாயமாகும்.

சம்பள உயர்வு பேச்சு வார்த்தைகள் தோல்வி கண்டதும், 700ரூபா சம்பள உயர்வு, வேலை நாள் குறித்த கட்டுப்பாடுகள் என முதலாளிமார் சம்மேளம் தமக்கு சார்பான விடயங்களை மாத்திரம் கருத்திற் கொண்டிருக்க எமது பேச்சு வீரர்களும், பேச்சுவார்த்தை தோல்வி என்று நெஞ்சை நிமிர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி வழங்குகின்றனர். 

என்ன பெருமிதம் இருக்கின்றது இதை பதிவு செய்வதில்?

பலமான தொழிற்சங்கம், வரலாறுக்கண்ட தொழிற்சங்கம் என மார்தட்டிக் கொள்வதில் எந்த வித அர்த்தமும் இல்லை என்பதை தொழிற்சங்கத்தினர் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.

அரசாங்கத்தோடு ஒன்றாக குடித்தனம் நடத்தும் மலையக கூட்டணி சத்தமின்றி இருக்கின்றது. இ.தொ.கா விற்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக கருத்துக்கள் கசிந்தபோது கூடாது, முடியாது, விடமாட்டோம் முந்திக் கொண்டு வாய் பிளந்த தரப்பினர் இன்று இவ்விடயத்தில் மந்தமான போக்கைக் காட்டிக் கொண்டிருக்கின்றமை ஒன்றும் வியப்படைய வேண்டிய விடயமல்ல. 

காரணம் இது தேர்தல் காலமில்லையே!


தேர்தல் காலமாக இருந்திருப்பின் இன்று தொழிலாளர்களுடன் வீதியில் அல்லவா இவர்கள் ஏனைய மலையக கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு நின்றிருக்கும்.

இடைக்கால நிவாரணத் தொகை என்று ஒரு தொகை அதிகரிப்பை பல மாதங்கள் முயற்சித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மாத்திரம் பெற்றுக் கொடுத்து விட்டு, உடனே தொழிற்சங்கத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை வழங்கி அதில் இணைய வைத்து விட்டு, தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டு தொழிலாளர்களை இன்று வீதிக்கு இறக்கி விட்டிருக்கின்றார்கள். 

மக்களுக்கும் சரி, அரசியல் விமர்சகர்களுக்கும் சரி தெளிவாக இது அரசியல் இலாபம் தேடும் செயற்பாடு என்பது விளங்கும்.

இவர்கள் காலத்திற்கு காலம் மக்களை ஏமாற்றுவதைப் போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏமாற்று அரசியல் நடத்தலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

''மக்களுக்கு விடிவு வரும், வாழ்க்கை தரத்திலே மாற்றம் வரும்'' ''அதற்கு நாடு மாற வேண்டும், நல்லாட்சி ஏற்பட வேண்டும் வாக்களியுங்கள் மாற்றத்திற்கு'' எனக் கூவி கூவி வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் மக்களின் சம்பள நிலைமை தொடர்பில் கருத்திற் கொள்ளாது வரி அதிகரிப்பிற்கும், பொருட்களின் விலையுயர்விற்கும் “ஆமாம் சாமி” போட்டு விட்டு, அதன் பிறகு சம்பளத்தைப் பற்றி யோசிக்கின்றார்கள். 

விலையுயர்விற்கு முன்னர் மக்கள் அதை சமாளிக்கும் வாழ்க்கை தரத்தை கொண்டிருக்கின்றார்களா என இவர்கள் எண்ணிக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அட அவர்களை சொல்லி எண்ண பயன் குளிரூட்டப்பட்ட அறையிலும் வாகனத்திலும் என சொகுசு வாழ்க்கை நடத்தும் தனவந்தர்களுக்கு பசி, பட்டினி தொடர்பில் என்ன கவலை இருக்கின்றது.

வெளிநாட்டு உறவு வெளிநாட்டு பயணம் வெளிநாட்டோடு குடித்தனம் நடாத்திக் கொண்டிருக்கும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பாக சிரத்தை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஐ.நா உரையிலே “வணக்கம்” என்ற வார்த்தையை சொன்னது மட்டும் தமிழ் மக்களை மதிக்கின்றேன் என்றாகி விடாது. அவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனத்திற் எடுக்க வேண்டும். அதற்கு முதலில் அவர் உள்நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் விழிப்போடு இருக்க வேண்டும்.

உண்மையில் ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்காற்றிய மலையக மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்தது என்ன? கடந்த ஆட்சியில் தொடக்கி வைக்கப்பட்ட சில வீடமைப்பு திட்டங்களின் பூர்த்தியும்இ சில புதிய வீடமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு வைபவங்களும் மட்டுமே என்பதை மறுக்க முடியாது.

நாட்டின் பிரதமரோ எப்போதுமே உள்நாட்டில் மக்கள் படும் துயரம் தொடர்பில் அலட்டிக் கொள்வது கிடையாது. பொருளாதார அபிவிருத்தி, தனியார் மயமாக்கல், வெளிநாட்டு வர்த்தகம் என்பன தொடர்பிலேயே அவரது கவனம் அதிகமாக தாழ்கின்றது. சரி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரல்லவா கட்சியின் கொள்கையை பற்றி பிடிக்கத்தானே வேண்டும். தேசிய தலைமையை குறைச் சொல்வதற்கு நமது பிராந்திய தலைவர்கள் சரியாக இருந்திருக்க வேண்டும்.

சரி சம்பள பிரச்சினைக்கு இன்று எமது மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இது ஒரு பக்கம் இன்று தோட்டங்கள் மூடப்பட்டு தசாப்பதங்கள் கடந்த நிலையில் இன்றும் அன்றாட சீவியத்தை நடாத்துவதில் சிக்கல் நிலையில் இருக்கும் மக்களின் நிலை தொடர்பில் கவனத்திற் கொள்வதாய் எமது அரசியல்வாதிகள் இல்லை. வாழ்க்கை தரமும் விலை உயர்வும் மேலும் நெருக்கத்தை கொடுக்க இம்மக்களும் வீதிக்கு இறங்குவதை யாராலும் தடுக்க முடியாது. 

கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும் இந்த மூடப்பட்ட தோட்டங்களில் உள்ள மக்கள் தொடர்பில் இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. அங்கே தொழிற்சங்கமென்ற பெயரில் சந்தாவை நிரப்ப வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும். இவர்களை கவனத்திற் எடுக்க வேண்டுமெனின் அரநாயக்கவில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இங்கும் மக்கள் உள்ளார்கள் என காட்ட வேண்டும். உடனே சமாதியை எங்கள் கட்சி கட்டும் என்பதை பெருமிதத்தோடு பத்திரிக்கையாளர் மாநாடு நடாத்த ஓடுவார்கள் நம் தலைமைகள். கத்தி திரைப்படத்தில் வருவதைப் போன்று உயிர் போக்கி தம்மை அடையாளம் காட்ட வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என நினைக்கும் போது வேதனையும் இந்த அரசியல் கோமாளிகள் மீது வெறுப்பும் சீறுவதை தடுக்க முடியாதுள்ளது. 

மூடப்பட்ட தோட்டங்களிலே தினம் தினம் செத்து பிழைக்கும் மக்கள், மூடப்படாத தோட்டங்களிலே உழைப்பை உறிஞ்சிக் கொண்டு சக்கையாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் என இரு பிரதான வகுப்பாக்கங்களிலே மலையக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் மீதான அன்பும் கருணையும் தேர்தல் காலங்களில் மட்டுமே இவர்களின் தலைமைகளுக்கு வருவதும் வேடிக்கையான விடயமே. 

இந்த போராட்டங்களில் ஈடுபடும் மக்களை ஏமாற்றுவது ஒன்றும் எமது தலைமைகளுக்கு பெரிய விடயமல்ல. வெறும் இரண்டு மணித்தியாலங்கள் அவர்களின் போராட்டங்களில் பங்குப்பற்றினால் போதும் எமது தலைவர் எங்களோடு இருப்பார் என்று அவருக்கும் சேர்த்து கொடி தூக்க தொடங்கி விடுவார்கள்.

அன்பான பத்திரிக்கை நண்பர்களுக்கும், கொடித்தூக்கும் கொடி வீரர்களிடமும் நாம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் மக்களின் போராட்டங்களில் இணைந்து அவர்களை திசை திருப்பி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை ஒவ்வொரு தருணங்களிலும் படம்போட்டுக் காட்டுங்கள். 

மக்களின் இந்த உணர்வுபூர்வமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விடாதீர்கள். அது இந்த மக்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும். மாறாக அதை பெரிய சாதனையாகக் காட்டி அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கி விட்டு மக்களுக்கு துரோகமிழைத்து விடாதீர்கள். 

சமீபத்தில் கூட இந்த போராட்டங்களின் சாதகங்களை தம் பக்கம் சாய்த்துக் கொள்வதற்காக மலையக அமைச்சர் மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்து, அதற்காக கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 

அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர், அரசாங்கத்தால் வழங்கப்படும் 7 பேர்ச்சஸ் காணித்திட்டத்துடன் எமது மக்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். அவ்வாறு சந்தோஷமாக இருக்கும் மக்கள் ஏன் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள் என்று அமைச்சருக்கு தெரியவில்லை போலும். ஏற்கனவே கொழும்பில் மாபெரும் போராட்டம் என்று நடாத்திய படப்பிடிப்பு போராட்டத்தின் பல வாரங்கள் கடந்து நிவாரணத் தொகை எனும் ஏமாற்று வித்தையை ஓரிரு மாதங்களுக்கு வழங்கி நாடாகமாடியமையை மக்கள் மறந்து விடக்கூடாது. அதே கட்சியே தற்போதும் மாபெரும் போராட்டக் கூட்டம் என அழைத்துள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய மலையகத்தின் பிரதான கட்சிகளும் அழைக்கும். அவற்றைக் கண்டு மக்கள் ஏமார்ந்து விடாது அந்த கூட்டங்களை புறக்கணித்து மக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பது எனது அபிப்பிராயமாகும். 

எமது நாட்டில் ஏனைய சமூகங்கள் தமது கோரிக்கைகளையும், போராட்டங்களையும் வெவ்வேறு கட்டங்களுக்கு உயர்த்தியுள்ள நிலையில் நாம் இன்னும் அன்றாட சீவியத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் அவலமான நிலையிலேயே இருக்கிறோம். 

காரணம் இன்னும் அரசியல் ரீதியாகவும், சமூக கட்டமைப்பு ரீதியாக நாம் வளர்ச்சி காண வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்கான தேவை மற்றும் சமூக நகர்வின் அவசியம் பற்றியும் நாம் ஏற்கனவே தமிழ்மிரர் வாயிலாக தெளிவுபடுத்தியிருந்தோம். சமூக நகர்வினை தடுத்துக் கொண்டிருக்கும் அல்லது சமூக நகர்விற்கு பலம் சேர்க்காத அரசியல் தலைமைத்துவங்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஏன் என்றால் எமது சமூகத்தை நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். 

தோட்ட தொழிலாளியின் பிரச்சினைதானே என அந்த தோட்டத் தொழிலாளியின் வம்சாவளியிலிருந்து உயர் நிலையடைந்தவர்கள் விலகி நிற்பதும் இது தொடர்பில் கவனத்திற் கொள்ளமையும் வருந்தக் கூடிய ஒன்றே. எம்மக்களின் வாழ்வாதாரம் என்பதை முதனிலைப்படுத்தி அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும். கூட்டு ஒப்பந்தம் என்று பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருப்போருக்கும், அமைச்சு பதவிகளைக் கொண்டு மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் பாடம் கற்பிக்க அனைவரும் அணி திரள வேண்டியது அவசியம். 

இறுதியாக, இந்தப் போராட்டத்திற்கு அரசு விரைந்து தீர்வு வழங்காவிடின் மலையகத்தில் உள்ள அனைத்து சிவில் அமைப்புக்களும் ஏனைய அனைத்து தரப்பினர் இணைந்து மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை யாரும் தடுக்க முடியாது. அங்ஙனம் ஒரு நிலை ஏற்படாதிருக்க அரசும் அதன் அடிவருடிகளும் விரைந்து செயற்பட வேண்டும். தீர்வுகள் எட்டப்படும் வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும். அது வரை போராட்டம் தொடர வேண்டும்.


 சமூகம்  , செய்தி
தனுஷன் ஆறுமுகம்
சட்ட பீடம்
கொழும்புப் பல்கலைக்கழகம்
adn.dhanushan@lawyer.com

நன்றி - மலையகக் குருவி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates