துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்கு வெள்ளையடிக்கும் வகையில் கூறிவரும் கருத்துக்களை அப்படியே நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. துமிந்த சில்வா ஒரு கிரிமினல். பலரும் அறிந்த போதைப்பொருள் வியாபாரிகள். பட்டப்பகலில் படுகொலை செய்து தமது பண, அதிகார செல்வாக்கால் கூட விடுதலை பெற முடியாதபடி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர். போதைப்பொருள் பணத்தில் பிரதான இனவாத ஊடகமொன்றை நடத்திவரும் குடும்பம் அவர்களின் குடும்பம். துமிந்தவை வெளியில் கொணர்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் அமர்த்த கடுமையாக உழைத்த ஊடகம் அது.
கடந்த சில வருடங்களாக இனவாத பிக்குமாரையும், இனவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் துமிந்தவின் விடுததலைக்கு குரல் கொடுக்க வைப்பதற்காக ஏராளமாக செலவழித்தவர்கள். தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையெழுத்துக்காக தலா நாற்பது லட்சம் வீதம் வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படியெல்லாம் இருக்க
“ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன்”
என்றெல்லாம் மனோ கணேசன் கூறுவது பசப்பு மட்டுமல்ல வேடிக்கையாக இருக்கிறது. மனோகணேசன் இப்பேர்பட்ட உத்தரவாதத்தை கொடுப்பார் என்று நாம் கொஞ்சமும் நம்பியிருக்கவில்லை.
இன்னமும் வழக்குமின்றி, விசாரணையும் செய்யப்படாத நிலையில் துமிந்த சில்வாவை விட அதிக காலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், சந்தேகநபர்களும் உள்ளார்கள். ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தாலும் சந்தேகமின்றி கொலைக்குற்றவாவாளியென மீளவும் உறுதி செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதில் இந்த அரசியல்வாதிகளுக்கு எந்தளவு அக்கறை வந்திருக்கிறது பாருங்கள்.
“அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.”
என்கிறார் மனோ கணேசன். துமிந்தவால் கொல்லப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது பாதுகாவலரும் கூட குடும்பஸ்தர்கள் தான். அவர்கள் இந்த சமூகத்தில் வாழ பாரத லக்ஸ்மனால் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தனது தந்தையின் கொலைக்காக நீதி கோரி போராடிய அவரது மகள் ஹிருனிகா பிரேமச்சந்திர; மனோ கணேசனுடன் ஜனநாயக அரசியல் கூட்டணியில் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருபவர். இனி சக தோழமை அரசியல் சகாவின் முகத்தில் தான் மனோ கணேசன் விழித்திட முடியுமா?
இதை எல்லாவற்றையும் விட இலங்கையின் ஜனாதிபதிகள் தமது அரசியல் சுய லாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பது இப்போது ஒரு போக்காக மாறி வருகிறது. ஜே.ஆர். காலத்தில் அவரின் ஆதரவாளனான ஒரு பெரிய சண்டியனை விடுவித்தார். மிகச் சமீபத்தில் கூட மைத்திரிபால தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரரை விடுவித்தார்.
20 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அத்தகைய அராஜக அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்கள் கூட கடக்கவில்லை. அதற்குள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் தனது ஆதரவாளனான கொலைக்குற்றவாளியை விடுவிக்க முற்படுகிறது. இதற்கு விலை போபவர்கள் யார் யார் என்பது பற்றி இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனோ கணேசன் அந்த பட்டியலில் எப்போது சேர்ந்தார்.
அதிகார நலன்களுக்காக நாட்டின் நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதை ஒரு வழிமுறையாகவே மேற்கொண்டு வருபவர்கள் ராஜபக்ச தரப்பு. அதில் மனோ கணேசன் எப்போது பங்காளியானார்.
+ comments + 1 comments
மரண தண்டணையை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றியிருந்தால் இந்த பிரச்சினையே எழுத்திருக்காது. மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களும் பாராளுமன்றத்தில் நுழைந்திருக்க முடியாது. எல்லாமே வேடிக்ைக.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...