Headlines News :
முகப்பு » , , , , , » ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) - என்.சரவணன்

ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) - என்.சரவணன்

மீண்டும்...  '1956' தொடர் தினக்குரலில்!

கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன. அதனால் முக்கியமான பத்தி எழுத்துக்களும் நின்றுபோயின. அப்படித்தான் இந்த "1956" தொடரும் நின்று போனது. இப்போது மீண்டும் பக்கங்கள் பழையபடி அதிகரிக்கப்பட்டுவிட்டதால் இந்தத் தொடர் மீண்டும் தொடர்கிறது.  தமிழில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் அதில் நிச்சயம் கிடைக்கும். எனது "1915 கண்டி கலவரம்" நூலை விட முக்கியமான பதிவுகளைக் கொண்டதாக இந்த நூலும் இறுதியில் அமையும். 

பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான்  1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம்.

இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம்.

பண்டாரநாயக்கவின் சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு பதிலீடாக மறுபக்கம் தமிழ் – சைவ தேசியவாத போக்கை  ஜி.ஜி.பொன்னம்பலம் முன்னெடுத்தார். சிங்கள மகா சபை, தமிழ் காங்கிரஸ் ஆகியன இரண்டுமே அப்போது துருவமயமாகிக்கொண்டு போன இரண்டு சமூகத்தினரின் இனத்துவ தேசியவாத அமைப்புகளாக உருவெடுத்தன. அப்போது இரு இனங்களின் மத்தியிலும் இலங்கைக்கான தேசியவாத உணர்வை மீறிய இனத்துவ தேசியவாத எழுச்சியுணர்வு கூர்மை பெறத் தொடங்கிய காலம் அது. இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டு (1934) ஒரு தசாப்தத்தின் பின்னர் தான் தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது இனத்துவ தேசியவாதம் மேலும் பட்டைதீட்டப்பட்டிருந்தது.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த இன்னொரு அடிப்படி வித்தியாசத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சிங்கள மகாசபையானது கண்டியச்சிங்களவர், கரையோரச் சிங்களவர் என்று பிளவுபட்டிருந்த சிங்கள இனத்தை ஒன்றிணைத்து சிங்கள பௌத்தத்தனத்தோடு சேர்த்து இலங்கைக்கான தேசியம், காலனித்துவ எதிர்ப்பு, சுதேசிய கலை, கலாசார, விவசாய, மருத்துவ, பொருளாதாரக் காரணிகளை முன்னிறுத்தினார். ஆனால் ஜி.ஜி.யின் காங்கிரஸ் அத்தகைய சுதேசிய அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிராதது; அக்கட்சியை ஒரு இனவாரி கட்சியென நேரடியாக அடையாளம் காட்ட சுலபமாக இருந்தது. குறைந்தபட்சம் சிங்களத் தேசியத்துக்குப் பதிலீடாக தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பி வழிகாட்டும் ஒரு உறுதியான கொள்கையோ, திட்டமோ, நிகழ்ச்சிநிரலோ இருக்கவில்லை.

1931 டொனமூர் திட்டம் இலங்கையருக்கு போதிய திருப்தியை அளிக்காத ஒரு அரசியல் திட்டமாக இருந்தது. அத்திட்டத்தின் கீழ் 2வது தேர்தல் 1936 ஆம் ஆண்டு நடந்தது. இதே காலப்பகுதியில் இன்னொரு சீர்திருத்தத்தை ஆராய்வதற்கான ராஜரீக ஆணைக்குழுவொன்றை (Royal commission) பிரித்தானிய அரசு அமைத்தது. அதாவது 1937 ஆம் ஆண்டு மார்ச் மாதமே புதிய அரசியல் சீர்திருத்தத்தை உருவாக்குவதற்கான பரிந்துரையை அமைச்சர்கள் கையெழுத்திட்டு குடியேற்ற செயலாளருக்கு அனுப்பி விட்டனர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக பல கட்ட விவாதங்களையும், முயற்சிகளையும், மாற்றங்களையும் கண்டு “சோல்பரி யாப்பாக” அது வெளிவந்தது.

ஜி.ஜி.யின் பிரவேசம்

இந்த முயற்சிகளின் தொடக்கப் பகுதியில் தான் ஜி.ஜி.பொன்னம்பலத்தில் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது. அவர் 1934 ஆம் ஆண்டு பருத்தித்துறை இடைத்தேர்தலின் மூலம் அவர் தெரிவானார். ஆனால் அவர் அதற்கு முன்னரே 1931 ஆம் ஆண்டு தேர்தலில் மன்னார் முல்லைத்தீவு தொகுதிகளில் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் அவரால் அவரின் சொந்தத் தொகுதியான பருத்தித்துறையில் போட்டியிட முடியவில்லை. ஏனென்றால் அங்கே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அத்தேர்தலை பகிஸ்கரித்து பிரச்சாரம் செய்திருந்தது. அரசாங்க சபை பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினர்; குறிப்பாக தமிழர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எடுத்துச் சொல்லியும் டொனமூர் திட்டம் அதை சரி செய்யவில்லை என்பதால் டொனமூர் திட்டத்தின் கீழான முதல் தேர்தலை அவ்வாறு பகிஷ்கரித்திருந்தது. இராமநாதன், அருணாச்சலம் ஆகியோரின் இறப்புக்குப் பின்னர் அந்த இடைவெளியை ஒரு குறிப்பட்ட காலம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தான் நிரப்பியது. அதுவும் அது இடதுசாரி சிந்தனையுள்ள முற்போக்குப் பாத்திரத்தை வகித்தது.

பின்னர் யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association)  08.06.1935 அன்று குடியேற்ற செயலாளருக்கு தமது குறையை பற்றி விரிவான நீண்ட கடிதத்தில் பல விளக்கங்களைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த தரவுகளையும் இங்கே குறிப்படலாம்.

மொத்த சனத்தொகை 5,400,000

சிங்களவர் – 3,016,154

இலங்கைத் தமிழர்  - 600,000

இந்தியத் தமிழர் – 700,000

இதன்படி மொத்த சனத்தொகையில் 54% வீதத்தினர் மாத்திரமே சிங்களவர்கள் இருந்தனர். ஆனால் டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான அரசாங்க சபையில் கீழ்வரும்வகையில் பிரதிநிதித்துவம் அமைந்தது.

இதன் பிரகாரம் 71% வீதம் சிங்களவர்களும், 15% மட்டுமே தமிழர் பிரதிநிதித்துவம் வகிக்க முடிந்தது. சனத்தொகையில் ஏறத்தாள 50% சதவீதத்தினர் சிங்களவராகவும், தமிழர்கள் 25% வீதமாகவும், ஏனைய சிறுபான்மையினர் 25% சத வீதத்தினராகவும் இருந்தும் பிரதிநிதித்துவம் அவ்வாரான விகிதாசாரத்துடன் சமத்துவமாக இல்லை என்பதை யாழ்ப்பாண சங்கம் சுட்டிக்காட்டியது.

இந்த விகிதாசாரக் கணக்கில் சற்று பிழை இருந்தபோதும் அவர்களின் தர்க்கம் நியாயமானதாகவே இருந்தது. தமிழர் பிரதிநிதித்துவம் பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் அதை சரி செய்வதற்கான கோரிக்கை வலுவாக இருந்த காலத்தில் தான் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசித்திருந்தார். 

1936 பொதுத் தேர்தலிலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தனது தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

யாழ்ப்பாண சங்கம் 08.06.1935 அன்று குடியேற்ற செயலாளருக்கு அனுப்பிய கடிதம்
1936ஆம் ஆண்டு தேர்தலில் அரசாங்கசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளில் 38 பேர் சிங்களவர். 7 இலங்கைத் தமிழரும், 2 இந்தியத் தமிழரும், 2 ஐரோப்பியரும், 1 முஸ்லிமும் தான் தெரிவானார்கள். அரசாங்க சபையில் தமிழரின் பிரதிநிதித்துவம் ஐந்தில் ஒன்றாக குறைந்திருந்தது. சிங்களப் பிரதிநிதிகள் அந்த எண்ணிக்கையைக் கொண்டு 10 பேரைக் கொண்ட தனிச்சிங்கள மந்திரி சபையை அமைத்துக்கொண்டார்கள். ஒரு தமிழர், முஸ்லிம் இனத்தவருக்கும் கூட அமைச்சரவையில் இடம்கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு மிகப் பெரும் பாரபட்சத்தை செய்கிறார்கள் என்பதை மேலும் உறுதிபட தெளிவுறுத்தப்பட்ட முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.

1924 சீர்திருத்தத்தின் போது கூட 23 பிரதிநிதிகளில் 16 சிங்களவர்களும், 7 தமிழர்களும் காணப்பட்டனர். ஆக டொனமூர் திட்டம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்துவிட்டது தமிழர் அரசியல் பரப்பில் ஒரு முக்கிய பேசுபோருளாக இருந்தது. இதன் எதிரொலிப்புகள் அடுத்த சீர்திருத்தத்துக்கான விவாதங்களில் முக்கிய இடத்தை வகித்தது.

50:50 ஐ ஆதரித்த சிறுபான்மையினர்

பிரித்தானிய அரசுக்கு காட்டுவதற்காக ஒரு கண்துடைப்பாக  டபிள்யு.துரைச்சாமியை அரசாங்க சபையின் சபாநாயகராக ஆக்கினர். அதற்கு வெளியில் அவருக்கு எந்த பலமும் கிடையாது. அதுபோல ஜி,ஜி,பொன்னம்பலம், ஆர்.ஸ்ரீ.பத்மநாதன், மகாதேவா போன்றோரை அமைச்சரவையின் துணைக்குழுவில் துணை அமைச்சர்களாக பதவி வழங்கி ஆசுவாசப்படுத்தினர். எனவே இந்த தமிழ் தலைவர்களும் பிரித்தானிய அரசிடம் இத்தகைய குறைகளை முன்வைக்கத் தவறினர்.

சிங்களவர்களுக்கு சமமாக தமிழரின் பிரதிநிதித்துவத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் கோரினார் என்கிற ஒரு புனைவு இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழர், முஸ்லிம்கள் மத்தியிலும் நிலவுவதை நாம் அறிவோம். ஆனால் அன்றைய அந்த விவாதத்தையும் அதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறுபட்ட அன்றைய உரையாடல்களையும் நாம் கவனித்தால் அது அப்படியல்ல என்பதை அறிய முடியும்.

இதன் விளைவாகத் தான் 50:50 சூத்திரத்தை ஜி.ஜி.முன்வைத்தார். மேற்படி வாலிபர் காங்கிரஸ் முன்வைத்த கருத்தின் விரிவாக்கம் தான் பிற்காலத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50க்கு 50 என்கிற சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையாக அமைந்தது. அரசாங்க சபையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு 50 சதவீத ஆசனங்களும், ஏனைய தமிழ், முஸ்லீம், இந்திய, பறங்கி, ஐரோப்பிய சிறுபான்மை இனக்குழுக்களுக்கு 50 சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. சிங்கள ஆதிக்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்வதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும் சிங்களவரல்லாத ஏனைய சமூகங்கள் ஒன்றுசேர்ந்து அழுத்தத்தைக் கெர்டுக்கக்கூடிய வகையில் சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடிய ஒரு முறைமையாகவே அக்கோரிக்கையை அவர் முவைத்தார்.

இந்தக் கோரிக்கையை ஒரு இனவாத கோரிக்கையாக இன்று பலர் வியாக்கியானம் செய்தாலும் அன்று ஏனைய சிறுபான்மை இனத் தலைவர்களோடும் உரையாடி அவர்களையும் ஒன்றிணைத்து தான் அக்கோரிக்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்வைத்தார். 08.06.1935 அன்று லண்டனில் உள்ள குடியேற்ற செயலாளருக்கு ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை வலியுறுத்தி இருபது சிறுபான்மைப் பிரதிநிதிகளின் கையெழுத்துகளுடன் ஒரு மகஜர் அனுப்பப்பட்டது. அந்த மகஜரில் வடபகுதித் தமிழர்கள் சார்பில் மகாதேவா, நடேசன் ஆகியோர் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதியாக எம்.என். சுப்பிரமணியமும், தலவாக்கொல்லை பிரதிநிதியாக எஸ்.பி. வைத்திலிங்கமும் முஸ்லீம்கள் சார்பில் டி.பி.ஜயாவும், மாநகரசபை உறுப்பினர் அப்துல் காதரும் இந்தியர்கள் சார்பில் ஐ.எக்ஸ்.பெரேராவும் இந்தியத் தமிழர் சார்பில் ஜி.ஆர்.மேத்தாவும், முஸ்லீம் லீக் சார்பில் எம்.சி.எல். கலீலும் கையெழுத்திட்டார்கள். சிறுபான்மை இனங்களின் அந்த ஐக்கியம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டாலும் அது நாளடைவில் பலவீனமடைய ஆரம்பித்தது.

ஜி.ஜி.பொன்னம்பலம் அக் கோரிக்கையை முன்வைத்து ஆற்றிய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1939 மார்ச் 9ஆம் திகதியன்று அரசாங்க சபையில் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூவ் கல்டேகொட் (Sir Andrew Caldecott) முன்வைத்த அரசியல் சீர்திருத்தம் குறித்த விவாதங்கள் பல நாட்கள் நடந்தன. இறுதியில் மே மாதம் 9 ஆம் திகதி அந்த முன்மொழிவுகளின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி கண்டது. அந்த யோசனைகளை தமிழர்களும் ஆதரிக்கவில்லை. சிங்களவர்களும் ஆதரிக்கவில்லை. இறுதியில் ஆதரவாக 9 பேரும், எதிராக 30 பெரும் வாக்களித்திருந்தனர். 21 மேலதிக வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.

ஜி.ஜி.யின் சாதனை உரை

இந்த விவாதங்களின் போது ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 மார்ச் மாதம் இரண்டு நாட்களாக 9 மணித்தியாலத்துக்கும் மேல் உரையாற்றினார். இந்த உரை பிற்காலத்தில் நூலாகவும் (The Marathon Crusade for ‘FIFTY, FIFTY’ – Balanced representation – in the State Council - 1939) வெளிவந்ததது. அந்தளவு நீண்ட உரையை அதற்கு முன்னர் இலங்கையின் சரித்திரத்தில் வேறெவரும் ஆற்றியதில்லை என்பதால் அந்த உரை சாதனையாக பதியப்பட்டது. அதற்கு முந்திய சாதனையாகக் கருதப்பட்டது சேர் பொன் இராமநாதனின் உரை. 1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஆங்கிலேய அரசு நடத்திய கொடுங்கோன்மையை எதிர்த்து அவர் 8 மணித்தியால உரையை ஆற்றியிருந்தார்.

இந்த உரையை எதிர்த்து உரையாற்றியவர்களில் முக்கியமானவர் பண்டாரநாயக்க. அவரும் நீண்ட உரையை ஆற்றினார். 21.03,1939 அன்று அவர் ஆற்றிய அந்த உரை இப்போதும் அவருக்காக உருவாக்கப்பட்ட அவரின் நூதனசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.swrdbandaranaike.lk/ இல் உள்ளது. ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய அந்த உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாற்பது பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ஒரு முக்கியமான உரை. பல இடங்களில் நக்கல் நையாண்டி செய்து தான் அவ்வுரையை நகர்த்துகிறார்.

அதில் இப்படி குறிப்பிடுகிறார்.

“கௌரவ பருத்தித்துறை பிரதிநிதி ஒரு முக்கிய வழக்கொன்றில் வாதிடும் ஒரு வழக்கறிஞரின் உரையைப் போலவே இருந்தது. தன் தொண்டை நோக அவர் கதைத்தார். கௌரவ உறுப்பினர் பல தடவைகள் குளிர் தண்ணீர் கலன்கள் பாவிக்க நேரிட்டதால் லபுகம நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம்  குறைந்திருக்கும்... இந்த நாட்டில் மிகவும் கௌரவம்மிக்க தலைவராக இருந்த சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் இருந்திருந்தால் அவர் இந்த உரையையிட்டு அதிருப்தியடைந்திருப்பார்...

சேர் பொன் இராமநாதன் அவர்களும் இந்த சபையில் நீண்ட உரையை ஆற்றி சாதனை படைத்தவர். அந்த சாதனையை கௌரவ பருத்தித்துறை உறுப்பினர் வீழ்த்தியிருக்கிறார். ஆனால் அவரின் சிறந்த சாதனையை இவரால் தகர்க்க முடியவில்லை என்றே நான் நம்புகிறேன். சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் 9 மணித்தியாலங்கள் உரையாற்றினார். ஆனால் அப்போது அவர் சிங்களவர்களுக்காக அந்த உரையை ஆற்றினார். சிங்களவர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநியாயங்களையும், பாரபட்சங்களையும் எதிர்த்து ஆற்றிய உரை அது. வயோதிப நிலையில் பலவீனமாக இருந்தபோதும் சற்று கூட இடை நிறுத்தாமல் ஒரே நாளில் அவர் ஒன்பது மணித்தியாலம் உரையாற்றினார்.

ஆனால் அவரைவிட வயதில் இளமையான, பலமான பருத்தித்துறை உறுப்பினர் தனது உரையை தொடர்வதற்கு சபையை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டும், களனி கங்கையின் அசுத்த நீரை குடித்துக்கொண்டும் மிகவும் கஷ்டப்பட்டு உரையாற்றினார். இதெல்லாம் எதற்கு? சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் பாதுகாக்கப்பட்ட மக்களைத் தாக்குவதற்கும், இராமநாதன் அவர்கள் தனது ஆதரவாளர்களுக்கு எது நேரக்கூடாது என்று எண்ணினாரோ அதற்கு எதிரானதை புரிவதற்குத் தானே எனது நண்பர் இந்தளவு முயற்சிக்கிறார். சேர் பொன் இராமநாதன் அவர்களின் ஆத்மா இந்த சபையில் உலவிக்கொண்டிருந்தால் அவரின் ஆதரவாளர்கள் வேதனைக்குரலைக் கேட்டு மீண்டும் பிரம்மலோகத்துக்கே திரும்பியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை....

அவர் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் கூட மிகவும் நெருக்கமாக பழகும் முக்கிய நண்பர்களில் பருத்தித்துறை உறுப்பினர் அவர்களின் இனத்தைச சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லக் கடமைபட்டுள்ளேன். அதுமட்டுமில்லை தலைவர் அவர்களே... தற்போது அவரின் மனைவியாக ஆகியிருக்கும் அழகிய பெண்ணை அவருக்கு முன்னரே நான் அறிவேன். இதை அவரும் அறிவார். அப்பெண்ணின் சகோதரரும் நானும் பள்ளியில் நெருங்கிய தோழர்கள்.  யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவர்களுடன் இரு நாட்கள் தங்கியிருக்கிறேன். முஸ்லிம், பரங்கி இனத்தவர்களும் கூட எனக்கு நண்பர்களாக உள்ளனர். இந்த சபையில் நுழைந்ததன் பின்னர் தான்; இப்படியான சண்டைகளுக்குள் நுழைய வேண்டியேற்படுகிறது...

சிங்களவர்களுக்கு 20 இடங்களும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு 17 இடங்களும், முஸ்லிம்களுக்கு 1 இடமும், ஏனைய இனத்தவருக்கு 1 என்று வைத்துக்கொள்வோம். இது அவரின் நோக்கத்துக்கு இணையானது. சிங்களவர்களுக்கு 20உம், தமிழர்களுக்கு 17, முஸ்லிம்கள் மற்றும் பிற தேசங்களுக்கு 3 இடங்கள் எனும்போது சிங்களவர்களின் எண்ணிக்கை மற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்காது. மேலோட்டமாக பார்த்தால் சரியென்று இது தோன்றினாலும் சிங்களவர்களுக்கான எண்ணிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்....” 

என்று இந்த உரை நீளுகிறது.

அதுபோல ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50:50 சூத்திரத்தை எதிர்த்து கடுமையான தர்க்கங்களை அவர் வைக்கிறார். மேலும் சிங்கள மகா சபை பற்றி சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டு போகிறார்.

1942 இல் அரசாங்க சபைத் தலைவராக டீ.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். அவர் சிறுபான்மையினரிடத்தில் ஏற்பட்ட ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் வகையில் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அவர் அருணாசலம் மகாதேவாவை உள்நாட்டு அமைச்சராக நியமித்தார். அதன் பிறகு மகாதேவா ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறி அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பிரதிநிதியான சேர் ராசிக் பரீத் சிங்களவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனக் கூறி ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறினர். அத்துடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியான பெரி. சுந்தரம் முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் செய்த டீ.பி. ஜயா ஆகியோரும் வழங்கிய ஆதரவும் பலவீனப்பட ஆரம்பித்தது.

டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் பிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதற்கு முன்னர் இருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அதற்கான நியாயங்களை ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் விவாதித்து முடிவெடுத்திருந்த பிரிட்டிஷார் மீண்டும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜி.ஜி.யின் கோரிக்கையை எடுத்த எடுப்பில் நிராகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஒரு வேளை நிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்று அரசியல் என்ன என்பது தொடர்பிலும் ஜி.ஜி.க்கு எந்தவித உறுதியான திட்டமும் இருக்கவில்லை. முஸ்லீம் தரப்பு, மலையக இந்திய தரப்பு மகாதேவா குழுவினர் ஆகியோரின் ஆதரவு விலக்கப்பட்ட பின்பும் கூட ஜி.ஜி. பொன்னம்பலம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவில்லை.

ஜி.ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைத்த போது சிங்கள மகாசபை அதற்குப் பதிலாக அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம்; மகாதேவாவின் அறுபது நாற்பது கோரிக்கையை நிராகரித்தது போன்று சிங்கள மகாசபையின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டார்.

சோல்பரி அணைக்குழு விசாரணை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்; அதாவது 1944 ஓகஸ்ட் மாதம் தான் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். 1944 டிசம்பர் - 1945 ஏப்ரல் வரை நடந்த சோல்பேரி ஆணைக்குழுவின் விசாரணையின் போது ஜி.ஜி. பொன்னம்பலம் 50:50 சமபல கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். அதேவேளையில் மகாதேவா அறுபதுக்கு நாற்பது கோரிக்கையை முன்வைத்தார். சிங்கள மகாசபை சாட்சியம் வழங்கவில்லை.

சோல்பரி ஆணைக்குழு ஜி.ஜி.யின் கோரிக்கையை நிராகரித்திருந்தது. 08.11.1945 இல் சோல்பேரியின் அறிக்கை அரசாங்க சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் போதுமானதாக இருந்தபோதும் 90 வீதமான வாக்குகளுடன் அது நிறைவேறியது. ஏற்கனவே ஐம்பதுக்கு ஐம்பது, அறுபதிற்கு நாற்பது பேன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த தமிழ் தரப்பினர் குத்துக்கரணம் அடித்து சோல்பரி திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர். ஜி.ஜி. அப்போது இலங்கையில் இருக்கவில்லை. அவர் அப்போது தன் ஆட்சேபனையை வெளியிடவும், சோல்பேரி முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும்படிக் கோரவும் லண்டன் புறப்பட்டிருந்தார். அவர் இலங்கை திரும்பியிருந்தபோது அவரோடு இருந்த அனைவராலும் 50:50 கோரிக்கை சாகடிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.

பிற்காலத்தில் சோல்பரிப் பிரபு தன்னால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாரபட்சம் குறித்து விரிவான கடிதமொன்றை சுந்தரலிங்கத்துக்கு எழுதியிருந்ததையும் இங்கு நினைவுக்கு கொணர முடியும்.

இத்தகைய பின்னணியின் நீட்சி தான் 1939 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள கலவரம் வரை இட்டுச் சென்றது.

அடுத்த இதழில்...Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates